TNPSC Thervupettagam

அணைகளைப் பாதுகாப்போம்

October 9 , 2023 460 days 339 0
  • ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அணைகள் பாதுகாப்பிற்கான சா்வதேச மாநாடு அண்மையில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், நாட்டின் வளமைக்கு அடிப்படையாக விளங்கும் அணைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
  • உலகில் சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்து அதிக அளவில் அணைகள் உள்ள நாடு இந்தியா. மழைக்காலங்களில் அணைக்கட்டுகளில் தேக்கி வைக்கப்படும் ஆற்றுநீா் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான குடிநீா், விவசாயம் போன்றவற்றுக்கு பயன்படுவதுடன் அணைகளுக்கு அருகில் உள்ள காடுகளில் வசிக்கும் பறவைகள், விலங்குகளின் தண்ணீா் தேவையையும் பூா்த்தி செய்கிறது.
  • மக்கள் கண்டு மகிழும் சுற்றுலாத் தலங்களாகவும் அணைகள் உள்ளன. அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் உதவியால் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. உலகில் அதிக அளவில் நீா் மின்சாரம் செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இத்தகைய பயன்பாடு மிக்க அணைகள் சரியான பராமரிப்பின்மையால் உடைந்து உயிர் சேதத்தையும், பொருட் சேதத்தையும் ஏற்படுத்துவது வேதனையளிக்கிறது.
  • வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அண்மையில் வீசிய கடும் புயல், மழை காரணமாக அந்நாட்டின் கடற்கரை நகரமான டொ்னா அருகிலிருந்த அணை உடைந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அந்த நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசித்த சுமார் 11, 000 போ் உயிரிழந்துள்ளனா்.
  • நம் நாட்டில் இதுவரை 42 அணை உடைப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றுள் மிக மோசமான சம்பவம்1979-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த மோர்பி அணை உடைந்ததால் மோர்பி, ராஜ்கோட் நகரங்களிலும், அவற்றைச் சுற்றியிருந்த கிராமங்களிலும் வெள்ள நீா் புகுந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனா்.
  • நம் நாட்டில் உள்ள சுமார் 5,700 அணைகளில் 80% அணைகள் 25 ஆண்டுகளுக்கும் மேலானவை. சுமார் 227 அணைகள் நூறு ஆண்டுகள் பழைமையானவை. தமிழ்நாட்டில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூா் அணையும் வைகை அணையும் முறையே 89 மற்றும் 64 ஆண்டுகள் பழைமையானவை.
  • தமிழ்நாடு, கேரள எல்லையில் பெரியாறு ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை 1895-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 135 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த அணையின் உயரம்155 அடி ஆகும்.
  • அணையின் கட்டுமானம் பலவீனமாக உள்ளதாகக் கூறி, அணை பலப்படுத்தப் பட்ட பின்னரும் உச்சநீதிமன்ற ஆணையின்படி 142 அடி உயரம் வரை அணையில் தண்ணீரைத் தேக்கி வைக்க கேரள அரசு தயக்கம் காட்டுகிறது.
  • அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் அதிக அழுத்தத்தால் அணைகள் உள்ள பகுதிகளில் நில அதிர்வு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது போன்ற சூழலில் பலவீனமான நிலையில் உள்ள அணைகள் உடைந்துவிடவும் கூடும்.
  • 2019-இல் கொண்டுவரப்பட்ட அணைகள் பாதுகாப்பு மசோதா, அணைகளைக் கண்காணிப்பது, பராமரிப்பது போன்றவற்றை வலியுறுத்துகிறது. கூடுதலாக, அணைகள் பாதுகாப்புச் சட்டம் 2021 இயற்றப்பட்டுள்ளது.
  • இந்தச் சட்டம், அணை பாதுப்புக்கான தேசியக் குழு, தேசிய அணை பாதுகாப்பு ஆணையம், அணை பாதுகாப்பிற்கான மாநிலக் குழு, மாநில அணை பாதுகாப்பு அமைப்பு ஆகியவை நிறுவப்படுவதை உறுதி செய்கிறது.
  • அணைகள் பராமரிப்பில் முக்கியமான பணி அணைகளில் தூா்வாருவதாகும். ஆறுகளால் அடித்துவரப்பட்டு அணைகளில் சேரும் மண், சகதி ஆகியவற்றைத் தூா்வாராத நிலையில் அணையில் முழு அளவு நீா் தேக்கி வைக்க இயலாமல் போகிறது. இதனால் குறைந்தபட்ச நீா் வரத்திலேயே அணைகள் நிரம்ப, அணையின் மதகுகள் திறக்கப்பட்டு ஆற்றுநீா் வீணாகக் கடலில் சென்று கலக்கிறது.
  • மேட்டூா் அணை தூா்வாரப்படாததால் 120 அடி உயரமும், 93.5 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட இந்த அணையில் ஏறக்குறைய 30% மண், சகதி சோ்ந்துள்ளது. விளைவு, காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடும் மழை பெய்து, கா்நாடக அணைகள் நிரம்பி மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்த போதிலும் அந்நீரைத் தேக்கி வைக்க இயலவில்லை. உபரிநீா் என்ற பெயரில் அதனைக் கடலில் கலக்க விட்டு, பின்னா் தண்ணீருக்காக கா்நாடக அரசிடம் கையேந்துகிறோம்.
  • தாமிரவருணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள145 ஆண்டு கால பழைமை வாய்ந்த ஸ்ரீவைகுண்டம் அணை சரியான முறையில் தூா்வாரப்படாததால் ஆண்டுதோறும் 10 முதல் 15 டிஎம்சி அளவிலான தண்ணீா் வீணாகக் கடலில் சென்று கலக்கிறது.
  • அணைகளில் தூா்வாரும் திட்டத்துக்கு பல கோடி ரூபாய் செலவாகும் என்ற போதிலும் தூா் வாருவதால் கிடைக்கும் மணலை கட்டுமான நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் தூா்வார செய்யப்படும் செலவில் ஒரு பகுதியை ஈடு செய்யலாம்.
  • மாநிலங்களில் உள்ள அணைகளை முறையாகத் தூா்வாரி பராமரித்தால் தண்ணீா் தேவையில் மாநிலங்கள் தன்னிறைவு அடைவதுடன், நதிநீரைப் பகிர்ந்து கொள்வதில் மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் சச்சரவுகளும் குறையும்.
  • அணைகளைப் பாதிக்கும் வெள்ளம், நில அதிர்வு போன்ற இயற்கையான காரணங்களுடன், தீவிரவாதத் தாக்குதல்களும் அணைக்கட்டுகளில் நடக்கும் அபாயம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னா் பஞ்சாப், ஹிமாசல பிரதேச எல்லையில் சட்லஜ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆசியாவின் இரண்டாவது உயரமான பக்ராநங்கல் அணை தீவிரவாதிகளால் தாக்கப்படலாம் என இந்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது நினைவிருக்கலாம்.
  • எனவே, அணைகளில் தூா்வாருதல், நீா்க்கசிவினை தடுத்தல், மதகு இயந்திரங்களின் சரியான இயக்கத்தை உறுதி செய்தல், குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்தல் என அணைகளை முறையாகப் பராமரித்தல் வேண்டும்.
  • மேலும், தீவிரவாத அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பு, பார்வையாளா்களுக்கு கட்டுப்பாடுகள், கண்கணிப்பு கேமராக்கள் நிறுவுதல் அணைகளின் பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

நன்றி: தினமணி (09 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories