TNPSC Thervupettagam

அதிகரிக்கும் விலைவாசியும் ஊட்டச்சத்து குறைவும்

September 6 , 2023 490 days 323 0
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் வீடுகளில் உணவு சமைப்பதற்கான செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. அதே வேளை, தொழிலாளர்களின் ஊதியமோ மிகக் குறைந்த அளவே உயர்ந்துள்ளது.
  • ஊதியம் - செலவினங்களுக்கு இடையிலான இந்த ஏற்றத்தாழ்வு அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்ந்தவையாக அணுகும் நிலைக்கு மக்களைத் தள்ளியுள்ளது.

ஊட்டச்சத்துக் குறைபாடு

  • பருப்பு, அரிசி, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, குடும்பங்களில் சமைக்கப்படும் உணவை நிறைவற்ற ஓர் நிலைக்குத் தற்போது தள்ளியிருக்கின்றன. பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வது, வீடுகளில் உணவு தயாரிப்பதற்கான ஒட்டுமொத்த செலவையும் அதிகரிக்கும்.
  • இதன் விளைவாக, மக்கள் தங்கள் நுகர்வைக் குறைக்கத் தொடங்கியுள்ளனர். குறைந்த விலையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு உணவைத் தயாரிக்கும் நிலைக்குச் சென்றால், முழுமையான ஊட்டச்சத்துமிக்க உணவை வீடுகளில் உட்கொள்வது குறைந்துவிடும். இதனால் உடல் பலவீனம் அடைந்து, ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும்.
  • சத்தான உணவை உட்கொள்ளாத நிலையில், ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பு, செய்யும் வேலைகளிலும் பிரதிபலிக்கும். இவை ஒருகட்டத்தில் மனஅழுத்தத்துக்கு இட்டுச்சென்று ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

கடந்த 5 ஆண்டுகளில்

  • இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமான மும்பையில், 2018இல் கிலோ ரூ.125க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு தற்போது ரூ.169க்கு விற்பனையாகிறது. ரூ.110க்கு விற்கப்பட்ட சமையல் எண்ணெய் தற்போது ரூ.144க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.60க்கு விற்கப்பட்ட இஞ்சி ரூ.180க்கும், ரூ.57க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.170க்கும் விற்பனையாகின்றன. இவை எல்லாமே ஆகஸ்ட் மாதம் வரையிலான நிலவரம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு குடும்பத்துக்கு ஒரு வேளைக்கான உணவைத் தயாரிப்பதற்கு ரூ.34 தேவைப்பட்ட நிலையில், அதிகரித்துள்ள விலைவாசியால் ஒரு வேளை உணவைத் தயாரிப்பதற்கான செலவு தற்போது ரூ.56ஆக உயர்ந்திருக்கிறது.
  • 2018இல் ஒரு குடும்பத்துக்கு, ஒரு நாளில் இரண்டு வேளை உணவு தயாரிப்பதற்கு மாதம் ரூ.2,037 தேவைப்பட்ட நிலையில், 2023இல் ஒரு நாளைக்கு அதே இரண்டு வேளை உணவு தயாரிக்க ரூ.3,378 தேவைப்படுகிறது.

இந்தியாவும் விலைவாசி உயர்வும்

  • கடந்த எட்டு ஆண்டுகளாகவே அத்தியாவசியப் பொருள்களின் விலை மக்களை அச்சுறுத்தும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. பணவீக்கம் வெவ்வேறு காரணங்களால் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
  • இதில், தீவிர மழைப்பொழிவின் போது பயிர் உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கான விலை, அதன் தேவையின் பொருட்டு அதிகரிக்கும். பின்னர் விளைச்சல் அதிகரிக்கும்போது விலை குறையும். இந்த விலைகுறைவு என்பது எல்லா பொருள்களுக்கும் பொருந்தாது.சில பொருள்களின் விலை உயர்வு நிரந்தரமாகிவிடுகிறது. அவற்றின் விலை மீண்டும் குறைவதே இல்லை. இங்குதான் சிக்கல் உருவாகிறது.

உயரும் விலைவாசி

  • உயராத வருமானம்: விலைவாசி உயர்ந்த அதே ஐந்தாண்டுக் காலத்தில்,மக்களின் வருமானம் அதே அளவு உயர்ந்திருக்கிறதா என்றால், இல்லை. ஐந்து ஆண்டுகளில், வீட்டில்தயாரிக்கும் உணவுக்கான செலவு 65% அதிகரித்திருக்கிறது. ஆனால், ஊதியமோ வெறும் 28%-37% அளவில்தான் உயர்ந்திருக்கிறது.
  • ஆகவே, அதிகரிக்கும் விலைவாசிக்கு ஏற்ப உணவுப் பொருள்களை நிறைவாக வாங்க முடியாத நிலையில்தான் பெரும்பாலான மக்களின் நிலை உள்ளது. அதிகரிக்கும் விலைவாசி, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு, பொருளாதார நெருக்கடியைத் தீவிரப்படுத்தி அவர்களுடைய முன்னேற்றத்தையும் தடுக்கிறது.
  • கரோனாவுக்குப் பிறகு ஐடி போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் மட்டுமே ஆண்டுதோறும் கணிசமான அளவில் ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டுவருகிறது. பிற துறைகளில் ஊதிய உயர்வு என்பது இருக்கிற வேலையைத் தக்கவைத்துக்கொள்ளுதல் என்ற வகையில்தான் உள்ளது. இவ்வாறு ஊதிய உயர்வு சார்ந்த பெரும் பாகுபாடு இந்தியச் சமூகப் படிநிலைகளில் நிலவுகிறது. இவற்றைச் சரிசெய்யாத பட்சத்தில் விலைவாசி உயர்வைச் சமாளிப்பது சாமானிய மக்களுக்கு வழங்கும் தண்டனையாகிவிடும்.
  • எனவே, விலைவாசி உயர்வுக்கும் - வருமானத்துக்கும் இடையே அதிகரித்துக்கொண்டிருக்கும் இடைவெளி யைச் சரிசெய்வதற்கான கொள்கைகளைப் போட்டிமனப்பான்மை இன்றி மத்திய, மாநில அரசுகள்செயல்படுத்த வேண்டும்.
  • அத்துடன், அத்தியாவசிய உணவுப் பொருள்கள் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், விலைவாசி உயர்வை எதிர்கொள்ளும் நிலையிலும் வீடுகளின் உணவுப் பட்டியலில் சத்தான உணவு வகைகள் நிலைத்திருப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதும் அரசின் கடமையாகிறது.
  • (தரவுக்கான ஆதாரம்: நுகர்வோர் விவகாரத் துறை, தேசிய தோட்டக்கலை வாரியம், மகாராஷ்டிர மாநிலத்துக்கான மாவட்ட அளவிலான மதிப்பீடுகள் பற்றிய அறிக்கை.)

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories