- இந்தியாவில் ஒன்றரை மாத காலமாக நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பைத் தொடரில் பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. பழைய சாதனைகள் பல தகர்க்கப்பட்டுள்ளன. அவற்றின் தொகுப்பு இங்கே:
அணி சாதனை
- 2023 உலகக் கோப்பையில் அதிகபட்ச ரன்களை தென் ஆப்பிரிக்கா குவித்தது. டெல்லியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்களைக் குவித்தது. இதற்கு முன்பு 2015இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 417 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.
- ஒரே உலகக் கோப்பை தொடரில் 350-க்கும் அதிகமான ரன்களை நான்கு முறைக்கு மேல் குவித்த அணி என்ற சாதனையை தென் ஆப்பிரிக்கா படைத்தது.
- இந்த உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் விளாசிய அணி தென் ஆப்பிரிக்கா. இந்த அணி 99 சிக்ஸர்களைப் பறக்கவிட்டது.
- உலகக் கோப்பையை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி வென்றது. முதல் கோப்பையை 1987இல் அந்த அணி வென்றிருந்தது. பின்னர் 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றது. இந்த வரிசையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கோப்பைகளை இந்தியாவும் (1983, 2011), மேற்கிந்தியத் தீவுகள் அணியும் (1975, 1979) வென்றுள்ளன.
- இதுவரை நடைபெற்ற 13 உலகக் கோப்பைத் தொடர்களில் 8 முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற அணி ஆஸ்திரேலியா மட்டுமே. இந்த வரிசையில் இந்தியாவும் இங்கிலாந்தும் தலா 4 முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற மற்ற அணிகள்.
பேட்ஸ்மேன்கள் சாதனை
- உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் விளாசிய 137 ரன்கள் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு உதவின. உலகக் கோப்பை இறுதிப் போட்டித் துரத்தலில் சதமடித்த இரண்டாவது வீரர் இவர். 1996இல் இலங்கையின் அரவிந்த டிசில்வா சதம் அடித்த முதல் வீரர்.
- ஓர் உலகக் கோப்பைத் தொடரில் அதிகபட்ச ரன் விளாசியவர் என்ற சிறப்பை இந்திய வீரர் விராட் கோலி படைத்தார். 11 போட்டிகளில் விளையாடிய இவர் 765 ரன்களைக் குவித்தார். சராசரி 95.62. இதற்கு முன்பு 2003இல் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் விளாசிய 673 ரன்களே அதிகபட்சமாக இருந்தது.
- ஒரு நாள் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையை இந்தியாவின் விராட் கோலி (50 சதங்கள்) படைத்தார். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கரின் (49 சதங்கள்) சாதனையை அவர் முறியடித்தார்.
- உலகக் கோப்பையில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை இந்தியாவின் ரோஹித் சர்மா பெற்றார். இதுவரை அவர் 7 சதங்களை உலகக் கோப்பையில் விளாசியுள்ளார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் விளாசிய 6 சதங்களே அதிகபட்சமாக இருந்தது.
- ஓர் உலகக் கோப்பைத் தொடரில் 50க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை இந்தியாவின் ரோஹித் சர்மா பெற்றார். இவர் மொத்தம் 54 சிக்ஸர்களை அடித்தார்.
- ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் நெதர்லாந்துக்கு எதிராக 40 பந்துகளில் சதமடித்தார். இது உலகக் கோப்பையில் விளாசப்பட்ட அதிகவேக சதமாகும். இதற்கு முன்பு இதே தொடரில் தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் இலங்கைக்கு எதிராக 47 பந்துகளில் சதமடித்ததே அதிவேக சதமாகும். ஒரு சில நாட்களிலேயே மார்க்ரம் சாதனை தகர்க்கப்பட்டது.
- 2023 உலகக் கோப்பையில் இரட்டைச் சதம் விளாசிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் பெற்றார். மும்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 201 ரன்கள் குவித்தார். இதற்கு முன்பு 2015இல் மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் (2015), நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் (237) ஆகியோர் இரட்டைச் சதம் விளாசியுள்ளனர்.
- ஒரு நாள் போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கிளென் மேக்ஸ்வெல் படைத்தார்.
- உலகக் கோப்பையில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக அதிக ரன் எடுத்தவர் விராட் கோலி ( 1,795).
பந்துவீச்சாளர்கள் சாதனை
- உலகக் கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட்டு களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இந்தியாவின் முகமது ஷமி படைத்தார். 17 இன்னிங்ஸ்களில் இந்தச் சாதனையை ஷமி படைத்தார்.
- ஓர் உலகக் கோப்பைத் தொடரில் 24 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் ஷமி படைத்தார். இதேபோல ஓர் உலகக் கோப்பை தொடரில் 3 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் ஷமிக்கே கிடைத்துள்ளது.
- இந்த உலகக் கோப்பையில் மும்பையில் நியூசிலாந்துக்கு எதிராக 57 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் முகமது ஷமி. இந்த உலகக் கோப்பையில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் இவர் மட்டுமே. ஒரு நாள் போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சாகவும் இது பதிவானது. இதற்கு முன்பு 2014இல் வங்கதேசத்துக்கு எதிராக ஸ்டூவர்ட் பின்னி 4 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
- பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், இலங்கையின் லசித் மலிங்கா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய 3ஆவது வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் படைத்தார். இவர் 65 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- பாகிஸ்தானின் ஹாரிஸ் ரவுஃப் இந்த உலகக் கோப்பையில் 533 ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். ஒரு தொடரில் வேறு எந்தப் பந்து வீச்சாளரும் இவ்வளவு அதிகமாக ரன்களை விட்டுக் கொடுத்ததில்லை.
- ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலகக் கோப்பையில் இரண்டாவது முறையாக ஒரு சுழற்பந்து வீச்சாளரால் வீழ்த்தப்பட்ட அதிக விக்கெட்டுகள் இதுவாகும். இதன்மூலம் இலங்கையின் முத்தையா முரளிதரன் சாதனையைச் சமன் செய்தார்.
நன்றி: இந்து தமிழ் திசை (24 - 11 – 2023)