TNPSC Thervupettagam

அண்ணலே தேசத் தந்தை

January 29 , 2024 176 days 138 0
  • அண்மையில் தமிழக ஆளுநர் "இந்திய சுதந்திரத்திற்கு மகாத்மா காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை. இந்திய தேசிய காங்கிரஸால்தான் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது என்பதை முழுமையாக ஏற்கமுடியாது. நேதாஜியே நமது நாட்டின் தேசத் தந்தை' என்று கூறியிருப்பது வியப்பைத் தருகிறது
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள்  விழாவில், அவருடைய பெருமைகளைப் போற்றிப் பேசுவதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. ஆனால், அதற்காக அண்ணல் காந்தியடிகளின் செயல்களைக்  குறைத்து மதிப்பிடுவதிலும் பேசுவதிலும் நியாயம் இருக்க முடியாது. நேதாஜியின் "ஆசாத் ஹிந்த் பவுஜ்' என்ற இந்திய தேசிய ராணுவம் ஆங்கிலேயர்களுக்குச் சவாலாக விளங்கியது என்பது உண்மை. ஆனால், அதனால் மட்டுமே ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து.
  • காந்தியடிகள் அரசியலில் அறிமுகப்படுத்திய அகிம்சை வழிப் போராட்டமே அதற்கு முழுமுதல் காரணமாக இருந்தது. இது நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய  உண்மை. நாட்டில் நடை பெற்ற  விடுதலைப் போராட்ட வரலாறு அதனைத் தெளிவு படுத்தும்.
  • இந்திய விடுதலைப் போராட்டத்தில்  நேதாஜிக்கு இருந்த அர்ப்பணிப்பை  யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் என்பதும் மறுக்க முடியாத உண்மை. தொடக்கத்தில் அவர் காங்கிரஸில் இருந்து, காந்தி, நேரு போன்ற பல தலைவர்களுடன்  கூட்டாகச் சேர்ந்துதான் தம்முடைய விடுதலைப் போராட்ட உணர்வை வெளிப்படுத்தினார்.
  • காலப் போக்கில் காந்தி, நேருவின் கொள்கைகளோடு அவருடைய சித்தாந்தம் ஒத்துப் போகாததாலும், அறவழியில் போராடிப் பயனில்லை என்று அவர் கருதியதாலும், ஆயுதமேந்தி ஆங்கிலேயர்களை எதிர்க்க முடிவெடுத்தார். ஆயுதம் ஏந்திய புரட்சி மூலம்தான் ஆங்கிலேயர்களை வெளியேற்ற முடியும் என்பது அவருடைய நம்பிக்கை. அதற்காகவே இந்திய தேசிய ராணுவத்தை வழிநடத்தினார். அதில் பல்லாயிரக்கணக்கான வீரர்களும் இணைந்தனர். அதற்கு நேர்மாறான  அகிம்சை வழியால் ஆங்கிலேயரை அகற்ற முடியும் என்பது காந்திஜியின் அசைக்க முடியாத நம்பிக்கை.
  • இந்தியாவில் விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்ற காலத்தில், பயங்கரவாதம், தீவிரவாதம், மிதவாதம் என்று மூன்றுவிதமான வழிமுறைகளில்  நம்பிக்கை உடையவர்கள் காங்கிரஸில் இருந்தனர்.
  • தென்னாப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய காந்தியடிகள் மிதவாதம் என்னும் போக்கினைக் கடைப்பிடிப்பவராகவே  இந்திய விடுதலைப் போரில் தம்மை இணைத்துக் கொண்டார். அதற்கான  அஸ்திவாரம் தென்னாப்பிரிக்காவிலே அவருக்கு  உருவாகியிருந்தது. அதுதான் சத்தியாகிரகம் என்னும் வழிமுறை.  
  • காந்தியடிகள் விடுதலைப் போரில் எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டாக்கினார் என்பதற்கு அவர் அறிவித்த போராட்டங்கள் சாட்சி பகரும். தண்டி யாத்திரை, சம்பாரண் சத்தியாகிரகம், கேதா சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், ரௌலட் சட்ட எதிர்ப்பு, அந்நிய துணி பகிஷ்கரிப்பு  போன்ற போராட்டங்கள் இந்திய மக்களிடையே விடுதலை பற்றிய  விழிப்புணர்வைப் பெரிதும்  ஏற்படுத்தின.
  • அண்ணல் அறிவித்த "தண்டி யாத்திரை'தான் முதன்முறையாகப் பெரும் எண்ணிக்கையான இந்தியர்களை விடுதலைப் போரில் இணைந்துகொள்ள வழி வகுத்தது என்பது ஆய்வறிஞர்களின் கணிப்பு. இந்திய மக்களின் உணர்வைத் தூண்டும் வகையில் காந்திஜி  இந்தியா முழுமைக்கும் பயணம் செய்தார். இன்னும் சொல்லப் போனால் விடுதலைப் போரை வெகுஜன இயக்கமாக மாற்றிய பெருமை காந்தியடிகளையே சாரும்
  • இந்தத் தாக்கம்தான் நாடக மேடைகளில் கூட தேசிய எழுச்சிப் பாடல்களைப் பாடச்செய்தது. அவருடைய அறவழி அணுகுமுறையே உயர்ந்தது என்பதை அறிந்த மகாகவி பாரதியார், "பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா' என்று வாழ்த்தினார். நாமக்கல் கவிஞரும், "காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்துகாட்டும் செந்நெறி' என்று புகழ்ந்தார்.
  • விடுதலை போராட்டக் களம் காந்தியடிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது என்பதை, சௌரிசௌராவில் வெடித்த வன்முறையைக் கண்டு அவர் போராட்டத்தை நிறுத்திக் கொண்டதன்  மூலம் உணரலாம்.  
  • ஆடம்பர உடையின்றி எளிய உடையுடன் இந்த உலகையே வலம்  வந்த காந்தியடிகள் மீது ஆங்கிலேயருக்கு அச்சம் கலந்த மரியாதை இருந்தது. அதனால்தான் விசாரணைக்காக, காந்தியடிகள் நீதிமன்றம் நுழைந்தபோது, ஆங்கில நீதிபதி உள்ளிட்ட அவையே தன்னிச்சையாக எழுந்து நின்றது.
  • "பிரிட்டோரியாவில்முதல் வகுப்பு ரெயில்  பெட்டியிலிருந்து எப்போது காந்தியடிகள் வெளியே தள்ளப்பட்டாரோ அப்போதே ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேற அச்சாரம் போடப்பட்டு விட்டது' என்பது காந்தியடிகளின் விடுதலைப் போராட்ட வழிமுறையை நன்கு அறிந்த அறிஞர் கூற்று. இப்படியிருக்க காந்தியடிகளின் போராட்டம் இந்தியா  விடுதலை பெற பலன் அளிக்கவில்லை என்று கூறுவது ஏற்புடையது ஆகாது.
  • தம்முடைய ஆயுதம் ஏந்திய  வழிமுறைதான் ஆங்கிலேயரை அகற்ற உகந்த வழி என்று நினைத்த நேதாஜி, "தேசத் தந்தையே உங்கள் ஆசி வேண்டும்' என்று  காந்தியடிகளை வேண்டுகிறார். இப்படி, காந்திஜியை "தேசத்தந்தை' என்று முதலில் அழைத்த பெருமை நேதாஜிக்கே உண்டு. ஆனால், நேதாஜியின் ஆயுதம் ஏந்திய முறையைக் காட்டிலும் காந்திஜியின் அறவழி முறைதான் ஆங்கிலேயரை வெளியேற்ற உறுதியாகத் துணை புரிந்தது. இதனால்தான் இந்தியா சுதந்திரம் பெற்றது. உண்மை வரலாறு இதுதான். இதனைத்  திரித்து எதிர்கால இளைஞர்களின் மனத்தில் வெறுப்புணர்வை வளர்க்கும் அரசியல் போக்கு மிகவும் ஆபத்தானது.

நன்றி: தினமணி (29 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories