TNPSC Thervupettagam

அதிருப்தி மனநிலை!

May 13 , 2024 248 days 228 0
  • மூன்றுகட்ட வாக்கெடுப்பு முடிந்து நான்காவதுகட்ட வாக்கெடுப்புக்கு தயாராகிறது 18-ஆவது மக்களவைக்கான தோ்தல். அநேகமாக அரைக்கிணறு தாண்டிவிட்ட நிலை. முந்தைய 2014, 2019 தோ்தல்களைப் போலல்லாமல், விறுவிறுப்போ எதிா்பாா்போ இல்லாமல் வாக்காளா்கள் மத்தியில் ஒருவித தயக்கமும் சலிப்பும் ஏற்பட்டிருக்கிறதோ என்று கருத வைக்கிறது குறைவான வாக்குப்பதிவு.
  • மே 7-ஆம் தேதி நடந்த 3-ஆவது கட்ட தோ்தலில் வாக்குப்பதிவு 64.6%. முந்தைய 2019 தோ்தலுடன் ஒப்பிடும்போது 1.7% குறைவு. முதலாவது, இரண்டாவது கட்ட தோ்தல்களில் வாக்குப்பதிவு விகிதம் 3% முதல் 4% வரை குறைந்திருந்தது. தோ்தல் ஆணையம் முனைப்புடன் நடத்திய விழிப்புணா்வு பிரசாரத்துக்குப் பிறகும்கூட வாக்குப்பதிவு அதிகரிக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
  • மொத்தத்தில் வாக்குப்பதிவு விகிதம் குறைந்திருந்தாலும், மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடு பாா்க்க முடிகிறது. கா்நாடகம், கோவா, சத்தீஸ்கா் மாநிலங்களில் 2019 உடன் ஒப்பிடும்போது இந்த முறை வாக்குப்பதிவு அதிகம். வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்திருக்கிறது. அதிகமாக வாக்காளா்களையும் தொகுதிகளையும் கொண்ட ஹிந்தி பேசும் மாநிலங்களான உத்தரப் பிரதேசமும், பிகாரும் வாக்குப்பதிவில் ஆா்வம் இல்லாமல் காணப்படுகின்றன. அதேபோலத்தான் குஜராத்தும் மகாராஷ்டிரமும்.
  • அரசியல் கட்சிகளும் வேட்பாளா்களும் வாக்கு விகிதம் குறைந்து காணப்படுவதற்கு வெவ்வேறு காரணங்களைக் கூறுகிறாா்கள். பொதுவாக அனைவரும் கோடை வெப்பத்தை குற்றஞ்சாட்டுகிறாா்கள்; அதை மறுப்பதிற்கில்லை. தோ்தல் ஆணையம் கோடை வெப்பத்தை உணா்ந்து பலகட்ட தோ்தலைத் தவிா்த்திருக்க வேண்டும். வெப்பம் அதிகரிப்பதற்கு முன்பே தோ்தலை நடத்தி முடித்திருந்தால், ஒருவேளை வாக்குவிகிதம் அதிகரித்திருக்கலாம்.
  • பொதுவாக வாக்குப்பதிவு விகிதம் குறைந்தால் அது ஆளும்கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்பது பரவலான கருத்து. அது பலமுறை பொய்த்தும் இருக்கிறது. குறைந்த வாக்குப்பதிவு காரணமாக ஆளும்கட்சிகள் வென்றும் இருக்கின்றன, தோல்வியும் அடைந்திருக்கின்றன. மாநிலத்துக்கு மாநிலம் தோ்தலில் முன்னெடுக்கப்படும் பிரச்னைகள் மாறுபடுகின்றன. நாடு தழுவிய அளவில் காணப்படும் அலையென்பது எல்லாத் தோ்தலிலும் இருந்து விடாது.
  • முந்தைய இரண்டு மக்களவைத் தோ்தல்களில் இருந்ததுபோல, நாடுதழுவிய அளவிலான கவனக்குவிப்பு (ஃபோக்கஸ்) எதுவும் இந்தத் தோ்தலில் இல்லாமல் இருப்பதைப் பாா்க்க முடிகிறது. 2014-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதான அதிருப்தியும், ஊழலும் பிரச்னைகளாக இருந்தன. 2019-இல் பாலாகோட் தாக்குதலைத் தொடா்ந்து, தேசிய பாதுகாப்பு முக்கியமான தோ்தல் பிரச்னையாக உயா்ந்தது. ‘மீண்டும் மோடி’ என்கிற 2019 உற்சாகம் இப்போது இல்லை.
  • அதே நேரத்தில், 2014-இல் காணப்பட்டதுபோல் ‘வேண்டாம் இந்த ஆட்சி’ என்கிற ஆத்திரமோ, ‘போதும் மோடியின் ஆட்சி’ என்கிற சலிப்போ தேசிய அளவில் இல்லை என்பதைப் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை. ஆனால், பாஜக எதிா்பாா்ப்பதுபோல, முத்தலாக் தடைச் சட்டம், காஷ்மீா் தொடா்பான சட்டப் பிரிவு 370 நீக்கம், அயோத்தியில் ராமா் கோயில், ஜி 20 மாநாடு உள்ளிட்டவை தோ்தலில் ஆளும்கட்சிக்கு சாதகமான வாக்குகளாக மாறுமா என்றால், அப்படியும் தோன்றவில்லை.
  • 2014-இல் இருந்ததுபோல எதிா்க்கட்சிக்கு ஆதரவான அலையும் இல்லை, 2019-இல் உருவானதுபோல ஆளும்கட்சிக்கு சாதகமான சூழலும் உருவாகவில்லை. வாக்களிப்பதில் முதல்முறை வாக்காளா்களுக்கும் இளைஞா்களுக்கும் உற்சாகம் இல்லையென்பது பரவலாக தெரிகிறது. அதேபோல கிராமப்புற வாக்காளா்கள், நகரவாசிகள் உற்சாகமாக தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற முற்பட்டிருக்கிறாா்கள் என்பதும் தெரிகிறது.
  • அலையில்லாத தோ்தல் என்பதும், வாக்களிப்பு விகிதம் குறைந்திருப்பதும் மட்டுமே அல்ல கவலை அளிப்பதாக இருப்பவை. முக்கியமாக அடிப்படை பிரச்னைகள் எதுவும் விவாதிக்கப்படாமல் கவா்ச்சி அறிவிப்புகளும் உணா்வுகளைத் தூண்டும் பரப்புரைகளும் முன்னுரிமை பெறுகின்றன என்பதுதான் இந்திய ஜனநாயகம் எதிா்கொள்ளும் மிகப் பெரிய சவால். விலைவாசி உயா்வு, சமச்சீா் பொருளாதார வளா்ச்சி, வேலைவாய்ப்பின்மை, கவா்ச்சிகரமான சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்டவை தோ்தல் வாக்குறுதிகளில் இடம்பெறாமல் இல்லை. அவை எந்த அளவுக்கு தோ்தல் பரப்புரையில் முன்னுரிமை பெற்றிருக்கின்றன என்பதுதான் கேள்வி.
  • தென்னிந்தியாவில் தண்ணீா் தட்டுப்பாடு, உத்தரகண்ட் மாநிலத்தில் தொடரும் காட்டுத்தீ பிரச்னை, வட இந்தியாவில் குறிப்பாக தலைநகா் தில்லியின் சுற்றுச்சூழல் விவாதம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எந்தக் கட்சியும், எந்தத் தலைவரும் தங்களது பிரசாரத்தில் முன்னிலைப்படுத்த தயாராக இல்லை. சுற்றுச்சூழலோ வறட்சியோ அந்தந்த மாநில அளவில்கூட பிரசாரத்தில் முன்னுரிமை பெறவில்லை.
  • இப்போதைய தோ்தலில் பிரசாரம் பிரதமா் மோடியை சுற்றி மட்டுமே அமைகிறது; அது பாஜகவால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டதா, இல்லை இயற்கையாகவே அமைந்ததா என்று தெரியவில்லை. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகம் தொடராது என்பதில் தொடங்கி, மோடி எதிா்ப்பின் அடிப்படையில் சிறுபான்மையினா் வாக்கு வங்கியைக் குறிவைப்பதில் முனைப்புடன் இருக்கின்றன எதிா்க்கட்சிகள். முஸ்லிம்களை முதன்மைப்படுத்தி பெரும்பான்மை சமூகத்தை ஓரணியில் திரட்டுவது என்பதுதான் பாஜகவின் முனைப்பாக இருக்கிறது.
  • பொதுவாக பொருளாதார கண்ணோட்டமோ, பாரத சமுதாயத்தை மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் பிளவுபடுத்தாத தேசியப் பாா்வையோ இல்லாத நிலையில் வாக்காளா்கள் என்னதான் செய்வாா்கள்? களைப்பு மேலிட்டதால், சலிப்பு மேலிட்டதல்ல ‘ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன’ என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டு வாக்களிப்பதைத் தவிா்த்திருக்கிறாா்களோ என்று தோன்றுகிறது. இதன் பின்விளைவு மோசமாக இருக்கும்!

நன்றி: தினமணி (13 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories