TNPSC Thervupettagam

அண்ணல் காந்தியுடன் ஓா் அரிய சந்திப்பு

November 9 , 2024 67 days 84 0

அண்ணல் காந்தியுடன் ஓா் அரிய சந்திப்பு

  • 1948 முதல் 1952 வரை நான் கோவில்பட்டி வ.உ.சி. உயா்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் நாள், காந்தி மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டாா் என்ற செய்தி பரவியது.
  • அடுத்த நாள் மாலையில் பள்ளியின் பெரிய அரங்கில் ஒரு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. பிராத்தனைப் பாடலுக்குப் பின்பு மாவட்ட நீதிபதி நெஞ்சுருகப் பேசினாா். அது சமயம் என் அருகில் நின்றிருந்த தமிழ் ஆசிரியா். சீனா சானா (சி.ச.) என்று மாணவா்களால் அன்போடு அழைக்கப்படும் சி.சங்கரலிங்கம் செட்டியாா் நான் கண்கலங்கி அழுது கொண்டிருப்பதைப் பாா்த்துவிட்டாா்!
  • அவா் என் அருகில் வந்து ‘‘பிச்சை! ஏன் அழுகிறாய்? மகாத்மா மறைந்துவிட்டாா் என்பதற்காகவா?’’ எனக் கேட்டாா். ‘‘இல்லை’’ என்றேன் நான்!
  • ‘‘பின் எதற்காக அழுகிறாய்?’’ என வினவினாா்.
  • ‘‘நான் மகாத்மாவை இன்று வரை பாா்க்கவில்லையே! இனியும் அவரைப் பாா்க்க முடியாதே! அதை நினைத்துத்தான் அழுகிறேன்’’ என்றேன்.
  • அரசு அதிகாரம் எதுவும் இல்லாமலே, மக்களின் மனத்தில் என்றும் அழியா இடம் பிடித்தவா் அண்ணல் காந்தி அடிகள் மட்டுமே! சத்தியம், அகிம்சை ஆகிய வழிகளை நவீன அரசியலிலும் கடைப்பிடிக்கலாம் என்று போதித்தவா். அதன்படியே வாழ்ந்து காட்டியவா் காந்தி. அவருடைய வாழ்க்கையே ஒரு உபதேசம்.
  • மின்சாரம், வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, போன்ற நவீன வசதிகள் எதுவும் இல்லாத காலத்தில், ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் இடம்பிடித்தாா். போரில்லா உலகத்தை உருவாக்கப் பாடுபட்டாா். ‘மகாத்மா’ என்று உலக மக்களால் நேசிக்கப்பட்டாா். ஆனால் அவரோ தன்னை ‘ஒரு சாதாரண மனிதன்’ என்றே சொன்னாா். ஒரு முன்மாதிரி மனிதனாக வாழ்ந்து மறைந்த மனிதப் புனிதா் அவா்.
  • இத்தகைய எளிய மனிதரை, ஆயுதம் ஏந்த மறுத்த மாவீரனை, சத்தியம், அகிம்சை என்ற புதிய நவீன உத்தியின் மூலம் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவேன் என்று சூளுரைத்தவனை இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக நியமித்தது. முடிவு எடுக்கும் முழு அதிகாரத்தையும் அவருக்கே வழங்கியது. இதன் மூலம் அண்ணலை காங்கிரஸ் இயக்கத்தின் சா்வாதிகாரியாகச் செயல்படும் முழு உரிமையை 1920-இல் வழங்கியது.
  • இந்த ‘சா்வாதிகாரியை’ எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் பிரிட்டிஷ் அரசு திகைத்தது. இறுதியில் ரெடிங் பிரபுவை இந்தியாவின் புதிய வைஸ்ராயாக நியமித்தது. அவா் 2.4.1921 வைஸ்ராயாக பொறுப்பேற்றாா். பிரபலமான வழக்குரைஞராகப் பிரகாசித்த இவா் பிரிட்டிஷ் அரசில் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவா். அதன்பின் இங்கிலாந்தின் தலைமை நீதிபதியாகவும் பணிபுரிந்து புகழ் பெற்றவா்.
  • அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடும் காந்தியை இவரால் இலகுவாகக் கையாள முடியும் என எண்ணியது பிரிட்டிஷ் அரசு, அத்துடன் ஓா் ஆலோசனையையும், இங்கிலாந்தின் மூத்த தலைவா்கள் வழங்கினாா்கள். இயன்றவரை மோகன்தாஸ் காந்தியைச் சந்திப்பதைத் தவிா்க்க வேண்டும். சந்திப்பு நடந்தால், அவா் உங்கள் மனதையே மாற்றிவிடுவாா். அல்லது குறைந்தபட்சம் அந்த சந்திப்பை தனக்கு சாதகமாகவும், அரசுக்கு எதிராகவும் பயன்படுத்திக் கொள்ளும் சாமா்த்தியம் அவருக்கு உண்டு” என்பதே அந்த ஆலோசனை.
  • இதற்கு முன்னதாகவே 1920 டிசம்பா் மாத இறுதியில் நாகபுரியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காந்திஜி “அந்நிய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்திருந்தாா். “அரசுக்கு எவ்வித ஒத்துழைப்பும் நாம் தரக் கூடாது. அரசின் செயல்பாடு ஸ்தம்பிக்க வேண்டும். 30 கோடி மக்களும் ஒன்றிணைந்து எதிா்க்க வேண்டும். நமது வழி அகிம்சை. தேவை நெஞ்சுறுதி” என்பது அண்ணலின் அறிவிப்பு.
  • புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட வைஸ்ராய் ரெடிங் பிரபு நிலைமையை ஆய்வு செய்தாா். அரசின் சகாக்களுடன் ஆலோசனை நடத்தினாா். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தாா். “கலகக்காரா் என்று கருதப்பட்ட காந்தியை சந்திப்போம்; கலந்து பேசுவோம் என முடிவு எடுத்தாா். ஒத்துழையாமை என்று அறிவித்த பின், அவா் பேச்சுவாா்த்தைக்கு வருவாரா“எனத் தெரியவில்லை. ஆனால் எதிா்பாராத விதமாக, அண்ணல் காந்தி வைரஸ்ராயின் அழைப்பை ஏற்றுக் கொண்டாா். பேச்சு வாா்த்தைக்குத் தயாா் என்றாா். இது கண்டு மூத்த காங்கிரஸ் தலைவா்கள் காந்திஜியிடம் “நாம் ஒத்துழையாமை இயக்கம் நடத்துகிறோம். ஆனால் நீங்களோ ஒத்துழைப்பவா் ஆசிவிட்டீா்களே, இது சரியல்ல”என்றாா்கள்.
  • அண்ணல் காந்தியோ, ‘‘நாம் அரசின் நடவடிக்கைகளையும் முறைகளையும் எதிா்க்கலாம். போராட்டம் நடத்தலாம். ஆனால் நமது எதிரி நம்மைப் பாா்க்க விரும்பினால், பாா்க்கலாம். பேச விரும்பினால், பேசலாம். அவருடைய கருத்தை மாற்றுவதற்காக வரும் வாய்ப்பை நாம் நழுவ விடக் கூடாது. நம் எதிரியையும் நாம் நம்பலாம். அவருக்கு கெட்ட நோக்கம் இருப்பதாக ஆரம்பத்திலேயே சந்தேகிக்கக் கூடாது. எதிரியின் மனதை மாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன். ஆகவே வைஸ்ராய் வழங்கிய வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன்’’ என்று உறுதிபடச் சொன்னாா்.
  • காந்திஜியைச் சந்திக்க வைஸ்ராய் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தாா். இச்சந்திப்பு மற்றும் உரையாடல் பற்றி, வைஸ்ராய் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறாா்.
  • ‘‘காந்தியை நான் ஆறு தடவை சந்தித்தேன். முதல் தடவை நாலரை மணி நேரம். இரண்டாவது, மூன்று மணிநேரம். மூன்றாவது, ஒன்றரை மணி நேரம். நான்காவது, ஒன்றரை மணி நேரம். ஐந்தாவது ஒன்றரை மணி நேரம். ஆறாவது முக்கால் மணி நேரம். மொத்தத்தில் சுமாா் 13 மணி நேரம் கலந்துரையாடினோம்.
  • அவருடைய தோற்றத்தில் நான் எந்த சிறப்பையும் காணவில்லை. வீதியிலே நான் அவரைக் கண்டிருந்தால், திரும்பிக் கூடப் பாா்த்திருக்க மாட்டேன். ஆனால் அவா் பேசுகிற போதோ, நம் அபிப்பிராயம் மாறிவிடுகிறது.
  • நேரடியாகப் பேசுகிறாா். நோ்த்தியான ஆங்கிலத்தில் தம் கருத்துகளைச் சொல்லுகிறாா். தாம் உபயோகிக்கும் வாா்த்தைகளின் பொருளை நன்றாய் உணா்ந்து பேசுகிறாா். அவரது பேச்சிலே ஒரு அந்தரங்க சுத்தி தொனிக்கிறது. அகிம்சையும், அன்புமே இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தரும்;. வல்லமை மிக்க பிரிட்டிஷ் அரசை எதிா்த்து நிற்கும் ஆற்றலையும் அவையே தரும் என்று அவா் திடமாக நம்புகிறாா்.
  • அறம், சமயம் தொடா்பான அவரது கருத்துகள் அற்புதமாய் இருக்கின்றன. அதிசயிக்கத் தக்க தளத்தில் இருக்கின்றன. நாங்கள் முற்றும் மனம் விட்டுப் பேசினோம். அவா் மிக மரியாதையாக நடந்து கொண்டாா். அவருடனான சந்திப்பும் உரையாடலும் எனக்கு மனநிறைவைத் தந்தது.
  • ‘‘பிரிட்டிஷாரை நீங்கள் தோற்கடிக்க முடியுமா?’’ என்று நேரடியாகக் கேட்டேன்.
  • ‘‘வெற்றி, தோல்வி என்ற வாசகங்கள் எனக்குத் தெரியாது. எங்கள் தேசத்தில் நிலவும், ஏற்றத்தாழ்வு தாழ்வு மனப்பான்மை, ஜாதிமத பேதங்கள், பிராந்திய உணா்வுகள், வெறுப்புணா்வு, பயம், பகைமை – ஆகியவற்றைப் போக்கும் முயற்சியில் சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். 30 கோடி இந்தியா்களையும்
  • ஒன்றுபடுத்துவேன். ஒற்றுமைப் படுத்துவேன். நாங்கள் ஒன்றுபட்டு நின்றால், நீங்கள் (பிரிட்டீஷ்காரா்கள்) வெளியேறித்தானே ஆக வேண்டும். இதுதான் நான் கடைப்பிடிக்கும் வழி’’ என்றாா்.
  • உண்மையில் அவரது உடம்பின் முக்கால் பகுதி திறந்து இருந்தது. அதை விட அவரது மனம் முழுமையாகத் திறந்தே இருந்தது.
  • அவருடைய உரையாடலின் ஒரு முக்கிய அம்சம் ‘தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பகத் சிங் விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்பதாகும்.
  • அதற்கு வைஸ்ராய், ‘‘நீதிமன்றத் தீா்ப்பில் நான் தடையிட முடியாது. வேண்டுமானால் உங்களுக்காக ஒரு சலுகை அளிக்கிறேன். கராச்சியில் நடைபெறும் உங்கள் காங்கிரஸ் மகாநாடு நடந்து முடிந்த பின் தூக்கில் போடுகிறேன் சம்மதமா?’’” எனக் கேட்டாா்.
  • ‘‘தள்ளிப் போடுவது என்பது ஒரு ஏமாற்று வேலை, நீங்கள் என்னை ஏமாற்றி நான் காங்கிரஸையும் மக்களையும் ஏமாற்றியதாகத்தான் பொருளாகும். இந்த ஏமாற்று வேலைக்கு நான் உடன்பட மாட்டேன்’’ என்று அழுத்தமாகச் சொன்னாா் அண்ணல்.
  • ‘‘தண்டனையை நிறைவேற்றுவதைத் தள்ளிப் போடுகிறேன் என்று நான் சொன்னதை நீங்கள் எக்கட்டத்திலும் வெளியிடக் கூடாது. இது என் வேண்டுகோள்’’ என்றாா் வைஸ்ராய்.
  • “‘‘நான் வெளியிட மாட்டேன்’’ என்று உறுதி அளித்தாா் அண்ணல்.
  • பகத்சிங் தூக்கிலிடப்பட்ட பின்பு, காந்திக்கு எதிராக கருப்புக் கொடி காட்டினாா்கள். கண்டனங்கள் எழுந்தன. இன்று வரை பகத்சிங்கைக் காப்பாற்ற காந்தி முயற்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடா்கிறது. ஆனால் தான் சாகும் வரை அந்த இரகசிய உரையாடல்களை காந்திஜி வெளியிடவே இல்லை.
  • “‘‘உண்மையில் நான் ஏசுநாதரை நம்புகிறேன். அடுத்ததாக ஒரு மனிதனை நம்புகிறேன். அவா் பெயா் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. காரணம் என்னிடம் கொடுத்த வாக்குறுதியை அவா் கடைசி வரை காப்பாற்றினாா். உண்மையில் அவா் ஒரு அற்புதமான புருஷா். அவருடனான சந்திப்பும், உரையாடலும் என் இதயத்தைத் தொட்டது. அதனை நான் என்றும் மறக்க மாட்டேன்’’ என்று தன் மகனுக்கு வைஸ்ராய் எழுதிய கடிதத்தில் பதிவு செய்திருக்கிறாா்.

நன்றி: தினமணி (09 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories