- ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 10–20 நாள்களுக்கு வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை நிதர்சனமாகிவருகிறது.
- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் ஏற்கெனவே வெப்பத்தால் தகித்துவரும் நிலையில், 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை எதிர்கொள்வதற்கு நடைமுறைக்கு உகந்த செயல் திட்டங்கள் அவசியம்.
- புவி வெப்பமாதலின் மிக மோசமான விளைவுகளால், இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிக வெப்பநிலை பதிவான ஆண்டாக 2023 அமைந்ததை ஐநா கவலையோடு சுட்டிக்காட்டியிருக்கிறது. பொதுவாகக் கோடைக்காலத்தில் நான்கு முதல் எட்டு நாள்கள் வரைதான் வெப்ப அலைகளின் தாக்கம் இருக்கும்.
- ஆனால், இந்த ஆண்டு அது தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் நீரிழப்பு, தொண்டை வறண்டு போதல், மயக்கம் போன்றவை தொடங்கி வெப்பத் தாக்கு, உயிரிழப்பு என ஆபத்திலும் முடியலாம் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- தமிழ்நாட்டில் முறைசாராத் தொழிலாளர்களும் வெயிலில் வேலை செய்வோரும் வெப்பத்தால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பணியிடத்தில் கழிப்பறை இல்லாததால் பெண்கள் பலர் சிறுநீர் கழிக்க நேரிடும் என்பதற்காகப் போதுமான அளவில் நீர் அருந்துவதில்லை. இதனால், நீரிழப்பு ஏற்படுவதோடு, சிறுநீரகப் பாதைத் தொற்றுக்கும் ஆளாகிறார்கள்.
- இப்படி வெயிலில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பணியாளர்களின் நலனுக்காகச் சில வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ்நாடு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. தொழிற்சாலைகள், கட்டிடப் பணிகள், கல் குவாரி, சாலை அமைத்தல் போன்றவற்றில் ஈடுபடும் தொழிலாளர்களை வெயில் குறைவாக இருக்கும் காலையிலும் மாலையிலும் பணியில் ஈடுபடுத்திவிட்டு, மதிய நேரத்தில் அவர்களுக்கு ஓய்வளிக்கும் முறையைப் பரிந்துரைத்துள்ளது.
- அவர்களுக்குப் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள், முதலுதவி, தூய்மையான கழிப்பறை போன்றவற்றைத் தொழில் வழங்குவோர் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு செயல்வடிவம் பெறுவதை அரசு கண்காணிக்க வேண்டும்.
- அதிக வெப்பநிலை காரணமாகப் பொதுமக்களை நீரிழப்பிலிருந்தும் வெப்பத்தாக்கு நோயின் அறிகுறிகளிலிருந்தும் பாதுகாக்க 1,000 தண்ணீர் வழங்கல் மையங்கள் அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
- அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார மையங்கள் உள்ளிட்டவற்றில் கோடைக்காலம் முடியும் வரை இவை பராமரிக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இவற்றில் தண்ணீருடன் ஓ.ஆர்.எஸ். கரைசலும் கிடைக்கும். அவசர ஊர்திகளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- இவ்விஷயத்தில் பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். இது பள்ளி விடுமுறைக் காலம் என்பதால் குழந்தைகள் வெயிலில் விளையாடுவார்கள். இதனால் நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க அவர்கள் போதுமான அளவுக்கு நீர் அருந்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.
- வீட்டிலுள்ள கர்ப்பிணிகளையும் முதியோரையும் கூடுதல் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். வெப்பத் தாக்கு நோயின் அறிகுறிகளை அலட்சியப்படுத்துவதுதான் பெரும்பாலானோர் செய்கிற தவறு. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு ஆரம்ப நிலையிலேயே மருத்துவமனைக்குச் சென்றால் ஆபத்தைத் தவிர்க்கலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (30 – 04 – 2024)