TNPSC Thervupettagam

அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்ப் பாடம்

May 30 , 2023 404 days 290 0
  • தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் தமிழ்கற்காத 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கூடுதல் கட்டாய மொழிப் பாடமாகத் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு வரவேற்புக்குரியது.
  • தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில், ‘கட்டாயத் தமிழ்க் கற்றல் சட்டம் 2006’ நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம், அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாகப் படிக்க வேண்டும் என்கிறது.
  • 2015-16 கல்வியாண்டிலிருந்து தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பாக இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுவருகிறது. அதன்படி 2024-25 கல்வியாண்டில் பத்தாம் வகுப்புக்குத் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்.
  • ஆனால், மாநில சமச்சீர் பாடத்திட்டத்துக்குப் பதிலாக சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்டங்களைப் பின்பற்றும் பல தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாய மொழிப்பாடம் ஆக்கப்படவில்லை. எனவே, இந்தப் பள்ளிகளில் பல மாணவர்கள் தமிழுக்குப் பதிலாக இந்தி, சம்ஸ்கிருதம், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளை இரண்டாம் மொழியாகத் தேர்வுசெய்து படித்துவருகிறார்கள்.
  • இப்போது தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 2024-25கல்வியாண்டின் இறுதியில், அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்புவரையிலான மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும் என உத்தரவிடப் பட்டிருக்கிறது.
  • தமிழ் படிக்காமல் ஒன்பது, பத்தாம் வகுப்புவரை வந்துவிட்ட மாணவர்களுக்குக் கூடுதல் மொழிப்பாடமாகத் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் இதற்குத் தகுதிவாய்ந்த தமிழாசிரியர்கள் அனைத்துப் பள்ளிகளிலும் நியமிக்கப்பட வேண்டும் என்றும் இந்தச் சுற்றறிக்கை கூறுகிறது. இந்த மாணவர்களுக்குப் பத்தாம் வகுப்புக்கான தமிழ் இறுதித் தேர்வு தமிழ்நாடு அரசுத் தேர்வு இயக்குநரகத்தால் நடத்தப்பட்டு தனிச் சான்றிதழ் வழங்கப்படும்.
  • கட்டாயத் தமிழ்க் கற்றல் சட்டத்தை மதிக்காமல் சில தனியார் பள்ளிகள் இயங்கிவருகின்றன. மொழிச் சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகள் தமிழைக் கட்டாயப் பாடமாகக் கற்பிப்பதிலிருந்து நீதிமன்றங்கள் வாயிலாக விலக்குப் பெற்றுவந்துள்ளன.
  • இப்படி உயர்நிலைப் பள்ளிவரை தமிழைத் தவறவிட்ட மாணவர்களுக்கும் தமிழ் கற்பிக்கப்படுவதற்கான சூழல் இப்போது உருவாகியிருக்கிறது. இதற்கு எதிராகச் சில தனியார் பள்ளிகளும் பெற்றோரும் நீதிமன்றத்தை நாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதை வெற்றிகரமாக எதிர்கொள்ள பள்ளிக் கல்வித் துறை ஆயத்தமாக வேண்டும்.
  • மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில், அந்தந்த மாநிலத் தாய்மொழியைப் பள்ளிக் கல்வியில் கட்டாயமாக்கும் முயற்சிகள் நடந்திருக்கின்றன. நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு அவற்றில் மிகச் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டாலும், மாணவர்கள் மொழிப்பாடத்தைத் தவிர்த்துவிடாமல் இருக்கும் வகையிலேயே இப்படியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேவேளையில், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எளிமையான முறையில் தமிழ்ப் பாடத் திட்டம் இங்கு அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அரசின் நோக்கம் முழுமை பெறும்!

நன்றி: தி இந்து (30 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories