- சொத்துக்குவிப்பு வழக்கில், தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த க.பொன்முடிக்கும் அவருடைய மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இத்தீர்ப்பு ஓர் எச்சரிக்கை மணியாய் அமைந்திருப்பதாகவே சொல்ல வேண்டும். 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில், உயர்கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பொன்முடியையும் அவருடைய மனைவி விசாலாட்சியையும் 2016இல் விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து 2017இல் லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
- அந்த வழக்கில்தான் பொன்முடிக்கும் அவருடைய மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் ரூ.50 லட்சம் அபராதத்தையும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விதித்திருக்கிறார். ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 13(1)(இ)-ன்கீழ் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி (64.90%) சொத்துக் குவித்த குற்றச்சாட்டை அரசுத் தரப்பு நிரூபித்துள்ளதாக நீதிபதி உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார். தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய 30 நாட்கள் அவகாசத்தையும் நீதிபதி வழங்கியிருக்கிறார். இதனால், உடனடியாக இருவரும் சிறைக்குச் செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று பொன்முடித் தரப்பு வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.
- அதே நேரத்தில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 8(1)-ன்படி, ஊழல் தடுப்புச் சட்டங்களின் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி, தகுதி இழப்புக்கு ஆளாவார். அதன்படி திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியையும், அமைச்சர் பதவியையும் பொன்முடி இழந்திருக்கிறார். திமுக அரசில் பங்கேற்ற ஓர் அமைச்சர், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி பதவி இழப்புக்கு உள்ளாகியிருப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்னதாக, 2014இல் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, 2019இல் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி (வன்முறைச் சம்பவம் தொடர்பான வழக்கு) ஆகியோர் பதவி இழந்திருக்கிறார்கள்.
- பொதுவாக, அதிகாரத்தில் இருப்பவர்கள், குறிப்பாக ஆளும்கட்சிப் பிரமுகர்களுக்கு எதிரான வழக்குகளில், இத்தகைய தீர்ப்பு வழங்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் நீதியின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாகவும் அமையும். அரசியல் வழியாகக் கிடைக்கும் அதிகாரம் மக்கள் பணியாற்றுவதற்குத்தானே தவிர, முறைகேடான வழிகளில் வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்வதற்கல்ல என்பதை அரசியலில் உள்ள அனைவரும் உணர இதுபோன்ற தீர்ப்புகள் அவசியம்.
- தமிழ்நாட்டில் ஆட்சி செய்துவரும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பின்னடைவு. இதை வைத்து வழக்கமான அரசியல் பழிசுமத்தல்களில் ஈடுபடாமல், ஊழல் கறைபடியாதவர்களுக்கு மட்டுமே கட்சியிலும் ஆட்சியிலும் இடம் அளிக்கப்படுவதை அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிசெய்ய வேண்டும். அதுவே அரசியலைத் தூய்மைப்படுத்த உதவும்.
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 12 – 2023)