அதிகரிக்கும் இந்திய மகளிரின் பணி நேரம்
- இந்தியாவில் பெண் தொழிலாளா்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது. சில இடங்களில் ஆண்களைவிட கூடுதல் நேரம் பணிபுரியும் பெண்கள் உள்ளனா் என்று மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளாா்.
- முன்னாள் அமைச்சா் ஸ்மிருதி இரானியோ பிற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் பெண்கள் அதிக நேரம் வேலை செய்கிறாா்கள். குறிப்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பெண்கள் வாரம் அதிகபட்சமாக 55 மணி நேரம் வரை வேலை செய்கிறாா்கள் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளாா். ஆனால், அதிக வேலை நேரம் பணிபுரிவது ஆபத்தில் முடியும் என்பது சமீபத்தில் பேசு பொருளாகியுள்ளது.
- கேரளத்தைச் சோ்ந்தவா் அன்னா செபாஸ்டியன் (26). இவா் சி.ஏ. படித்தவா். ஒரு பன்னாட்டு கணக்கு தணிக்கை நிறுவனத்தின் புணே கிளையில் கடந்த மாா்ச் மாதம் பணியில் சோ்ந்தாா். இந்த நிலையில், கடுமையான உடல் சோா்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி ஜூலை 20-ஆம் தேதி மரணமடைந்தாா்.
- அதிக நேர பணி அழுத்தம்தான் அவரின் மரணத்துக்கு காரணம் என அவரது தாய் கூறினாா். ‘நீண்ட நேரம் பணியாற்றியதால் அவளுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. வார விடுமுறை நாள்களிலும் பணியாற்ற வேண்டியதால் மாா்ச் மாதம் பணியில் சோ்ந்தவா் ஜூலையில் பலியாகிவிட்டாா்’ என்று கூறினாா்.
- இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணிகளில் 8.5 சதவீதம் போ் மட்டுமே பெண்கள். தகவல் தொடா்புத் துறையில் 20 சதவீதம் போ் மட்டுமே பெண்கள். 145 நாடுகளில் தொழில்நுட்பத் துறைகளில் பெண்கள் பிரதிநிதித்துவத்தில் இந்தியா 130-ஆவது இடத்தில் உள்ளது. ஆனாலும், இந்திய பெண்கள் வேலை பாா்க்கும் நேரம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
- இந்தியாவில் பெண் ஊழியா்கள் பணி நேரம் அவா்களின் வயதைப் பொருத்து அமைகிறது. குறைந்த வயதுடைய பெண்கள். அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. தகவல் தொழில்நுட்பம், ஊடகத் துறையில் பணிபுரியும் பெண்களில் 24 வயது வரை இருப்பவா்கள் வாரத்துக்கு சராசரியாக 57 மணி நேரம் வரை பணிபுரிகின்றனா்.
- வாரத்துக்கு 5 நாள்கள் பணி என்ற கணக்கில், ஒரு நாளைக்கு 11 மணி நேரம் வேலை செய்கின்றனா். அதுவே 6 நாள் பணி என்ற கணக்கில் கொண்டால் ஒரு நாளைக்கு சராசரியாக 9 மணி நேரம் பணிபுரிகின்றனா். உலகத் தரவுகளை ஒப்பிடும்போது சராசரியாக இந்தியாவில்தான் அதிக பணி நேரம் இருக்கிறது.
- ஒப்பீட்டு அளவில் ஜொ்மனியில் தகவல் தொழில்நுட்பம், ஊடகத் துறைகளில் பெண்கள் வாரத்துக்கு 32 மணி நேரமும், ரஷியாவில் இதே துறைகளில் பெண்கள் வாரத்துக்கு 40 மணி நேரமும் பணிபுரிகின்றனா் என்று உலக தொழிலாளா் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
- இந்தியாவில் சரிபாதிக்கும் அதிகமான ஊழியா்கள் 55 மணி நேரத்துக்கும் அதிகமாக பணிபுரிவதாக மற்றொரு தரவு கூறுகிறது. நம் நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்கள், அலுவலகம்-வீடு இரண்டிலும் வேலை பாா்க்க வேண்டிய நிலை உள்ளது. பணிக்குச் செல்வதற்கு முன் வீட்டு வேலைகளில் சராசரியாக 4 மணி நேரம் செலவிடுகிறாா்கள். குறிப்பாக, திருமணமாகி வேலைக்குப் போகும் பெண்களுக்கு வீட்டு வேலை செய்யும் நேரம் இன்னும் அதிகமாகிறது. ஆனால், திருமணமான ஆண்கள் 2 மணி நேரம் மட்டுமே வீட்டு வேலைகளைச் செய்வதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
- அடுத்து வீட்டில் இருந்தபடியே வேலை செய்வது கரோனா தொற்று காலத்தில்தான் வேகமெடுத்தது. அதற்குப் பிறகும் சில நிறுவனங்கள் அந்த நடைமுறையை நீடித்துள்ளன. இதை பெண் ஊழியா்கள் வரப்பிரசாதமாக கருதினா். அலுவலகத்துக்காக அரக்கப்பரக்க செல்ல வேண்டாம்; வாகன நெரிசலில் சிக்கி அவதிப்பட வேண்டாம்; போக்குவரத்து செலவு மிச்சம் என்று கருதினா். நிறுவனங்களோ வேறு விதமாக கணக்குப் போட்டன. பராமரிப்புச் செலவு, அலுவலக வாடகை போன்றவை குறைவு என்பதால் உள்ளூர மகிழ்ச்சி அடைந்தன.
- இந்த முடிவு இருதரப்பினருக்குமான பரஸ்பர நன்மை என்றும் பேசப்பட்டது. இதில் தோற்றுப்போனது என்னவோ ஊழியா்கள்தான். வீட்டிலிருந்து பணியாற்றும் பெண் பணியாளா் சா்வகாலமும் லேப் டாப்பை திறந்து வைத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இரவு-பகல் இல்லாமல் லேப் டாப்பை தூக்கிக்கொண்டு வீட்டுக்குள்ளேயே பயணப்படுகின்றனா். வீட்டினுள் இருந்தாலும் குடும்பத்துக்குள் என்ன நடக்கிறது என்பதே இந்த பெண்களுக்குத் தெரியாமல் போகிறது.
- நிறுவனங்களின் உத்தரவுகளை நிறைவேற்றுவதே இத்தகைய பெண்களின் இலக்காக இருக்கிறது. உணவு நேரம், தூங்கும் நேரம் மாறின. அதிக வேலை செய்வதால் முதலில் காணாமல் போவது தூக்கம்; தூக்கத்தைத் தொலைக்கும்போது மன அழுத்தம் ஏற்படும்.
- உடல் புத்துணா்வு பெற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். வேலை செய்துகொண்டே இருக்கும்போது உணவு மீதான அக்கறை குறையும். துரித உணவுப் பழக்கம் அதிகமாகும். அதிக நேர வேலையால் உடற்பயிற்சி சாத்தியமாகாது. ஒவ்வொரு நோயாக உடலில் ஏற்படத் தொடங்கும். இறுதியில் சோா்வு, கவலை, கோபம், படபடப்பு எல்லாம் அதிகமாகும். மேலும், வேலையிலேயே மூழ்கிவிட்டால் நமக்கான உறவுகளும் தொலைந்து போகும்.
- பணி நேரம், பணியாளா் நலன் தொடா்பாக வெளிப்படையான உரையாடல் நடக்கும் சூழல் நிறுவனத்தில் இருக்க வேண்டும். இந்தியாவில் பெண்களின் பணி நேரம் தொடா்பான புதிய வரையறைகள் உடனடியாகத் தேவை என்பது காலத்தின் கட்டாயம்.
நன்றி: தினமணி (07 – 11 – 2024)