TNPSC Thervupettagam

அதிபரின் மரண மர்மம் | யாசர் அராஃபத்

September 12 , 2024 125 days 127 0

அதிபரின் மரண மர்மம் | யாசர் அராஃபத்

  • விடுதலைப் போராட்ட வரலாற்றில் உலக அரங்கில் மிகவும் கவனிக்கப்பட்ட தலைவர்களில் மிக முக்கியமானவராக இருந்தவர் யாசர் அராஃபத். இவரது திருமண வாழ்க்கையும் பரபரப்பாகப் பேசப்பட்டது; விமர்சனத்திற்கு உள்ளானது. அதைப் போலவே இவரது மரணமும் பலத்த சந்தேகத்தையும் மர்மத்தையும் உள்ளடக்கியதால், இவரது கல்லறை மீண்டும் திறக்கப்பட்டது. இந்தப் பகுதியில் பார்த்த மற்ற பிரபலங்களுக்கும் அராபத்துக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. மற்ற பிரபலங்களின் உடல்கள், அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடங்களில் புதைக்கப்பட்டன. ஆனால், யாசர் அராஃபத்தின் உடல் அதே கல்லறையில் புதைக்கப்பட்டது.

திருமண சர்ச்சை:

  • அராஃபத் எகிப்தின் கெய்ரோவில் பாலஸ்தீனப் பெற்றோருக்குப் பிறந்தார். 1944இல் கிங் ஃபுவாட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே 1948இல் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரின்போது கல்லூரியில் இருந்து வெளியேறி அரபுப் படைகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட்டார். 1950இல் கட்டிடப் பொறியாளர் பட்டம் பெற்றார். தீவிரமான பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் இருந்த யாசர் அராஃபத் 1990இல் தனது 61 வயதில் சுஹா தாவில் என்கிற 27 வயது பாலஸ்தீனக் கிறித்தவப் பெண்ணை மணந்தார். அராஃபத்தின் உதவியாளராகப் பணிபுரிந்தவர் இவர்.
  • இந்தத் திருமணம் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இவர்களுக்கு 1995ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்குப் பிறகு பலமுறை அராஃபத்திடமிருந்து விலக நினைத்தார் அவருடைய மனைவி சுஹா தாவில்.

கொலை முயற்சிகள்:

  • பாலஸ்தீன விடுதலைப் போரில் மிக முக்கியத் தலைவராக விளங்கிய அராஃபத்தைக் கொல்லப் பலமுறை முயற்சிகள் நடந்தன. இஸ்ரேலுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அராஃபத். 1980களில் லிபியா, ஈராக், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து பண உதவியைப் பெற்றார். அதைக்கொண்டு பலஸ்தீன விடுதலை இயக்கத்தைப் பலப்படுத்தினார்.
  • 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி இவர் பயணம் செய்த விமானம் தரையிரங்கும்போது விபத்திற்குள்ளானது. அதிலிருந்த விமான ஓட்டிகள் இருவரும் கொல்லப்பட்டனர். அந்த விபத்தில் அராஃபத் உயிர் தப்பினார்.
  • 2004 அக்டோபரில் யாசர் அராஃபத்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஆரம்பத்தில் குமட்டல், வாந்தி என்று தொடங்கிய பாதிப்பு, நாளடைவில் அதிகரித்தது. இதையடுத்து துனீசியா, எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் வந்து அவர் உடல்நிலையைச் சோதித்தார்கள்.
  • உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய கட்டாயம் இருந்ததாக மருத்துவர்கள் கருதினார்கள். இஸ்ரேல், பாலஸ்தீன மருத்துவமனைகள் வேண்டாம் என்பதில் ஒருமித்த கருத்து நிலவியது. இதற்கு, அப்போதைய பதற்றமான சூழல், பாதுகாப்புச் சிக்கல் என்பவைதான் முக்கியக் காரணங்களாகக் கருதப்பட்டன. இஸ்ரேல் தொடர்ந்து பாலஸ்தீனம் மீது பல முனைகளில் தாக்குதல் நடத்தி வந்த நேரம் அது.

கடைசிப் பயணம்:

  • அராஃபத்தை பாரிஸில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்தார்கள். இதற்காகச் சிறப்பு விமானமும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அவர் இருந்த இடத்தில் அந்த விமானம் வந்து இறங்குவதற்குத் தகுந்த ஓடுபாதை இல்லாத காரணத்தால், விமானம் ஜோர்டான் தலைநகர் அமான் விமான நிலையத்துக்கு வந்தது. அவரை அமான் வரை கொண்டுசெல்ல, ஜோர்டான் அரசு தனது ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை அனுப்பி வைத்தது.
  • அதில் தனது மனைவி சுஹாவுடன் ஏறிய அராஃபத், வெளியில் காத்திருந்த மக்களைப் பார்த்துச் சிரித்தபடியே கையசைத்துப் புறப்பட்டார். 2004ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி நிகழ்ந்த இந்தப் பயணம்தான் அவரது இறுதிப் பயணமாக இருக்கப்போகிறது என அப்போது யாருக்கும் தெரியாது.
  • ஜோர்டானில் காத்திருந்த பிரத்தியேக விமானத்துக்குள் அராஃபத்தும் அவரை அழைத்துச் செல்ல வந்த பிரான்ஸ் மருத்துவக் குழுவினரும் பயணம் செய்தார்கள். தனக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என்றோ உயிர் பிரியப்போகிறது என்றோ எந்தச் சந்தேகமும் இல்லாமல், சிரித்த முகத்துடன் அராஃபத் பயணம் செய்தார். அவர் சிகிச்சையை முடித்துக்கொண்டு திரும்புவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.

மருத்துவமனையில் அனுமதி:

  • கடும் போராட்டத்திற்குப் பிறகு பிரான்ஸ் வந்து சேர்ந்த அராஃபத், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அது பாரிஸின் புறநகர்ப் பகுதி ஒன்றில் அமைந்திருந்தது. மருத்துவமனையில் சேர்த்த சில நாள்களிலேயே அவரது சிறுநீரகங்கள் பழுதடைந்தன.
  • நவம்பர் 3ஆம் தேதி அவர் சுய நினைவை இழந்து மெல்ல மெல்ல கோமா கட்டத்தை அடைந்தார். இதன் காரணமாக பிரான்ஸ் சென்றிருந்த பாலஸ்தீன அதிகாரிகளுக்கும் யாசர் அராஃபத்தின் மனைவி சுஹாவுக்குமிடையே கருத்து வேற்றுமைகள் வளர்ந்தன.

முரண்பட்ட தகவல்கள்:

  • “அபு அமரை (யாசர் அராஃபத்) உயிரோடு புதைக்கப் பார்க்கிறார்கள்’’ என்று அறிவித்தார் மனைவி சுஹா. பிரான்ஸ் நாட்டுச் சட்டப்படி நோயாளி குறித்த நிலைமையை மருத்துவர்கள் பிறரிடம் விவாதிக்கக் கூடாது. அப்படியே தெரிவித்தாலும் நோயாளியின் நெருங்கிய உறவினரிடம் மட்டும் தெரிவிக்கலாம், விவாதிக்கலாம்.
  • எனவே, அராஃபத் உடல்நிலை குறித்த விவரங்களை அவர் மனைவியிடம் மட்டுமே தெரிவித்துக் கொண்டிருந்தனர் மருத்துவர்கள். இதில் பாலஸ்தீன அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். அராஃபத்தின் மனைவி சுஹா தகவல்களை வடிகட்டித்தான் தங்களுக்கு அளிக்கிறார் என்று பாலஸ்தீன அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
  • கோமா நிலைக்குப் போன அராஃபத், நினைவு திரும்பாமலேயே 2004 நவம்பர் 11 அன்று இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது மரணத்துக்குக் கடும் மாரடைப்புதான் காரணம் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால், அந்தக் காரணத்தை பாலஸ்தீன மக்களும் அதிகாரிகளும் ஏற்க மறுத்தனர். இதன் காரணமாக அராஃபத் மரணம் தொடர்பான மர்மம் தொடர்ந்தது.அராஃபத்தின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியில் பாலஸ்தீனியக் கொடி போர்த்தப்பட்டு ஃபிரெஞ்சில் இறுதி வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ராணுவ இசைக்குழுவினர் ஃபிரெஞ்சு மற்றும் பாலஸ்தீனத் தேசியக் கீதங்களை வாசித்தனர்.

தற்காலிகக் கல்லறை:

  • அடுத்த நாள், அராஃபத்தின் உடல் மாநிலங்களில் உள்ள முக்கிய அமைச்சர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. பின் பிரான்ஸ் விமானப்படை விமானம் மூலம் பாரிஸில் இருந்து ஜெருசலேமுக்குப் பறந்தது. 2004ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி, அராஃபத்தின் உடல் இறுதிச் சடங்குக்காக ரமல்லா கொண்டுவரப்பட்டு லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் அணிதிரள இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. ரமலாவில் அராஃபத்தைத் தற்காலிகக் கல்லறை ஒன்றில் புதைத்தனர். முன்பாக, அராஃபத்தின் உடலை இஸ்ரேல் அரசு ஜெருசலேமில் புதைக்கக் கூடாது எனக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது.

வலுத்த சந்தேகங்கள்:

  • ஆரோக்கியமாக இருந்த அராஃபத் திடீரென உடல்நலம் குன்றியது எப்படி என்று பலரும் சந்தேகம் எழுப்பினர். அராஃபத்துக்கு விஷம் வைக்கப்பட்டது என பாலஸ்தீனியர்களில் பெரும்பாலானோர் நம்புகின்றனர்.
  • அராஃபத்தை இஸ்ரேல் நாட்டின் உளவாளிகள் விஷம் வைத்துக் கொன்றுவிட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர். இந்தக் குற்றச்சாட்டு உலக அரங்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதிகாரிகளோடு சேர்ந்து யாசர் அராஃபத்தின் மனைவி சுஹா அராபாத், மகள் ஸாவ்ரா ஆகியோரும் அதே குற்றச்சாட்டைத் தொடர்ந்து கூறி வந்தனர்.

சர்வதேச விசாரணை:

  • அராஃபத் மரணத்தில் உள்ள மர்மத்தைத் தெளிவாக்க, சர்வதேசக் குழுவினர் விசாரணை நடத்த வேண்டும் எனவும் சுஹா வலியுறுத்தினார். அராஃபத்தின் மனைவியின் இந்தக் கோரிக்கைக்கு உலகம் முழுவதும் ஆதரவு அதிகரித்தது. இறந்துபோன அராஃபத் அணிந்திருந்த ஆடைகளைச் சோதனை செய்தபோது, அதில் ஆபத்தான கதிர்வீச்சுப் பொருளின் துணுக்குகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
  • அதையடுத்து, கதிர்வீச்சுப் பொருள் ஒன்றின் மூலம் உடல்நலம் குன்ற வைக்கப்பட்டு அராஃபத் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணைகள் தொடங்கப்பட்டன. இந்த விசாரணைக்காக, புதைக்கப்பட்ட அராஃபத்தின் சடலத்தை வெளியே எடுத்து அவரது எலும்புகளைச் சோதனையிட அனுமதி கோரப்பட்டது.
  • இதன் அடிப்படையில் பிரான்ஸ், ரஷ்யா, பாலஸ்தீன நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் குழு அராஃபத்தின் உடலை மீண்டும் தோண்டி எடுத்துப் பரிசோதனை செய்ய ஆலோசனை செய்துவந்தனர்.

திறக்கப்பட்ட கல்லறை:

  • இந்தக் கோரிக்கையின் பலனாக அராஃபத் மரண மர்மத்தைக் கண்டறிவதற்காக, அவரின் கல்லறையைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
  • இதனையடுத்து அராஃபத் சமாதி இடிக்கப்பட்டு அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. விஷம் கொடுக்கப்பட்டதால் அவர் மரணமடைந்தார் என்கிற குட்டச்சாட்டு உண்மையா என ஆராய்வதே இதன் நோக்கம்.

கதிர்வீச்சு பாதிப்பு?

  • 2007, நவம்பர் 10ஆம்தேதி அராஃபத்தின் கல்லறை திறக்கப்பட்டது. பாலஸ்தீன அரசின் தடயவியல் நிபுணர் ஒருவர் மட்டுமே அராஃபத்தின் சடலத்தைத் தொட்டுப் பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்க அனுமதிக்கப்பட்டார். 60 மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவரது எலும்புகளில் சோதனை செய்யப்பட்டபின், மீண்டும் அதே இடத்தில் ராணுவ மரியாதையுடன் அவரது உடல் புதைக்கப்பட்டது.
  • இந்த இரண்டாவது அடக்கத்தின்போது, பொதுமக்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. திறக்கப்பட்ட கல்லறையில் இருந்து எடுக்கப்பட்ட யாசர் அராஃபத்தின் எஞ்சிய பகுதிகளைச் சோதித்த சுவிட்சர்லாந்து மருத்துவர்கள், அவர் உடலில் அதிக அளவில் போலோனியக் கதிர்வீச்சுக் காணப்பட்டதாகத் தெரிவித்தனர். போலோனியம் என்பது மிக அதிக அளவில் கதிரியக்கத்தைக் கொண்ட ஒரு நஞ்சு.
  • இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இஸ்ரேலின் சதியால்தான் யாசர் அராஃபத் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் என்கிற குரல்கள் மீண்டும் எழும்பத் தொடங்கின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. இன்று வரை யாசர் அராஃபத்தின் மரணம், சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories