TNPSC Thervupettagam

அதிக நேரம் நின்றால் பாதிப்பு! ஏன்?

June 9 , 2024 220 days 228 0
  • ஏராளமான அழைப்புகள்!  ‘அமர்ந்தே இருந்தால் ஆபத்து’ கட்டுரையை வாசித்துவிட்டு, அமர்ந்தே இருப்பதில் இவ்வளவு ஆபத்துகள் இருக்கின்றனவா என்று பல வாசகர்களும் அழைத்திருந்தார்கள். அமர்ந்தே இருந்தால் மட்டும் அல்ல; நீண்ட நேரம் நின்றேகொண்டிருந்தாலும் நம் உடலுக்குப் பாதிப்பு ஏற்படுவது உண்டு. அதற்கு நல்ல உதாரணம்: வினோத்.
  • வினோத் ஒரு மாலில் விற்பனை ஊழியராக இருக்கிறார். எட்டு மணி நேரம் தொடர்ந்து நின்றுகொண்டே செய்கிற வேலை. நடுத்தர வயது. கடந்த 4 வருடங்களாகப் பகலில் கால் வலி கொல்கிறது. வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது பாதங்கள் இரண்டும் வீங்கிக்கொள்கின்றன. படுத்து ஓய்வெடுத்தால் கால் வலி குறைகிறது. பாத வீக்கமும் மறைந்துவிடுகிறது.
  • சென்ற வாரம் கால் வலி கடுமையாகிவிட்டது. பணிக்குச் செல்ல முடியவில்லை. மருத்துவரிடம் செல்கிறார் வினோத். அவருக்கு ‘வேரிகோஸ் வெய்ன்’ (Varicose vein) எனும் நோய் வந்திருக்கிறது என்கிறார்கள், மருத்துவ மொழியில்.
  • ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் வந்திருந்தால், இதைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்; இப்போதுள்ள நிலைமையில் ஆபரேஷன்தான் தீர்வு என்கிறார்கள். அதற்குப் பண வசதி இல்லாத வினோத் பதறிப் போகிறார். இந்தியாவில் 100இல் 20 பேர் இவரைப் போல, கால் வலியால் நாளும் அவதிப்படுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

என்ன காரணம்?

  • உடலியங்கியல் முறைப்படி, இதயத்தில் புறப்படும் ரத்தம் பாதம் வரை சென்றுவிட்டு மீண்டும் இதயத்துக்குத் திரும்ப வேண்டுமல்லவா? இதற்கெனப் பிறந்த பாதைதான் கால்களில் உள்ள சிரை ரத்தக்குழாய்கள் (Veins). இவற்றில் வெளிப்புறச் சிரைகள், உட்புறச் சிரைகள் என இரு வகை உண்டு. வெளிப்புறச் சிரைகளில் உள்ள ரத்தம், உட்புறச் சிரைகள் வழியாக பெருஞ்சிரைக்குச் (Vena cava) சென்று, இதயத்தை அடைய வேண்டும்.
  • இந்தப் பயணத்துக்குச் சிரைக்குழாய்களில் உள்ள வால்வுகள் உதவுகின்றன. இந்த வால்வுகளின் தனித்தன்மை என்னவென்றால், இவை ரத்தத்தை உடலுக்குள் மேல் நோக்கியே செலுத்தக்கூடியவை; புவியீர்ப்பு விசை காரணமாக ரத்தம் கீழ் நோக்கி வருவதைத் தடுக்கும் ‘பேரிகார்டுகள்’.
  • சிலருக்குப் பிறவியிலேயே இந்த வால்வுகள் சரியாக அமைவதில்லை அல்லது சில நோய்களின்போது சரியாகப் பணிசெய்வதில்லை. இதன் விளைவாக, கால்களில் பாயும் ரத்தம் புவியீர்ப்பு விசையை எதிர்த்து மேல்நோக்கிச் செல்ல முடியாமல், காலிலேயே தங்கிவிடுகிறது. இதனால் அந்தச் சிரைக்குழாய்கள் வீங்குகின்றன. இந்த நோய்க்கு ‘வேரிக்கோஸ் வெயின்’ என்று பெயர். தமிழில், ‘விரிசுருள் சிரை நோய்’.

யாருக்கு வருகிறது?

  • பரம்பரை காரணமாக, பிறவியிலேயே சிரைக்குழாய்களில் வால்வுகள் இல்லை என்றால், சிறு வயதிலேயே ‘வேரிக்கோஸ் வெயின்’ வந்துவிடும். 40 வயதுக்கு மேல் சிலருக்கு இந்த வால்வுகள் பலவீனமாகும். உடற்பருமன் உள்ளவர்களுக்கும், வயிற்றில் கட்டி இருப்பவர்களுக்கும் வயிற்றில் அழுத்தம் அதிகரிக்கும். அதனால், காலிலிருந்து வயிற்றுக்கு வரும் சிரைக்குழாய்கள் வீங்கிக்கொள்ளும். கடுமையான மலச்சிக்கல் அடிக்கடி ஏற்பட்டாலும் இந்த நோய் வருவது தூண்டப்படும்.
  • ஹோட்டல்களில் / கடைகளில் / மால்களில் வேலை செய்பவர்கள், காவலர்கள், காவல் துறையினர், கண்டக்டர்கள், ஆசிரியர்கள் என நீண்ட நேரம் நின்று பணி செய்கிறவர்களுக்கும், நெட்டையாக இருப்பவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • ஆண்களைவிடப் பெண்களுக்கு இது அதிகம் வருகிறது. பெண்களின் ஈஸ்ட்ரோஜன் மிகுந்த ‘ஹார்மோன் கெமிஸ்ட்ரி’ அதற்கு ஒரு காரணம். அடுத்து, ஹைஹீல்ஸ் செருப்பு அணிபவர்களுக்கும், கால்களில் இறுக்கமான ஆடைகளை அணிபவர்களுக்கும் இளம் வயதிலேயே இது வந்துவிடுகிறது. சில பெண்களுக்குக் கர்ப்பக் காலத்தில் மட்டும் இந்த நோய் ஏற்படுவதுண்டு. கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கும் இது வரலாம்.

அறிகுறிகள் என்ன?

  • காலில் தோலுக்கு அடியில் மேற்புறமாக இருக்கும் வெளிப்புறச் சிரைகள் அகன்று விரிந்து வீங்கிக் காணப்படும்; சிறு பாம்புபோல் சுருண்டிருக்கும்; சிலந்திபோல் பரவியிருக்கும்; ஊதா அல்லது பச்சை நிறத்தில் காணப்படும். நீண்ட நேரம் நின்றால் கால் வலிக்கும். இதைத் தொடர்ந்து காலில் / பாதத்தில் வீக்கம் தோன்றும். இரவு நேரத்தில் வலி குறைந்த மாதிரி இருக்கும். ஆனால், காலில் எரிச்சல் உண்டாகும். தசைகள் இழுத்துக்கொள்ளும்.
  • இதற்கு அடுத்தகட்டமாக, காலில் உள்ள தோல் கறுப்பு நிறத்துக்கு மாறிவிடும். அங்கு அரிப்பு ஏற்பட்டு அழற்சி உண்டாகும். அதில் லேசாக அடிபட்டால்கூட ரத்தம் பீய்ச்சியடிக்கும். சொறிந்து புண் உண்டாகிவிட்டால், விரைவில் ஆறாது; வருடக்கணக்கில் நீடிக்கும்.
  • ‘வேரிக்கோஸ் வெயின்’ பெரும்பாலும் ஆபத்தில்லாத நோய்தான். என்றாலும், அரிதாகச் சிலருக்கு ரத்த உறைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது நுரையீரல் அடைப்புக்கு (Pulmonary embolism) அழைத்துச் செல்லும்.
  • கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லைதான். ஆனாலும், ‘டூப்ளெக்ஸ் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை’ (Duplex ultra sound imaging) செய்தால், நோயின் நிலைமையைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும்.

என்ன சிகிச்சை?

  • காலில் தீராத வலி, ஆறாத புண், ரத்தக்குழாயில் ரத்தம் உறைந்துவிடும் நிலைமை ஆகியவை காணப்பட்டால், அறுவை சிகிச்சைதான் சிறந்தது. இந்த நோய்க்கு ஐந்து வகை சிகிச்சை முறைகள் உள்ளன.
  • வீங்கியுள்ள ரத்தக்குழாயை முடிச்சுப் போட்டு, சிறு சிறு பகுதிகளாக வெட்டி எடுப்பது ஒரு வழி (Vein ligation and stripping).
  • நவீன முறையில் லேசர் சிகிச்சையில் இதைச் சரிப்படுத்துகின்றனர் (Endovenous laser ablation).
  • சிலருக்கு சிரை ரத்தக்குழாய்க்குள் மருந்து செலுத்திச் சரிசெய்வதும் உண்டு (Sclerotherapy).
  • ரத்தக்குழாய் பெரிதாக வீங்கியிருந்தால், வளைகுழாயை (Catheter) ரத்தக்குழாய்க்குள் செலுத்தி, ரேடியோ அலைவரிசையால் சூடுபடுத்தி வீக்கத்தைக் குறைக்கும் சிகிச்சையும் இருக்கிறது (Radiofrequency ablation).
  • ரத்தக்குழாய் சிறிதாக வீங்கியிருந்தால் தோலில் சிறிய துளைகளைப் போட்டு வீக்கமுள்ள ரத்தக்குழாய்ப் பகுதிகளைத் துண்டுகளாக்கி அகற்றுவது இன்னொரு வழி (Ambulatory phlebectomy).
  • யாருக்கு எந்த வகை சிகிச்சையை மேற்கொள்வது என்பதை ரத்தநாள அறுவை சிகிச்சையாளர்தான் (Vascular Surgeon) முடிவுசெய்வார்.
  • இது முக்கியம்: எந்த சிகிச்சையை மேற்கொண்டாலும், மறுபடியும் நீண்ட நேரம் நிற்பதாக இருந்தால், பிரச்சினைகள் மீள அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்த நோய்க்கு ஆரம்பத்திலிருந்தே தடுப்புமுறைகளைப் பின்பற்றுவதுதான் புத்திசாலித்தனம்.

தவிர்ப்பது எப்படி?

  • நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். நடுநடுவில் நாற்காலியில் அமர்ந்து கால்களை இடுப்புக்கு மேலை உயர்த்திக்கொள்ள வேண்டும். கடைக்காரர்கள் இதற்கு வழிசெய்ய வேண்டும்.
  • தொடர்ந்து நிற்க வேண்டிய அவசியம் இருந்தால், அரை மணி நேரத்துக்கு ஒருமுறை சிறிது தூரம் நடக்கலாம்.
  • நின்று வேலை செய்யும்போது ‘ஸ்டாக்கிங்ஸ்’ (Stockings) எனும் மீள்காலுறையைக் கால்களில் அணிந்துகொள்ள வேண்டும் அல்லது பாதம் தொடங்கி முழங்கால் வரை ‘கிரீப் பேண்டேஜ்’ (Crepe bandage) எனும் மீள்துணியைச் சுற்றிக்கொள்ள வேண்டும். இரவில் இவற்றைக் கழற்றிவிடலாம்.
  • படுத்து உறங்கும்போது கால்களுக்குத் தலையணை வைத்துக்கொள்ள வேண்டும்.
  • கால், தொடைகளில் மிக இறுக்கமான உடைகள் அணிவதையும், ஹைஹீல்ஸ் செருப்பு அணிவதையும் தவிர்க்க வேண்டும்.
  • உடல் எடையைப் பேண வேண்டும்.
  • புகைப்பிடிக்கக் கூடாது.
  • தினமும் நடைப்பயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகள் செய்வது நல்லது

நன்றி: அருஞ்சொல் (09 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories