- ‘எல்லோரும் இன்புற்று இருக்க’ என்று தாயுமானவர் கூறுவது போல இங்கு வேளாண் சுற்றுலாவும் அனைத்து விவசாயிகளுக்கும் பொருந்திய ஒன்றாக இருக்க வேண்டும். அதாவது குறு, சிறு விவசாயிகள் முதல் பெரிய விவசாயிகள் வரை இந்த பட்டியல் நீண்டுள்ளது.
- சரி, அதெப்படி குறு, சிறு விவசாயிகளுக்கு வேளாண் சுற்றுலாவை பொருந்த வைப்பது? இதற்கு முதலில் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைய அமுல் என்னும் மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய வர்கீஸ் குரியனின் அவர்களின் தன்னிகரில்லா வாழ்க்கை வரலாற்றில் இருந்து தான் தொடங்க வேண்டும்.
- 1926-ல் குஜராத் மாநிலம் கைரா மாவட்டத்தில் பால் பண்ணை வைத்திருக்கும் குறு, சிறு விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து அப்போது பால் உற்பத்தியில் முன்னிலை வகித்த பால்சன் நிறுவனத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதுதான் அமுல் கூட்டுறவு நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தை அவர்களிடையே ஏற்படுத்தியது. பின்னர் நடந்தது அனைத்தும் வெற்றியின் வரலாறாக, அமுல் கூட்டுறவு நிறுவனத்தை சமுதாயத்தில் நிலை நிறுத்தியது.
- அப்படி அந்த சமுதாயத்தின் வெற்றி குறித்து குரியன் கூறும்போது, “நாங்கள் (நமது விவசாயிகள் மற்றும் அவர்களுடைய கூட்டுறவு சங்கங்கள்) இந்த தேசத்தின் பால் பொருள்கள் களத்தில், அந்நிய முதலீட்டை நுழையவிடாமல் கட்டுப்படுத்தி விட்டோம் என்பதைக் குறிப்பிடுவதில் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்” என்றார்.
- அமுலின் வழியே வேளாண் சுற்றுலாவை உருவாக்க முதலில் விவசாயிகளிடையே ஒற்றுமை வேண்டும். அந்த ஒற்றுமையில் நல்ல புரிதல் இருக்க வேண்டும். அதிலும் கூட்டுறவு என்னும் சொல் பெரிய விவசாயிகளைக் காட்டிலும் சிறிய விவசாயிகளுக்கு சாதகமான சூழலை உண்டாக்கும். மேலும் கூட்டுறவு நிறுவனத்தின் பாணியில் செயல்பட்டு வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களையும் வேளாண் சுற்றுலாவுக்கு உகந்ததாக மாற்றலாம்.
- மத்திய அரசின் 2020-ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில், 2024-ம் ஆண்டுக்குள் 10,000 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை இந்தியாவில் தொடங்க வேண்டும் என்று கூறியிருந்தது. அந்த வகையில் இதுவரை 7,600 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
- இங்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பற்றி நபார்டு வங்கி நடத்திய ஆய்வையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் குறு, சிறு விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி மற்றும் சந்தை சார்ந்த நிலவரங்களை தருவதுடன் அவர்களுக்கு பக்க பலமாக செயல்படுவதாகவும், 2020 முதல் 2022-ம் ஆண்டுக்கு உட்பட்ட காலகட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களோடு இணைந்து செயல்படும் விவசாயிகளின் வேளாண் பொருட்கள் உற்பத்தியானது 18.75% முதல் 31.75 % வரை உயர்ந்துள்ளதாகவும், இடுபொருள் செலவும் ரூ.50 முதல் ரூ.100 வரை ஒவ்வொரு சிப்பத்துக்கும் குறைந்துள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
- அதோடு முக்கியமாக வேளாண்மையின் இரண்டாம் நிலை தொழில்களான காளான் மற்றும் தேனீ வளர்ப்பு போன்றவைகள் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதாகக் கூறுகிறது. அப்படி பார்க்கும்போது இங்கு வேளாண் சுற்றுலாவும் பொருத்தமாக பொருந்திப் போகும். மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு பொருந்திப் போகும் வகையில் வேளாண் சுற்றுலாவை மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் பகுதியில் இருக்கும் சயாத்திரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அதன் பண்ணையில் செயல்படுத்தி வருகிறது.
- பண்ணையைச் சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாவாசிகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள் தயாரிப்பது, திராட்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழங்களை அறுவடை செய்ய வைப்பது, வேளாண் பண்ணையில் தங்க வைத்து உணவளிப்பது மற்றும் வேளாண் சுற்றுலாவின் இன்னபிற செயல்பாடுகளிலும் ஈடுபட வைப்பது என வேளாண் சுற்றுலாவை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 05 – 2024)