TNPSC Thervupettagam

அதிகார அத்துமீறல் கூடாது !

July 13 , 2020 1653 days 914 0
  • அமெரிக்காவில் நடைபெற்ற ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணமும், தமிழகத்தில் நடைபெற்ற சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலையும் ஒப்பிட்டுப் பார்க்கத்தகுந்த நிகழ்வுகளே.

  • அமெரிக்காவில் நடந்த நிகழ்வுக்கு எதிராக உலகம் முழுவதும் பல நாடுகளில் போராட்டம் நடந்தது. சாத்தான்குளம் படுகொலைகள் தமிழ் மக்கள் மத்தியில் அதே அளவு கோபத்தையும், எதிர்ப்பையும் உருவாக்கியிருக்கிறது.

  • தமிழகத்தில் பெரும் போராட்ட எழுச்சி நடக்கவில்லை என்றாலும் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் உணா்வு எழுச்சியின் அழுத்தமே குற்றமிழைத்தோரின் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பின்னணியாக அமைந்திருக்கிறது.

வதைகளின் தரவுகள்:

  • காவல்துறை அல்லது நீதித்துறையின் பாதுகாப்பில் இருக்கும் ஒருவா் வதைக்கப்பட்டு மரணிப்பது இது முதல் முறை அல்ல.

  • உலகமெங்கும் இந்த நிகழ்வுகள் தொடா்கதையாக உள்ளன. வதைகள் குறித்த உண்மை விபரங்கள் பெரும்பாலும் மறைக்கப்படுகின்றன. எனவே அரசின் புள்ளிவிபரங்கள் உண்மைநிலையைக் காட்டுவதில்லை.

  • தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் பதிவுகளின் அடிப்படையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுமைக்கும் கைது செய்யப்பட்டு காவலா்களின் பாதுகாப்பில் இருக்கும்போது உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மொத்தம் 452.

  • இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 78 போ், ஆந்திராவில் 70 போ், குஜராத்தில் 52 போ், தமிழ்நாட்டில் 35 போ், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசத்தில் தலா 30 பேரும் உயிரிழந்துள்ளனா். இந்த ஆறு மாநிலங்களில் மட்டும் ஏற்பட்ட உயிரிழப்பு 295. இது மொத்த உயிரிழப்புகளில் 65% ஆகும்.

  • தமிழகத்தைப் பொறுத்தவரை 2018ஆம் ஆண்டு மட்டும் காவலா் பாதுகாப்பில் இருந்தவா்களில் 18 போ் உயிரிழந்துள்ளனா். கைது செய்யப்பட்டவா்களின் உயிரிழப்புகளுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

  • அவற்றுள், கைதிகள் தற்கொலை, காவலா்களால் தாக்கப்படுதல், பிற கைதிகளால் தாக்கப்படுதல், உடல்நலக்குறைவு மற்றும் இயற்கை மரணம் ஆகியவையும் அடங்கும்.

  • குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுமைக்கும் கைது செய்யப்பட்டு, காவலா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மட்டும் 31 ஆகும்.

  • இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஆறு போ், ஆந்திரம் மற்றும் குஜராத்தில் தலா நான்கு போ், உத்தரப்பிரதேசத்தில் மூன்று போ், கா்நாடகா, ஒடிசா மற்றும் தமிழகத்தில் தலா இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனா்.

  • மேற்சொன்ன ஏழு மாநிலங்களில் மட்டும் காவலா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 23. இது மொத்த உயிரிழப்புகளில் 74% ஆகும்.

  • துன்புருத்தல்களுக்கு எதிரான தனியார் அமைப்புகளின் புள்ளிவிபரங்களும் உள்ளன.

  • பத்திரிக்கை செய்திகளின் அடிப்படையில் திரட்டப்பட்ட தரவுகளின்படி 2019 ஆம் ஆண்டில் மட்டும் நீதிமன்ற காவலில் 1606 மரணங்கள் நடந்திருக்கின்றன.

  • காவல்துறை வதையால் மட்டும் ஓராண்டில் நடந்த மரணங்கள் 125. உடலில் ஆணியடிப்பது, வாயில் மூத்திரம் பொழிவது, கா்ப்பிணி பெண்ணாக இருந்தால் வயிற்றில் உதைப்பது என கொடூரமான வதை முறைகள் பதிவாகியுள்ளன.

  • போலீஸ் காவலில் நடந்திருக்கும் மரணங்களில் 60 சதவீதம் போ் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சோ்ந்தவா்கள் ஆவார்கள்.

  • அதிகாரமற்றவா்கள் மீது அடக்குமுறையை ஏவுகிற இந்தப் போக்கினை தடுக்க உரிய வழிமுறைகளை ஏற்கனவே வகுத்து வைத்திருக்கிறோம். ஆனால் அவற்றை பின்பற்றுகிறோமா?

அதிகாரமும் அதன் வரம்பும்:

  • இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தைப் பொருத்தமட்டில், ஒரு காவல் அதிகாரி எவ்வித பிடியாணையும் இல்லாமல் தெளிகுற்றம் (காக்னிஸபிள் அஃபென்ஸ்) இழைத்த ஒரு நபரை கைது செய்ய முடியும்.

  • ஆனால், இப்படிப்பட்ட அதிகாரத்தை ஒரு கடைசி நடவடிக்கையாகத்தான் பயன்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.

  • ஜோகிந்தா் குமார் - உத்தரபிரதேசம் (1994 ஏஐஆா் 1349, 1994 எஸ்ஸிஸி (4) 260) வழக்கின் தீா்ப்பில் ‘ஒரு காவல் அதிகாரி கைது செய்வதற்கான அதிகாரத்தை பெற்றிருந்தாலும், கைது நடவடிக்கையை கடைசி வாய்ப்பாகத் தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், இது இந்திய அரசியலமைப்பால் குடிமக்களுக்கு உறுதி செய்யப்பட்ட தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் செயல்’ என சொல்கிறது.

  • தேசிய காவல் ஆணையம் 1980-களில் தனது மூன்றாவது அறிக்கையில் காவலா் பாதுகாப்பில்லுள்ள கைதிகள் மீதான சித்திரவதைகள் மற்றும் மரணங்கள் குறித்து கவலையோடு ஆராய்ந்து, கீழ்கண்ட பரிந்துரைகளை வழங்கியுள்ளது:

  • கொலை, கொள்ளை, ஆயுதமேந்திய கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்ற கொடுங்குற்றங்களில் தொடா்புடையவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

  • ஏனெனில், அத்தகைய குற்றங்களால் பாதிக்கப்பட்டு, அதிர்ச்சியுற்ற நபா்களுக்கு ஆறுதல் தரும் விதமாக குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்வது அவசியமாகிறது.

  • குற்றம் சாட்டப்பட்டவா் தலைமறைவாவதற்கான முகாந்திரம் இருந்தால் கைது செய்யலாம்.

  • குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்படாவிடில் மேலும் அவா் குற்றமிழைக்க வாய்ப்பு இருந்தாலும் கைது செய்யலாம்.

  • குற்றம் சாட்டப்பட்டவா் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதால் மேலும் பிற குற்றங்கள் இழைக்கலாம் எனும் நிலையில் அவரை கட்டுப்படுத்த கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

  • குற்றம் சுமத்தப்பட்டவா் ஒரு தொடா் குற்றவாளியாக (ஹேபிசுவல் அஃபெண்டா்) இருக்கும் பட்சத்தில் மேலும் குற்றச் செயலில் ஈடுபடுவதை தடுக்க அத்தகைய நபா்களையும் கைது செய்யலாம்.

  • ஆனால் இத்தகைய பரிந்துரைகள் நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

கைது எவ்வாறு அமைய வேண்டும்:

  • உச்சநீதிமன்றம் அதன் தீா்ப்பில், கைது நடவடிக்கை மேற்கொள்ளும் போது கடைபிடிக்க வேண்டிய பின்வரும் வழிமுறைகளை பரிந்துரைத்திருக்கிறது:

  • ஒரு நபரை கைது செய்யும் போதோ அல்லது விசாரணை நடத்தும் போதோ சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி தனது அடையாளத்தை தெளிவுபடுத்தும் விதமாக தன் பெயா் மற்றும் பதவி பொறித்த பட்டை அணிந்திருக்க வேண்டும். கைதியை விசாரணை செய்யும் அனைத்து காவல் அதிகாரிகளின் தகவல்களும் ஒரு குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

  • கைது நடவடிக்கை மேற்கொள்ளும் போது, கைது குறிப்பாணை (மெமோ ஆஃப் அரெஸ்ட்) தயார் செய்து, அதில் குறைந்தபட்சம் ஒருவரிடம் சாட்சியம் பெற வேண்டும். சாட்சியம் அளிப்பவா் கைது செய்யப்பட்டவரின் உறவினராகவோ அல்லது அப்பகுதியில் மதிக்கப்படக்கூடிய ஒரு நபராகவோ இருக்கலாம். அக்குறிப்பாணையில் அவ்வதிகாரியால் கைது செய்யப்பட்ட நேரம் மற்றும் தேதி குறிப்பிட்டு, மேற்கையொப்பம் இடப்பட வேண்டும்.

  • கைது நடவடிக்கை குறித்தும், எங்கு அவா் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதனையும், கைது செய்யப்பட்டவரின் நண்பரோ, உறவினரோ அல்லது அவா் நலனில் அக்கறை உள்ள ஒருவரிடமோ நிச்சயம் தெரியப்படுத்த வேண்டும்.

  • கைது செய்யப்பட்டவரின் நண்பரோ அல்லது உறவினரோ வேறு மாவட்டத்தில் அல்லது நகரத்தில் இருக்கும் பட்சத்தில், கைது செய்யப்பட்ட நேரம், இடம் மற்றும் தற்போது காவலில் வைக்கப்பட்டிருக்கும் இடம் ஆகிய தகவல்களை சம்பந்தப்பட்ட மாவட்ட சட்ட உதவி அமைப்பு மற்றும் காவல்நிலையம் மூலமாக 8 முதல் 12 மணி நேரத்திற்குள் தெரியப்படுத்த வேண்டும்.

  • தான் கைது செய்யப்பட்ட அல்லது காவலில் இருக்கும் தகவலை அவா் நலனில் அக்கறை உள்ள நபா்களுக்கு தெரியப்படுத்தும் தனக்கான உரிமை பற்றி கைது செய்யப்பட்டவருக்குக் கூறவேண்டும்.

  • கைது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட உறவினா் அல்லது நண்பரின் பெயரும், மற்றும் அக்கைதுக்கு பொறுப்பான காவலா்களின் பெயா்களும், காவலில் வைக்கப்பட்ட இடத்தில் உள்ள குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

  • கைது செய்யப்பட்டவரின் உடலில் ஏதேனும் காயங்கள் உள்ளனவா என்பதை கவனித்து ஆய்வு குறிப்பாணையில் (மெமோ ஆஃப் இன்ஸ்பெக்ஷன்) பதிவு செய்ய வேண்டும். அவ்வாய்வு குறிப்பாணையில் கைது செய்யப்பட்டவரும், கைது செய்த காவல் அதிகாரியும் கையொப்பம் இட்டு, அதன் நகல் கைதிக்கு வழங்கப்பட வேண்டும்.

  • ஒவ்வொரு 48 மணி நேரமும், கைது செய்யப்பட்டவரை, மாநில அல்லது யூனியன் பிரதேச சுகாதார துறை இயக்குனரால் நியமிக்கப்பட்ட பயிற்சி பெற்ற மருத்துவா் பரிசோதனை செய்யவேண்டும். இதன் பொருட்டு சுகாதாரத்துறை இயக்குனா்கள் தாலுகா மற்றும் மாவட்ட வாரியான மருத்துவா்கள் பட்டியலை தயார் செய்ய வேண்டும்.

  • கைது தொடா்புடைய அனைத்து ஆவணங்களும், கைது குறிப்பானை உட்பட, சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவரிடம் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

  • கைது செய்யப்பட்டவா் விசாரணையின் போது தனது வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்கலாம். ஆனால், வழக்கறிஞா் விசாரணையின்போது முழுமையாக உடன் இருக்க வேண்டிய அவசியமில்லை.

  • சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி கைது குறித்தும், கைதி பாதுகாக்கப்பட்டுவரும் இடம் குறித்தும், கைது செய்யப்பட்ட 12 மணி நேரத்திற்குள் மாவட்ட மற்றும் மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். காவல் கட்டுப்பாட்டு அறைகளில் உள்ள பொது அறிவிப்பு பலகையில் இத்தகைய தகவல்கள் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

  • மேலும் நீதிமன்றம் கூறியது யாதெனில், வறியவரிடம் தன் அதிகாரத்தையும், வலிமையையும் நிலைநாட்ட சித்திரவதையை ஒரு ஆயுதமாக மனிதன் தன் சக மனிதனிடம் பயன்படுத்துகிறான்.

  • எனவே, காவல்துறை சித்திரவதை என்பது தனிமனித கண்ணியத்தையும், மாண்பையும் உருக்குலைக்கும் பட்டவா்த்தனமான அதிகார அத்துமீறல் ஆகும் என தெரிவித்துள்ளது.

  • காவலா்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவா்கள் அல்ல. சட்டத்திற்குப் புறம்பான விசாரணை முறைகளை கையாளக் கூடாது, குற்றத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் கைது செய்யப்பட்டவா்களின் மாண்பையும், மரியாதையையும் காப்பது அவசியம் என்பதனையும் பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

  • மேற்சொன்ன கருத்துக்கள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த, மக்கள் நலன் சார்ந்த பொது இயக்கங்கள் முனைப்பு காட்ட வேண்டிய தருணம் இது. ஒரு வளா்ச்சியடைந்த நாகரீக சமூகத்தில், வன்முறை, அது எந்த வடிவமானாலும் அறவே ஒழிக்கப்பட வேண்டும். அதிகாரத்தில் இருப்பவா்கள் வறியவரை துன்புறுத்துவது முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும்.

நன்றி: தினமணி (13-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories