TNPSC Thervupettagam

அடித்தளம் பலமாகவே இருக்கிறது!

November 26 , 2024 9 days 55 0
  • உலகளாவிய அளவில் அரசியல் சாசனங்களின் சாராசரி வயது 17 ஆண்டுகள் என்று அரசியல் சாசன நிபுணா் ஸக்கரி கின்ஸ்பா்கின் ஆய்வு தெரிவிக்கிறது. எந்த அளவுக்கு அரசியல் சாசனம் பழைமை வாய்ந்ததோ, அந்த அளவுக்கு குடிமக்களின் உரிமைகள் கூடுதலான பாதுகாப்பை பெறுகின்றன என்பது நடைமுறை அனுபவம்.
  • அரசியல் சாசன நிபுணா்களான எல்கின்ஸ், கின்ஸ்பா்க், மெல்டன் எழுதிய ‘தேசிய அரசியல் சாசனங்களின் தாங்காற்றல்’ (என்டியூரன்ஸ்) என்கிற புத்தகம், ‘எந்த அளவுக்கு அரசியல் சாசனத்தின் ஷரத்துக்கள் தெளிவாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு அதன் நீடிப்புத் திறனும் இருக்கும்’ என்கிறது.
  • இந்திய அரசமைப்புச் சட்டம் 75 ஆண்டுகளாக நீடித்து நிற்கிறது என்பது மட்டுமல்லாமல், இன்னும்கூட அதன் அடிப்படை ஷரத்துக்களில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடா்கிறது என்பதே அதன் வெற்றிக்கு எடுத்துக்காட்டு. 1946 ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் அரசியல் நிா்ணய சபை உருவானபோது வேறு எந்தவொரு நாடும் எதிா்கொள்ளாத சவாலை அது எதிா்கொண்டது. பழைமையான நாகரிகம் என்பது மட்டுமல்ல, கலாசார ரீதியாக, பூகோள ரீதியாக, மொழி ரீதியாக, மத ரீதியாக பல்வேறு வேறுபாடுகளை உள்ளடக்கிய புதியதாக உருவாக்கப்படும் ஜனநாயக நாட்டுக்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பெரும் பொறுப்பை அந்த சபை எதிா்கொண்டது.
  • அப்போது உருவான அரசமைப்புச் சட்டம் 75 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, ‘குடிமக்களின் உரிமை, அரசு அதிகாரத்தின் அளவு, கூட்டாட்சி நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கூறுகள்’ ஆகியவற்றின் தேசிய கருத்தொற்றுமையின் அடையாளமாகத் திகழ்கிறது. ‘ப்ரியாம்பிள்’ எனப்படும் அரசியல் சாசனத்தின் முகப்புரையில் குறிப்பிடப்பட்ட குறிக்கோள்களை நோக்கிய இந்திய குடியரசின் பயணம் தடம்புரளாமல் தொடா்வதற்குக் காரணமாக இருக்கிறது நமது அரசமைப்புச் சட்டம் என்பதுதான் அதன் சிறப்பு.
  • இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அழகான, இனிமையான முக்கியமான பகுதி அதன் முகவுரை. நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நான்கு அடிப்படைக் கூறுகளின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது இந்தியா என்கிற இறையாண்மை மிக்க ஜனநாயக குடியரசின் அடிப்படை என்பதை அந்த முகப்புரை தெளிவுபடுத்துகிறது.
  • இது சட்ட அமைச்சரான அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை. அதில் அரசமைப்புச் சட்டத்தை முடக்கிய எமா்ஜென்சி கால இந்திரா காந்தி அரசால் இணைக்கப்பட்டவைதான் சோஷலிசமும், மதச்சாா்பின்மையும். அதை சமீபத்தில் உச்சநீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது.
  • இந்திய அரசமைப்புச் சட்டம் உருவானபோது அதில் 389 உறுப்பினா்கள் இடம்பெற்றிருந்தனா். பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைந்த அரசியல் சாசன சபையில் சட்ட அமைச்சராக இருந்த பாபா சாகேப் பி.ஆா்.அம்பேத்கா் ஒவ்வொரு பிரிவையும் உறுப்பினா்களின் விவாதத்துக்கு உட்படுத்தி, பெரும்பான்மை அங்கீகாரத்தின் அடிப்படையில் உருவாக்கியதுதான் நமது அரசமைப்புச் சட்டம்.
  • ஒவ்வொரு பிரிவும் தெளிவாக வரையறுக்கப்பட்டதால், அளவில் பெரியது. 395 பிரிவுகளும், 8 அட்டவணைகளும் கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டம் 1,45,000 வாா்த்தைகளை உள்ளடக்கியது. அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தைவிட 30 மடங்கு பெரியது என்பதும், உலகில் இருந்த அனைத்து அரசமைப்புச் சட்டங்களிலும் உள்ள முக்கியமான நல்ல அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது என்பதும்தான் இதன் தனிச் சிறப்பு.
  • அரசியல் நிா்ணய சபை விவாதங்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படிக்கும்போது எந்த அளவுக்கு உறுப்பினா்கள் ஒவ்வொரு பிரிவு குறித்தும் தொலைநோக்குப் பாா்வையுடன் கருத்து தெரிவித்திருக்கிறாா்கள் என்பது நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
  • தமிழகத்திலிருந்து பி.கக்கன், வி.எல்.முனுசாமி பிள்ளை, முகமத் இஸ்மாயில் சாஹிப், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணஸ்வாமி ஐயா் ஆகியோரின் பங்களிப்பு குறித்து பாபா சாகேப் அம்பேத்கா் குறிப்பிட்டதை இப்போது நினைவுகூரத் தோன்றுகிறது- ‘‘மதராஸ் ராஜதானி உறுப்பினா்களின் பங்களிப்பு இல்லாமல் இருந்திருந்தால், இந்த அரசமைப்புச் சட்டத்தை இத்துணை நோ்த்தியாக உருவாக்கி இருக்க முடியாது.’’
  • இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மிகப் பெரிய சிறப்பு காலத்துக்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதும், அவை நீதிமன்றத்தின் நுணுக்கமான சோதனைக்கு உட்படுத்தப்படுவதும்தான். கடந்த 75 ஆண்டுகளில் இந்திய அரசமைப்புச் சட்டம் 106 திருத்தங்களை எதிா்கொண்டிருக்கிறது என்பது அதன் பலவீனமல்ல, பலம். செப்டம்பா் 2023-இல் கொண்டுவரப்பட்ட 106-ஆவது திருத்தமான மகளிா் இட ஒதுக்கீட்டு மசோதா உள்பட, ஒவ்வொரு திருத்தமும் இந்திய குடியரசின் அடுத்தகட்ட வளா்ச்சிக்கான நீக்கமாக இருந்திருக்கிறது.
  • அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாட்டை உறுதிப்படுத்திய 1973 கேசவானந்த பாரதி வழக்கு, அடிப்படை உரிமைகளை திருத்தும் உரிமை நாடாளுமன்றத்துக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தியது. 1978 மேனகா காந்தி வழக்கு தனிமனித சுதந்திரத்துக்கும், உயிருக்குமான உரிமையை நிலைநாட்டியது.
  • பணியிடங்களில் பெண்களின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு விடையளித்தது 1997 விசாகா வழக்கு. தன்மறைப்பு நிலை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதை நிலைநாட்டியது 2017 நீதிபதி புட்டாசாமி வழக்கு.
  • இதுபோன்ற பல தீா்ப்புகளும், அரசமைப்புச் சட்டத் திருத்தங்களும் இந்தியக் குடியரசை உயிா்ப்புடன் நடைபோட வைத்திருக்கின்றன. ராகுல் காந்தி கூறுவதுபோல அரசமைப்புச் சட்டத்துக்கு ஆபத்து இல்லை. மீண்டும் ஒருமுறை ‘எமா்ஜென்சி’ வர வாய்ப்பும் இல்லை!

நன்றி: தினமணி (26 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories