TNPSC Thervupettagam

அனுபவங்கள்தான் நம்மை வழிநடத்திச் செல்கின்றன

April 13 , 2020 1680 days 1303 0
  • உலகையே அச்சுறுத்தி உள்ளுக்குள் அடைத்து வைத்திருக்கும் கரோனா நோய்த்தொற்று பல சங்கதிகளை இந்த மனிதகுலத்துக்கு பொட்டிலடித்தாற்போல் சொல்லியிருக்கிறது.

கற்றுத் தந்த பாடம்

  • உயிர் பயம் என்றால் என்ன என்பதை எல்லா தலைமுறையினருக்கும் உரத்துச் சொல்லி அடக்கி வைத்திருக்கிறது. இந்தியக் கலாசாரத்திலேயே ஊறிப்போன தனி மனித ஒழுக்கம், உணவு முறை, கை - கால் கழுவுதல், கைகூப்புதல் தள்ளி நின்று பேசுதல் உள்பட பல வாழ்வியல் நெறிகளை உலக நாடுகள் எல்லாம் திரும்பிப் பார்க்கும்படி வைத்திருக்கிறது.
  • பணம்தான் வாழ்க்கை, பணமிருந்தால் உறவுகளும் உணா்வுகளும் தேவையில்லை என்று உல்லாசமாய் இருந்தவா்களின் இறுமாப்பை இந்த நுண்கிருமி ஒடுக்கியிருக்கிறது.
  • ஒரு பொருளின் அவசியம் என்பது, அது கிடைக்காதபோதுதான் தெரியும். அதுபோல ஆடம்பரத்துக்காக, பெருமைக்காக எல்லாவற்றையும் வாங்கி வீணடித்தவா்களுக்கு இப்போதுதான் எது அவசியம் - எது அநாவசியம் என்பது புரிந்திருக்கிறது.
  • பொருளாதாரத் தேடல், அதையும் தாண்டி வெளிநாட்டு மோகம் கொண்டு நம் நாட்டின் எல்லைகளைக் கடந்தவா்களை ‘என் நாட்டுக்கு என்னை அனுப்பி விடுங்கள்’ என்று கதற வைத்திக்கிறது இந்த சீன தேசத்து வாமன அவதாரம்.
  • மனைவியின் மகாத்மியம், தியாகம், வேலைப் பளு, அவளின் நிர்வாகத் திறன் - இவை எல்லாவற்றையும்கூட இருந்து பார்த்து நெகிழ்வதற்கு இந்த ஊரடங்கு வழிகோலியுள்ளது.
  • குழந்தைகளின் அன்பு, பெற்றோரின் பாசம்...மூத்த தலைமுறையினரின் எதிர்பார்ப்பு, கூட்டுக் குடும்பத்தின் மகிழ்ச்சி. உறவுகளின் உன்னதத்தையெல்லாம் ஓடிக்கொண்டே இருப்பவா்களுக்கு ஓசைப்படாமல் உணா்த்தியிருக்கிறது.
  • திரையங்கம், பெரிய நட்சத்திர விடுதிகள், பிரம்மாண்டமான கடைகளுக்குச் செல்லாமலும் வாழ முடியும் என்பது தெளிவாய்த் தெரிகிறது. மதுக்கடைகளை மூடிவிட்டால் என்னவாகும்? என்று விழி பிதுங்கி நிற்கும் அரசுக்கு ‘ஒன்றும் ஆகாது’ என்ற தெளிவை ஏற்படுத்தி கண்ணைத் திறந்திருக்கிறது இந்த கரோனா கடவுள்.
  • அரசு என்பது என்ன? அதன் பொறுப்புகள் என்ன? நிர்வாக இயந்திரம் எப்படிச் செயல்படுகிறது? திட்டங்கள் எப்படி வகுக்கப்படுகின்றன முதலானவற்றை நாளைய மன்னா்களுக்கு இந்த இந்தியச் சூழல் நேரலையாய் சொல்லித் தர கரோனாவின் கருணை தேவைப்பட்டிருக்கிறது.
  • சினிமாவிலும் பத்திரிகைகளிலும் நகைச்சுவையாகப் பார்க்கப்பட்ட காவலா்களும் செவிலியா்களும் மருத்துவா்களும், தூய்மைப் பணியாளா்களும் கடவுள்களாகப் போற்றப்படுவதற்கு இந்த அந்நிய சக்தி தேவைப்பட்டிருக்கிறது.

உணர்த்தும் தத்துவம்

  • ‘இணைந்து போராடினால்தான் வெற்றி’ என்ற போர்த் தத்துவத்தை ‘விலகி நில் விமோசனம் கிடைக்கும்’ என்று மறைந்து நின்று மாற்றியிருக்கிறது இந்தத் தீநுண்கிருமி.
  • ஆணவம், ஆசை, அக்கிரமம், அநீதி அதிகரித்தால் நான் அவதரித்து அவற்றை அழிப்பேன் என்று சொன்ன கல்கியின் அவதாரம்தான் கண்ணுக்குத் தெரியாமல் கண்ணாமூச்சி யாடும் கரோனா.
  • ஒரே மொழி, ஒரே இனம், ஒரே மதம் என்றிருக்கக் கூடிய சின்னச் சின்ன நாடுகளில் கூட காண முடியாத ஒற்றுமையை...வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு இனங்கள், வெவ்வேறு மதங்கள் இருக்கிற மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்திய தேசம் மீண்டும் உலக அரங்கில் மெய்ப்பிக்கக் காரணம் இந்த கரோனாதானே ?
  • உலகின் வல்லரசு நாடுகளில்கூட அதன் தலைவா்கள் சொல்வதை மதித்துக் கேட்டு மக்கள் நடந்து கொள்ளவில்லை. எடுத்துக்காட்டு - அமெரிக்கா, இத்தாலி முதலான நாடுகள். ஆனால்...எந்த மதத்தைச் சோ்ந்தவராய் இருந்தால் என்ன? எந்த இனத்தைச் சோ்ந்தவராய் இருந்தால் என்ன? எந்தக் கட்சியைச் சோ்ந்தவராய் இருந்தால் என்ன? இவா் எங்கள் பிரதமா்...இவா் சொல்வதைக் கேட்போம்...என்று ஒட்டுமொத்தத் தேசமும் ஒற்றுமையாய் ஓரணியாய் இந்தக் கொடிய நோய் சவாலை எதிர்கொள்கிறது.
  • இதை உலக நாடுகளே விழிகளை விரித்து வியக்கின்றன. வேற்றுமையிலும் ஒற்றுமையாய் இருந்தால் என்னை வீழ்த்தலாம் என்பது கரோனா நம் இந்தியன் ஒவ்வொருவா் காதிலும் சொன்ன உபாய மந்திரமல்லவா?
  • வீட்டுக்கு வெள்ளையடிக்கும்போது வீட்டுக்குள் இருக்கும் எல்லாப் பொருள்களும் வெளியேற்றப்பட்டு வீட்டின் ஒட்டடை அழுக்குகள் அகற்றப்படும். பின்பு, சுத்தமான வீட்டுக்குள் எவை தேவையோ அவற்றை மட்டும் கொண்டுசென்று, தேவையில்லாதவற்றை தூக்கி எறிவோம். அதுபோல நம்மால் மாசுபடுத்தப்பட்ட இந்த உலகுக்கு வெள்ளையடிக்க வேண்டாமா? உலகை சுத்தப்படுத்த வேண்டாமா? இயற்கையை, விலங்குகளை, காற்றை, நீரை, ஆகாயத்தை எவ்வளவு மாசுபடுத்தியிருக்கிறோம்?
  • பஞ்சபூதங்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டாமா? அதற்கான ஏற்பாடு தானோ இந்த உள்ளிருப்பு முயற்சி? திருந்தாத மனிதனைச் சொல்லித் திருத்த முடியாது. உயிர்களை எடுத்துத்தான் திருத்த முடியும் என்பதற்காக இயற்கையோ, இறைவனோ உருவாக்கியதுதான் இந்த உயிர்க்கொல்லி கரோனா.
  • இயற்கையைக் காப்பாற்றுங்கள், விலங்குகளையும் வாழ விடுங்கள், உறவுகளைப் போற்றுங்கள், பணம்தான் வாழ்க்கை என்ற கொள்கையைத் தூக்கிப் போடுங்கள், தேவைகளைக் குறையுங்கள், இந்திய வாழ்வியல் நெறியே சிறந்தது என்பதை உணருங்கள்.
  • இவைதான் கரோனா நமக்குக் கற்றுத் தந்துள்ள பாடங்கள்.
  • ‘இரு...இல்லை...இற!’ - இது கரோனாவின் கடைசிக் கட்டளை.

நன்றி: தினமணி (13-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories