TNPSC Thervupettagam

அண்ணா மேம்பாலம் 50 | திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.கருணாநிதி உரை முதல் சில முக்கியத் தகவல்கள் வரை

July 1 , 2023 505 days 329 0
  • சென்னை மாநகருக்குப் புதிய எழிலூட்டும் வகையிலும், போக்குவரத்து வசதிக்கான வாய்ப்பைப் பெருக்கும் வகையிலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் பேரறிஞர் அண்ணா பெயரால் அமைந்துள்ள மேம்பாலத்தைத் திறந்துவைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அண்ணா அவர்களுடைய பெயரை இந்தப் பாலத்திற்கு ஏன் வைத்தோம் என்பதற்கான காரணத்தைச் சொல்லத் தேவையில்லை.
  • ஏனென்றால், அண்ணா அவர்களுடைய பெயரை வைத்த பிறகு, அதை ஏன் வைக்க வேண்டும் என்று கேள்வி கேட்கிற யாரும் தமிழகத்தில் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. இப்படிப்பட்ட பாலங்கள் நம்முடைய தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களுடைய பெயரால், நம்முடைய சமுதாயத்திற்குப் புத்துணர்ச்சி ஊட்டியவர்களின் பெயரால், இந்திய நாட்டில் பிறந்த தலைவர்களுடைய பெயரால் வழங்கப்பட வேண்டும் என்பது நம்முடைய எண்ணம்.
  • அந்த வகையில்தான் இன்று இந்தப் பாலத்திற்கு அறிஞர் அண்ணா பெயரை நாம் வைத்திருக்கிறோம். இந்தச் சாலையின் பெயர் அண்ணாசாலை; இந்தச் சாலையில்தான் அண்ணா சிலை இருக்கிறது. இந்தச் சாலை முடிந்த பிறகு, அங்கேயிருந்து சென்றால் அண்ணா அவர்களுடைய கல்லறை இருக்கிறது. ‘மர்மலாங்’ பாலத்தில் இருந்துதான் அண்ணா சாலை ஆரம்பமாகிறது.
  • மர்மலாங் என்ற பெயர்கூட ஒரு டச்சுக்காரருடைய பெயர் என்று கேள்விப்பட்டேன். மர்மலாங் பாலத்திற்கு அருகாமையில் உள்ள பல்லாவரத்தில்தான் மறைமலை அடிகளார் வாழ்ந்தார். ஆகவே, மர்மலாங் பாலம் உச்சரிப்பதற்கு ஏற்ற வகையில் இனிவரும் காலத்தில் ‘மறைமலை அடிகளார் பாலம்’ என்று மாற்றப்படும் என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். அடையாறு பாலம் ‘தமிழ்த் தென்றல் திரு.வி.க.’ பெயரால் அழைக்கப்படும். வாலாஜா பாலத்திற்குக் காயிதே மில்லத் அவர்களுடைய பெயர் வைக்கப்பட்டு, அந்தப் பாலம் ‘காயிதே மில்லத் பாலம்’ என்று அழைக்கப்படும்.
  • காமராஜருடைய சிலைக்கு அருகாமையிலே இருக்கிற வெலிங்டன் பாலம், பெரியார் அவர்களுடைய பெயரால் அழைக்கப்படும்.அதைப் போல ‘ஆமில்டன்’ பாலத்திற்கு ஏதேதோ பல பெயர்கள் மாற்றப்பட்டதெல்லாம் உங்களுக்குத் தெரியும் (இன்றும் சிலர் அதை அமட்டன் வாராவதி என்பார்கள்). அந்தப் பாலம் ‘அம்பேத்கார் பாலம்’ என்று அழைக்கப்படும். பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்வார்கள். பெயரில் தமிழ் இருக்கிறது; தமிழ் உணர்வு இருக்கிறது; சமுதாய எழுச்சி இருக்கிறது’.

நில உரிமையாளர்களின் ஒத்துழைப்பு (23.07.1971)

  • அண்ணா மேம்பாலத்தைக் கட்டி முடிப்பதற்கு ரூ.40 லட்சம் முதல் 42 லட்சம் வரை செலவாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருக்கும் புறம்போக்கு நிலத்தைப் பயன்படுத்தி ஜெமினி சர்க்கிளின் தென் கிழக்கு மூலையில், ‘சர்வீஸ் லேன்’ அமைப்பதற்கான பணிகளும் தொடங்கிவிட்டன. ஜெமினி சந்திப்பைச் சுற்றியுள்ள நில உரிமையாளர்கள் பெரிய அளவில் தமது ஒத்துழைப்பை வழங்கினர். நிலம் கையகப்படுத்தும் நடைமுறைக்குக் காத்திருக்காமலேயே மேம்பாலம் கட்டுவதற்குத் தேவையான நிலத்தைத் தர அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

அண்ணா மேம்பாலம்: சில முக்கியத் தகவல்கள் (02.07.1973)

  • சென்னையைச் சேர்ந்த ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் (East Coast Constructions and Industries) என்னும் நிறுவனம் இந்த மேம்பாலத்தைக் கட்டியது.
  • திறப்பு விழா மாலை வேளையில் நடைபெற்றது. இரவு 9 மணி முதல் மேம்பாலத்தை வாகன ஓட்டிகள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
  • 1,600 அடி நீளம், 48 அடி அகலத்துடன் இந்த மேம்பாலம் நான்கு வழி வாகனப் போக்குவரத்துக்கு உரியது.
  • இந்த மேம்பாலம், இதன் கீழுள்ள சாலைகள், சாய்வுப் பாதைகள் ஆகியவற்றில் ரூ.11.5 லட்சம் செலவில் உயரமான மின் ஒளிவிளக்குகள் பொருத்தப்பட்டன. இந்த ‘உயர் கம்ப ஒளியமைப்பு’ (High mast lighting) அன்றைய ஒளியூட்டல் வடிவமைப்புகளில் மிகவும் புதுமையானது.
  • மேம்பாலத்துக்குக் கீழே 150 அடி விட்டத்துடன் வாகனப் போக்குவரத்து இல்லாத ஒரு தீவுப் பகுதி (traffic island) உருவாக்கப்பட்டது.

காலத்தைக் கடக்கும் பாலம் (29.09.2007)

  • 1949இலேயே சென்னை மாநகராட்சி இரண்டு நீண்ட மேம்பாலங்களை முன்மொழிந்தது. ஜெமினி சந்திப்பில் தொடங்கி மவுண்ட் சாலையின் (அண்ணா சாலை) தீவுத்திடல் பகுதியில் முடிவதுபோன்ற மேம்பாலம் ஒன்று. இன்னொன்று, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்த போக்குவரத்து-வாகன உரிமங்கள் வழங்கும் அலுவலகத்திலிருந்து கோட்டை ரயில் நிலையம் வரை நீள்வது. அன்றைய காலகட்டத்தில் துணிச்சலான முன்னோடிச் சிந்தனைஇது. ஆனால், சில காரணங்களால் இரண்டு மேம்பாலங்களும் கட்டப்படவில்லை. ஆனால், 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெமினி சந்திப்பில் மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டதன் மூலம், இந்த இரண்டு முன்மொழிவுகளில் ஒன்றின் ஒரு பகுதி மட்டும் நிறைவேறியது.
  • - ஏ.ஸ்ரீ வத்ஸன்

மேம்பாலத்தின் குறுக்கே பயணிக்கும் மெட்ரோ ரயில் (15.06.2017)

  • அண்ணா மேம்பாலத்தைப் பகுதி அளவில் கடந்து செல்லும் வகையில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கான சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட இருக்கின்றன. அவற்றில் ஒன்று அமெரிக்கத் துணைத் தூதரகம் அருகிலுள்ள ‘சர்வீஸ் லேன்’ (பக்கவாட்டுப் பாதை) வழியாக மேம்பாலத்திலிருந்து நெடுஞ்சாலைக்குச் செல்லும் வாகனங்கள் திரும்ப வேண்டிய வளைவான பகுதிவரை நீண்டு, தேனாம்பேட்டையை நோக்கி இடதுபுறம் திரும்புவதுபோல் அமையவுள்ளது.
  • இன்னொரு சுரங்கப்பாதை, மேம்பாலத்தின் அணுகுப்பாதை வழியாகப் பாலத்துக்கு அடியில் சென்று குதிரைவீரன் சிலைவரை நீண்டு, பாலத்திலிருந்து நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலைக்குச் செல்வதற்கான வளைவுக்கு அருகே திரும்பி, முதல் சுரங்கப்பாதைக்கு இணையாகப் பயணிப்பதுபோல் அமையவுள்ளது.
  • பூமிக்குக் கீழே 15 மீட்டர் ஆழத்தில் சுரங்கங்கள் தோண்டப்பட இருக்கின்றன. மேம்பாலத்தின் அடித்தளம் மூன்று மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கம் தோண்டும் பணியின்போது அண்ணா மேம்பாலத்துக்கு எந்த வகையான பாதிப்பும் ஏற்படாமல் இருப்பது உறுதிசெய்யப்படும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: 1.எந்த வகையான விபத்தும் நேராமல் இருப்பதை உறுதிசெய்ய சுரங்கம் தோண்டும் பணி மிகுந்த கவனத்துடன் கண்காணிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூறுகிறது; 2. விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, ஆப்டிகல் ப்ரிஸம் (optical prism), பில்டிங் செட்டில்மென்ட் மார்க்கர் (building settlement marker), டில்ட் மீட்டர் (tilt meter) போன்ற உயர்தரக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன; 3. சுரங்கம் தோண்டும் கருவிகள் இயக்கப்படும் அழுத்தம், தேவையான அளவைவிட அதிகரிக்காமல் இருப்பதற்கான ஏற்பாடுகளுடன் பயன்படுத்தப்படுகின்றன.

நன்றி: தி இந்து (01 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories