TNPSC Thervupettagam

அந்தப் பேதை யார்?

September 11 , 2019 1958 days 1221 0
  • தமிழ் மொழிக்கு அழியாத உயிரும், ஒளியும் இயலுமாறு பற்பலப் பணிகளைச் செவ்வனே ஆற்றியவர் மகாகவி பாரதி.
  • நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலும்,  தமிழ் மொழி வளர்ச்சிப் பணியிலும் மகாகவி பாரதி சிந்தை செலுத்தினார். ஆம்; தேச பக்தியை வளர்க்கும் படைப்புகளை உருவாக்கிய அதேபோதில், தமிழ்ப் பக்தியையும் மகாகவி பாரதி வளர்த்தார் என்பதை அவருடைய எழுத்துகள் நமக்கு அறிவிக்கின்றன.

 

இயன்ற வரை தமிழே பேசுவேன்;

தமிழே எழுதுவேன்; சிந்தனை

செய்வது தமிழிலே செய்வேன்

என்று சங்கற்பம் செய்து கொண்டவர் மகாகவி பாரதி.

தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்

இங்கமரர் சிறப்புக் கண்டார்

  • என்று தமிழின் சுவையை அமுதுக்கு ஒப்பாகச் சிறப்பித்துப் பாடிய மகாகவி பாரதி, தமிழ் பேசும் மக்களைத் தமிழ்ச் சாதி என்றே குறிப்பிட்டு எழுதியும் மகிழ்ந்தார்.
    தமிழ் மொழி வளர்ச்சியில், மகாகவி பாரதி அக்கறை செலுத்திய அதேபோதில், தமிழறிஞர்களும் அக்கறை செலுத்த வேண்டும் என்பதையே பெரிதும் விரும்பினார்.
தமிழ் மொழி வளர்ச்சி
  • தமிழ் மொழி வளர்ச்சியில் மகாகவி பாரதி அக்கறை செலுத்த வேண்டியதற்கான காரணம் யாதாக இருக்க முடியும்? மகாகவி பாரதி காலத்தில் வாழ்ந்த ஆங்கிலம் கற்ற அறிஞர்களில் பலர் பிரதேச மொழிகளுக்குப் பதிலாக, அந்த இடத்தில் ஆங்கிலம் அமர்ந்து கொள்ளும் என்று நம்பினர்; நம்பியதோடு மட்டுமல்லாமல், சுதேச பாஷைகள் இருந்த இடம் தெரியாமல்போய், ஆங்கிலமே நிலைபெற்று நிற்கும் என்று பேசவும் தலைப்பட்டனர்.
  • இந்த நிலையில், தமிழ் மொழியின் சிறப்புப் பற்றி மகா மகோபாத்தியாய உ.வே.சாமிநாதையர் திருவாரூரில் பேசியதை மகாகவி பாரதி 7.11.1908ஆம் தேதிய இந்தியா பத்திரிகையில் பிரசுரம் செய்தார்; பிரசுரம் செய்தபோது தம்முடைய கருத்தாக மகாகவி பாரதி இவ்வாறு எழுதினார்:
  • தமிழ்ப் பாஷை இறந்துபோய்விடும் என்றும், நமது நாட்டின் எல்லாப் பாஷைகளுக்குமே பிரதியாக இங்கிலீஷ் பாஷை ஏற்படும் என்றும் நம்பிய மூடர்கள் சுமார் 10 வருஷங்களின் முன்பு நமது ஜனங்களிலே பலர் இருந்தார்கள். இப்போதும்கூட அந்த நம்பிக்கையுடையவர் ஆங்கிலேயர்களிலே அனேகர் இருக்கின்றார்கள். இந்தியாவிலுள்ள பாஷைகளெல்லாம் மடிந்துபோய், அவற்றினிடத்திலே இங்கிலீஷ் நிலவ வரும் என்பது இவர்களுடைய எண்ணம். 
  • இஃது இவ்வாறு இருப்ப, மகா வித்துவான் ஸ்ரீ உ.வே.சாமிநாதையர், சில தினங்கள் முன்பு  இவ் விஷயம் குறித்துப் பேசியிருக்கிறார்.
  • தம் கருத்தைப் பதிவு செய்த மகாகவி பாரதி, உ.வே.சா.வின் பேச்சின் பகுதியையும் பிரசுரம் செய்துள்ளார்.
கன்னித் தமிழ்
  • அன்னியர்களைக் குறை கூறிப் பயனில்லை. தமிழ்ப் பாஷையின் செல்வங்களையெல்லாம் தக்கவாறு பயன்படுத்திக் கொள்ளாத குற்றம் நம்மவர்களையே சார்ந்ததாகும். அவ்வாறாயினும், நமது தாய் மொழி ஸாமானியத்தில் இறந்துவிடக் கூடியதன்று. பெரியோர்கள் இதனைக் கன்னித் தமிழ் என்று பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள். இது எக்காலமும் வனப்பும் இளமையும் மாறாத கன்னிகை ஆகும். இதற்கு முதுமையே கிடையாது; மரணமும் இல்லை.
  • திருவாரூரில் உ.வே.சா. ஆற்றிய உரையின் பகுதியை மகாகவி பாரதி வெளியிட்டதன் வாயிலாக நம் தமிழ் அறிஞர்கள் தமிழ் மொழிக்கு முதுமையும் இல்லை; மரணமும் இல்லை என்று சொல்லத்தக்கவாறு காலத்திற்கு ஏற்றவாறு தமிழின் மேன்மைக்கு உழைத்தல் வேண்டும் என்பதைப் புலப்படுத்தினார்.
  • உ.வே.சா.  1908ஆம் ஆண்டில் திருவாரூரில் பேசிய பேச்சை வெளியிட்ட நிலையில், சுமார் பத்து ஆண்டுகள் கடந்த பின்னர், ஆங்கில ஆசிரியரான ஒருவரும் தமிழ் மெல்ல இனிச்  சாகும் என்று கூறக் கேட்டு மகாகவி பாரதி கொதித்து எழுந்தார்.
  • அந்த ஆங்கில ஆசிரியரைக் கூறத்தகாதவன் கூறினான் என்றும், அந்தப் பேதை உரைத்தான் என்றும் மிகக் கடுமையான சொற்களைப் பிரயோகித்து நிந்தனையும் செய்தார்.
    மகாகவி பாரதி இயற்றி அருளிய தமிழ்த்தாய்  என்ற பாடலில்தான்...

இன்றொரு சொல்லினைக் கேட்டேன்இனி

ஏதுசெய் வேன்? என தாருயிர் மக்காள்!

கொன்றிடல் போலொரு வார்த்தை இங்கு

கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

புத்தம் புதிய கலைகள் பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;

மெத்த வளருது மேற்கே அந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை  அவை

சொல்லும் திறமை தமிழ்மொழிக்கில்லை;

மெல்லத் தமிழினிச்  சாகும்  அந்த

மேற்குமொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரைத்தான் ஆ!

இந்த வசையெனக் கெய்திட லாமோ?

சென்றிடு வீர் எட்டுத் திக்கும்கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

  • கூறத் தகாத வார்த்தைகளைக் கூறிய அந்தப் பேதை யார்? என்பதை மகாகவி பாரதி தமிழ்த்தாய் பாடலில் குறிப்பிடவில்லை. அப்படியானால், மகாகவி பாரதி குறிப்பிட்ட அந்தப் பேதை யார்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை என்னுள் எழுந்தது.
  • இந்த நிலையில், 1979ஆம் ஆண்டு வாக்கில், மகாகவி பாரதி நூல்களை மட்டும் பதிப்பித்து வெளியிடுவதற்கென்றே தோற்றுவிக்கப்பட்ட பாரதி பிரசுராலயத்தின் நிறுவனரும், பாரதியின் இளவலுமான சி.விசுவநாத ஐயரின் தொடர்பு எனக்குக் கிட்டியது. என் பாரதி நூல்கள் பணியை அறிந்து மகிழ்ந்து, நான் மேற்கொண்டுள்ள பணிக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்தார். அவரிடமிருந்து 1935ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்ட பாரதி நூல்கள்: கட்டுரைகள் நான்கு தொகுதிகளைப் பெற்றேன். கட்டுரைகளைக் கருத்தூன்றிப் படித்தேன்.
  • நான்காம் தொகுதியான சமூகம் என்னும் தலைப்பில் வெளிப்படுத்தியுள்ள பருந்துப் பார்வை என்ற கட்டுரையில்  அந்தப் பேதை யார்? என்பதற்கான அரிய குறிப்பு இடம்பெற்றிருக்கக் கண்டேன்.
பருந்துப் பார்வை
  • பருந்துப் பார்வை  கட்டுரையில் அந்தப் பேதை யார்? என்கிற செய்தியைத் தெரிவிக்கும் பகுதி வருமாறு:
  • தக்ஷிணத்துப் பாஷைகளிலேஅதாவது, தமிழிலும், தெலுங்கிலும், கன்னடத்திலும், மலையாளத்திலும்சாஸ்திர (சயின்ஸ்) பாடம் கற்றுக் கொடுப்பதற்கு மேற்படி பாஷைகள் தகுதியில்லையென்று பச்சையப்பன் காலேஜ் தலைமை வாத்தியார் மிஸ்டர் ரோலோ என்பவர் சொல்லுகிறார். அவருக்கு இவ்விடத்துப் பாஷைகள் தெரியாது. ஸங்கதி தெரியாமல் விவரிக்கிறார்.
  • சாஸ்திர பரிபாஷையை நமது பாஷைகளில் மிகவும் எளிதாகச் சேர்த்துவிடலாம். மேலும், இயற்கை நடையிலே இங்கிலீஷைக் காட்டிலும் தமிழ் அதிக நேர்மையுடையது. ஆதலால், சாஸ்திரப் பிரவசனத்துக்கு மிகுந்த சீருடையது. இந்த ஸங்கதி நம்மவர்களிலேகூடச்  சில இங்கிலீஷ் பண்டிதருக்குத் தெரியாது. ஆதலால், மிஸ்டர் ரோலோவை நாம் குற்றம் சொல்வது பயனில்லை.
  • தமிழ்த்தாய் பாடலிலே, மிகக் கடுமையாகச்  சாடிய மகாகவி பாரதி வசனத்திலே எழுதியபோது, தென்னிந்திய மொழிகளின் சங்கதி தெரியாமல் மிஸ்டர் ரோலோ சொல்லிவிட்டார் என்று எழுதிய அதேபோதில், சாஸ்திரம் (சயின்ஸ்) கற்பிக்கத் தமிழ் மொழி நேர்மையும், மிகுந்த சீர்மையும் உடையது என்பதை இந்த ஸங்கதி நம்மவர்களிலேகூடச்  சில இங்கிலீஷ் பண்டிதருக்குத் தெரியவில்லையே! என்று வேதனையுடன் குறிப்பிடவும் செய்தார்.
  • மிஸ்டர் ரோலோ தொடர்பான அரிய செய்திக்குறிப்பை நான் கண்டறிந்தபோது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் பாரதி படைப்புகளை வெளியிடத் திட்டமிட்டபோது, மாமனிதர் சிலம்பொலி செல்லப்பனார்  பரிந்துரையின் பேரில், பாரதி பாடல்கள் ஆய்வுப் பதிப்பாக அமைய வேண்டும் என்ற காரணத்தால், பாரதி பாடல்களைக்  கால வரிசையில் தொகுத்து அளிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தது.
  • தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்பான பாரதி பாடல்கள் ஆய்வுப் பதிப்பு சீராகவும், செம்மையாகவும், நம்பகத்தன்மை கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதாக நான் கருதி, பல காலமாக அரும்பாடுபட்டு சேகரம் செய்து வைத்திருந்த மகாகவி பாரதி பொக்கிஷங்களை ஒழுங்குபடுத்தி, கைப்பிரதியாகவும், பின்னர் தட்டச்சும் செய்து, பதிப்புக்காக வழங்கினேன். அப்படி வழங்கப்பட்ட அரிய செய்திக்குறிப்புகளில் ஒன்றுதான் அந்தப் பேதை யார்? என்பதும்.
  • நான் அரும்பாடுபட்டுக் கண்டறிந்த அரிய கட்டுரையை, பல்கலைக்கழகப் பதிப்புக்காக வழங்கியதை முழுவதுமாகப் பதிப்பிக்காமல் சுருக்கமான அளவில் ஆய்வுப் பதிப்பில் பதிப்பித்தனர். பல்கலைக்கழக ஆய்வுப் பதிப்பில் காண்க: பாரதியார் கட்டுரைகள் (பருந்துப் பார்வை).  கூறத்தகாதவன் என்று மகாகவி பாரதியாரால் குறிக்கப்படுபவர் பச்சையப்பன் காலேஜ் தலைமை வாத்தியார் மிஸ்டர் ரோலோ என்பவர்... என்று மட்டுமே பதிப்பிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி (11-09-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories