TNPSC Thervupettagam

அடக்குமுறையை முறியடிப்பதே சமூகநலத் திட்டங்களின் நோக்கம் – ஜெயரஞ்சன்

January 30 , 2024 174 days 136 0
  • பொருளாதார அரசியல் வெகுஜன மக்களுக்குப் புரியும்படியாகத் தமிழில் காத்திரமாக ஒலித்துவரும் குரல் பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சனுடையது. தமிழ்நாடு அரசின் மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்துவரும் அவருடன் தமிழ்நாட்டின் திட்டங்கள் குறித்துப் பேசியதிலிருந்து...
  • தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம் என்கிற கருத்தை அரசியலராக அல்லாமல், அறிவுப்புலத்தைச் சேர்ந்தவராகப் பத்தாண்டுகளுக்கும் மேலாக முன்வைத்துவருபவர் நீங்கள். அப்படியிருக்க கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசின் மாநிலத் திட்டக் குழுவில் செயலாற்றி வருகிறீர்கள். தற்போது உங்களுடைய நிலைப்பாடு என்ன? - இன்று வரை நான் திமுக கட்சி உறுப்பினர் அல்ல. ஓர் ஆய்வு மாணவனாகப் புள்ளிவிவரங்கள், ஆதாரங்களின் அடிப்படையில் அறுதியிட்டுச் சொல்கிறேன் - தமிழ்நாடு வளர்ச்சியடைந்த, முன்னேறிய மாநிலமே. தனிநபர் வருமானம், வறுமை ஒழிப்பு, பொதுப் போக்குவரத்து வசதி, மின் விநியோகம், சுகாதாரக் கட்டமைப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், மத்திய அரசு ஆண்டுதோறும் வெளியிடும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆய்வறிக்கையே இதற்கு அத்தாட்சி.
  • மகாராஷ்டிரத்துக்கு அடுத்து, இரண்டாவது பணக்கார மாநிலம் தமிழ்நாடு. தவிர, சமூக முன்னேற்றக் குறியீடுகளான கல்வியறிவு, பச்சிளம் குழந்தை - பேறுகால மரண விகிதத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது போன்றவற்றில் மகாராஷ்டிரம், குஜராத் போன்ற பணக்கார மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. பொருளாதாரத்தையும் சமூக முன்னேற்றத்தையும் சமநிலையில் கொண்டுசெல்வதில் தமிழ்நாடு தனக்கெனத் தனித்துவமான பாதையை வகுத்துள்ளது.
  • திமுக, அதிமுக என இரு பெரும் கட்சிகள் தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சிபுரிந்துள்ளன. வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய திட்டங்கள் அவற்றுக்கென உண்டா? - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வழியாக அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட இன்றியமையாப் பொருள்களைக் கொள்முதல் செய்து, சேமித்து, விநியோகிக்கும் உன்னதப் பணியை 60களில் திமுக அரசு தொடங்கியதன் பலனாகப் பசியில்லா மாநிலமாகத் தமிழ்நாடு இன்று நிமிர்ந்து நிற்கிறது.
  • நியாய விலைக் கடைகள் வழியாக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் உணவுப் பொருள்களை அரசே வழங்குவது என்று வந்தபிறகு, உணவு வழியாக அதுவரை கட்டமைக்கப்பட்டிருந்த அதிகாரம் முழுவதுமாகத் தகர்ந்தது. இங்கு உணவு விடுதலை என்பது தனிமனிதரின் சுயமரியாதையைத் தக்கவைப்பதற்கான திட்டம். இந்த அஸ்திவாரம் வலுவாக அமைக்கப்பட்டதால்தான், அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தமிழ்நாடு தயாரானது. திமுக, அதிமுக மாறிமாறி தமிழ்நாட்டை ஆண்டு வந்திருந்தாலும் சமூகநலத் திட்டங்களையும் தொழில்வளர்ச்சித் திட்டங்களையும் இடைவிடாது முன்னெடுக்கின்றன.
  • அரசின் திட்டங்கள் நிறைவேறுகின்றனவா என்பதை கண்காணித்துக் கண்டறியும் வழிமுறை திட்டக் குழுவிடம் உள்ளதா? - காலைச் சிற்றுண்டித் திட்டத்தை 2022இல் தொடங்குவதற்கு முன்பு சோதனை முயற்சியாக ஓராண்டுக் காலம் நடத்தினோம். அப்போது காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்ட பள்ளிகளில் மாணவர் வருகை கணிசமாக அதிகரித்திருப்பது தெரியவந்தது, திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சில பகுதிகளில் பெருமளவில் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்குவதால், அங்குள்ள ஏழை மாணவர்களுக்கு இத்திட்டம் சென்றடையவில்லை.
  • இதைக் கருத்தில்கொண்டே காலைச் சிற்றுண்டித் திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவோம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
  • எதற்காக முன்னெடுக்கிறோம், இதன் விளைவு என்னவென்று எந்தத் திட்டத்துக்கும் ஒரு முகாந்திரம் இருக்கும். இருப்பினும் அத்திட்டம் நடைமுறைக்கு வந்து 20 ஆண்டுகள் கடந்த பிறகே எதிர்பாராத பாய்ச்சல் நிகழ்வதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
  • கருணாநிதி 50 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்திய பல திட்டங்கள்தான் பின்வந்தவர்களுக்குத் திசைகாட்டியாக இருந்துவருகின்றன. ஆனால், அன்று கருணாநிதி அறிவித்தபோது அதற்கான காரணத்தை அவர் விளக்கியதில்லை. ஆண்டுகள் பல கழித்து அலசி ஆராய்வதன் வழியாகவே அவரது தொலைநோக்குப் பார்வையைப் புரிந்துகொள்ள முடிகிறது.
  • பெண்களை மையப்படுத்தியமகளிர் உரிமைத் தொகை’, ‘கட்டணமில்லாப் பேருந்துப் பயணம்போன்ற திட்டங்களால் தனிநபர்களுக்குப் பணம் கிடைக்குமே தவிர்த்து, மாநிலத்துக்குப் பொருளாதார வளர்ச்சி கிடையாது என விமர்சிக்கப்படுகிறதே? - பெண்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தும் மாநில வளர்ச்சிக்குத்தான் வழிவகுக்கும். இந்தியாவில் இன்று படித்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் பணிபுரியும் பெண்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். நாட்டின் எதிர்காலமே பெண்களின் பணிப் பங்கேற்பு விகிதம் அதிகரிப்பதில்தான் உள்ளது. பெண்களை வளரவிடாமல் தடுக்கும் ஆணாதிக்கச் சமூகச் சூழலில் மாணவிகளுக்கு அரசு மிதிவண்டி வழங்குதல் என்பது சிறுமிகளைப் பள்ளிவரை கொண்டு செல்லும். புதுமைப் பெண் திட்டமானது கல்லூரிவரை அழைத்துச் செல்லும்.
  • 1989இல் கருணாநிதி முதன்முதலில் திருமண உதவித்தொகைத் திட்டத்தை அமல்படுத்தியதன் மூலம், குழந்தைத் திருமண முறையை மெல்ல அகற்ற முடிந்தது. பூப்படைந்ததும் மணமுடித்துத் தரப்பட்ட சிறுமிகள் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்புவரை கல்வி பெற அனுமதிக்கும் போக்கு பரவலானது. இன்று கல்லூரிக்கும் பெண் குழந்தைகளைக் கொண்டுசெல்லும் திட்டமாக அது உயர்ந்திருக்கிறது. பலனடையும் பெண்கள் தங்கள் குடும்பத்துக்கும், அதன் வழியாகச் சமூகத்துக்கும் பங்களிக்கக்கூடியவர்களாக உருவெடுக்கிறார்கள்.
  • வருவாய் நோக்கத்தோடு அரசே நடத்தும் மதுக்கடைகளால், எல்லா நலத் திட்டங்களின் நன்மையும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, உடலாலும் உள்ளத்தாலும் நலிவுற்ற ஒரு சமுதாயத்தை அரசாங்கமே உருவாக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டு பற்றி? - மது என்னும் ஆபத்தான வஸ்துவைக் காலங்காலமாக மனிதர்கள் வெவ்வேறு ரூபங்களில் அருந்திவருகின்றனர். குறைந்த செலவில் அதிக மது தயாரிக்க முற்படும்போது அபாயகரமான போதை வஸ்துக்கள் கலக்கப்பட்டு, அது உயிர்க்கொல்லியாக மாறித் தொடர் உயிரிழப்புகள் நேரும் அபாயம் உள்ளது.
  • இத்தகைய கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுவதைத் தடுக்கவும், மது பயன்பாட்டைக் கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் வைத்துக்கொள்ளவே டாஸ்மாக்கை அரசு மேற்பார்வையில் வைத்திருக்கிறது. இதைவிடுத்து, மது உற்பத்திக்குத் தடை விதிக்கும்போது அது ரகசிய செயல்பாடாக முளைக்கும். இதுவரை மது ஒழிப்பு முன்னெடுப்புகள் அத்தனையுமே அப்படித்தான் தோற்றுப்போயின.
  • மதுவிலக்கை நிலைநாட்டிவிட்டதாகப் பிரகடனம் செய்யும் குஜராத், மகாராஷ்டிர மாநிலத்தின் வார்தா நகரில் மது உற்பத்தியும் விற்பனையும் ரகசியமாக நடந்தேறுகிறது என்பதுதான் நிதர்சனம். அது மட்டுமின்றி, தமிழ்நாட்டில் மதியத்திலிருந்துதான் மது விற்பனை அனுமதிக்கப்படுகிறது. ஆனால், உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் காலை 10 மணி தொடங்கி இரவு 10வரை மது விற்பனை கல்லா கட்டுகிறது.
  • நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியைத் தமிழ்நாடு எட்டும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போது 23 லட்சம் கோடியில் இருக்கும் தமிழ்நாட்டுப் பொருளாதாரம், எப்படி 6 ஆண்டுகளுக்குள் அந்த இலக்கைத் தொடும்? சென்னை மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி கொண்டுவரப்படுமா? - முதலீட்டாளர்கள் மாநாடு என்பது ஓர் அடையாளம். அதுவே தொடக்கமோ, முடிவோ அல்ல. கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு தொழில் வளர்ச்சித் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வின்ஃபாஸ்ட், அடிடாஸ், மெர்ஸ்க் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்களது உலகளாவிய திறன் மையங்களைத் தமிழ்நாட்டில் தொடங்கவிருப்பதால் அந்நிறுவனங்களின் ஆராய்ச்சி-மேம்பாட்டுப் பிரிவு, உற்பத்தித் தொழிற்சாலை, வர்த்தக மையம் என முழுமையான சங்கிலித் தொடர் உருவாக்கப்படும்.
  • ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும். குறிப்பாக, மின்வாகனத் துறை, நிதி மேலாண்மைத் துறை, அனிமேஷன் துறைகளில் நமது இளைஞர்களுக்கு மாபெரும் எதிர்காலம் காத்திருக்கிறது. அதேபோன்று மாநிலம் தழுவிய வளர்ச்சித் திட்டங் களை முன்னெடுக்க உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுவருகின்றன.
  • திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை எனப் பரந்துபட்ட மாவட்டங்களுக்கான செயல்திட்டங்கள் தீட்டப்பட்டு, பெருநிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என நமக்கு நாமே விதித்துக்கொண்ட உயர் இலக்குதான் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம். அதைநோக்கி தற்போது ஓடத் தொடங்கியிருக்கிறோம்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories