- அண்ணாவைத் தமிழ்ச் சமூகம் நினைவுகூர்வதற்கும் பின்பற்று வதற்குமான ஆயிரம் காரணங்கள் உண்டு; எனினும் சமகாலத்தில் ஓர் அனைத்திந்தியத் தலைவராக அவரை இனங்காணுவதற்கான கூறுகள் ஏதேனும் உண்டா? அண்ணாவின் அரசியல் வாழ்வின் பெரும்பகுதி, இந்தியா என்னும் அரசியல் கட்டமைப்பின் மீதான அவரது விமர்சனங்களை உள்ளடக்கியது. எனினும் இந்தியச் சூழலில் ஜனநாயகம் என்னும் கருத்தமைவு குறித்து அண்ணா சிந்தித்தவை இன்றைக்கும் மிகப் பொருத்தப்பாடுடையனவாக உள்ளன.
ஜனநாயகம் என்னும் கருத்தமைவு
- சமகாலத்தில் ஜனநாயகம் என்னும் சொல் நாடாளுமன்றம், அதற்குக் கீழ்ப்பட்ட அதிகார வர்க்கம், நீதிமன்றங்கள், சுதந்திரத் தேர்தல் முறைகள், மக்களின் சுதந்திர உரிமைகள் என்னும் பல்வேறு கூறுகளையும் அதற்கான விழுமியங்களையும் குறிப்பதாகும். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகில் ஒற்றை இலக்கத்தில் இருந்த ஜனநாயக அரசுகள் இந்த நூற்றாண்டில் பலவாக விரிந்திருக்கின்றன.
- ஜனநாயகம் என்பதற்குப் பண்டைய கிரேக்கத்திலிருந்து இன்றுவரை பல்வேறு வகையான பொருள்விளக்கங்கள் உள்ளன. நவீன காலத்தில் மக்கள் தங்களது வாழ்க்கையைத் தீர்மானிக்கக்கூடிய அதிகாரத்தின் மீது தாங்களே ஆளுகை செய்வதற்கான உரிமையே ஜனநாயகம் என்னும் கருத்தமைவின் அடிப்படையாக அமைந்திருக்கிறது.
இந்தியாவில் ஜனநாயகம்
- இந்தியாவில் ஜனநாயகத்துக்கான சமூக நிறுவனங்கள் காலனிய ஆட்சிக் காலத்திலேயே உருவாகிவிட்டன. நாடு விடுதலை அடைந்ததற்குப் பிறகு தனக்கான அரசமைப்புச் சட்டத்தை இயற்றி தன்னை ஓர் இறையாண்மை உள்ள ஜனநாயகக் குடியரசாக இந்தியா அறிவித்துக்கொண்டது.
- நீண்ட நெடிய முடியாட்சிகளாலும் சில நூற்றாண்டுகள் காலனிய ஆட்சியிலும் ஆளப்பட்டிருந்த ஒரு நிலப்பரப்பு ஜனநாயகக் குடியரசாகத் தன்னை அறிவித்துக்கொண்டபோதும், அதை முழுமையாகச் சாத்தியப்படுத்துதற்கான தடைகள் அதன் வரலாற்றிலேயே இருந்துவிட்டிருந்தன. சாதிய சமூகக் கட்டமைப்பும், ஆதிக்கத்தைத் தக்கவைப்பதற்கான போட்டியில் இருந்த ஆதிக்கவாதிகளும் பழைமை குறித்த ஏக்கங்களும் இந்தியாவில் ஜனநாயகத்துக்கான தடைகளாக இப்போதும் உள்ளன.
அண்ணாவும் ஜனநாயகமும்
- பெரியாருடன் இருந்தபோதும் அவரைவிட்டு விலகித் தனி இயக்கம் கண்டபோதும் சமூகச் சீர்திருத்தத்துக்கே அண்ணா முக்கியத்துவம் தந்தார். சாதிய ஒழிப்பு, தன்னாட்சி, மொழி ஆதிக்க எதிர்ப்பு போன்றவை அவற்றில் முக்கியமானவை. எனினும் புதிதாக உருவாகியிருக்கும் ஜனநாயக சமூக நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அவர் மறுதலிக்கவில்லை.
- இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் போட்டியிடாத அண்ணா, 1957ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினரானார். இந்த நாட்டில் குழந்தைப் பருவத்திலிருக்கும் ஜனநாயகம் வளர்த்தெடுக்கப்பட வேண்டியது என்றார். ஜனநாயகம் என்னும் சொல்லினாலோ அதற்கான நிறுவனங்களினாலோ மட்டும் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டுவிடாது, அது வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒன்று என்பது அண்ணாவின் சிந்தனை.
- சமூகத்தின் ஜனநாயக சமூக நிறுவனங்களில் பெரும்பான்மை மக்களுக்கு வாய்ப்பளிக்கும் இடஒதுக்கீட்டுக்குப் பெரியாரைப் போலவே அண்ணாவும் முக்கியத்துவம் அளித்தார். 20.03.1958 அன்று சட்டமன்றத்தில் அண்ணா ஆற்றிய உரை முக்கியத்துவம் கொண்டதாகும். அவ்வுரையில் சாதிய ஆதிக்கம் என்பது எல்லாக் கட்சிகளுக்கும் அப்பாற்பட்ட தேசியப் பிரச்சினை என்றார் அண்ணா.
- அனைத்துக் கட்சிகளிலும் சாதிய ஆதிக்கம் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்றும் அதற்கு எதிராக அனைத்துக் கட்சிகளிலும் உள்ள தீவிரவாதிகள் ஒன்றுபட வேண்டும் எனவும் அறைகூவல் விடுத்தார். சாதியப் பிரச்சினையில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன என்று குறிப்பிட்ட அண்ணா, ஒடுக்கப்பட்ட மக்களை வறுமையின் பிடியிலிருந்து நீக்குவது ஒரு பகுதி என்றால், அவர்களைச் சமூகக் கொடுமையிலிருந்து விடுவிப்பது மற்றொரு பகுதி என்றார்.
- ஜனநாயகம் என்னும் சமூக நடைமுறை வளர்ச்சி பெறுவதற்கு முக்கியத் தடையாகச் சாதியைக் கருதிய அண்ணா, “சாதியை ஒழித்தால் ஒழிய தீண்டாமையை ஒழிப்பதற்கு நல்ல மார்க்கமில்லை” என அழுத்திக் கூறினார்.
கூட்டாட்சி என்னும் ஜனநாயகக் கோட்பாடு
- இந்திய அரசியலுக்கு அண்ணா வழங்கிய முதன்மையான ஜனநாயகக் கோட்பாடு, கூட்டாட்சி முழக்கம். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பிருந்தே தனிநாடு என்னும் கோரிக்கையை அண்ணா வலியுறுத்திவந்துள்ளார். தமிழ்நாட்டின் சட்டமன்றத்திலும் இந்திய நாடாளுமன்றத்திலும்கூட அக்கோரிக்கையை முன்வைக்க அவர் தவறியதில்லை.
- தனிநாடு என்னும் கோரிக்கையைப் பிரிவினைவாதத் தடைச் சட்டத்துக்குப் பிறகு அவர் கைவிட்டபோதும், மாநிலங்களின் சுயாட்சியை வலியுறுத்தினார். இந்தியா போன்ற பல்வேறு தேசிய இனங்கள் இணைந்து வாழும் ஒரு நாட்டில், மாநிலங்களுக்கு அதிக அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் கூட்டாட்சி அமைப்பே ஜனநாயகம் என்னும் கோட்பாட்டுக்கு வலுசேர்க்க இயலும்.
- இன்றைக்கும் நிதிப் பங்கீடு, தொகுதி மறுவரையறை, பொருளாதார வளர்ச்சி வேறுபாடுகள் என மாநிலங்களுக்கு ஏற்படும் பல சிக்கல்களுக்கு அவற்றுக்கு உள்ள அதிகார வரம்புகளே காரணமாகின்றன.
- மாநிலங்களுக்குக் குறைக்கப்பட்டுள்ள அதிகார வரம்புகள், அடிப்படையில் பெரும்பான்மை மக்கள் தங்களைத் தாங்களே ஆள்வதற்கு விதிக்கப்படும் வரம்பாகும். அவை ஜனநாயகம் என்னும் சமூக நிகழ்ச்சிப்போக்கின் வளர்ச்சிக்குத் தடை ஏற்படுத்துபவையாகவும் அமைகின்றன.
- மாநிலங்களுக்கு அதிகாரத்தை விரிவாக அளிக்கும் ஒரு கூட்டாட்சிக் கோட்பாடே ஜனநாயகத்தைப் பாதுகாக்க உதவும். மேலும், ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த மொழி, பண்பாட்டைப் பாதுகாக்கவும் அதன் மக்கள் சுதந்திரமான படைப்பூக்கத்தைப் பெறவும் வழியமைக்கும். அப்படியான ஒரு கோட்பாட்டை அரை நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்நாட்டிலிருந்து அனைத்திந்தியாவுக்கும் வழங்கிச் சென்ற ஒரு தமிழ்ச் சிந்தனையாளர் அண்ணா!
- பிப்ரவரி 3: அறிஞர் அண்ணா 55 ஆம் நினைவு நாள்
நன்றி: தி இந்து (02 – 02 – 2024)