- ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியைப் பொருத்துதான் இருக்கும். சில நாடுகள் ஏற்கெனவே பெரிய அளவில் வளர்ந்து விட்டன. பல நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.
- உலகில் உள்ள நாடுகளில் சுமார் 70 நாடுகள் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளாக கருதப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சி என்பது தனிநபர் வருமானத்தை வைத்துத்தான் கணக்கிடப்படுகிறது. தனிநபர் வருமானம் 15,000 டாலர்கள் உள்ள நாடுகளை வளர்ந்த நாடுகள் என்று அழைக்கிறோம். மீதமுள்ள நாடுகளை வளரும் நாடுகள், வளர்ச்சி பெறாத நாடுகள் என்று இருவகையாக நாம் பிரித்து வைத்திருக்கிறோம்.
- அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே உலகில் பெரிய பொருளாதார நாடுகளாக கருதப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அளவீட்டை வைத்துத்தான் தன்னிறைவு பெற்ற நாடு, வளர்ந்த நாடு, வளருகின்ற நாடுகள் என்று எல்லாம் அடையாளப்படுத்தப்படுகின்றன.
- 2023-இல் அமெரிக்காவின் மொத்த உற்பத்தி 26 டிரில்லியன் டாலர். சீனா 19 டிரில்லியன் டாலர். ஜெர்மன் 4.4 டிரில்லியன் டாலர், ஜப்பான் 4.2 டிரில்லியன் டாலர். இந்தியாவில் மொத்த உற்பத்தி 3.7 டிரில்லியன் டாலர். நவம்பர் மாதம் 4 டிரில்லியனாக அது உயர்ந்துள்ளதாக தகவல். நாம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறோம்.
- உலக நாடுகள் மொத்தம் 193. அதில் நாம் ஐந்தாவது இடத்தில் மொத்த உற்பத்தியில் இருக்கிறோம் என்பது நிச்சயம் மகிழ்ச்சியான விஷயம்தான். முதலில் நாம் ஏழாவது இடத்தில் இருந்தோம். இப்போது பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இரண்டு நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறோம்.
- அதேசமயம் தனிநபர் வருமானத்தில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் தனிநபர் வருமானம் 2,600 டாலர். மற்ற நாடுகளுடன் இதை ஒப்பிடும்போது நாம் 139-ஆவது இடத்தில் இருக்கிறோம்.
- மக்கள்தொகையில் நம்முடன் போட்டி போடும் ஒரே நாடு சீனா மட்டும்தான். சீனாவின் புதிய பொருளாதாரக் கொள்கை 1978 -79-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. நம் நாட்டில் 1991-இல் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் நிதியமைச்சர் மன்மோகன் சிங் இருவர்தான் இதற்கு காரணம். நம் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டது இந்த புதிய பொருளாதாரக் கொள்கைதான் என்று சொல்லலாம்.
- 1980-இல் இந்தியா, சீனா இரண்டு நாடுகளுமே பொருளாதார ரீதியாக ஒரே நிலையில்தான் இருந்தோம். அப்போது இந்தியாவின் தனி நபர் வருமானம் 224 டாலர். சீனாவின் தனிநபர் வருமானம் 243 டாலராக இருந்தது. கடந்த 42 ஆண்டுகளில் இந்தியா, சீனா இரண்டுமே வளர்ந்து இருக்கின்றன என்பதும் உண்மை. அதே சமயம், சீனாவுடன் ஒப்பிடும்போது நாம் வளர்ச்சியில் பின்தங்கிதான் இருக்கிறோம். 1980-ல் சீனாவுக்கும் நமக்கும் தனிநபர் வருமானத்தில் வித்தியாசம் வெறும் 19 டாலராக இருந்தது. இப்போது அந்த வித்தியாசம் 10,000 டாலரை தாண்டி விட்டது. இதற்கு முக்கிய காரணம் சீனாவின் கல்வி வளர்ச்சியும் தொழில் வளர்ச்சியும்தான்.
- இந்தியாவில் உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கை 27% மட்டுமே. இதை எழ்ர்ள்ள் உய்ழ்ர்ப்ம்ங்ய்ற் தஹற்ண்ர் (எஉத) என்று குறிப்பிடுவார்கள். இந்தியா வளர்ந்த நாடாக அங்கீகாரம் பெற உயர்கல்வி மிக அவசியம். ஆனால் உயர்கல்வியில் நாம் பின்தங்கிதான் இருக்கிறோம். அதே சமயம் சீனாவில் உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 60%. சீனாவின் வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய காரணம்.
- அதனால்தான் தொழில் உற்பத்தியில் உலக நாடுகள் எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளிவிட்டு சீனா முதல் இடத்தில் இருக்கிறது. 1980-இல் உலக உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பு மூன்று சதவீதமாக இருந்தது. இப்போது 30%-ஆக அது உயர்ந்து இருக்கிறது. அமெரிக்காவைப் பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை எட்டி இருக்கிறது சீனா. உலக உற்பத்தியில் இந்தியாவின் தற்போதைய பங்களிப்பு மூன்று சதவீதம்தான்.
- சீனாவின் கட்டுப்பாடு, அரசு அளிக்கும் சலுகைகள், மக்களின் கடின உழைப்பு, ஏற்றுமதிக்கு அந்த நாடு தரும் முக்கியத்துவம் ஆகியவை சீனாவின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம். விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்த சீனா இன்று உலகின் உற்பத்தி மையம் என்ற நிலைக்கு உயர்ந்து விட்டது. இதை ஓர் அபரிமித வளர்ச்சியாகத்தான் உலக நாடுகள் பார்க்கின்றன.
- ஒரு நாட்டின் வளர்ச்சியின் பலன் எல்லா மக்களையும் போய் சேர வேண்டும். ஆனால் நம் நாட்டில் அவ்வாறு நடைபெறுவதில்லை. வசதியானவர்கள் மேலும் வசதிகளைப் பெறுகிறார்கள். ஆனால் ஏழைகளுக்கு கடைசி வரை எதுவுமே எட்டவில்லை.
- எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால், கரோனா நோய்த்தொற்று காலத்தில் இந்தியாவில் பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் பலருக்கு வேலை போனது; ஊதியம் கிடைக்கவில்லை; வருமானம் குறைந்தது; கொஞ்சம் பேருக்கு வருமானமே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், அந்த ஆண்டு அதாவது, 2021-இல் இரண்டு தொழிலதிபர்களுக்கு மட்டும் நான்கு லட்சம் கோடி வருமானம் கிடைத்திருக்கிறது.
- 2000-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்த பெரும் கோடீஸ்வரர்கள் அதாவது பில்லியனர்கள் ஒன்பது பேர்தான். 2022-இல் அந்த எண்ணிக்கை 166-ஆக உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் என்ன? நமது பொருளாதாரக் கொள்கையில் உள்ள ஏற்றத்தாழ்வு குறைபாடுகள்தான். ஏற்கெனவே ஜாதி, மதம் காரணமாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்தியாவில், நமது பொருளாதாரக் கொள்கை காரணமாக இப்போது மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு நம்மைப் பிரிக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வு நமது எதிர்கால வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்காது.
- நம்முடைய மொத்த மக்கள்தொகை 140 கோடி. இதில் மேல் தளத்தில் உள்ள 10 சதவீதம் பேர் இந்த நாட்டில் 80% சொத்துகளை வைத்திருக்கிறார்கள். கடைநிலையில் உள்ள 50% மக்கள் ஆறு சதவீதம் சொத்துகளைத்தான் வைத்திருக்கிறார்கள்.
- அமெரிக்காவில் மொத்த சொத்தில் ஒரு சதவீதம் பேரிடம் 37% சொத்து இருக்கிறது. இந்தியாவில் ஒரு சதவீதம் பேரிடம் 58% சொத்து இருக்கிறது. அமெரிக்காவை விட இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைய இருக்கின்றன என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை.
- அரசின் வரிச் சலுகைகள் மேல்தளத்தில் உள்ளவர்களுக்குத்தான் வழங்கப்படுகின்றன. அதே சமயம் இந்தியாவின் மொத்த வரியில் 50%- க்கும் அதிகமாக கடைநிலையில் உள்ளவர்கள்தான் (64%) செலுத்துகின்றனர். ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி). ஜிஎஸ்டி வரி வருவாய்தான் மத்திய அரசுக்கு அதிக வருமானத்தை ஈட்டி தருகிறது என்பதை மத்திய அரசே புள்ளிவிவரம் மூலம் ஒப்புக்கொள்கிறது.
- அது மட்டும் இல்லை. மாதத்துக்கு மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரித்துக் கொண்டு இருக்கிறதே தவிர குறைவதில்லை. இதையும் மத்திய அரசுதான் சொல்கிறது.
- இந்த ஜிஎஸ்டி வரி வருவாயில் மேல்தளத்தில் உள்ளவர்கள் பங்களிப்பு வெறும் 4% மட்டுமே. உலகில் உள்ள பல நாடுகளுடன் நமது நாட்டின் வரி விதிப்பு முறையை ஒப்பிட்டுக்கூட பார்க்க முடியாது. அவ்வளவு முரண்பாடுகள்.
- 2021-இல் இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.2.04 லட்சம். ஆனால், கடைநிலையில் இருக்கும் 50% மக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.53,000; ஆனால், மேல்தளத்தில் உள்ள 10% மக்களின் வருமானம் ரூ.11.66 லட்சம்; அதாவது, கடைநிலையில் உள்ளவர்களைவிட 20 மடங்கு அதிகம். எனவே, தனி நபர் வருமானத்துக்கான அளவீடு, அதன் கணக்கீடு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை தவறான கணக்கீடோ என்ற சந்தேகம் வருகிறது. இந்த ஏற்றத்தாழ்வுதான் நமது நாட்டின் மொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது.
- ஏழை மக்களுக்கு எப்போதும் பொருளாதார தேவை தொடர்ந்து இருந்து கொண்டுதான் வருகிறது. ஆனால், இந்தத் தேவையை அவர்கள் பூர்த்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பை, அதற்கான வழியை அவர்களுக்கு முழுமையாக கிடைப்பதற்கு நாம் என்ன செய்தோம் என்ற கேள்வி தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது.
- இதற்கு அரசின் பொருளாதாரக் கொள்கையில் புரட்சிகரமான மாறுதல்கள் தேவை. பரந்த தோள்களில்தான் அதிக சுமை இருக்க வேண்டும் என்பது வரிவிதிப்பில் பொதுவான ஒரு நியதி. அந்த நியதியை நாம் வரிவிதிப்பதில் பின்பற்றுவதில்லை. இதுதான் இந்தக் கோளாறுக்கு முக்கிய காரணம்.
- நாம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேகமாக வளர வேண்டும். அப்போதுதான் வளர்ந்த நாடாக இந்தியா அடையாளப்படுத்தப்படும். இதற்கு அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் தராமல் மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகள், பொருளாதார வளர்ச்சி என்ற நோக்கில் இருக்க வேண்டும். கொள்கை வகுப்பதிலும் அதை அமல்படுத்துவதிலும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியம்.
நன்றி: தினமணி (24 – 11 – 2023)