TNPSC Thervupettagam

அணி திரட்டும் புதின்!

July 2 , 2024 11 hrs 0 min 7 0
  • அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளை அணிதிரட்டும் முயற்சியில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
  • உக்ரைனுடனான போர் முடிவடையாமல் இழுத்துக் கொண்டே செல்லும் நிலையில், அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளை அணிதிரட்டும் முயற்சியில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவரது இந்த முயற்சி, உடனடியாக இல்லாவிட்டாலும் வருங்காலத்தில் 1970-களைப்போல மீண்டும் பனிப்போர் காலத்துக்கு இட்டுச் செல்லக்கூடும் என்கிற அச்சம் எழுகிறது.
  • "நேட்டோ' கூட்டமைப்பில் உக்ரைன் இணைவது தனக்கு அச்சுறுத்தல் என்று கருதிய ரஷியா, அந்த நாட்டின் மீது கடந்த 2022 பிப்ரவரி 24-இல் படையெடுத்தது. உக்ரைனை ரஷியா சுலபமாக வீழ்த்திவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆயுதம், பண உதவி காரணமாக, ரஷியாவுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக உக்ரைன் கடும் சவாலாக இருந்து வருகிறது.
  • இதனால் அதிருப்தி அடைந்த புதின், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆதரவாக இல்லாத நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து அணிதிரட்டி வருகிறார்.
  • ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் பல ஆண்டுகளாகக் கடும் பகை நிலவிவருகிறது. ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு முனைப்புகளைக் காரணம் காட்டி அந்த நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால் ஈரானுடன் உறவுகளை மேம்படுத்திக் கொண்ட ரஷியா, உக்ரைனுடனான போருக்காக ட்ரோன்களை ஈரானிடம் இருந்து வாங்கியுள்ளது.
  • சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பகைமை அனைவரும் அறிந்த ரகசியம். சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சர்வாதிகாரி என்றும், ரஷிய அதிபர் புதினை கொலைகாரர் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில்தான் விமர்சித்திருந்தார். உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்கான ஆயுத உற்பத்திக்கான தொழில்நுட்ப உதவிகளை ரஷியாவுக்கு சீனா செய்துவருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.
  • இத்தகைய சூழலில், சீன அதிபர் ஜின்பிங்கை கடந்த மே மாதத்தில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் புதின் சந்தித்தார். உலக அரசியல் சமநிலையை இருநாடுகளின் நல்லுறவு உறுதி செய்யும் என்று இருதலைவர்களும் கூறியது உலக அரசியலின் போக்கு அமெரிக்கா, அதன் எதிர்நாடுகள் என்று மாறுவதற்கான முன்மொழிவு.அதேபோன்று, தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு நிலவிவருகிறது. 1950-இல் தென்கொரியாவை வடகொரியா கைப்பற்ற முனைந்தபோது, தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவும், வடகொரியாவுக்கு ஆதரவாக அப்போதைய சோவியத் யூனியனும், சீனாவும் களம் இறங்கின.
  • இப்போதும் தென்கொரியாவுக்கு ஆதரவாக நிதி, ஆயுத உதவிகளை அளித்துவரும் அமெரிக்கா, அந்த நாட்டுடன் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறது. வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது.
  • இதற்கு முன்னர், வடகொரியா அணு ஆயுதத் தயாரிப்புக்கு முனைந்தபோது, அதை முடக்க முயற்சித்த நாடுகளுக்கு புதின் ஆதரவளித்தார். அணு ஆயுதத் தயாரிப்புக்காக வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அதற்கு ஆதரவாக ரஷியா வாக்களித்தது.
  • இருப்பினும், உக்ரைன் போர் புதினை வடகொரியாவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வைத்திருக்கிறது. வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கடந்த செப்டம்பரில் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிபர் புதினை சந்தித்தார். அப்போது உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவு அளித்ததுடன் ஆயுத உதவி அளிக்கவும் ஒப்புக் கொண்டார்.
  • இதைத் தொடர்ந்து, கடந்த 24 ஆண்டுகளில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதின் கடந்த ஜூன் மாதம் வடகொரியா சென்றார். எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு உள்ளாகும்போது பரஸ்பரம் ராணுவ உதவி செய்துகொள்ளும் ஒப்பந்தத்தை இரு நாடுகளும் ஏற்படுத்திக் கொண்டிருப்பது, சர்வதேசப் பார்வையாளர்களை கவலை கொள்ளச் செய்திருக்கிறது.
  • இந்த சந்திப்புக்குப் பின், "உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளித்துவரும் நாடுகள், எங்களுடன் நேரடியாகப் போரிடவில்லை என்று கூறிவருகின்றன. அப்படியெனில், வடகொரியா உள்ளிட்ட அந்த நாடுகளின் எதிரிகளுக்கு சக்தி வாய்ந்த ஆயுதங்களை அளிக்கும் உரிமை எங்களுக்கும் உள்ளது' என்று புதின் கூறியிருப்பது அந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
  • புதினுக்கு பதிலடி கொடுத்துள்ள தென்கொரியா, உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளிப்பது குறித்து பரிசீலிக்கப் போவதாக கூறியுள்ளது, வரும் நாள்கள் மோதல் போக்கு மேலும் அதிகரிக்கப் போவதையே காட்டுகிறது. மேலும், தங்கள் நாட்டுக்கான ரஷிய தூதரை நேரில் வரவழைத்து, வடகொரியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தென்கொரியா வலியுறுத்தி உள்ளது.
  • அமெரிக்காவின் மற்றொரு பகை நாடான வியத்நாமுக்கும் புதின் கடந்த ஜூனில் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் டே லாமுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
  • இஸ்ரேல் - ஹமாஸ் போர், உக்ரைன் - ரஷியா போர் நீண்டு கொண்டே செல்வது பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளை அந்த நாடுகளுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் அமெரிக்கா- கூட்டணி நாடுகள், மறுபுறம் ரஷியா - சீனா - கூட்டணி நாடுகள் என வரிசைக்கட்டி மோதுவது, பொருளாதார ரீதியான பாதிப்புகளையும் போரினால் ஏற்படும் உயிரிழப்புகளையும் மேலும் அதிகரிக்கவே செய்யும்.
  • தலைவர்களின் சுயநலத்தால் பாதிக்கப்படப் போவது என்னவோ அப்பாவி பொதுமக்கள்தான். ஒட்டுமொத்த உலகமும்தான்!

நன்றி: தினமணி (02 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories