TNPSC Thervupettagam

அதிகாரத்திற்கு அடங்காத போராளி கவிஞர் ஹபீப் ஜாலிப்!

December 29 , 2024 6 days 26 0

அதிகாரத்திற்கு அடங்காத போராளி கவிஞர் ஹபீப் ஜாலிப்!

  • ‘ஒன்று இரண்டானது; இரண்டு, துண்டாகி மூன்றானது’ என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் 1947 ஆகஸ்டுக்குப் பிந்தைய நிகழ்வுகளின் மிகச் சுருக்கமான, ஒற்றைவரி அரசியல் வரலாறு. காலங்காலமாக ஒன்றாக இருந்தாலும் ஒன்றிணையாமல்தான் இருந்து வந்திருக்கிறோம் என்பதை உணரச்செய்து, அதனை உரத்துச் சொல்லும் வகையில், இந்திய முஸ்லிம்கள் 1906 இல் மதத்தின் அடிப்படையில், முஸ்லிம் லீக் என்ற தமக்கான கட்சியைத் தோற்றுவித்தபோதே, ஆகஸ்ட்1947 இல், ஒன்றை (இந்தியாவை) இரண்டாகப் பிரிக்கவேண்டிய சூழலை உருவாக்குவதற்கான (நாட்டுப் பிரிவினைக்கான) விதை ஊன்றப்பட்டுவிட்டது.
  • ஆகஸ்டு 16,1946 இல் முகம்மது அலி ஜின்னா, ‘பிரிவினைக்கான நேரடி நடவடிக்கைகளுக்கு’ (Direct Action) அழைப்பு விடுத்தது முதல், “உலகின் ஒப்புவமையற்ற பிரிவினை’ (Partition sui generis)”; “வரலாற்றில் மிகவும் இரத்தக்களரியான ஒரு அதிகார மாற்றம்”; “போர்களில்லா அமைதிக்காலத்தில், உலகின் மிகப்பெரிய மக்கள் இடப்பெயர்வுக்கு வழிவகுத்தது” என வரலாற்று ஆய்வாளர்களால் வியந்து குறிப்பிடப்பட்டு வரும் 1947 நிகழ்வுகளுக்கான வழித்தடம் அமையத் தொடங்கிவிட்டது.
  • மிகக் குறைந்த கணக்கில் ஒன்றரைக்கோடி மக்கள் - இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் - ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் - வடமேற்கில் பஞ்சாப் மற்றும் வடகிழக்கில் வங்காளத்தில் வரையறுக்கப்பட்டிருந்த சர்வதேச எல்லைகளை- இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் என இருபுறங்களிலும்- கடக்க வேண்டியதாயிற்று. அவர்களில் குறைந்தது 10 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர். அக்காலம் வரை மனித குலம் கண்டறியாப் பெருஞ்சோகம் நிகழ்ந்தது இந்தியத் துணைக்கண்டத்தில்.
  • முஸ்லிம் மக்களுக்கான நிறைகனவுகளோடு, முகம்மது அலி ஜின்னாவின் விடாப்பிடி பிடிவாதத்தால் - பிரித்தாளும் கலைதேர்ந்த பிரிட்டிஷாரின் திட்டங்களுக்கும் அது இசைவானதால் - பிரித்துருவாக்கப்பட்டது பாகிஸ்தான். ஆனாலும், தொடக்கம் முதலே அரசியல் சறுக்கல்கள் நிகழ்களமாகவே அந்நாடு விளங்கி வருகிறது. முஸ்லிம்களுக்கான தனிநாட்டைப் பிரித்தே தீருவேன் எனத் தீவிரங்காட்டிய முகம்மது அலி ஜின்னா, தனது கனவுகள் எதனையும் நனவாக்க வாய்ப்பமையாமல் ஓராண்டிலேயே (1948) இயற்கையடைந்தார்.
  • காலமான முகமது அலி ஜின்னாவுக்கு பதிலாக குவாஜா நஜிமுதீன் பொறுப்பேற்றார். ஜின்னாவின் இடத்தை குவாஜா நஜிமுதீன் நிரப்ப இயலவில்லை என்பது நிதர்சனம். முகம்மது அலி ஜின்னாவின் ஆட்சியில் பிரதமராக இருந்த லியாகத் அலிகான் 1951 இல் ராவல்பிண்டியில் ஒரு பெரிய அரசியல் பேரணியின்போது படுகொலை செய்யப்பட்டார். ஜின்னாவுக்குப்பின் அவரது பொறுப்பிலமர்ந்த குவாஜா நஜிமுதீன், பிரதமர் லியாகத் அலிகான் படுகொலைக்குப்பின் பிரதமராக அமர்ந்தார்.
  • பாகிஸ்தான் உருவாக்கப்படும்போது, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் ஒன்றும், மற்றொன்று வடகிழக்கு மண்டலத்திலும் என இணைப்பில்லாத, இரு தனித்தனி நிலப்பரப்புத் துண்டுகளைக் கொண்டதான வித்தியாச வடிவ நாடாக உருக்கொண்டது.
  • இருநிலப்பகுதிகளுக்கும் இடையில் சுமார் 1000 மைல்களுக்குமேல் (எதிரியாகக் கருதப்படும்) இந்திய நிலப்பரப்பு! மேற்கிலிருந்து கிழக்கின்மேல் ஆதிக்கம் என்ற எண்ணம் கிழக்கு பாகிஸ்தானில் ஆரம்பத்திலிருந்தே முளைவிடத் தொடங்கியது. காரணம் மொழி. இரு பகுதிகளிலுமுள்ள மொத்த மக்களில் மிகப்பெரும்பான்மையோர் பேசுமொழி பெங்காலி மொழியாக இருப்பினும், சிறுபான்மையினர் பேசு மொழியான உருதுமொழி மட்டுமே, ஒருதலைப்பட்சமாக, ஆட்சிமொழியாக இருக்குமென ஜின்னாவால் அறிவிக்கப்பட்டது. மேலும், இரு தனித்தனி நிலப்பரப்புகளை ஒற்றுமையான நோக்கங்கள் கொண்டு, திறமையாக நிர்வகிக்க அவசியமான உள்கட்டமைப்பு, நடைமுறைகள், ஆற்றல் வளங்களும், பொதுநோக்குத் தலைமையும் பாகிஸ்தானில் வறட்சி.
  • கூடுதலாகக் காஷ்மீர் மீது கண்வைத்துக்கொண்டு- தாய்நாடு/ அண்டை நாடு - இந்தியாவை நிரந்தர முதன்மை எதிரியாக வரித்துக் கொண்டதால், எப்போதும் அதிபதட்டநிலை உறவு. இத்தகைய காரணங்கள் சூழ் நிலையில், மக்களாட்சி மலர்ச்சி, வளர்ச்சி என்பனவற்றைப் பின்தள்ளிப், பாதுகாப்பு, இராணுவ பலம் என்பவை முதன்மை கொண்டு, எப்போதும் இராணுவம், சிவிலியன் தலைமையின்மேல் மேலாதிக்கம் செலுத்துவதாகவே நடப்புகள் இருந்து வருகின்றன. ஒரு கட்டத்தில், இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டுருவாக்கப்பட்ட பாகிஸ்தானிலிருந்து, அதன் கிழக்குப் பகுதி தீவிரமாக 1971 இல் போராடி - வங்கதேசம் பிரிந்து - இரண்டை மூன்றாக்கிவிட்டது.
  • பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த காலந்தொட்டுப் (1947 முதல்) பாதிக்காலத்திற்கும் மேலாக அந்நாடு, சக்திவாய்ந்த அதன் இராணுவத்தால்தான் ஆளப்பட்டு வந்துள்ளது. ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் தங்கள் பதவிக்காலத்தை நிறைவு செய்ய முடியாமலே மடிகின்றன. மாறி, மாறி அதிபர்களால் பதவி நீக்கம் செய்யப்படுகின்றன அல்லது இராணுவத் தலைவர்களால் அதிகாரத்திலிருந்து அகற்றப்படுகின்றன என்பதே வாடிக்கை. இதுவரை ஒரே ஒரு நாடாளுமன்றம் மட்டுமே அதன் ஐந்தாண்டு காலத்தை முழுமையாக நிறைவு செய்துள்ளது. அது இராணுவ சர்வாதிகாரியான ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் அதிபராகவும் இராணுவத் தளபதியாகவும் இருந்தபோது!
  • அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சபை (1947) என்ற அமைப்பு நாடாளுமன்றமாகச் செயல்படவும் தகுதியாக்கப்பட்டது. பாகிஸ்தானில் முதல் கவர்னர் - ஜெனரலாக அமர்ந்து கொண்ட ஜின்னாவே, நாடாளுமன்றத் தலைவராகவும் இருந்து கொண்டார். அதே காலத்தில், இந்தியா தனது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டு 1950 ஜனவரி 26 முதல் குடியரசாகச் செயல்படத் தொடங்கியது. இந்தியக் குடியரசு, ஜனநாயக, சோசலிச மதச்சார்பற்ற குடியரசு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானில் ஜின்னா மறைவு (1948), ஆப்கானிஸ்தானுடன் எல்லைப்போர் (1949), பிரதமர் லியாகத் படுகொலை (1951), பாகிஸ்தானில் ஒரே தேசிய மொழியாக உருது மொழியை ஜின்னா அறிவித்ததால், கிழக்கு பாகிஸ்தானில் உருவான பதற்றங்கள் 1952-ல் உச்சக்கட்டத்தை அடைந்தது என சில நிகழ்வுகளும், அரசில் இஸ்லாம் மதத்தின் பங்கு, மாகாண பிரதிநிதித்துவ முறைகள், மற்றும் மத்திய மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு பற்றிய மாறுபட்ட, இணக்கமில்லாச் சர்ச்சைகள் போன்ற பல வலுவான காரணங்கள் அந்நாட்டின் அரசியலமைப்பு உருவாக்கத்தை தாமதப்படுத்தின.
  • 1956 இல் அடிப்படை சரியில்லாத, அவசரத்தேவை கருதிய ஒரு (சந்தர்ப்பவாதப் பொதுக்) கருத்தொற்றுமை மூலம் முதல் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அந்த அரசியல் அமைப்பு சட்டம், பாகிஸ்தானை ஒரு ‘இஸ்லாமியக் குடியரசு’ என்று அறிவித்தது. பாகிஸ்தானை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கான கருத்தியல், பிரதமர் லியாகத் அலி கான் மார்ச் 1949 இல் அரசியலமைப்பு சபையில் குறிக்கோள் தீர்மானத்தை (Objective Resolution) அறிமுகப்படுத்தியபோதுதான் முதல்முறையாக, முறைப்படியாக வெளிப்படையானது. “பிரபஞ்சம் முழுவதின் மீதும் இறையாண்மை எல்லாம் வல்ல அல்லாவுக்கே உரியது” என்று லியாகத் அலிகான் குறிக்கோள் தீர்மானம் அறிவித்தது.
  • குறிக்கோள் தீர்மானத்திற்கும், பாகிஸ்தானை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கான அரசியல் தலைவர்களது முடிவுக்கும், மதத் தலைவர்கள் 1949 இல் பாகிஸ்தானில் இஸ்லாமிய தலைமை மத குருவாக (ஷேக் அல் - இஸ்லாம்) பதவியிலிருந்த தியோபந்தி ஆலிம்; மௌலானா ஷபீர் அகமது உஸ்மானி; ஜமாத் - இ இஸ்லாமியின் மௌலானா மவ்தூதி ஆகியோரது - முழு ஆதரவும் கிடைத்தது.
  • இன்றும் பாகிஸ்தான் அரசியலமைப்பின் முகப்புரையாக இருக்கும் குறிக்கோள் தீர்மானம் இதுவே. அரசியலமைப்புச் சபையே நாடாளுமன்றமாகவும் செயல்பட முடிவு செய்யப்பட்டதையும் முன்னரே குறிப்பிட்டுள்ளோம். அரசியலமைச் சட்டம் உருவாக்கப்படுவதற்கு முன்பே, 1954 இல் மாகாணங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்றது. மக்களாட்சி முறைச்சோதனை மிகக் குறுகியதாகி, இனிப்பானதாக இல்லாமல் போயிற்று .
  • பிரதமர் அலி கான் படுகொலை செய்யப்பட்டபின் (1951), ஜின்னாவுக்குப் பிறகு அவரது இடத்தில் இருந்த நசிமுதீன் இரண்டாவது பிரதமரானார். அவர் வங்காள மொழி, உருதுக்குச் சமமான அந்தஸ்தை அரசியலமைப்பில் இடம்பெறச் செய்தார். 1953 ஆம் ஆண்டில் மதக் கட்சிகளின் தூண்டுதலின் பேரில், அஹ்மதியா எதிர்ப்பு கலவரங்கள் வெடித்தன, கலவரங்களால் ஆயிரக்கணக்கான அஹ்மதிகளது இறப்புகள் நிகழ்ந்தன. இந்தக் கலவரங்கள் குறித்து இரண்டு உறுப்பினர் விசாரணை நீதிமன்றத்தால் (1954 இல்) விசாரிக்கப்பட்டபோது, கலவரங்களைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கட்சிகளில் ஒன்றான ஜமாத் - இ - இஸ்லாமியால் விசாரணையை ஏற்க மறுத்துவிட்டது. இந்த நிகழ்வுகள், நாட்டில் முதல் முறையாக இராணுவச் சட்டத்தின் அமலுக்கு வழிவகுத்தன. இதன்வழி, நாட்டின் அரசியல் மற்றும் சிவில் விவகாரங்களில் இராணுவத் தலையீட்டின் வரலாறும் தொடங்கியது எனலாம்.
  • 1954 ஆம் ஆண்டில், முஸ்லீம் லீக் (பி.எம்.எல்) பிரதமர் அலி போக்ராவால், ஜெர்மனி நாட்டின் புவிசார் அரசியல் மாதிரியை ஒட்டிப் பாகிஸ்தானைப் பிரிக்கும் வகையில் ‘ஒரு அலகுத்திட்டம்’ என்ற முறையைத் திணிக்கமுற்பட்டார்.
  • அதே ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தல்களில், கிழக்கில் கம்யூனிஸ்டுகள் உதயம், மேற்கில் முஸ்லிம் லீக் அஸ்தமனம் என்று குறிப்பிடும் வகையில், கிழக்கு பாகிஸ்தானில் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றனர். மேற்கு பாகிஸ்தானில் அமெரிக்க சார்புக் குடியரசுக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றதுடன், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் அரசாங்கத்தையும் வெளியேற்றியது.
  • 1954 தேர்தல் முடிவுகள் மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் விருப்பங்கள், சித்தாந்தத்த வேறுபாடுகளை வெளிச்சமாக்கியது. நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானை ஒரு இஸ்லாமிய குடியரசாக உறுதிப்படுத்திய (1956) அரசியலமைப்புப் பிரகடனத்திற்குப் பிறகு, இரண்டு குறிப்பிடத்தக்க வங்காளி தலைவர்கள், பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் ஆனார்கள். இஸ்கந்தர் மிர்சா பாகிஸ்தானின் முதல் ஜனாதிபதியானார். ஹுசைன் சுஹ்ரவர்தி ஒரு கம்யூனிச-சோசலிச கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பிரதமரானார்.
  • இராணுவத்தை கட்டியெழுப்பத் தொடங்கியது, அணுசக்தி திட்டத்தைத் தொடங்கியது, நாட்டின் ஆயுதப்படைகளுக்கான அமெரிக்க பயிற்சித் திட்டத்திற்கு வழிவகுத்தது போன்ற பிரதமர் சுஹ்ரவர்தியின் முற்போக்கான செயல்பாடுகளே அவருக்கு எதிர்ப்புகளையும் சேர்த்தது. கம்யூனிஸ்ட்கள் ஆண்ட கிழக்கு பாகிஸ்தானில் அவர் பெரும் எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது. கிழக்கு பாகிஸ்தானில் உள்ள வேறுபாடுகள் பலூச் பிரிவினைவாதத்தை ஊக்குவித்தன. இந்நிலையில்,கிழக்கு பாகிஸ்தானில் கம்யூனிஸ்டுகளை மிரட்டும் முயற்சியில் அவாமி லீக், கம்யூனிஸ்டு கட்சிகளின் தொண்டர்களை அதிபர் மிர்சா ஆணைகளின்படி கைது செய்ய ஆரம்பித்தனர். இது கிழக்கு - மேற்கு பிளவை மேலும் அகலப்படுத்தியது. கிழக்கு பாகிஸ்தான் ஒரு சோசலிச நாடாக மாறுவதைத் தேர்ந்தெடுத்தது. அங்கு நடைமுறையான ஒரே அலகுத் திட்டமும், சோவியத் மாதிரியில் தேசியப் பொருளாதாரத்தை மையப்படுத்தியதும் மேற்கு பாகிஸ்தானில் பெரும் எதிர்ப்பை சந்தித்தன.
  • இதற்கிடையில் பாகிஸ்தானில் பிரதமர் - அதிபர் ஆக இருந்த இரண்டு பெங்காலி தலைவர்களுக்கிடையில் கருத்து மோதல்களும் தனிப்பட்ட பிரச்சினைகளும் வளர்ந்தன, இது நாட்டின் ஒற்றுமையை மேலும் சேதப்படுத்தியது. இஸ்லாமிய மதகுரு மௌலானா பாஷானியின் செல்வாக்கு நாளும் வளர்ந்து, தனது சொந்த கட்சியிலேயே சுஹ்ரவர்தி தனது அதிகாரத்தை இழக்கக் காரணமாக அமைந்தது. ஜனாதிபதி மிர்சா எப்படியும் பிரதமர் சுஹ்ரவர்தியைப் பதவி நீக்கம் செய்வார் என்ற அச்சுறுத்தலின் நிழலிலேயே சுஹ்ரவர்தி தானாகவே பதவி விலகினார்.
  • சுஹ்ரவர்திக்குப் பிறகு 1957 இல் ஐ. ஐ. சுந்த்ரிகர் பதவிக்கு வந்தார். இரண்டு மாதங்களுக்குள் சுந்த்ரிகர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து வந்த சர் பெரோஸ் நூன் ஒரு திறமையற்ற பிரதமர் என்பதை நிரூபித்தார். மேற்கு பாகிஸ்தானில், இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பிரதமர்களை அதிபர் மிர்சா பதவி நீக்கம் செய்தார், பிரதமர்களைச் சகட்டுமேனிக்கு டிஸ்மிஸ் செய்து கொண்டிருந்த அதிபர் மிர்சாவுக்கு எதிர்ப்புக் கிளம்பியது. நூருல் அமீன் தலைமையிலான முஸ்லீம் லீக்கிற்கான பொதுமக்கள் ஆதரவு அதிபர் மிர்சாவை அச்சுறுத்தத் தொடங்கியது, அவரது செல்வாக்கு சரிந்தது.
  • மேலும், 1958 இல் புதிய தேர்தல்களுக்கு விரைவான அழைப்பு விடுக்குமாறு இராணுவத்தின் அழுத்தத்திற்கும் அவர் ஆளானார். அதிபர் இஸ்கந்தர் மிர்சா 1956 அரசியலமைப்பை சஸ்பென்ட் செய்தார். அவர் நியமித்த ஜெனரல் அயூப்கானே, அதிபரைப் பதவிநீக்கம் செய்துவிட்டுத் தானே அதிபர் என அறிவித்துக் கொண்டார். நாட்டிற்கு ஒரு புதிய அரசியலமைப்பு முறையை உருவாக்க அவர் ஒரு கமிஷனை நியமித்தார். அந்தக் கமிஷன் தனது பணிகளை முடிக்க நான்காண்டுகளுக்குமேல் எடுத்துக்கொண்டு, 1962 இல் இரண்டாவது அரசியலமைப்பு வரைவை அளித்தது. 156 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சட்டமன்றம் மற்றும் 80,000 "அடிப்படை ஜனநாயகவாதிகள்" கொண்ட அதிபர் தேர்தல் வாக்காளர்கள் (Electoral College) கொண்ட அதிபர் ஆட்சி அரசாங்க அமைப்பை உருவாக்கியது.
  • இரு அமைப்புகளின் உறுப்பினர்களும் மேற்கு பாகிஸ்தான் மற்றும் கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) இடையே சம எண்ணிக்கையில் இருக்குமாறு ஏற்படுத்தப்பட்டது. அந்த அடிப்படைகளில் ஒரு 1965 இல் சர்ச்சைக்குரிய தேர்தல் நடத்தப்பட்டு, பாகிஸ்தான் உருவாகக் காரணமாக இருந்த முகம்மது அலி ஜின்னாவின் மனைவி திருமதி பாத்திமா ஜின்னாவை அயூப் கான் தோற்கடித்தார்.
  • சில ஆண்டுகளில் 1969 இல் அவருக்கெதிரான பல போராட்டங்களுக்கு மத்தியில், அயூப் கான் அதிபர் பதவியை ராஜிநாமா செய்து, அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் யாஹ்யா கானிடம் அதிகாரத்தை ஒப்படைத்தார். இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. சட்டப்பேரவைகள் யாவும் கலைக்கப்பட்டன. 1970 இல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. கிழக்கு பாகிஸ்தானில் தலைவர் ஷேக் முஜிப்- உர் -ரஹ்மானின் கட்சி ஒட்டுமொத்த வெற்றியாளராக வந்தது. நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் இராணுவத் தரப்பு பல தில்லுமுல்லுகளைச் செய்தது. இதனால், கிழக்கு பாகிஸ்தானில் கடும் இராணுவ நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுப் போர் நிகழ்ந்து, எண்ணற்ற உயிர்ப்பலி, உடமை இழப்புகள், சேதங்களால் நிலைமை தலைகீழாகியது. 1971 இல் இந்திய இராணுவ உதவியுடன் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கதேசம் எனும் புதிய நாடு உதயமானது.

இரண்டாம் சுற்று மக்களாட்சி

  • மேற்கு பாகிஸ்தானில் 1972 இல் இராணுவ ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டு நடைபெற்ற தேர்தலில் ஜுல்ஃபிகார் அலி பூட்டோ வெற்றிபெற்று மக்களாட்சி அதிபர் ஆனார். 1973 இல் மூன்றாவது முறையாக அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, பாகிஸ்தான் ஒரு நாடாளுமன்ற மக்களாட்சிக் குடியரசு எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. பிரதமரே ஆட்சித்தலைவரென்ற ஏற்பாட்டின்படி,1973 இல் அதிபரான பூட்டோ, பிரதமராக மாறிப் பொறுப்பேற்றுக்கொண்டார். 1976 இல் இராணுவத் தலைமைத் தளபதியாக ஜெனரல் ஜியாஉல் ஹக்கை நியமித்தார். அந்நியமனமே அவருக்குக் காலனானது.
  • பொதுத் தேர்தல்கள் 1977 இல் நடைபெற்றதில் பூட்டோவின் கட்சி தேசிய சட்டமன்றத்தில் பெரும்பான்மை இடங்களை வென்றது. ஆனால், எதிர்க்கட்சிகள் தேர்தல் மோசடிக் குற்றச்சாட்டுக்களை வலுவாகக் கூறித் தொடர்ந்து அமைதியின்மையை ஏற்படுத்தின. தன்னைத் தளபதியாக நியமித்தவரையே பதவியிலிருந்து அகற்றும் இராணுவ ஜெனரலாக இம்முறை ஜெனரல் ஜியா- உல் -ஹக், நீக்கப்பட்ட பிரதமராக பூட்டோ! உடனே அரசியலமைப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, இராணுவச் சட்டத்தையும் ஜெனரல் ஜியா உல் ஹக் அறிவித்தார். ஜியா- உல் -ஹக் அதிபராக பதவியேற்றுக் கொண்டதுடன் இராணுவ தளபதி பதவியையும் தாமே வைத்துக் கொண்டார்.
  • 1979 இல் ஜியாவின் மறைமுக ஆதரவோடு, கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஒரு விசாரணையில் "கொலைக்கான சதித்திட்டம்" தீட்டியவரென்று முடிவு செய்யப்பட்ட பூட்டோ குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பின்னர், தூக்கிலிடப்பட்டார். ஜியாவின் 'இஸ்லாமிய மயமாக்கல்' கொள்கையின் ஒரு பகுதியாக கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய ஹுதூத் அவசரச் சட்டத்தை ஜியா பிரகடனப்படுத்தினார். தேர்தல்களைக் காலவரையின்றி ஒத்திவைத்து (1982), அரசியல் நடவடிக்கைகளுக்கும் தடைவிதித்துள்ள ஜியா, தான் நியமித்துள்ள "தொழில்நுட்ப வல்லுனர்களின்" கூட்டாட்சி கவுன்சிலை அமைத்தார்.
  • ஜியா- உல் -ஹக் தனது இஸ்லாமிய மயமாக்கல் கொள்கைகள் குறித்து 1984 இல் ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தினார். பதிவான வாக்குகளில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை ஜியாவுக்கு ஆதரவாகவே இருந்ததாக அவரது அரசாங்கம் கூறியது. பின்னர், 1985 பொதுத் தேர்தல்கள் (கட்சி சார்பற்ற அடிப்படையில்) நடத்தப்பட்டன. இராணுவச் சட்டம் நீக்கப்பட்டு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய சட்டப்பேரவை தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக ஜியாவின் நடவடிக்கைகளை அங்கீகரித்தது; அவரை அதிபராக தேர்ந்தெடுத்தது. முகமது கான் ஜுனேஜோ பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • விரிவடைந்து வரும் பிளவுகளுக்கு மத்தியில், ஜியா பாராளுமன்றத்தை கலைத்து, அரசியலமைப்பின் 58-2 (பி) பிரிவின் கீழ் ஜுனேஜோவின் அரசாங்கத்தைப் பதவி நீக்கம் செய்தார். 90 நாள்களுக்குள் தேர்தலை நடத்துவதாக அவர் உறுதியளித்தார். ஆனாலும் அதற்குள் ஆகஸ்ட் 17 இல் அவரும் 31 பேரும் ஒரு விமான விபத்தில் கொல்லப்பட்டனர்.

மூன்றாவது ஜனநாயக சகாப்தம்

  • பொதுத் தேர்தல்கள் 1988 இல் நடைபெற்றன. பிபிபி (பூட்டோவின் மகள் பெனாசிர் தலைமையிலானது) பெரும்பான்மையான இடங்களை வென்றது. பெனாசிர் பூட்டோ பிரதமராக பதவியேற்றார். இரண்டே ஆண்டுகளில், வழக்கம்போல ஆட்சி கவிழ்ப்பு வேலைகள் நிறைவேறி, ஊழல், திறமையின்மை என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் பெனாசிர் பூட்டோவின் அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்து, ஜனாதிபதி குலாம் இஷாக் கான் தேசிய சட்டமன்றத்தையும் கலைத்தார் (1990 ).
  • மீண்டும் புதிய தேர்தல்கள் நடத்தப்பட்டன. இஸ்லாமிய ஜம்ஹூரி இத்திஹாத் (IJI) அமைப்பின் தலைவராக ஜியாவின் கீழ் வளர்த்தெடுக்கப்பட்ட நவாஸ் ஷெரிப் இம்முறை பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தானின் சட்ட அமைப்பில், இஸ்லாமிய சட்டத்தின் கூறுகளை தொகுத்துச் சேர்த்த, ஷரியத் மசோதாவை தேசிய சட்டமன்றம் ஏற்றுக்கொண்டது (1991). அச்சமயம், கராச்சியில் எழுந்த வன்முறைக்கு (1992) எதிராக நவாஸின் அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது. முஹாஜிர் குவாமி இயக்கத்தின் (எம்.க்யூ.எம்) உறுப்பினர்களை குறிவைப்பதாகவே இந்த நடவடிக்கை கருதப்பட்டது. அதிபர் குலாம் இஷாக் கான், மீண்டுமொருமுறை (முன்பு பெனாசிர் பூட்டோ) ஊழல் மற்றும் திறமையின்மை என்ற அதே காரணங்களுக்காகத் தற்போதைய நவாஸ் ஷெரீப் அரசையும் பதவி நீக்கம் செய்தார். (1993) அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவரே தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டியதாயிற்று.
  • பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன. பெனாசிர் பூட்டோ இரண்டாவது முறையாகப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் உறுப்பினரான பரூக் லெகாரி நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது முறையும், வழக்கமான ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் பெனாசிர் பூட்டோவின் அரசாங்கத்தைக் கலைத்து, (1996) அதிபர் பரூக் லெகாரி தேசிய சட்டப்பேரவையைக் கலைத்தார். 1997 -1988 ஆம் ஆண்டுகளுக்குப் பின், நான்காவது தடவையாகப் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இரண்டாவது முறையாக நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல் - என் கட்சி அமோக வெற்றி பெற்று அவரும் இரண்டாவது முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிபராக ரபீக் தாரர் பதவியேற்றார்.

மூன்றாம் இராணுவக் காலம்

  • 1999 கார்கில் போருக்குப் பிறகு, நவாஸ் ஷெரீப் தனது ராணுவத் தளபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பை மாற்ற முயற்சித்தார். ஆனால், முஷாரப் முந்திக்கொண்டு, ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் நவாஸ் ஷெரீப் மற்றும் பிற அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்து ஆட்சியைக் கைப்பற்றினார். நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தனர்.
  • ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் அதிபராகவும், அதே நேரத்தில் இராணுவத் தலைமைத் தளபதியாகவும் பதவி ஏற்றுக்கொண்டார். (2001) முஷாரப் தனது அதிபர் பதவி குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்று, (2002) அவருக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் பதவியில் இருக்க அனுமதி கிடைத்தது. ஒரு பொதுத் தேர்தல் நடைபெற்று, முஷாரஃப்பினால் தோற்றுவிக்கப்பட்ட- அதிபருக்கு விசுவாசமான - கட்சியான PML-Q பெரும்பாலான இடங்களை வென்றது. PML-Q கட்சியின் ஜபருல்லா கான் ஜமாலி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இதற்கிடையில், முஷாரஃப் 1973 அரசியலமைப்பில் ஏராளமான திருத்தங்களைக் கொண்டு வந்தார். 2004 இல் ஜபருல்லா கான் ஜமாலிக்குப் பதிலாக, அப்போதைய நிதியமைச்சர் சவுகத் அஜீஸ் பாகிஸ்தானின் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2007 இல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் முகம்மது செளத்ரியை அதிபர் முஷாரப் பதவி நீக்கம் செய்ததை அடுத்து அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கு நாடு தழுவிய எதிர்ப்பு இயக்கம் எழுந்தது. இறுதியில் செளதரி மீண்டும் தலைமை நீதிபதி பதவியில் இருத்தப்பட்டார். இத்தனை குழப்பங்களுக்கிடையே, பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தேசிய சட்டமன்றம் அதன் ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்தது என்ற சிறப்பை முஷாரப் பெற்றது குறிப்பிட உரியது.
  • மன்பதை உலகில், மனிதகுல வரலாறு நீள்நெடும் பாதைகளெங்கிலும் அடர்ந்து மண்டிக்கிடக்கின்றன. அகற்றப்பட்டேயாக வேண்டிய அல்லவைகள் பல. அகலா ஏற்றத்தாழ்வு, அடங்கா அடக்குமுறை, அளவறு தன்னதிகாரம், வரையிலாக் கொடுங்கோன்மை, இரக்கமழி சுரண்டல், நியாயமேயிலாப் பாகுபாடு போன்றவை அவற்றில் சில. இத்தகைய சமூக அநீதிகளை எழுத்தூன்றி எதிர்த்துக் கருத்துக் கலகம் செய்யும் கவிஞர்களது எழுத்துகள் சமுதாயங்களில் நிலவும் அத்தகைய அநீதிகளை, அவலங்களைச் சுற்றிச் சூழ்ந்து, தாக்கித் தகர்த்து, அடியோடு பெயர்த்தகற்ற முற்பட்டு முன்நிற்பனவாகும்.
  • இவ்வகைக் கவிஞர்களது எழுத்துகளே, விழையும் மாற்றங்களை விளைக்கவல்ல, ‘புரட்சிகளுக்கான விதைகளாகின்றன. ஒருக்கால், உடல் மெலிந்தோராயினும், இடர் எதுவரினும் எப்போதும் எதிர்நின்று தாங்கும் உளம் வலியோரான கவிஞர்களது கவிதைக் குரல்கள் காலங்காலமாக, அதிகார பலமேறி, மக்களை மதியாத மதங்கொண்டு ஆள்வோர்களது செவிகளில் இடியாய் இறங்கிச் எரிமலைச் சினத்தைச் சிந்தையில் மூட்டுவதாகிறது. மூட்டியதால், சீறியெழும் சினக்கனலால் கவிஞர்களுக்கு மேலும் கூடும் துயரங்களை ஆள்வோர் குவியச் செய்திருப்பதையும் வரலாற்றுக் கண்ணாடிப் பிரதிபலிப்புகள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன.
  • முற்பகுதியில் சுருக்கமாக விவரிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றின் (1947 - 2002), பெரும்பகுதியில் ஆட்சி பீடத்திலிருந்த இராணுவ சர்வாதிகாரங்களைச் சமரசம் சிறிதுமில்லாமல் – ‘வேண்டுதல், வேண்டாமை இலா’ மனநிலையில் - மக்கள் பக்கம் நின்று, கவியாயுதமேந்திக் களமாடியதுடன், தன் கவிதைகளால் ஆளும் உயரடுக்கினரையும் அவர்களது கொள்கைகளையும் எப்போதும் சவால்விடுத்துச் சாடும் ‘வாழ்நாள் போராளி’யாக வாழ்ந்தவர் கவிஞர் ஹபீப் ஜாலிப் (habib jalib). ‘’தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலைவாணர்களும் – இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்’’ என்று தமிழை வியப்பான் கவிராஜன் பாரதி. அதுபோலவே, கவிஞர் ஜாலிப் பற்றியும் வியந்து பேசச் செய்தியொன்றுண்டு. அது, இவர் தன் கவிதைகளுக்காக எத்தனைமுறை சிறைப்பட்டாரென்பதை என்றுணராதவர் என்பதே. ஹபீப் ஜாலிப் என்ற பெயர் பாகிஸ்தானின் எழுத்தாளர்கள், கவிஞர்களிடையே, ‘தீவிரப் புரட்சிக் கவிஞர்’களின் பட்டியலில் உள்ளது.
  • பாகிஸ்தானின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தது கவிஞர் ஹபீப் ஜாலிப் அவர்களுடைய போராட்ட வாழ்க்கை. கவிஞர் 1928 இல் இந்தியாவின் ஹோஷியார்பூரில் பிறந்தவர். முதலில் இவரது குடும்பம் தில்லிக்குக் குடிபெயர்ந்தது. 1947 இல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இஸ்லாமியர்கள் எதிர்கொள்ள நேர்ந்த அசாதாரணச் சூழல்களால், இவரது குடும்பம் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தது. ஜாலிப் தனது ஆரம்பக் கல்வியை தில்லியில் தொடங்கி, லாகூரில் முடித்துக்கொண்டார். அவர் இலக்கியம் மற்றும் கவிதைகளில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். குறிப்பாகப் பாகிஸ்தானின் புரட்சிக்கவிஞரான ஃபைஸ் அகமது ஃபைஸ் மற்றும் மார்க்சிய சித்தாந்தத்தின் படைப்புகளால் அவர் ஈர்க்கப்பட்டு, அரசியலில் 1950-களில், தீவிரமாக ஈடுபட்டு பாகிஸ்தானின் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.
  • குடும்பச் சூழல் காரணமாக லாகூரில் ‘இம்ரோஸ் கராச்சி’ என்ற தினசரி செய்தித்தாளில் பிழைதிருத்துபவராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், ஒரு பத்திரிகையாளராக வளர்ந்தார். எப்போதும் மக்கள் பக்கம் நின்றார். பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் நற்கடமை செய்தார். தனது இறுதிவரை (1993) கனல் கவிதைகளால் பாகிஸ்தானின் ஆட்சியாளர்களுக்குத் தூங்கா இரவுகளைத் தொடர்ந்து வழங்கி வந்தார்.
  • பாகிஸ்தானில் சர்வாதிகாரம் செலுத்திய அயூப் கான், யாஹ்யா கான், ஜியாவுல் ஹக், பர்வேஸ் முஷாரஃப் என ஒவ்வொரு ராணுவ ஆட்சியாளரையும் தீரமுடன் எதிர்த்து நின்றார். அவரது கவிதைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் நம்பிக்கைகளுக்காக அவர் பல முறை - பாகிஸ்தானின் ஒவ்வொரு சர்வாதிகாரி ஆட்சியிலும் - கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் எந்த சர்வாதிகாரிக்கும் தலைவணங்கியதில்லை. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் ஜனநாயக விரோதமாக நடந்து கொள்கிறது என்றோ, குடிமக்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன என்றோ அவர் உணர்ந்த போதெல்லாம், அவர் எழுந்து நின்று எதிர்ப்புத் தெரிவிப்பார். ஜாலிப்பின் வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கும்போது, வரம்பில்லா அதிகாரத்தை மீறுவதும், அநீதியான உத்தரவுகளுக்குச் சவால் விடுவதும் அவரது ஆன்மாவிலேயே கலந்திருக்குமோ என எண்ண வாய்ப்புகள் வருகின்றன.
  • ஒரு காலத்தில் பூட்டோவின் ரசிகராகவும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் கொண்டுவர விரும்பிய புரட்சியின் ஆதரவாளராகவும் இருந்த போதிலும், பூட்டோ அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டிய விதத்தில் நடந்து கொள்ளவில்லை என்று உணர்ந்தபோது, ஜாலிப் தனது குரலைத் தயங்காமல், பாரபட்சம் ஏதும் காட்டாமல் உயர்த்தினார். தனது கவிதைச் சாட்டையால் பூட்டோவின் ஒவ்வாத நடைமுறைகளைத் தாக்கத் தயங்கியதில்லை அவர். அதேபோல், பூட்டோவின் மகள் பெனாசிர் பூட்டோவின் பெரும் ஆதரவாளராக இருந்தபோதும், அவரது அரசை விமர்சிப்பதிலிருந்து ஜாலிப்பைத் தடுக்க முடியவில்லை.
  • 1986 இல் பெனாசீர் பூட்டோ நாடு கடத்தலில் இருந்து திரும்ப வந்தபோது, ஜாலிப் அவருக்காக ஒரு உருக்கமான கவிதையை எழுதினார். பெனாசிர் வாஷிங்டன் செல்ல திட்டமிட்டிருப்பதை அறிந்த கம்யூனிஸ்ட்டான ஜாலிப், ‘அமெரிக்கா செல்ல வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்து ஒரு கவிதை எழுதினார். பெனாசிர் ஆட்சிக்கு வந்ததும் ஏமாற்றமடைந்த ஜாலிப் அவரது அமைச்சர்களுக்கு எதிராக சில ஈரடிப் பாடல்களை இயற்றி உலவவிட்டார். நவாஸ் ஷெரீப்பையும் அவர் விட்டுவைக்கவில்லை.
  • ஆனால், அதிகாரத்தில் இல்லாத எந்த ஒரு அதிகாரி அல்லது அரசியல் தலைவரிடமோ அவர் நடந்துகொண்ட விதம் குறிக்கத்தக்க மேன்மையானது. ஒரு பிரதமரோ அல்லது அதிபரோ பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, ஜாலிப் அவருக்கு எதிராக எதையும் எழுதுவதையோ பேசுவதையோ அறவே தவிர்த்து விடுவார். எவரொருவரையும் கீழே இருக்கும்போது தாக்குவதில் நியாயமில்லை என்ற அறம் அவரிடம் தங்கியிருந்தது. ஒரு சாமானியனாக இருந்தாலும் சரி, முன்னாள் பிரதமராக இருந்தாலும் சரி, அதிகார அடையாளங்களுக்குத்தான் சவால் என்பது அவரது நிறைநெறி.
  • கராச்சியில் பத்திரிகையாளரும், செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான முஜாஹித் பரேல்வி என்பவர் ஜாலிபுக்கு மிகவும் நெருக்கமானவர். ஜாலிப் கராச்சியில் இருக்கும்போதெல்லாம் மிக நுணுக்கமாக ஜாலிப்பையும் அவரது நிகழ்ச்சி நிரலையும் பரேல்விதான் கவனித்துக் கொள்வார். நீண்ட காலமாக ஜாலிப், அவரது கவிதைகள் மற்றும் அவரது சித்தாந்தம் குறித்து பரேல்வி எழுதி வருகிறார். 2011 நவம்பரில், 'ஜாலிப் ஜலிப்' என்ற புத்தகமாக அவர் அத்தகைய எழுத்துக்களைத் தொகுத்தபோது, அது புத்தகக் கடைகளிலிருந்து விற்கப்பட்டுப் பறந்து சென்றன. ஒரு மாதத்திற்குள் இரண்டாவது பதிப்பை வெளியிட வேண்டியிருந்தது. இத்தகைய புகழுக்கு ஜாலிப்தான் காரணம் என்று பரேல்வி கூறியுள்ளார்.
  • ‘உருது புத்தகங்கள் அதிகம் விற்பதில்லை என்ற கட்டுக்கதையை ஜாலிப் உடைத்தெறிந்ததாக நான் உணர்கிறேன்’ என்றார் பரேல்வி. அதேபோல், 1968 ஆம் ஆண்டிலேயே ஜாலிப்பின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான 'சரே- இ -மக்தால்' வெளிவந்தபோது, அதன் நான்கு பதிப்புகள் சில மாதங்களுக்குள் விற்றுத் தீர்ந்தன என்பதும் நினைவிலிருத்த வேண்டிய செய்தியாகும்.
  • ஜாலிப் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்று அவற்றைப் பற்றி எழுதியதால், அவர் அறியாமலேயே பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றை தனது கவிதைகளில் பதிவு செய்துள்ளது தெரிய வருகிறது. எடுத்துக்காட்டுகளாக, அயூப் கான் ஒரு புதிய அரசியலமைப்பைப் 'பிரகடனப்படுத்தியபோது', ஜாலிப் தனது கையொப்பக் கவிதையான 'தஸ்தூர்'யை (அரசியலமைப்பு) ஒரு கூட்டத்தில் வாசித்தார். கூட்டம் அவருடன் 'மெய்ன் நஹி மந்தா, மெய்ன் நஹி மந்தா' என்று பாடியது. அந்தக் கவிதைக்காகவே அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • அதற்கு முன்பும் , ஹைதர் பக்ஷ் ஹைதரியின் 'ஹரி இயக்கத்தில்' பங்கேற்றதற்காக 1959 இல் சிறைவாசங்கண்டவர் கவிஞர் ஜாலிப். ‘தேசத்தின் தாய்’ என்று அன்புடன் அழைக்கப்படும் பாத்திமா ஜின்னா, சர்வ வல்லமை படைத்த அயூப் கானை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டபோது, ஜாலிப் அவருக்காக 'மான்' (தாய்) என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார். அயூபின் ஆலோசகர்களுக்கு எதிரான ஒரு கிண்டல் கவிதை எழுதினார்.
  • ஒரு திரைப்பட நடிகையை அதிபர் மாளிகைக்கு விருந்தினராக வருகை தந்த ஒரு நாட்டின் தலைவர் முன் நடனமாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டபோது, நடிகை மறுத்துவிட்டார். அரசுத் தரப்பில் அச்சுறுத்தி வற்புறுத்தியதால் அவர் தற்கொலைக்கு முயன்றார். ஜாலிப் அதை ஒரு கவிதையில் பதிவு செய்துள்ளார். இது பின்னர் ஒரு திரைப்படத்தில் ஒரு பாடலாகச் சேர்க்கப்பட்டது: (து கே நவாகிஃப்- இ -அதாப் - இ -குலாமி ஹை அபி/ரக்ஸ் ஸஞ்சீர் பெஹ்ன் கர் பீ கியா ஜாதா ஹை.)
  • ’அடிமைத்தனத்தின் பழக்க வழக்கங்களை
  • நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள்
  • சங்கிலியால் பிணைக்கப்பட்டுக் கொண்டேகூ
  • ஒருவர் உண்மையில் நடனமாடலாம்’
  • விருப்பமிலாத கலைஞர் ஒருவரை வற்புறுத்தியது குறித்த கவிதைக் கசையடி, ஜாலிப்பின் பேனாவிலிருந்து.
  • யஹ்யாகான் சகாப்தத்தில், கிழக்கு பாகிஸ்தானில் இராணுவ நடவடிக்கைக்கு எதிராகக் கவிதை எழுதியதற்காகவும் - கவிதைக் குற்றத்திற்காகவே - ஜாலிப் சிறையில் அடைக்கப்பட்டார். மீண்டும், ஹைதராபாத் சதி வழக்கின்போது, அவர் 14 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டார்.
  • ஜாலிப் ஒரு முற்போக்குவாதி. பூட்டோவின் சித்தாந்தத்தை ஆதரித்தாலும், அவர் வேறு கட்சியான தேசிய அவாமி கட்சியில் சேர்ந்தார். மேலும் நட்பு, உறவுகள் இருந்தபோதிலும் அவர் பூட்டோவுடன் வேறுபாடுகளுடன்தான் தொடர்பிலிருந்தார். ‘தமர்’ எனச் சாய்வதில்லை; எப்போதும் நேர், துலாக்கோல் போல. அவரது புகழ்பெற்ற கவிதையான 'லார்கேன் சலோ வர்னா தானே சலோ' அந்தப் பிளவை நினைவூட்டுகிறது. (ஆனால், அதற்கு மேலும் இருக்கிறது).
  • ஜியா சகாப்தத்தின் போது, ஜாலிப் மூன்று முறை கைது செய்யப்பட்டார். பரேல்வியின் கூற்றுப்படி, இராணுவ ஆட்சியாளர் தனது புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்றிலிருந்து ஒரு வரியை நீக்க வேண்டும் என்று கோரினார்.
  • அந்த வரி: ஜுல்மத் கோ ஜியா, சர்சார் கோ சபா, பந்தே கோ குதா க்யா லிக்னா?
  • 'அடிமைகளுக்கும், ஒடுக்குபவர்களுக்கும்,
  • தலைவருக்கும்
  • கடவுள் என்ன எழுதுகிறார்?' என்ற ஜியாவுக்கான கேள்வி. (நீக்க வேண்டும் என்று ஜியா கோரிய கவிதை வரி!)
  • ஜாலிப்பின் கவிதைகள் சமூக நீதிக்கான அவரது அர்ப்பணிப்பை, அடக்குமுறை மற்றும் அநீதிக்கு எதிரான அவரது எதிர்ப்பை எப்போதும் தப்பாமல் பிரதிபலிப்பவையாகவே நின்றன. மக்கள் கவிஞர் எனப் போற்றப்பட்ட கவிஞர் ஜாலிப்பின் கவிதைகள், மக்களை வாட்டும் வறுமை, ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் சுரண்டல் போன்ற அன்றாடப் பிரச்னைகளை அகலாது எளிய பொதுமொழியில் பேசுவனவாகவும், கொடுங்கோன்மைக்கும் அரசு ஒடுக்குமுறைக்கும் எதிராகக் கடுமையான தாக்குதல்களை நிகழ்த்துவனவாகவும் விளங்கின.
  • உருது மொழியின் மற்ற கவிஞர்கள் மற்றும் அவரது சமகாலத்தவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட சாதாரண மக்களின் கவிஞர் என்று அவரை மக்கள் கொண்டாடிவருவது பொருத்தமானதே. ஜாலிப் எளிய எழுத்து நடையைத்தான் பயன்படுத்தினார். இதன் விளைவாக, உறுதியுடனும் ஆர்வத்துடனும் எதிரொலித்த அவரது கவிதா வெளிப்பாட்டிற்கு நெருக்க உறவான அவரது ரசிகர்கள், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
  • "ஹமாரா நிஜாம்- இ -ஹயாத்" (எங்கள் வாழ்க்கை முறை) என்ற தனது கவிதையில், ஜாலிப் தன்னைச் சுற்றி காணும் அநீதி மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராகச் சாதாரண மொழியில் பேசுவார்.
  • "சிலர் பணக்காரர்களாக இருக்கிறார்கள்,
  • பலர் ஏழைகளாக இருக்கிறார்கள்;
  • சிலர் உணவளிக்கப்படுகிறார்கள்,
  • பலர் பசியுடன் இருக்கிறார்கள்;
  • சிலர் வாழ்கிறார்கள்,
  • பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள்."
  • பாகிஸ்தான் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக எழுந்து நிற்கவும், தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் சிறந்த எதிர்காலத்தைக் கோரவும் அழைப்பு விடுக்கும் கவிஞர், "மேரி ஆவாஸ் சுனோ" (என் குரலைக் கேளுங்கள்) எனும் கவிதையில் வறுமை மற்றும் சுரண்டலுக்கு எதிராகத் தன்குரலுயர்த்தி
  • "நான் ஏழைகளின் குரல்,
  • பசித்தவர்களின் குரல்,
  • நான் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்,
  • ஒடுக்கப்பட்டவர்களின் குரல்."
  • என்று முழங்கி, மக்களைத் தன்பக்கம் ஈர்த்து அநீதி, அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்குமாறு பாகிஸ்தான் மக்களுக்கு அவரது அழைப்புகளாகக் கவிதைகள் வடித்தார். ஜாலிப்பின் கவிதைகள், சமூக நீதி மற்றும் மாற்றத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட மக்களை ஊக்குவித்து அணிதிரட்டும் பரணிப்பாடல்கள் என மதிப்பீடு பெற்றுள்ளன. அவரது வார்த்தைகள் ஓரங்கட்டப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்கள், ஆதங்கங்கள், அபிலாஷைகளைப் பற்றியே சுற்றும். அவரது படைப்புகள் பாகிஸ்தானிலும் உலகெங்கிலும் பரவலாக விருப்பமுடன் வாசிக்கப்பட்டுப் போற்றப்படுகின்றன.

சிறைவாசம்:

  • சர்வாதிகார எதிர்ப்பைக் கருப்பொருளாகக் கொண்ட ஜாலிப்பின் மிகவும் பிரபலமான கவிதைகளில் ஒன்று "தஸ்தூர்" (அரசியலமைப்பு). 1960-களில் எழுதப்பட்ட இந்தக் கவிதை, 1958 முதல் தொடரும் அயூப்கானின் இராணுவ சர்வாதிகாரத்தைக் கடுமையாக விமர்சிப்பதாகவும், பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான அழைப்பாகவும் வெளியானது. அயூப்கானின் ஆட்சி, ஜனநாயகத்தை அழித்து. கருத்துத் தணிக்கையை கடுமையாக்கி நடந்து கொண்டிருந்தது. ரைட்டர்ஸ் கில்ட் அதிகாரத்தோடுதான் ஒட்டி நின்றது. வானொலி, செய்தித்தாள் என எல்லாமே ஆட்சியின் அதிகாரத்தின் ஒரே மொழியைத்தான் பேசின.
  • இத்தகைய சூழ்நிலையில், ராவல்பிண்டி வானொலியில் இருந்து ‘முஷைரவாஸ்’ நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பெரும்பாலான கவிஞர்கள் – ஷயர்கள்- இஷ்க் - ஆஷிகி-மெஹ்பூபா பற்றிய கஸல்களைப் படித்து, பாகிஸ்தானைப் புகழ்ந்து கவிதைப் பாலம் கட்டிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞன், அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை முற்றிலுமாக நிராகரித்து, பயங்கரம், பயங்கரம், ‘நான் ஏற்க மறுக்கிறேன், நான் ஏற்க மறுக்கிறேன்’ என்ற கவிதை படிக்கத் தொடங்கினான். அந்த இளைஞன்தான் ஜாலிப். இந்தக் கவிதை, கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் ஒடுக்குமுறை ஆட்சிகளில் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை எடுத்துரைக்கிறது.
  • ஒரு மனிதன் முழு நாட்டையும் கட்டுப்படுத்தும்போது, இருளை வெளிச்சமாகவும், பாறைகளைக் குகைகளாகவும், சுவர்களைக் கதவுகளாகவும் மாற்றுவது பற்றி என்ன எழுத முடியும் என்று கேள்வி எழுப்புகிறது. ஒடுக்குமுறையாளர்கள் தற்காலிகமானவர்களே என்றும், எழுத்தாளர்களின் நியாயமான வார்த்தைகள் என்றும் நிலைத்திருக்கும் என்றும் முழங்கினார். இந்தக் கவிதை உச்சரிப்பைச் சகித்துக்கொள்ளாத ஜெனரலின் சினம். ஜாலிப்பை சிறையில் தள்ளியது.
  • சர்வாதிகார எதிர்ப்பைக் கருப்பொருளாகப் பொதித்து வந்த மற்றொரு கவிதையும் - "முஜே க்யூன் நிகலா" (நான் ஏன் வெளியேற்றப்பட்டேன்?). – கவிஞருக்குச் சிறைவாசப் பரிசை உடனே பெற்றுத்தந்தது. 1970-களில் எழுதப்பட்ட இந்தக் கவிதையில், ஜியா- உல் -ஹக்கின் இராணுவ சர்வாதிகாரத்தை விமர்சித்து, பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார். மக்களொடு நின்றால் ஆட்சியாளர்களுக்கு, அதிலும் சர்வாதிகாரிகளுக்குப் பிடிக்காதே. அதனால், கவிஞரைப் பிடித்தார்கள், சிறைக்குள் தள்ள.
  • தனது வாழ்நாள் முழுவதும், ஜாலிப் தனது அரசியல் நம்பிக்கைகள், செயல்பாடுகளில், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கான தனது உறுதிப்பாட்டில், தனது கருத்துக்களுக்காகத் துன்புறுத்தல்களை, சிறைவாசங்களை எதிர்கொண்ட போதிலும் தளரா உறுதியுடன் நின்றார்.

ஹபீப் ஜாலிப் மரபு

  • தனது வாழ்நாள் முழுவதும், பாகிஸ்தானை- அதன் வரலாற்றின் பெரும்பகுதியை - ஆட்சி செய்த இராணுவ சர்வாதிகாரங்களை ஹபீப் ஜாலிப் தீவிரமாக எதிர்த்தார். அவர்களின் கொள்கைகளை விமர்சிக்கவும், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுக்க அழைப்பு விடுக்கவும் தனது கவிதைகளைப் பயன்படுத்தினார். நடைபெற்று வந்த ஆட்சிகள் ஜனநாயகமற்றவை மற்றும் அடக்குமுறைகளின் அடையாளங்கள் என்று அவர் அறிவிப்புச் செய்தார். சமூக நீதிக்கான அர்ப்பணிப்பையும் அடக்குமுறை, அநீதிகளுக்கு எதிரான அவரது எதிர்ப்பையும் அவரது கவிதைகள் பிரதிபலித்தன. வறுமை, ஊழல் மற்றும் சுரண்டல் போன்ற மக்கள் வாழ்க்கைச் சிக்கல்களைக் கவிதைகளின் கருப்பொருளாக வைத்ததுடன், கல்வியை, மக்கள் கல்வியறிவு பெறுவதை வலுவாக ஆதரித்தார்.
  • மக்களின் சாம்பியனாக, ஓரங்கட்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரலாகவும் மறவாது நினைவு கூரப்படுகிறார். ஒரு கவிஞராக ஜாலிப்பின் மரபு பாகிஸ்தானிலும் உலகெங்கிலும் உள்ள பல தலைமுறை வாசகர்கள், ஆர்வலர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது; அவர்களது மனங்களில் செல்வாக்கு செலுத்துகிறது; மாற்றத்தையும் சமூக நீதியையும் கொண்டு வருவதற்கான எழுத்து. வார்த்தையின் சக்தியை மக்களுக்கு நினைவூட்டுவதாக அவரது கவிதைகள் இன்றளவும் செயல்படுகின்றன.
  • அவரது படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் பரவலாக ஆய்வு செய்யப்பட்டு கற்பிக்கப்படுகின்றன. உலகெங்கிலும் சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காக போராடும் மக்களால் அவரது கவிதைகள் தழுவப்படுவதால், ஜாலிப்பின் செல்வாக்கு பாகிஸ்தானுக்கு அப்பாலும் பரந்துள்ளது. சமுதாய அவலங்களை மாற்றி நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர மக்கள் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என்பது அவரது செய்தி.
  • சமூக நீதி மற்றும் மாற்றத்திற்காக நடவடிக்கை எடுக்க மக்களை ஊக்குவிப்பதற்கும் அணிதிரட்டுவதற்கும் கவிதையின் நீடித்த சக்தியை ஜாலிப்பின் மரபு நிரூபிக்கிறது என்று அவரது கவிதைகளை ஆய்வு செய்துவருபவர்கள் விளக்கியுள்ளார்கள். ஜாலிப் பாகிஸ்தானின் மக்கள் கவிஞர்; புரட்சிக்கவிஞர்; ஆட்சியாளர்கள் பலரால், அவரது கவிதைகளுக்காகவே பலமுறை சிறைப்படுத்தப்பட்ட ஒரே கவிஞர்.

நன்றி: தினமணி (29 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories