TNPSC Thervupettagam

அத்தியாவசிய கனிமங்கள் தேடல் எப்படி இருக்கிறது?

July 21 , 2024 176 days 169 0
  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் ராணுவத் தேவைகளுக்கும் மிகவும் பயன்படக்கூடிய கனிமங்களை நாட்டுக்குள்ளேயே தேடுவதில் அரசு முனைப்பாக இருக்கிறது. கிராபைட், பாஸ்போரைட், லித்தியம் ஆகியவற்றை அகழ்ந்தெடுக்கும் கனிம உரிமை, ஆறு பகுதிகளில் வழங்கப்பட்டிருக்கிறது.
  • இந்தக் கனிமங்களுக்காக இப்போது இறக்குமதியைத்தான் நாடு பெரிதும் சார்ந்திருக்கிறது. புதிதாக திருத்தப்பட்ட சுரங்கங்கள் - கனிமங்கள் சட்டப்படி முதல் முறையாக தனியார் நிறுவனங்களுக்கு இந்த உரிமங்கள் வழங்கப்படுகின்றன.

இந்த கனிமங்கள் ஏன் முக்கியத்துவமானவை?

  • காப்பர் (செம்பு - தாமிரம்), லித்தியம், நிக்கல், கோபால்ட் போன்றவற்றை அரிய கனிமங்கள் என்கின்றனர். இவையும் இன்ன பிற அரிய கனிமங்களும்தான், சுற்றுச்சூழலைக் காக்கவல்ல பசுமையான – தூய்மையான (மின்) ஆற்றல் வளத்தைத் தயாரிப்பதற்குப் பெரிதும் உதவப்போகின்றன.
  • உலக அளவில் லித்தியத்துக்கான தேவை 2023இல் வழக்கத்தைவிட மேலும் 30% அதிகரித்திருப்பதை ‘பன்னாட்டு ஆற்றல் முகமை’ (ஐஇஏ) தெரிவிக்கிறது. நிக்கல், கோபால்ட், கிராபைட் போன்றவற்றின் தேவை 8% முதல் 15% வரை உயர்ந்திருக்கிறது. இவற்றின் சராசரி மொத்த மதிப்பு 32,500 கோடி டாலர்கள். (1 டாலர் சுமார் 83.5 ரூபாய்).
  • புவியின் இப்போதைய வெப்ப நிலை மேலும் 1.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்துவிடாமல் தடுக்க, கரிப்புகை வெளியீட்டு அளவை மேலும் அதிகரிக்கவிடாமல் செய்ய வேண்டும். அப்படியென்றால் நிலக்கரி, பெட்ரோலியப் பொருள்கள் எரிப்பை கணிசமாகக் குறைக்க வேண்டும். அதற்கு பசுமை மின்னாற்றல் உற்பத்தி பெருக வேண்டும்.
  • பசுமை மின்னாற்றலைப் பெருக்க இந்த அரிய கனிமங்கள் அவசியம். எனவே தான் இவற்றுக்குத் தேவை பல மடங்காக உயர்ந்துவருகிறது. 2040ஆம் ஆண்டில் காப்பருக்கு (செம்பு – தாமிரம்) இப்போதுள்ளதைப் போல மேலும் 50% கேட்பு அதிகரிக்கும், நிக்கல், கோபால்ட் மற்றும் இதர அரிய கனிமங்களின் தேவை இரண்டு மடங்காகிவிடும் கிராபைட்டின் தேவை 400% அதிகரிக்கும் லித்தியத்தின் தேவை 800% அதிகமாகும்.
  • லித்தியம்தான் பேட்டரி தயாரிப்பில் மிகவும் அவசியமான பொருள். எனவே, இத்தகைய கனிமங்கள் அதிக அளவில் மட்டுமல்ல, தொடர்ச்சியாகவும் உற்பத்தியாளர்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். லித்தியம், கோபால்ட், நிக்கல் ஆகிய கனிமங்கள் உற்பத்திக்கேற்ற வகையில் தயார் நிலையில் கிடைக்கவில்லை என்பதால், தேவையில் 100%, இறக்குமதியையே நம்பியிருக்கிறது. இந்தியாவின் தாமிரத் தேவையில் 95% இறக்குமதி மூலம்தான் பூர்த்திசெய்யப்படுகிறது என்பதை ஒன்றிய அரசின் கனிம வளத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி சுட்டிக்காட்டியிருக்கிறார்.
  • இந்த அரிய கனிமங்களை இந்தியாவுக்கு அளிப்பது, இவற்றில் சிலவற்றைத் தயாரிப்புக்கேற்ப வகையில் பதப்படுத்தி அளிப்பது சீனா.

உற்பத்தி பெருக அரசு என்ன செய்கிறது?

  • அரிய கனிமங்களில் சில இந்தியாவிலேயே இருந்தாலும், இவை இன்னமும் அகழ்ந்தெடுக்கப்படவில்லை அல்லது தயாரிப்பதற்கான நடைமுறைகள்கூட மேற்கொள்ளப்படவில்லை. மிகச் சில, மிகக் குறைவாகத்தான் அகழ்ந்தெடுக்கப்படுகின்றன. உலகில் கிடைக்கும் இல்மனைட் என்ற கனிமம், இந்தியாவில் 11% இருக்கிறது. டைட்டானியம் டை-ஆக்சைடு தயாரிப்புக்கு இல்மனைட் மிகவும் அவசியம்.
  • இருந்தும் இந்தியா ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்து டைட்டானியம் டை-ஆக்சைடை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார் கனிம வளத் துறை செயலர் விவேக் பரத்வாஜ்.

அதிருஷ்டவசமான கண்டுபிடிப்பு

  • இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பகுதியில் லித்தியம் இருக்கிறது என்பது சமீபத்தில்தான் அதிருஷ்டவசமாக கண்டுபிடிக்கப்பட்டது. சுண்ணாம்புக் கல் கிடைக்கிறதா என்று ‘இந்திய புவியமைவியல் ஆய்வு ஆணையம்’ (ஜிஎஸ்ஐ) தேடிக்கொண்டிருந்தபோது லித்தியம் இருப்பது தெரிந்தது. மொத்தம் 59 லட்சம் டன்கள் அளவுக்கு லித்தியம் இருக்கலாம் என்று பூர்வாங்க ஆய்வுகள் தெரிவிக்கின்றன. லித்தியம் கிடைத்த தகவலை அரசு கடந்த பிப்ரவரி மாதம்தான் அறிவித்தது. இந்தியாவின் தேவைக்கு இது போதும் என்ற கருத்து நிலவுகிறது. லித்தியத்தை விரைந்து அகழ்ந்தெடுக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
  • அரிய கனிமங்களுக்கு வெளிநாடுகளையே நம்பியிருப்பது, அல்லது நம் நாட்டில் கிடைக்கும்அரிய கனிமங்களை சுத்திகரித்து பயன்படுத்தும் செய்முறைகளுக்கு வெளிநாடுகளை நம்பியிருப்பது மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகளில் தள்ளிவிடும் என்பதால், அவற்றை அகழ்ந்தெடுக்கவும் அயல்நாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்ப – ஆலோசனை உதவிகளுடன் அகழ்ந்தெடுத்து தயாரிக்கவும் ஏற்ற வகையில் இந்திய சுரங்க – கனிம (வளர்ச்சி – ஒழுங்கமைவு) சட்டம் 1957, 2023 ஆகஸ்டில் திருத்தப்பட்டது.
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ராணுவத் தேவைகளுக்கும் அவசியமான 24 அரிய கனிமங்களை அகழ்ந்தெடுக்க இந்தத் திருத்தம் வகை செய்துள்ளது. இதற்குப் பிறகுதான் இந்தியாவிலேயே கிடைக்கும் அரிய கனிமங்கள் 20 தொகுப்புகளாக ஏலம் விடப்பட்டது. ஆனால், முதலீட்டாளர்கள் அதிக ஆர்வத்துடன் கனிம அகழ்வு வேலைகளில் ஈடுபடாததால், ஏலம் விடப்பட்ட தொகுப்புகளில் பெரும்பாலானவை ரத்துசெய்யப்பட்டன.
  • அவற்றில் 6 தொகுதிகள் மறு ஏலம் விடப்பட்டன. அவற்றில் 3 ஒடிஷாவிலும் இதர மூன்று தமிழ்நாடு, உத்தர பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் உள்ளன. இந்த ஏலத்தின் இரண்டாவது மூன்றாவது சுற்று எப்படிப் போகிறது என்று பார்க்க வேண்டும். நாலாவது தொகுப்பில் 10 கனிம வயல்களை இரண்டாவது முறையாக ஏலத்துக்கு விட அரசு தயார்செய்துகொண்டிருக்கிறது.

கனிமங்களை அகழ்ந்தெடுக்க ஆர்வம் காட்டாமல் இருப்பது ஏன்?

  • அரசு அறிவிக்கும் சுரங்கங்களில் மொத்தம் எவ்வளவு கனிமங்கள் இருக்கின்றன என்ற தகவல் முழுமையாகவோ போதுமானவையாகவோ இல்லை. அந்தக் கனிமங்களை அகழ்ந்தெடுப்பதற்கு நவீனத் தொழில்நுட்பங்கள் அவசியம். லித்தியம் கனிமமானது ஜம்மு – காஷ்மீர் பகுதியில் களிமண்ணுடன் கலந்தே இருக்கிறது. களிமண்ணிலிருந்து இதைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் உலகிலேயே உருவாகவில்லை. எனவே, தனியார் துறையினர் தயங்குகின்றனர்.

அரிய கனிமங்களின் உற்பத்தி எப்போது தொடங்கும்?

  • உள்நாட்டில் கிடைக்கும் அரிய கனிம சுரங்கங்களை அடையாளம் காண்பதும், கனிம அளவைக் கணக்கிடுவதும் பூர்வாங்க நிலையிலேயே இருக்கின்றன. அவற்றை வணிகரீதியாக அகழ்ந்தெடுப்பது, அதன் பிறகு அதன் பயன்கள் கிடைப்பது ஆகியவற்றுக்கு மேலும் சில ஆண்டுகளாகும், 2030 இறுதிவரையில்கூட ஆகும் என்று ஐசிஆர்ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்திய உற்பத்தித் துறை மேலும் சில ஆண்டுகளுக்கு இந்த அரிய கனிமங்கள் கிடைப்பதில் உள்ள நிச்சயமற்ற சூழலை எதிர்கொண்டுதான் தீர வேண்டும்.
  • இந்தியாவில் அரிய கனிமங்கள் கிடைப்பதைத் தேடுவது, கனிம சுரங்கங்களை அடையாளம் காண்பது ஆகியவற்றுடன் வெளிநாடுகளில் அப்படி தயாராகக் கிடைக்கும் கனிம சுரங்கங்கள் மீதும் அரசு ஆர்வம் செலுத்துகிறது. அப்படிக் கிடைக்கும் வயல்களைக் குத்தகைக்கு எடுத்து, அங்கிருந்து கனிமங்களைக் கொண்டுவரவும் செயல்களில் ஈடுபட்டுள்ளது.
  • ஆர்ஜென்டீனா நாட்டில் லித்தியம்பிரைன் இருக்கும் சுரங்கத்தை, இந்தியாவின் ‘கனீஜ் விதேஷ் இந்தியா’ நிறுவனம் வாங்கியிருக்கிறது. நால்கோ, இந்துஸ்தான் காப்பர், கனிம ஆய்வு நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனம்தான் கனீஜ் விதேஷ் இந்தியா. கனிம தேடலுக்காக அமெரிக்கா தலைமையிலான நிறுவனம் ஒன்றுடனும் இந்தியா கூட்டு சேர்ந்திருக்கிறது. அதில் அரிய கனிமங்களை வாங்கும் நிறுவனங்களும் விற்கும் நிறுவனங்களும் உறுப்பினர்கள்.

நன்றி: அருஞ்சொல் (21 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories