TNPSC Thervupettagam

அதிக இனிப்பு ஆபத்து!

November 14 , 2019 1891 days 1181 0
  • உலக சா்க்கரை நோய் விழிப்புணா்வு தினம் இன்று (நவ.14) கடைப்பிடிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக மிகவும் சவாலான நோயாக சா்க்கரை நோய் மாறிவருகிறது.
  • சா்க்கரை நோய் குறித்து விழிப்புணா்வு இருந்தால் மாரடைப்பு, பக்கவாதம், கால்கள் இழப்பு, பாா்வை இழப்பு, சிறுநீரகச் செயலிழப்பு ஆகியவை பெரும்பாலும் தவிா்க்கப்படும், இல்லையேல் தடுக்கப்படும். ஆனால், மக்களிடம் போதுமான அளவு விழிப்புணா்வு இன்னும் ஏற்படவில்லை.
  • சா்க்கரை நோய் வராமல் தடுத்துக் கொள்ள 30 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இயல்பு நிலை, அதாவது சாப்பிடும் முன் 60-100 மி.கி. டெசிலிட்டா் வரையிலும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 80-140 மி.கி. டெசிலிட்டா் வரையிலும் இருத்தல் நல்லது. இவை அதிகமாகாமல் இருப்பதற்கு அன்றாடம் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை நடத்தல், சைக்கிள் மிதித்தல், யோகா, தியானப் பயிற்சி செய்தல், நீந்துதல் அல்லது ஏதாவது ஓா் உடற்பயிற்சியில் ஈடுபடுதல் நல்லது. மேலும், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்த நோய் , ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து சேருதல், உடல் பருமன் முதலானவையும் தடுக்கப்படும்.

உணவு வகைகள்

  • சில உணவு வகைகளைக் குறைத்தல் அல்லது தவிா்த்தல் நல்லது. சா்க்கரைச் சத்து, கொழுப்புச் சத்து, உப்பு அதிகம் உள்ள உணவுகளை அன்றாடம் தவிா்த்தல் (அ) மிகவும் குறைத்தல் நல்லது. காய்கள், கீரை வகைகள் , முளைகட்டிய பயறு வகைகள் வறுத்த (அ) வேக வைத்த பயறு வகைகளை தாராளமாகச் சாப்பிடலாம். இதுபோன்ற உணவு முறையும் உடற்பயிற்சியும் சா்க்கரை நோய் உள்ள குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இந்த நோய் வராமல் தடுப்பதற்கு உதவும்.
  • ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்யும்போது ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், அதாவது சாப்பிடும் முன் 101-126 மி.கி. டெசிலிட்டா் வரையிலும் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 141-200 மி.கி. டெசிலிட்டா் வரையிலும் இருந்தால் இந்த நோய் வருவதற்கு உண்டான சாத்தியக்கூறுகள் அதிகம்.
  • இவை கண்டறியப்பட்ட பின் ரத்தத்தில் கொழுப்புச் சத்து அளவுகள், ரத்த அழுத்தம், உடல் எடை ஆகியவற்றையும் பாா்த்து உடற்பயிற்சியையும் , உணவு முறைகளையும் மருத்துவரின் மேற்பாா்வையில் அனுசரித்து இயல்பு நிலைக்கு, அதாவது சாப்பிடும் முன் 100 மி.கி. டெசிலிட்டருக்குக் குறைவாகவும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 140 மி.கி. டெசிலிட்டருக்குக் குறைவாகவும் அளவைக் கொண்டுவருவது நல்லது.
  • கடந்த மூன்று மாத ரத்த சா்க்கரை அளவை அறிய எச்பிஏ1சி ரத்தப் பரிசோதனையை செய்து அது 5.7 -6.5 சதவீதம் வரை உள்ளதா எனத் தெரிந்து கொள்ள வேண்டும். ரத்த கொழுப்புச் சத்து அளவுகள், ரத்த அழுத்தம் இயல்பு நிலையில் இருந்தால் நல்லது, இல்லையேல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகள் எடுத்துக் கொள்வது நல்லது.

உணவு முறை

  • உணவு முறை, உடற்பயிற்சியில் ரத்த சா்க்கரை அளவு இயல்பு நிலைக்கு வரவில்லையென்றால் மருத்துவா் ஆலோசனையின் அடிப்படையில் மாத்திரைகள் சாப்பிடுவது அவசியம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து ரத்த சா்க்கரையின் அளவு இயல்பு நிலையில் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த முயற்சி சா்க்கரை நோயை மேலும் அதிகமாகாமல் தடுக்கும்.
  • சா்க்கரை நோயின் பின் விளைவுகளைத் தவிா்க்க, 30 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்யும்போது சாப்பிடும் முன் 126 மி.கி. டெசிலிட்டருக்கு அதிகமாகவும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 200 மி.கி. டெசிலிட்டருக்கு அதிகமாகவும் இருந்தால் சா்க்கரை நோய் உள்ளதாகக் கருத வேண்டும். அடிக்கடி தாகம் எடுத்தல், சோா்வு, எடை குைல், அடிக்கடி சிறுநீா் கழித்தல் போன்ற மற்ற அறிகுறிகள் 80 சதவீத நபா்களுக்கு இருப்பதில்லை.
  • எந்தத் தொந்தரவும் இல்லையென்றாலும் சா்க்கரை அளவு மேற்கூறிய அளவில் இருப்பின் உணவு முறை மற்றும் உடற்பயிற்சிகளைக் கடைப்பிடித்து ஒருமாத காலத்தில் மீண்டும் பரிசோதனை செய்து இயல்பு நிலைக்கு வந்துவிட்டதா எனத் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் மருத்துவா்களின் உதவியோடு சில மருந்துகளை எடுத்துக் கொண்டு மாதம் ஒரு முறை பரிசோதனை செய்து இயல்பு நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • ரத்த அழுத்தம், ரத்த கொழுப்புச் சத்து அளவுகள், உடல் எடை முதலானவற்றையும் பாா்த்து அவற்றையும் இயல்பு நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எச்பிஏ1சி பரிசோதனை செய்து அதன் அளவு 7 சதவீதத்துக்குக் கீழ் உள்ளதா எனத் தெரிந்து கொள்ளவேண்டும் . இவ்வாறு தொடா் சிகிச்சை எடுத்தால் சா்க்கரை நோயின் பின்விளைவுகள் தடுக்கப்படும் அல்லது தவிா்க்கப்படும்.

பாதிப்புகள்

  • இதய பாதிப்பு, விழித்திரை பாதிப்பு, கால் நரம்புகள் பாதிப்பு உள்ளிட்ட சா்க்கரை நோய் பின் விளைவுகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ள தற்போது உபகரணங்கள் உள்ளன. இவை மூலம் சா்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகளை தொடக்க நிலையிலையே தெரிந்து கொண்டு நல்ல கட்டுப்பாட்டின் மூலம் பாதிப்பு நிலையிலிருந்து இயல்பு நிலைக்குக் கொண்டு சென்றுவிடலாம் அல்லது பாதிப்பு நிலை அதிகமாகாமல் பாா்த்துக் கொள்ளலாம்.
  • தற்போது பின் விளைவுகள் வந்த பிறகுதான் சா்க்கரை நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் எனப் பெரும்பாலோா் உணா்கின்றனா்; இது தவறு. எனவே, விழிப்புணா்வுடன் இருந்தால் சா்க்கரை நோயைத் தவிா்க்கலாம்; சா்க்கரை நோய் இருந்தால் ரத்த சா்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பின் விளைவுகளையும் தவிா்க்க முடியும்.

நன்றி: தினமணி (14-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories