- ஆடை என்பது எல்லாக் காலத்திலும் பெண்ணின் ஒழுக்கத்துடனும் கண்ணியத் துடனும் நேரடித் தொடர்பில் இருப்ப தாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆடையை வைத்தே ஒரு பெண்ணின் ஒழுக்கத்தை அளவிடும் ஆணாதிக்கச் சமூகம், அந்தப் பெண்ணின் அல்லது அவள் சார்ந்த குடும்பம்/சமூகத்தின் கண்ணியத்தைக் குலைக்க வேண்டும் என்றால் அதே ஆடையைத்தான் ஆயுதமாகவும் கையில் எடுக்கிறது. புராணக் கதைகள் தொடங்கி மணிப்பூர் கலவரம் வரை இதுதான் நிதர்சனம்.
- வியாச மகாபாரதத்தில் அல்லாமல் தமிழகத்தில் சொல்லப்படும் மகாபாரக் கதையில் கர்ணன் – துரியோதனன் நட்பின் ஆழத்தை விளக்கும் காட்சி ஒன்று உண்டு. துரியோதனன் மனைவி பானுமதியும் கர்ணனும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருக்கையில் கணவரைப் பார்த்ததும் பாதி விளையாட்டில் பானுமதி எழுந்துகொள்கிறார்.
- தோற்றுவிடுவோமோ எனப் பயந்துதான் பானுமதி எழுந்து கொண்டார் என நினைத்துத் தொடர்ந்து விளையாட வரும்படி அவரது ஆடையை கர்ணன் பிடித்து இழுக்கிறார். அதைப் பார்த்துவிட்ட துரியோதனன் தங்கள் இருவரையும் தவறாக நினைக்கக்கூடும் என கர்ணனும் பானுமதியும் கலங்கி நிற்க, அந்தச் சூழலை துரியோதனன் மிக இயல்பாகக் கடந்துசெல்கிறார். அந்நிய ஆடவனால் தன் மனைவியின் ஆடை இழுபட்டபோது அந்தச் செய்கையால் தன் மனைவியின் கண்ணியம் குறைந்துவிடாது என நம்பிய துரியோதனன்தான் பாண்டவர்களின் கண்ணியத் தைக் குலைக்க பாஞ்சாலியைச் சபை நடுவில் துகிலுரித்தார்.
- இரண்டு சம்பவங்களிலும் பெண்ணின் ஆடை பறிக்கப் படுவதுதான் மையம். ஆனால், ஒன்று நட்பைப் பெருமைப் படுத்த, மற்றொன்றோ பெண்ணைச் சிறுமைப்படுத்துகிறது. முன்னதைவிடப் பின்னதைத்தான் நம் சமூகம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. பெண்ணை ஆடையின் பெய ரால் வெவ்வேறு வகைகளில் அடிமைப்படுத்தியும் வருகிறது.
- 19ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் தமிழகத்தின் தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடைபெற்ற கொடூரங்கள் ஆடையின் பெயரால் பெண்கள் குலைக்கப்பட்ட வரலாற்றுக்குச் சான்றுகளாக உள்ளன. திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பெண்கள் மேலாடை அணிவது/அணிய மறுக்கப்பட்டது தொடர்பாக தமிழகம், கேரளம், வெளிநாட்டினர் எனப் பல கோணங்களில் வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன. ஒரு சாரார் சொல்வதைப் பிறர் முற்றாக மறுத்தும்வருகின்றனர். ஆனால், குறிப்பிட்ட சில சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்காகத் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது என்பது வரலாறு.
அடிமைப்படுத்தவா ஆடை
- திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உயர் சாதியைச் சேர்ந்தவர்களாகத் தங்களை அறிவித்துக்கொண்டவர்கள் (நம்பூதிரிகள், நாயர்கள்), அவர்களால் ஒடுக்கப் பட்டவர்கள் என அறிவிக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்குச் (ஈழவர்கள், புலையர்கள், சாணார்கள், பறையர் உள்ளிட் டோர்) சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். அது சாதியப் படிநிலைகளின் அடிப்படையிலான ஒடுக்குமுறைகளும் தீண்டாமையும் கடைப் பிடிக்கப்பட்ட காலம்.
- ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் நம்பூதிரிகளிடமிருந்து 36 அடி தொலைவிலும் நாயர்களிடமிருந்து 12 அடி தொலைவிலும்தான் நிற்க வேண்டும் என்கிற எழுதப்படாத சட்டம் இருந்தது. அப்படியொரு மோசமான காலத்தில், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் கடவுளின் முன் எப்படி மார்பை மறைக்காமல் இருக்கி றார்களோ அதேபோல் அவர்களின் முன் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேலே ஆடை அணியக் கூடாது என்று விதிக்கப்பட்டிருந்தது.
- ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்கள், பிறர் முன்னிலையில் மேலாடை அணிந்து வருவது பெரும் பாவமாகவும் களங்கமாகவும் கருதப்பட்டது. பெண்கள் மேலாடை அணிவதற்கு ‘முலை வரி’ விதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
- ஆண்களுக்கு விதிக்கப்பட்ட ‘தலைவரி’ யைப் போன்றதுதான் இதுவும், மேலாடை அணிவதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை என மறுப்போரும் உண்டு. ஆனால், ‘முலைவரி’யை வசூலிக்க ‘கேள்விக்கார்’கள் நியமிக்கப்பட்டதற்கும் ‘முலைவரி’ செலுத்தாத நபர்களின் மனைவியர் கடும் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டதற்கும் வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. ‘முலை வரி’ செலுத்தாத பெண்களின் முதுகின் மீது கற்கள் அடுக்கப்பட்டு நாள் முழுவதும் நிற்க வைக்கப்பட்டனர்.
- பெண்கள் சிலர் இறக்கும் வரைக்கும் அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்டனர். இப்படிப் பெண்களைக் கொடுமைப்படுத்துவதன் மூலம் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களைச் சிறுமைப்படுத்தி அச்சுறுத்தலாம் என்பது ஆதிக்கச் சாதியினரின் கணக்கு. ‘எனக்கு நீ சமம் அல்ல’ என்பதைப் பெண்களின் ஆடையின் மூலமாகவும் உணர்த்திவிடத் துடித்த ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடுகள் இவை. இந்த அடிமைத் தளையிலிருந்து அந்தப் பெண்கள் எப்படி மீண்டார்கள்? அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
நன்றி: இந்து தமிழ் திசை (24 – 03 – 2024)