அதிகரிக்கும் பண மோசடிகள்: ஆசையே அழிவுக்கு காரணம்!
- சமீப காலமாக எங்கு பார்த்தாலும் பண மோசடி. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை மொத்தமாக இழந்துவிட்டு கதறித் துடிக்கிறார்கள் அப்பாவி மக்கள். சாத்தியமே இல்லாத 22 சதவீத வட்டி தருவதாக சொல்வதை நம்பி ஏமாறுகிறார்கள்.
- சமீபத்திய உதாரணம் தெலங்கானாவின் பால்கன் இன்வாய்ஸ் டிஸ்கவுண்டிங் நிறுவனம். 7,000 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.1,700 கோடி வரை ஏமாற்றி பணம் பறித்துவிட்டு இரவோடு இரவாக கம்பெனியை மூடிவிட்டு ஓடி விட்டனர். 2021-ல் இருந்து இந்த நிறுவனம் இயங்கி வந்திருக்கிறது. இந்த மோசடி விளம்பரங்கள் அனைத்தும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சோசியல் மீடியாக்களில் மட்டுமே வந்திருக்கிறது.
- கடந்த ஜனவரியில் மும்பையிலும் இதேபோன்ற மோசடி அரங்கேறியது. டோரஸ் ஜுவல்லரி என்ற நிறுவனம் 7 இடங்களில் நகை மற்றும் ஆபரணக் கற்கள் விற்கும் கடையை திறந்தது. முதலீட்டுக்கு 20 சதவீத வட்டி தரப்படும் என அறிவித்தது. எம்எல்எம் முறையில் புதிதாக வாடிக்கையாளர்களை சேர்ப்பவர்களுக்கு ஊக்கத் தொகையோடு, சொகுசு கார்கள், ஐபோன், மும்பையில் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் அபார்ட்மென்ட் என பரிசுகளையும் அறிவித்தது. முதலீடுகள் குவிந்தது.
- தொடக்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அடுத்தடுத்து முதலீடு செய்பவர்களின் பணத்தில் இருந்து வட்டி கொடுத்திருக்கிறார்கள். நிறுவனம் செயல்பட்டது ஓராண்டுதான். 100 கோடிக்கும் மேல் பணம் வந்ததும் கடைகளை மூடிவிட்டு காணாமல் போய் விட்டார்கள் மோசடிக்காரர்கள். இதில் ஏமாந்த அனைவரும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான். பெரும்பாடு பட்டு சேர்த்த பணத்தை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இழந்து நிற்கிறார்கள் அப்பாவி மக்கள்.
- இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் சேலத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, அதிக வட்டி தருவதாக கூறி டெபாசிட் வசூல் செய்திருக்கிறது ஒரு கும்பல். குறிப்பிட்ட காலத்தில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி ரூ.500 கோடி வரை வசூலித்திருக்கிறது. தகவல் அறிந்து போலீஸார் அங்கு சென்றபோது, போலீஸையே நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்திருக்கிறார்கள் அப்பாவி முதலீட்டாளர்கள்.போலீஸார் அந்த மண்டபத்தில் சோதனையிட்டு ரூ.12.68 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளியை பறிமுதல் செய்தனர். இது ஒரு நாள் வசூல். இதுபோல் மாதக் கணக்கில் பண வசூல் நடந்திருக்கிறது.
- இதுபோல் ஒன்றல்ல இரண்டல்ல, ஆயிரக் கணக்கில் மோசடிகள் தினமும் அரங்கேறி வருகின்றன. மக்கள் ஏமாந்து நிற்கும்போதுதான் போலீஸாருக்கு தெரிய வருகிறது. திட்டம் போட்டு ஒரு கூட்டம் திருடிக் கொண்டே இருக்கிறது. அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டமும் தடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனாலும் இதையெல்லாம் மீறி ஏமாறும் கூட்டமும் ஏமாந்து கொண்டேதான் இருக்கிறது. காரணம் புதிதுபுதிதாய் அறிமுகமாகும் ஏமாற்றுத் திட்டங்கள். பேராசையைத் தூண்டும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள். எந்த வேலையும் செய்யாமல் இருந்த இடத்திலேயே பணம் வேண்டும் என நினைத்தால் ஏமாறுவது சர்வ நிச்சயம். ஆசையே அழிவுக்கு காரணமாகி விடுகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 02 – 2025)