TNPSC Thervupettagam

அடுத்த கட்டத்துக்குப் பாயும் அறிவியல்

December 27 , 2023 393 days 310 0
  • தனது நான்கு குழந்தைகளை முறையாகப் பராமரிக்காமல் கொன்றுவிட்டார் எனக் குற்றம்சாட்டப்பட்டு, 20 ஆண்டுகள் சிறை யில் இருந்த கேத்லீன் ஃபோல்பிக் விடுதலை செய்யப்பட்டதுதான் 2023ஆம் ஆண்டின் பரபரப் பான அறிவியல் தொழில்நுட்பச் செய்தி. கடந்த 20 ஆண்டுகளில் மரபணு ஆய்வுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக, ஃபோல்பிக்கின் குழந்தைகளான சாரா, லாரா இருவருக்கும் மரபணுத் தொகுதியில் CALM2 - G114R எனப்படும் மிகவும் அரிதான மரபணுப் பிறழ்வு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பிறழ்வு உள்ளவர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மாரடைப்பு ஏற்படும். சாரா, லாரா தவிர ஏனைய இரண்டு குழந்தைகள் காலேப், பேட்ரிக் ஆகியோரும் REM2 எனும் அரிய மரபணுப் பிறழ்வை அவர்களது தந்தையிடமிருந்து பெற்றனர் எனவும் ஆய்வுகள் நிறுவின.
  • இந்த இரண்டு மரபணுப் பிறழ்வுகள் சேர்ந்ததால்தான் மரணம் சம்பவித்தது என நிரூபிக்கப்பட்டது. மேலும், கட்டுப்பாடற்ற வலிப்பு நோய் காரணமாகத் தான் பேட்ரிக்கின் மரணம் சம்பவித்தது எனவும் நிறுவப்பட்டது. நான்கில் மூவரின் மரணம் இயற்கை மரணம்தான் என அறிவியல் தொழில்நுட்பம் வழியேநிறுவியதன் தொடர்ச்சியாக ஃபோல்பிக்கின் மேல்முறையீட்டை ஏற்று ஆஸ்திரேலியா அரசு அவரை விடுதலை செய்தது. 

ஈர்ப்பு விசையும் ஆன்ட்டி மேட்டரும்

  • ஈர்ப்புப் புலத்தில் ஆன்ட்டி மேட்டரும் கவரப்படும் எனச் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார்கள். செர்ன் ஆய்வுக்கூடத்தில் உள்ள ALPHA-g பரிசோதனைக் கூடத்தில் சுதந்திரமாகக் கீழே விழும் ஆன்ட்டி மேட்டர் அணுக்களை - ஆன்ட்டி ஹைட்ரஜன் - வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உயரத்தில் காந்தப் புலத்தில் பிடித்துவைக்கப்பட்ட ஆன்ட்டி ஹைட்ரஜனை விடுவிக்கும்போது, எந்தத் திசையில் அவை செல்கின்றனஎன ஆய்வுசெய்தார்கள். மேட்டர் எனப்படும் இயல்பான பொருள்கள் எந்த முடுக்கு வேகத்தில் ஈர்ப்பு விசையில் கீழே விழுகின்றனவோ அதன் 75% முடுக்கு வேகத்தில் ஆன்ட்டி மேட்டர் பொருள்கள் கீழே விழந்தன என இந்த ஆய்வு சுட்டுகிறது. இதன் தொடர்ச்சியாகத் தற்போது உள்ள இயற்பியலைக் கடந்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்கிறார்கள்.
  • நாளை மற்றொரு நாள் அல்ல: உலகின் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுவரும் பெருமழை, வெள்ளம் போன்றவை காலநிலை மாற்றம் குறித்த பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த காலங்களில், புவி வெப்பமாதலின் காரணமாகக் கடலில் நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது என இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வு கூறுகிறது. அண்டார்க்டிகா கண்டத்தைச் சுற்றியுள்ள தென் கடல் பகுதியில் கனமான உப்புச் செறிவுள்ள நீர் நேரே கீழே செல்லும். அப்போது ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, வெப்பம் முதலியவற்றையும் அது கீழ் நோக்கி எடுத்துச் செல்லும். கடலின் அடியே இவற்றைப் புதைத்து வைத்துவிட்டு, நீர் மட்டும் வடக்கு நோக்கி நகரும்.
  • இந்த நீரோட்டச் சுழற்சி மூலம் மனிதகுலம் வெளியிடும் கார்பன் மாசில் சுமார் மூன்றில் ஒரு பகுதியானது, வளிமண்டலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அகற்றப்படுகிறது. அதாவது, புவி வெப்பம் அடைவதைத் தடுத்து நிறுத்துகிறது. ஆனால், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 1970ஐ ஒப்பிடும்போது இந்தச் சுழற்சி வேகம் தற்போது சுமார் 20% குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இந்தச் சுழற்சி சீர்கெட்டால் புவி வெப்பம் இன்னும் வேகமாக அதிகரிக்கக்கூடும்.
  • உலக வெப்பநிலையை நாம் அளவிடத் தொடங்கியதிலிருந்து மிக உயர்ந்த வெப்பநிலை கொண்ட ஆண்டாக 2023 உள்ளது. தொழிற்புரட்சி ஏற்பட்ட காலகட்டத்தை ஒப்பிட்டால் சராசரி வெப்பம் 1.4 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. இதற்கு முன்னர் மிக உயர்ந்த வெப்ப ஆண்டாக இருந்த 2016ஆம் ஆண்டில் சராசரி வெப்ப உயர்வு 1.2 டிகிரி செல்சியஸாக ஆக இருந்தது குறிப்பிடத்தகுந்தது.
  • இதே நிலை தொடர்ந்தால் சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரவிடக் கூடாது என்னும் பாரிஸ் ஒப்பந்த எல்லையை மீறிவிடுவோம் என்ற அச்சம் உலகெங்கும் வெகுவாகப் பரவிவருகிறது. எனினும் கார்பன் மாசை அதிகமாக உமிழ்ந்துவரும் வளர்ந்துவரும் நாடுகள், கட்டுப்பாடு ஏதுமில்லாமல் சந்தைப் பொருளாதாரம் சார்ந்து தீர்வு கண்டுவிடலாம் எனக் கனவு காண்பது உலகையே அழிவின் விளிம்புக்கு எடுத்துச் சென்றுள்ளது.

மாற்றப்பட்ட இயற்கை

  • தானே சுயமாக மீளும் தன்மை கொண்ட முற்றிலும் புதிய அம்சங்களுடன் பொருள்களை உருவாக்கும் நானோ தொழில்நுட்பம், கணிசமான வளர்ச்சியைக் கண்டது. CRISPR-Cas9 எனும் மரபணுத் தொழில்நுட்பம் கொண்டு மரபணுத் தொடரைத் திருத்தியமைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. டிஎன்ஏ பிறழ்வுகளை மரபணு எடிட்டிங் மூலம் சீர் செய்வதே CRISPR-Cas9 நுட்பம். மரபணுப் பிறழ்வு உள்ள கருவைத் திருத்தி மரபணு நோயை முளையிலேயே முற்றிலும் கிள்ளியெறிய முடியும். உணவு ஒவ்வாமை போன்ற மரபணுப் பிறழ்வுகளை அகற்றவும், பயிர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், நமது உடலில் கண், முடி, நிறம் போன்ற உயிரியல் பண்புகளைத் திருத்தவும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.
  • மனித செல்கள் பல லட்சம் வேதிப் பொருள்களைத் தயாரிக்கின்றன. ஆனாலும் வேதித் தொழிற்சாலை போலச் சூழலை நச்சு செய்வதில்லை. எனவே, உயிரி பொருள்களைக் கொண்டு பல்வேறு வேதிப்பொருள்களைத் தயாரித்தால் சூழல் மாசைத் தவிர்க்க முடியும். இதற்கும் மரபணு திருத்தப்பட்ட உயிரிகள் உதவும். முதன்முறையாகப் பழ ஈயின் லார்வா மூளையில் உள்ள 3,016 நியூரான்கள் எப்படித் தமக்குள் 5,48,000 நரம்பிணைப்புகளைக் கொண்டுள்ளன என்பதை இனம் கண்டுள்ளார்கள். இதற்கு முன்னர் வெறும் நூறு நியூரான்கள் மட்டுமே கொண்ட சி. எலிகன்ஸ் என்னும் புழுவின் மூளை நரம்பிணைப்புகளை இனம் கண்டிருந்த நிலையில், மூளை அமைப்பு செயல்பாடு போன்றவற்றைப் புரிந்துகொள்ள புதிய ஆய்வு உதவும்.
  • விண்வெளியில் அதிசய கார்பன் மூலக்கூறு: 1,350 ஒளி ஆண்டுத் தொலைவில் d203-506 எனும் வேறொரு விண்மீனைச் சுற்றிப் புதிதாக உருவாகிவரும் கோள் பிறப்புத் திரள்வட்டுப் பகுதியில் மெத்தீனியம் எனப்படும் மெத்தில் நேர்மின் அயனி (CH3 ) கரிம வேதிப்பொருளை ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி இனம் கண்டுள்ளது.
  • மேலும், சிக்கல் மிகுந்த கார்பன் மூலக்கூறுகள் உருவாக இந்த வேதி இடைநிலை அவசியம். மெத்தில் நேர்மின் அயனி உருவாக்கத்தின் தொடர்ச்சியாக மேலும் சிக்கல் மிகுந்த கார்பன் மூலக்கூறுகள் ஏற்பட்டால்தான் உயிரிகளின் தோற்றம் சாத்தியம். எனவே, இயற்கை நிகழ்வுகள் வழியே பிரபஞ்சத்தின் வேறு இடங்களிலும் உயிர் தோற்றம் சாத்தியம் என இந்த ஆய்வு நமக்குத் தெரிவிக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories