TNPSC Thervupettagam

அடுத்த 3 மாதங்களுக்கு என்ன திட்டம்?

April 20 , 2020 1734 days 856 0
  • ஒரு சின்ன குடிசை. மூதாட்டியும் பெரியவரும் அதில் வசிக்கிறார்கள். மூதாட்டி வீடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்.
  • கிழவர் நல்ல நாட்களிலேயே வீட்டில் முடங்கிக் கிடப்பவர். வெளிவேலை, உள்வேலை எல்லாமே மூதாட்டிதான்.
  • கரோனா செய்திகள் மெல்ல அந்த வீட்டின் அன்றாடங்களை மாற்றுகின்றன. வீட்டு வாசலில் சாணி தெளிப்பதற்கு மாறாக, தினமும் மஞ்சளும் உப்பும் கலந்த தண்ணீரை மூதாட்டி தெளிக்கிறார்; ஒருசில நாட்கள் வீட்டிலேயே வேப்பிலைக் கரைசலைத் தெளிக்கிறார். வீட்டு வாசலிலேயே ஒரு சோப்பு - ஒரு வாளித் தண்ணீர். வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்.
  • கை, கால் கழுவாமல் வீட்டினுள் நுழைவதில்லை.
  • பிரதமர் மோடி ஊரடங்கை அறிவித்தபோது, பக்கத்தில் கடன் வாங்கி மூன்று மாதத்துக்கான அரிசியையும், கொஞ்சம் மளிகைச் சாமான்கள் – காய்கறிகளையும் வாங்கி வந்தார். முதலில் வடகம் உருட்டினார்.
  • அடுத்தடுத்த நாட்களில் வடகத்தோடு கத்திரி, மா, சுண்டைக்காய் என்று பல காய்களும் வற்றல்களாகச் சின்னச் சின்னத் தட்டுகளில் வெயிலில் காய்ந்தன.
  • அன்றைக்குக் காய்கள் வீட்டுக்கு வெளியிலேயே கழுவப்பட்டு, வெயிலில் ஒரு சூடு கண்ட பின் வீட்டுக்குள் கொண்டுசெல்லப்படுகின்றன. “நாம பழைய நெலமைக்குத் திரும்ப குறைச்சலா மூணு மாசமாகும்போல இருக்கே? வெளிநடமாட்டம் இல்லாதப்ப உடம்பைப் பெருக்கவுட்டு பிரச்சினையத் தேடிக்கக் கூடாதுன்னு அய்யாவும் நானும் சாப்பாட்டை ரெண்டு வேளையாக்கிட்டோம். வாரத்துக்கு ஒருக்க நான் சந்தைக்குப் போறதோட சரி. இனி அதுக்கும் கையில காசு இல்லை.
  • கிடைக்கிற காய்ல கொஞ்சத்தைச் சமைச்சுட்டு, மிச்சத்தை வத்தலுக்குப் போடுறது. தண்ணிச் சோறு திங்கவும் தொட்டுக்கை வேணும்ல? பாவம் குடியான ஜனம். இப்பவும் நமக்காகக் காய்கறியத் தூக்கிக்கிட்டு ஓடி வருதுவோ.
  • நாளைக்கு வியாதி மிகுந்தா பயம் யாரை வெளிய நடமாடவுடும்? சம்சாரிங்க யோசிச்சுதான் நடந்துக்கணும்! நீகூட ஒன்னைப் பத்தா வகுத்துச் செலவழிக்கப் பழகிக்கய்யா!”

நம் அரசின் பெரும் சிக்கல்

  • இதை ஒரு மூதாட்டியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று சொல்வதா அல்லது ஒரு சமூகத்தினுடைய வரலாற்றறிவின் காலத்திய வெளிப்பாடு என்று சொல்வதா? கடன் வாங்கி அரிசியை முன்கூட்டி வாங்குபவளும் அவள்தான்; அரிசியைச் சிக்கனமாகச் செலவழிப்பவளும் அவள்தான். நெருக்கடியான சூழல்களில் துரிதமாக முடிவெடுப்பது மட்டுமல்ல; காலத்தே செயல்படுவதும் முக்கியம்.
  • அப்படிச் செயல்பட எங்கோ உண்மைக்கு முகம் கொடுத்து, பொறுப்பெடுத்துக்கொள்வது முக்கியம். உங்கள் சிந்தனையை யாரும் ஆக்கிரமிக்காமல் இருப்பது முக்கியம். இந்தக் கொள்ளைநோய்க் காலகட்டத்தில் இந்திய அரசிடம் நான் காணும் பெரும் சிக்கல், அது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் சிந்தனையையும் ஆக்கிரமிக்க முற்படுகிறது; ஆனால், அதன் சிந்தனை என்ன, அதன் கையில் உள்ள முன்கூட்டிய திட்டங்கள் என்ன என்பது இன்றுவரை நம் யாருக்கும் தெரியவில்லை. ஊரடங்குக்கு முதல் நாள் வரை நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்ததுதான் அது!
  • எனக்குத் தெரிந்த ஒரு நிறுவன அதிபர் தன் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலின் சாராம்சம் இது: “நாம் முன்னெப்போதும் சந்தித்திராத ஒரு காலகட்டத்தில் நுழைந்திருக்கிறோம். எல்லோருக்குமே நிதி நிலைமை மோசம்தான்.
  • இந்த மாதச் சம்பளத்தை நிறுவனம் உங்களுக்கு அளித்திருக்கிறது. ஆயினும், உங்கள் கையில் உள்ள ஒவ்வொரு ரூபாயும் மதிப்புமிக்கது.” இதுபோன்ற ஒரு காலகட்டத்தில் இந்த வெளிப்படைத்தன்மை மிக முக்கியமானது என்று நினைக்கிறேன். நீங்கள் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது பொறுப்பை அவரவர் எடுத்துக்கொள்ளும் வகையில் நீங்கள் விலகி நிற்கவாவது வேண்டும்.

மக்களுக்கு அனுப்பும் சமிக்ஞை

  • கொள்ளைநோய் ஊரடங்கு அறிவிப்பானது போர் அறிவிப்பைப் போன்றதுதான்.
  • தொடங்கிவிடுவது எளிது. ஆனால், ஒருதரப்பாக முடித்துக்கொள்ள முடியாது.
  • எதிரியை வென்றாக வேண்டும் அல்லது எதிரி முன் சரணாகதியாக வேண்டும். போரில் எதிரியுடன் சமாதானம் பேசலாம்; கொள்ளைநோயுடன் உடன்பாட்டுக்கு வழி இல்லை. நீங்கள் நாடு முழுக்க மொத்தமாகவே ஐந்நூறு பேர் கிருமித் தொற்றுக்குள்ளாகியிருக்கும் நாட்களில் இறுகப் பிடித்து ஓர் ஊரடங்கைத் தொடங்குகிறீர்கள்.
  • நான்கு வாரம் கழித்து ஒவ்வொரு நாளும் புதிதாக ஆயிரம் பேர் பாதிக்கப்படும் நாட்களில் அதை எப்படித் தளர்த்த முடியும்? புரியவில்லை.
  • மக்களுக்கு இது என்ன மாதிரியான சமிக்ஞைகளை அனுப்பும்? இப்போதும் அடுத்த இரு வாரங்களில் எல்லாம் முடிந்து சுமுகநிலை திரும்பிவிடும் என்ற எண்ணத்திலேயே பெரும்பான்மை இந்தியச் சமூகம் ஆழ்ந்திருக்கிறது.
  • ஒரு பெரும் சுகாதார நெருக்கடியையும், அடுத்து மாபெரும் பொருளாதார நெருக்கடியையும் நாம் எதிர்கொள்ளவிருப்பதை அதற்கு இன்னமும் அரசு தெரிவிக்கவில்லை.
  • எதிர்வரும் இக்கட்டான காலகட்டத்துக்கு எப்படித் தயாராக வேண்டும்; அதற்கான அரசின் பங்களிப்பு என்னவென்று அது இன்னமும் மக்களிடம் பேசவில்லை.

கரோனா நடத்தும் பேரம்

  • கரோனா ஒவ்வொரு அரசிடமும் இரு பேரங்களைப் பேசுகிறது; மக்களின் உயிரையும் காப்பாற்ற வேண்டும்; அவர்களுடைய வாழ்வாதாரத்தையும் பாதுகாத்தாக வேண்டும்.
  • ஊரடங்கை அறிவித்து இரு வாரங்கள் கழித்துதான் பிந்தைய பேரமே இந்திய அரசின் காதுகளில் விழுந்தது; அதன் பிறகுதான் ‘மக்களின் உயிரையும் காப்போம், வாழ்வாதாரத்தையும் காப்போம்’ என்று தன் முழக்கத்தையே மாற்றியது. அப்படிக் காக்க ஒரே வழிதான் இருக்கிறது. வீட்டில் இருக்கும் மக்கள் வெளியே வராமல் இருக்கவும், இந்தக் கொள்ளைநோய்க் காலகட்டத்திலேயே அவர்களுடைய பொருளாதாரம் மூழ்கிவிடாமல் இருக்கவும் அவர்கள் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்குமாக ஒரு பெரும் நிதியுதவியை அளித்திடலே அது!
  • உலகில் ஊரடங்கை அறிவித்த மக்கள் நல அரசுகள் அத்தனையும் இதைச் செய்திருக்கின்றன; தொடக்க நிலையிலேயே தம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் பத்து முதல் இருபது சதம் அளவுக்கு கரோனாவை மக்கள் எதிர்கொள்வதற்கான நிதி ஒதுக்கீடாக அறிவித்திருக்கின்றன; இந்திய அரசு வெறும் ஒரு சத நிதியை அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறது; பிரதமர் திரும்பத் திரும்பக் கொள்ளைநோய்க்கு மக்களைப் பொறுப்பாக்கிக்கொண்டிருக்கிறார்.

அரசு உதவிக்கரம் நீட்டட்டும்

  • இந்தியாவில் கிருமித் தொற்றையும் பசித் தொற்றையும் எதிர்த்துக் களத்தில் மக்களிடம் பணியாற்றும் மாநில அரசுகள் கரோனா எதிர்கொள்ளல் நிதிக்காகப் பரிதவிக்கின்றன.
  • வழக்கமான காலத்தில் அந்தந்த மாநில மக்கள் செலுத்திய வரிகளிலிருந்து மாநில அரசுகளுக்குக் கிடைக்க வேண்டிய இயல்பான வரிப் பங்குக்கும்கூட இப்போது நீதிமன்றப் படியேறும் நிலைக்கு அவை தள்ளப்பட்டிருக்கின்றன. இத்தகு சூழலில் ஊரடங்கை நெகிழ்த்தும் ஒன்றிய அரசின் முடிவை எப்படிப் புரிந்துகொள்வது? ‘என்னிடம் உதவி கேட்காதீர்கள், வசதியுள்ள மக்கள் மட்டும் வீட்டுக்குள் இருந்தால் போதும்; அன்றாடப் பாட்டுக்கு வாய்ப்பில்லாத மக்கள் வெளியே வந்து கிருமியை எதிர்கொள்ளுங்கள்!’ என்றா? விவசாயம் அத்தியாவசியம், விவசாயிகளுக்கான அனுமதி அவசியம்; பட்டாசுத் தொழிலாளர்களுக்கான அனுமதியை வேறு எப்படிப் புரிந்துகொள்வது? இந்நாட்களில் ஊரடங்கை நெகிழ்த்தும் நகர்வு தீயுடனான விளையாட்டுக்கு ஒப்பானது.
  • டெல்லியில் இடுகாட்டுக்குப் பக்கத்திலுள்ள குப்பைகளில் கொட்டப்பட்டிருக்கும் அழுகிய வாழைப் பழங்களைப் புலம்பெயர் தொழிலாளர்கள் பொறுக்கிச் சாப்பிடும் அவலத்தை நேற்று தொலைக்காட்சியில் பார்த்தேன்.
  • குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு மனைவியோடு இந்த வேகாத வெயிலில் சொந்த ஊர் நோக்கிப் பலநூறு மைல்களுக்கு நடந்தே செல்லும் தொழிலாளர்களின் கதைகள் முடிவே இல்லாமல் ஒவ்வொரு நாளும் தொடர்கின்றன.
  • நாம் இன்னும் தீவிரமான நாட்களில் நுழையவில்லை. கரோனாவைக் கடந்து பெரும்பான்மை இந்தியர்கள் மீண்டும் பழைய வாழ்க்கையில் இயல்பாக அமர மூன்று மாதங்களேனும் ஆகும்.
  • அரசு உதவாமல் நிறுவனங்களாலும் மக்களாலும் இடைப்பட்ட காலத்தைப் பொருளாதார ரீதியாகக் கடக்கவே முடியாது.

நன்றி: தினமணி (20-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories