TNPSC Thervupettagam

அண்ணா - கருணாநிதியின் ஆட்சிக் காலங்கள்

June 2 , 2023 401 days 388 0
  • தமிழ்நாட்டின் சமகால வரலாற்றில் 1967 முதல் 1976 வரையில் இருந்த முதல் இரண்டு திமுக ஆட்சிக் காலங்கள் மிகவும் முக்கியமானவை. பேரறிஞர் அண்ணாவும் பிறகு கலைஞர் மு.கருணாநிதியும் முதலமைச்சர்களாக இருந்த இந்தக் காலகட்டத்தில்தான் ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று இன்று அழைக்கப்படும் ஆட்சிமுறைக்கான அடித்தளங்கள் ஒவ்வொன்றாக இடப் பட்டன.
  • பிற்காலத்தில் பிற மாநிலங்களுக்கு மத்தியில் மட்டுமல்ல, பல மூன்றாம் உலக நாடுகளின் மத்தியிலும்கூட தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்பதற்கான அரசியல், சட்ட, நிர்வாக வித்துக்கள் பருவம் பார்த்து விதைக்கப்பட்ட காலம் இந்தக் காலம்தான். தமிழ்நாடு தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பெயரை மீட்டெடுத்தது மட்டுமன்றி, தன் நவீன தேசிய இன அம்சங்களான மொழி, இன வரலாறு, பண்பாட்டுக் கூறுகளை அதிகாரபூர்வமாக அறுதிசெய்ததும் இக்காலத்தில்தான்.
  • மாநிலம் என்பது ஒரு நிர்வாகப் பிரிவு அல்ல, அது ஓர் அரசியல் பிரிவு என்பது இந்திய ஆட்சியாளர்களுக்கு உணர்த்தப்பட்டதும் அப்போதுதான். இந்தக் காலகட்டத்தில்தான், இந்திய ஜனநாயகத்தின் மிக இருண்ட காலமான நெருக்கடிநிலைக் காலத்தில் தமிழ்நாட்டை ஜனநாயகப் பூங்காவாகக் காப்பாற்றினார் கருணாநிதி. இந்திய ஜனநாயத்துக்கான முக்கியமான ஒரு பங்களிப்பையும் இதே காலத்தில்தான் அவர் வழங்கினார் - 1974 மாநில சுயாட்சித் தீர்மானத்தின் மூலமாக.

அண்ணா இட்ட அடித்தளம்:

  • 1967 மார்ச் 6 அன்று அண்ணாவின் தலைமையில் முதல் திமுக அரசு பொறுப்பேற்றது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள்கூட நிறைவடையாத நிலையில் அண்ணா மறைந்தார். அந்தக் குறுகிய காலத்திலும் அவரால் செய்யப்பட்ட மூன்று முக்கியச் சாதனைகள் மிகவும் பிரபலமானவை: சுயமரியாதைத் திருமணச் சட்டம், இருமொழிக் கொள்கை, சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது.
  • இவற்றை எல்லாரும் வியப்பார்கள், ஆனால் அவற்றின் ஆழம் பலருக்கும் புரிவதில்லை. இந்துத் திருமணம் (தமிழ்நாடு) திருத்தச் சட்டம் 1967, சுயமரியாதைத் திருமணங்களைச் சட்ட பூர்வமாக்கியதுடன், பெண்ணுரிமை சார்ந்த முதல் சட்டத்திருத்தங்களுக்கு முன்னோடியாகவும் இருந்தது. மாநிலப் பெயர் மாற்றமோ ஒட்டுமொத்த தமிழ்நாட்டு வரலாற்றிலேயே மிக முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. இரு மொழித் திட்டம், மொழி ஆதிக்கத்துக்கு எதிரான ஒரு அரசியல்சாசன வியூகம்.
  • 1971 வரை நீடித்த முதல் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வேறு பல முக்கியச் சட்டங்கள் திமுகவின் முன்னுரிமைகளைச் சுட்டிக்காட்டின: நில வரி - தண்ணீர் செஸ் (மேல் வரி) (நீக்கறவு) சட்டம் 1967 - விவசாய நிலங்களுக்கான நில வரி நீக்கப்பட்டது; தமிழ்நாடு வேளாண் நிலங்கள் குத்தகை உரிமைகள் பதிவுருச் சட்டம் 1969 - நில குத்தகை எடுத்து உழுபவர்களின் விவரங்கள் அதிகாரபூர்வமாக பதியப்படுவதற்கான சட்டம்; விவசாயக் கூலித் தொழிலாளர்கள் (நியாயமான கூலி) சட்டம் 1969, நிலச்சீர்திருத்தச் (உயரளவைக் குறைத்தல்) சட்டம் 1970 -நிலச்சீர்த்திருத்தச் சட்டம் ஏற்கெனவே உச்சவரம்பாக 30 ஏக்கர் நிலம் என்று கூறியிருந்தபோதும், அதை 15 ஏக்கர் நிலமாகக் குறைத்தது; தொழிலகங்கள் (தேசிய மற்றும் பண்டிகை நாள் விடுமுறை) திருத்தச் சட்டம் 1970 (மே தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்தது) - இவை தனித்தனிச் சட்டங்களாக இருக்கலாம். ஆனால், இவை அனைத்துமே ஊரகத் தமிழ்நாட்டில் செய்த மாயங்களைப் புரிந்துகொள்ள நாம் ஒரு தலைமுறைக் காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.

பெரும் பாய்ச்சல்:

  • 1971 மார்ச் 15 அன்று கருணாநிதியின் தலைமையிலான புதிய திமுக அமைச்சரவை பொறுப்பேற்றது. 1976 ஜனவரி 1 அன்று நெருக்கடிநிலைக் காலத்தில் அவரது ஆட்சி கலைக்கப் பட்டது. இந்தக் இடைக்காலத்தில்தான் தமிழ்நாட்டின் மாபெரும் பாய்ச்சல் நடந்தேறியது. இக்காலகட்டத்தில் இயற்றப்பட்ட முக்கியச் சட்டங்கள் தமிழ்நாட்டின் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாட்டாளி வர்க்க உரிமைகளையும் நிலைநாட்டுவதாகவும் தமிழ்நாட்டின் சாதிய-நிலவுடைமைச் சக்திகளின் தலையில் ஓங்கி அடித்து நொறுக்குவதாகவும் இருந்தன.
  • ஏனென்றால், சட்டங்கள் ஏடுகளோடு நின்றுவிடவில்லை. அச்சட்டங்களின் அடிப்படையிலான திட்டங்கள் தீட்டப் படுகின்றன, அமைச்சகங்கள், துறைகள், வாரியங்கள், அமைப்புகள், அவற்றுக்கான அதிகாரவர்க்கங்கள், ஊழியர்கள், நிதி ஒதுக்கீடுகள், பொருள் கொள்முதல், ஒப்பந்தங்கள் என அவை விரிவடைகின்றன.
  • அது சமூகத்தின் இயக்கப்போக்காக மாறுகிறது. தொழில் துறையோ போக்குவரத்துக் கழகமோ பாடநூல் வெளியீட்டுக் கழகமோ தமிழ் வளர்ச்சிக் கழகமோ, எல்லாத் திசைகளிலும் வளர்ச்சியும் உரிமையும் முடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் கல்வி வளம், தொழில் வளம், சமூக உள்கட்டமைப்புக்கான அடித்தளங்கள் இப்படித்தான் போடப்பட்டன. அதைத்தான் இன்று பல பொருளாதார ஆய்வாளர்கள் அதிசயமாகப் பார்த்துப் பாராட்டுகிறார்கள்.

தமிழ்நாடு நகர்ந்த திசை:

  • மொத்தமாக இவற்றைப் பின்வருமாறு பட்டியிலிடலாம். திமுக என்ன செய்தது? திராவிட இயக்கத்தின் பல கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது, கூட்டாட்சி-மாநில சுயாட்சி தொடர்பான முக்கிய முன்னகர்வுகளை மேற்கொண்டது, தமிழ் - தமிழ்நாடு - தமிழர் வரலாறு எனத் தமிழ் அடையாளங்களைத் தமிழ்நாட்டரசின் அடையாளமாக மாற்றியது, முதன் முதலாகப் பெண்ணுரிமை சார்ந்த முக்கிய முடிவுகளை எடுத்தது, ஆதிதிராவிடர் நலன் சார்ந்த திட்டமிடல்கள் உள்ளிட்ட சமூக நீதித் திட்டங்களுக்கான அடித்தளத்தை இட்டது, பின்தங்கிய நிலவுடைமைச் சமூகத்தின் முகத்தை மாற்றி, குறிப்பாக ஊரகத் தொழிலாளர் வர்க்கத்தினை சாதிய-நிலவுடைமைப் பிடியிலிருந்து விடுவித்தது, அவர்களை நவீன தொழில்மயக்கத்தை நோக்கி நகர்த்தியது, கல்வி உள்கட்டமைப்புக்காகப் பெருமுயற்சிகள் எடுத்தது, தமிழ்நாட்டில் புதிதாக உருவான அரசு ஊழியர் துணை வர்க்கத்தின் வளர்ச்சிக்கு உரமளித்தது - பிந்தைய திமுக, அதிமுக ஆட்சிகளிலும் இவை தொடர்ந்தன.
  • தமிழ்நாடு வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டு, ஒரு நடுத்தர வருவாய்ப் பிரிவுச் சமூகமாக இன்று உருமாறியது. இப்போதும் இந்திய மாநிலங்களுடன் அல்லாமல் வளர்ந்த நாடுகளுடன் போட்டியிடலாமா எனச் சிந்திக்கிறோம் என்றால், இந்த மகத்தான தலைவர்களின் தோள்களின் மீது நாம் உட்கார்ந்துகொண்டிருப்பதால்தான்.

அண்ணன் காட்டிய வழி:

  • தமிழ்நாட்டில், மத்திய அரசுதான் பலமானது என்று கூறும் ஓர் அரசமைப்பு ஆட்சிமுறைக்கு உள்பட்ட வரம்புக்குள், மாநிலத்துக்கு அதிக அதிகாரங்கள் இல்லாத சூழலிலும், எதிர்க்கட்சியாக ஆள்கிற நிலையிலும், ஒரு ஜனநாயகப் புரட்சியை அண்ணாவும் கருணாநிதியும் சாத்தியப்படுத்தினார்கள். ஓர் உண்மையான மக்கள் இயக்கம் வெகுசனக் கட்சியாக உருமாறி ஆட்சிப் பொறுப்புக்கு வரும்போது, எவையெல்லாம் சாத்தியம் என்பதை அவர்கள் செய்து காட்டினார்கள். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சாத்தியப்பாட்டைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதன் மூலமாக, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சமூகப் புரட்சியை அவர்கள் செய்து முடித்தார்கள்.
  • குறைபாடுகள், விமர்சனங்கள், தள்ளாட்டங்கள் எவ்வளவு இருந்தாலும், இனிமேல் நாம் ஒரு கொடூரமான இருண்ட காலத்துக்குள் தள்ளப்பட்டாலும், தமிழ்நாட்டின் வரலாற்றில் 1967-76 ஆட்சிக்காலங்கள் பொன்னேடுகளால் பொறிக்கப்படும் காலமாகவே இருக்கும். அது தமிழாட்சியின் எழுச்சியாகவே பார்க்கப்படும். ஒரு மாபெரும் தமிழ்க் கனவின் நனவாக்க முயற்சியாகவே பார்க்கப்படும். அக்காலத்தைத் திரும்பிப் பார்க்கையில், தன் அண்ணன் காட்டிய வழியில் சென்ற தம்பி மு.க-வின் முகம் மிளிர்ச்சியுடன் திகழும்.

நன்றி: தி இந்து (02 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories