அன்புள்ள டிரம்ப்... இப்படி செய்யலாமா? கவிஞர் ஜோஸ் பெல்லோ!
- “தமிழ் மொழிபோல இனிதாவது எங்கும் காணோம்” என்ற பேருண்மையுடன் இணைந்தே தொடர்வது, ‘தமிழ் மொழிந்திருப்பதுபோல இனிதாவது எங்கும் காணோம்’ என்ற நிலைப்பெருமையுந்தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மானுடத்தின் உச்ச உண்மை - உலகப் பொதுமை - பொதித்த தமிழ் மொழிந்திருக்கும் கணியன் பூங்குன்றனின் “யாதும் ஊரே, யாவருங் கேளிர்” என்பதற்கீடு எங்கும் காணோம், இதுவரை.
- “விரிகடல்சூழ் உலகம் முழுதும் நம் ஊரே என்றும் விழியும் ஒளியும்போல் மக்கள் எலாம் நம் உறவே என்றும் - புதிய வெளிச்சத்தால் பொல்லாத இருள் கிழித்து வேற்றுமையின் வேரறுத்துப் புரட்சி செய்த.. (கலைஞர், சங்கத்தமிழ்)
- கணியன் பூங்குன்றனின் காலத்திற்குப் பின், பலநூறாண்டுகள் கழிந்து சிறு ஆறுதலாக, 1883 இல் எம்மா லாசரஸ் (Emma Lazarus, 1849 – 1887) என்ற அமெரிக்கப் பெண் கவிஞர், “களைத்த, இளைத்த, சுதந்திரமாக மூச்சுவிட ஏங்கித் திணறிக்கொண்டிருக்கும் வீடற்ற, புயல் அலைக்கழித்த, வேண்டாத, உங்கள் மக்கள் கூட்டங்களை எனது கரைகளுக்கு அனுப்புங்கள். நான் என் சுடருயர்த்தி, அவர்கள் வாழ்க்கைக் கதவுகளுக்குப் பொன்னொளி பாய்ச்சுவேன்.’’ என்று கனியும் விரிமனக் கவிதையை (The New Colossus) விரித்தார். “யாவருங்கேளிர்” என்று முழங்கிய கணியனின் விசாலத்தை எதிரொலிப்பதுபோல, “எவரும் வரலாமிங்கு, சுதந்திரவாழ்வின் பொற்காலங்காண” என்று தன்நாட்டின் சார்பாக எம்மா லாசரஸ்ஸின் இருகை விரித்த கவிதை, “கடை விரித்தேன், கொள்வாரில்லை” என்பதுபோல, வரவேற்பு அதிகம் வெளிப்படாமலே கிடந்தது இருபதாண்டுகளாக.
- நியூயார்க் நகரத்திற்குள், நியூயார்க் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில், அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தின் முதல் நூற்றாண்டு நினைவாகப், பிரான்ஸ் நாட்டு மக்களின் அன்பளிப்பாக, பிரெஞ்சு சிற்பி பிரடெரிக் அகஸ்டே பார்தோல்டி என்பவரால் வடிவமைக்கப்பட்டு, குஸ்டாவ் ஈபிள் என்பவரால் வானோக்கிய பிரம்மாண்டமாக நிறுவப்பட்டு, அதிபர் குரோவர் கிளீவ்லேண்ட் தலைமையில் அக்டோபர் 28, 1886 இல் நிகழ்ந்த அர்ப்பணிப்பு நாள் விழா முதல், உயர்ந்து நிற்கிறது, செம்பு பூசப்பட்ட சுதந்திரதேவி சிலை.
- “மனித ஆன்மாவின் தலைசிறந்த படைப்பு" என யுனெஸ்கோ 1984 ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தியிருக்கும் சுதந்திரதேவி சிலையின் பீடத்தில் - அச்சிலை நிறுவப்பட்ட பதினேழு ஆண்டுகள் கழித்து 1903 ஆம் ஆண்டில், எம்மா லாசரஸ்ஸின் அந்தக் கவிதை (The New Colossus), வெண்கலத் தகடில் வடித்துப் பதிக்கப்பட்டது. அப்போது முதல், அக்கவிதை, அமெரிக்காவின் அடையாளக் கவிதையாகவும், சுதந்திரம், மனித உரிமைகள், உலகெங்குமுள்ள மாந்தர்க்குரிய வாய்ப்புகள் போன்ற இலட்சியங்களின் சக்திவாய்ந்த அடையாளமாகச் சுதந்திரதேவி சிலை உயர்ந்தோங்கி நிற்பதாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக, அக்கவிதையின் இரண்டு ( 10, 11) வரிகள் (“Give me your tired, your poor, / Your huddled masses yearning to breathe free”) மிக அதிகமாக மேற்கோள் காட்டப்படும் கவிதை வரிகளாகவும், லாசரஸ் காலத்து அமெரிக்காவின் விசால மனிதாபிமானப் பார்வையை உலகிற்கு உரத்துச் சொல்லும் உன்னத வாசகமாகவும் விகசித்து நிற்கிறது.
- சுதந்திர தேவி சிலையின் நிழலில், வெண்கலத் தகட்டில் பொறித்து வைக்கப்பட்டிருக்கும் எம்மா லாசரஸின் "புதிய கொலோசஸ்" கவிதை வார்த்தைகள், அச்சிலையை ஒரு காலத்தில், நாடகலநேர்ந்தோரின் நம்பிக்கைக் கலங்கரை விளக்கமாக நின்று- புலம் பெயரும் அவலத்திற்குள்ளாகும் எந்நாட்டவரையும்- தாய்க்கருணையோடு அமெரிக்காவிற்குள் வரவேற்கும் சுதந்திரதேவியாகக் கண்டது. லாசரஸின் அப்பார்வை தற்போது தொலைதூரக் கனவாகி விட்டது.
- ‘’களைத்த, இளைத்த, சுதந்திரமாக மூச்சுவிட ஏங்கித் திணறிக்கொண்டிருக்கும் .... ,.... உங்கள் மக்கள் கூட்டங்களை எனது கரைகளுக்கு அனுப்புங்கள்” என்று வேண்டி நிற்பதாக எம்மா கண்ட ‘அம்மா’வுக்கு முற்றிலும் முரணான முகம் தற்போது!
- இப்போதைய அமெரிக்காவின் அதிபர் (இதற்கு முந்தைய தனது பதவிக்காலத்திலும்) ‘சுதந்திரக் காற்றுக்குத் திறக்க நிற்கும் பொற்கதவுகளுக்குப்பதில்’, அமெரிக்க வரலாற்றில் வேறெந்த அதிபரின் கீழும் இல்லாத அளவுக்கு, பல நூற்றுக்கணக்கான மைல்கள் (458 மைல்கள்) நீளத்திற்கு தென் எல்லையில் மதில் வேலி (‘ட்ரம்ப் சுவர்’) அமைத்துக் - காற்றும் நுழையாக்- கடுமையாக்கி வரும் குடியேற்றக் கொள்கையால், சுதந்திரதேவி தனது வலது கையால் தலைக்கு மேலே உயர்த்திப்பிடித்திருக்கும் பந்தச்சுடர் இருளடைந்துள்ளது என்பதே இன்றைய நிலைமை.
- இப்போதைய அமெரிக்காவின் அதிபர் அவரது 2016 தேர்தல் பிரசாரத்தின்போதும், தேர்தலில் வென்று தொடர்ந்த அவரது அதிபர் பதவிக் காலத்தின்போதும், அதற்குப் பின்னரும், தற்போதும் (2025) புலம்பெயர்வுக்கு எதிரான ஒரு எச்சரிக்கைக் க(வி)தையாக "தி ஸ்னேக்" (The Snake) பாடலின் வரிகளைப் பலமுறைகள் கூட்டங்களில் எழுதிவைத்துப் படித்துள்ளார். அப்(பாம்பு) பாடலின் கருத்துச் சுருக்கம் இதோ:
- இளகிய மனம் கொண்ட ஒரு பெண்
- ஒரு நாள் காலையில்
- வேலைக்கு செல்லும் போது,
- ஏரியை ஒட்டிய பாதையில்,
- பனியால், உடலின் பாதி உறைந்த
- ஒரு பாம்பைக் காண்கிறாள்.
- பாம்பின் பளபளப்பான தோல் முழுதுமே
- பனியால் உறைந்திருக்க…
- இரக்கம் மிக, இவளோ கண் கலங்கினாள்.
- "ஓ மென்மையான பெண்ணே, என்னை ஏற்றுக்கொள்,
- என்னை உன்னோடு அழைத்துச் செல்,
- "ஓ! மென்மையான பெண்ணே!"
- என்று பாம்பு பெருமூச்சு விட்டு இரைஞ்ச...
- இரங்கி, இவள்
- நான் உன்னை அழைத்துச் செல்கிறேன்,
- நான் உன்னை கவனித்துக் கொள்கிறேன்."
- என்று
- தன் பட்டுத்துணியால் பாம்பை
- முழுவதுமாக,
- குழந்தையைப் போர்த்துவதுபோல்
- போர்த்திக் கொண்டாள்.
- வீடடைந்து,
- கொஞ்சம் தேனும் கொஞ்சம் பாலும் கொடுத்துக்
- கணப்பு மூட்டத்தின் அருகே
- அதனைக் கதகதப்பாகப் படுக்க வைத்தாள்.
- அன்றிரவு வேலையிலிருந்து
- பாம்பின் நிலையறிய ஆவலுந்த
- அவசரமாக வீட்டுக்கு வந்தாள்.
- அவள் எடுத்துவந்த
- அந்த ‘அழகான பாம்பு’
- புத்துயிர் பெற்றிருப்பதைக்
- கண்டாள்.
- இரக்கமும் மகிழ்ச்சியுங் கூடப்
- பாம்பைத்
- தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்,
- "நீ ரொம்ப அழகா இருக்கே"
- என்று கொஞ்சி, ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.
- "இந்நேரம் நான்
- உன்னை
- அழைத்து வராமல் இருந்திருந்தால்
- இறந்திருப்பாயே நீ’ என
- வாஞ்சையுடன் வளவளப்பான
- பாம்பின் தோலை வருடினாள்,
- முத்தமிட்டு அதனை இறுக்கமாக அணைத்தாள்.
- ஆனால்,
- நன்றி காட்டுவதற்குப் பதில்
- நச்சுப்பல் பதிய
- அந்த பாம்பு அவளைக்
- கொத்தி விட்டது கொடூரமாக.
- புலம்பினாள்..
- "என்னை ஏற்றுக்கொள்,
- ஓ மென்மையான பெண்ணே,’ என்றாய்
- "நான் உன்னைக் காப்பாற்றினேன்"
- "நீ கடித்துவிட்டாய் என்னை,
- ஏன்?
- "உன் கடி விஷம் என்று உனக்குத் தெரியும்,
- இப்போது நான் இறக்கப் போகிறேனே."
- என்றழுதாள்.
- "ஓ வாயை மூடு, முட்டாள் பெண்ணே,"
- "நீ என்னை இங்கே அழைத்து வரும்போதே
- நான் ஒரு பாம்பு என்று
- உனக்கு நன்றாகத் தெரியும்தானே?”.
- என்று
- அந்த ‘ஊர்வன’ இனத்துயிர்
- ஒரு நச்சுச் சிரிப்புடன் நவின்று நகர்ந்தது.
- "சுதந்திரமாகச் சுவாசிக்க ஏங்கும் மக்கள் கூட்டத்திற்கு" தனது இரு கரம் விரித்த வரவேற்பு வெளிப்படுத்தும் - அமெரிக்காவின் இலட்சிய பிம்பமாக நிற்கும் - சுதந்திர தேவிக்குத் தற்போதைய அதிபர் இந்தப் ‘பாம்பு’ கதையைச் சொல்கிறார். அடிக்கடி, இந்தப் பாம்புக் க(வி)தையை மக்களிடையே சொல்வதன் மூலம், இதுவரை வந்தாரை வரவேற்று நின்ற பெருங்கருணை, சுதந்திரதேவியை (அமெரிக்காவை) - சாகக் கிடந்த பாம்பின்மீது அனுதாபங்காட்டிக் காப்பாற்றிய பெண்ணைக் கடித்த பாம்பின் கதை சொல்லி- “முட்டாள் பெண்ணாக இரக்கம் காட்டி நீ சாகாதே” என எச்சரிக்கிறார். புலம் பெயர்பவர்களைப் ‘பால்வார்த்தவரையே (அமெரிக்கர்களையே) பதம் பார்க்கும் பாம்பு” என உருவகப்படுத்துகிறார்.
- புலம்பெயர்ந்தவர்களை விலங்குகளுடன் ஒப்பிடும் விஷச்சொல்லாடல் இவர்மட்டும் கைக்கொண்டு வருவதல்ல. நாஜிக்கள் அடிக்கடி யூதர்களை ‘புழு’ என்று குறிப்பிட்டு வந்தார்கள். இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் புலம்பெயர்ந்தவர்களை விலங்குகளுடன் ஒப்பிடுவதற்குப் பல உருவகங்களைப் பயன்படுத்தித் திளைத்துக்கொள்கிறார் என்று விமர்சகர் பிலியார்ச்சு சுட்டிக் காட்டியுள்ளார். ‘அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு சில படிகள் மேலே சென்று, ‘பூச்சிகள்’ மற்றும் ‘பாம்புகள்’ போன்ற பிற "கீழ்-வரிசை" (Lower order) விலங்குகளுடன் புலம்பெயர்ந்தவர்களை ஒப்பிடுவதன் மூலம், வெறுப்பு நெருப்பை மேலும் தூண்டி, புலம் பெயர்வோரிடையே ஒரு பயஉணர்வைப் பரப்பி வளர்க்க எண்ணுகிறார்; தன்னை விலங்குகளை அடக்குபவராக, ஒரு ஹீரோவாக, இந்த விலங்குகளிடமிருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாக்க வல்லவராகத் தம்மை முன்நிறுத்திக்கொள்ள முயல்கிறார்’ என்கிறார்கள் டிரம்ப் விமர்சகர்கள்.
- “வாருங்கள் ஜெகத்தீரே” என்று விசால வாஞ்சை காட்டிய எம்மா லாசரஸ்ஸின் வரவேற்பு மனப்பாங்கு நூறாண்டுகள் முன்பிருந்தே அமெரிக்காவில் நொறுங்கத் தொடங்கிவிட்டது.
- அதிபர் கால்வின் கூலிட்ஜ் பதவிக்காலத்தில், 1924 இல், அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான – வெட்கமற்ற இனவெறி கொண்ட - “அன்னிய இரத்த ஓட்டம் " தேசத்தை விஷமாக்குகிறது என்ற கருத்தடிப்படை கொண்ட ‘குடியேற்ற சட்டத்தை’ (National Origins Act) அமெரிக்க காங்கிரஸ் இயற்றியது. அச்சட்டத்தின் மூலம் கிழக்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்குள் வரும் குடியேற்றத்தை வியத்தகு முறையில் குறைத்தது. நடைமுறையில் ஆசியாவிலிருந்து கிட்டத்தட்ட புதிய குடியேற்றமே இல்லாமல் அச்சட்டம் தடை செய்தது . எப்படி என்பதுதான் 1924 ஆண்டுச் சட்ட நுட்பம்.
- நுட்பம் யாதெனில், ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலிருந்தும், 1890 ஆம் ஆண்டு அமெரிக்க சென்சஸ்படி, அமெரிக்காவில் எத்தனை புலம்பெயர்ந்தோர் உள்ளனர் என்பதைக் கணக்கிட்டு, அந்த எண்ணிக்கையில் 2% மட்டுமே அடுத்துவரும் ஒவ்வொரு ஆண்டும், 2017 வரை அந்தந்த நாடுகளிலிருந்து புதியவர்களை அனுமதிக்க முடியும் என்று சட்டவிதி செய்யப்பட்டிருந்தது. (எடுத்துக்காட்டுக்காக: இந்தியாவிலிருந்து 1890-ல் 1000 பேர் அமெரிக்காவில் குடியேறியிருந்திருந்தால், அதில் 2%, என்பது 20. ஆக, சட்டம் அமுலுக்கு வந்த 1924 முதல் ஒவ்வொரு ஆண்டும் 20 புதிய இந்தியர்களுக்கு மட்டுமே நுழைவு அனுமதி கிடைக்கும்.)
- அடுத்ததாக, ஜூலை 1, 1927-க்குப் பின்னர், இந்த இரண்டு சதவீத விதி என்பது மாற்றப்பட்டு, ஆண்டுக்கு ஒட்டுமொத்தமாக 1,50,000 புலம்பெயர்ந்தோர் மட்டுமே அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற வரம்பைக் கொண்டு வந்தனர். 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை, மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பாவிற்கு வெளியே இருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே இருந்தது - அதாவது அவர்களின் 2% ஒதுக்கீடுகள் மிகக் குறைவாகவே இருந்ததால்.
- 1924 ஆம் ஆண்டு குடியேற்றச் சட்டத்தை நிறைவேற்றிய 68-வது அமெரிக்க காங்கிரஸ், அடுத்த மாதத்திலேயே இந்தியக் குடியுரிமைச் சட்டத்தையும் நிறைவேற்றியது. அதன்படி, அனைத்து பூர்வீக அமெரிக்கர்களும் பிறக்கும்போதே சட்டப்படியான அமெரிக்க குடிமக்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இச்சட்டம், பூர்வீகக் குடிமக்களை அமெரிக்கப் பொது சமூகத்தின் கட்டமைப்பிற்குள் ஒருங்கிணைத்தது என்றாலும் குடியுரிமையின் முழுப் பலன்களை, உத்தரவாதப்படுத்தப்பட்ட வாக்களிக்கும் உரிமைகளை உடனே தந்துவிடவில்லை அவர்களுக்கு.
- இந்த இரு சட்டங்களுக்கும் முன்பே, சீனாவில் இருந்து வரும் அனைத்துக் குடியேற்றங்களுக்கும் தடை விதித்து 1882 ஆம் ஆண்டில் சீன விலக்குச் சட்டம் (Chinese Exclusion Act,1882) என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்ததைக் குறிப்பிட்டாக வேண்டும். அமெரிக்காவிற்குக், குறிப்பாக கலிபோர்னியாவிற்கு சீனாவிலிருந்து புலம்பெயர்ந்து வருவதைத் தடுப்பதற்காக 1882 ஆம் ஆண்டுச் சட்டம் சீனர்கள் புதிதாகக் குடியேறுவதைப் பத்து ஆண்டுகளுக்கு முற்றிலும் நிறுத்தி வைத்ததுடன், சீனப் புலம்பெயர்ந்தோர், அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்குத் தகுதியற்றவர்கள் என்றும் அறிவித்தது. இதனை அதிபர் செஸ்டர் ஏ. ஆர்தர், மே 6, 1882 இல் சட்டமாக்கக் கையெழுத்திட்டார். ஏற்கனவே நாட்டில் உள்ள சீன - அமெரிக்கர்கள் இந்த பாரபட்சமான செயல்களை எதிர்த்து நீதிமன்றம் சென்றும் பலனில்லாது அம்முயற்சிகள் தோல்வியடைந்தன.
- சொல்லப்போனால், 1882 ஆம் ஆண்டின் சீன விலக்கு சட்டம்தான் அமெரிக்காவிற்குள் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் முதல் குறிப்பிடத்தக்க சட்டமாகும். மேற்குக் கடற்கரையில் உள்ள பல அமெரிக்கர்கள், சீனாவில் இருந்து வந்து அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் குழுக்களாகக் குடியேற்றங்களை அமைத்து வாழ்ந்து வந்தனர். இந்த சீனாக்காரர்கள் "சில இடங்களின் நல் ஒழுங்குக்கு" ஆபத்தை, வெள்ளை "இனத் தூய்மைக்கு" ஊறுவிளைவிப்பதைக் குறித்து தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தன. மேலும், அப்பகுதிகளிலுள்ள அமெரிக்கத் தொழிலாளர்கள் தங்களது ஊதியங்களில் ஏற்பட்ட சரிவுகளுக்கும் தம் பகுதிகளில் விளையும் பொருளாதாரச் சீர்கேடுகளுக்கும் சீனத் தொழிலாளர்களே காரணம் என்றும் புகார் கூறிக்கொண்டேயிருந்தனர். உண்மையில், அச்சமயத்தில் அமெரிக்க நாட்டின் மக்கள் தொகையில் சீனர்கள் வெறும் 0.002 சதவீதம்தான். இருப்பினும் தமது (வெள்ளைத்) தொழிலாளர்களைச் சமாதானப்படுத்த, வெள்ளைப் பரிசுத்தத்தைப் பராமரிப்பது குறித்த நாட்டு மக்களது கவலைகளைத் தணிக்க, இந்த சீன விலக்கு சட்டம் நிறைவேற்றப்பட்டதெனப் புலம்பெயர்வு வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
- அன்றும் சரி, இன்றும் சரி, புலம்பெயர்ந்த / ஆவணங்களற்ற பிறநாட்டினர்தான் அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கும் வலிமையான உழைப்போர் படை; ஒப்பிட்டுப்பார்த்தால், அமெரிக்கர்களைவிட மிகக் குறைந்த விகிதங்களில்தான் குடிபெயர்ந்தோர் குற்ற விகிதம் (Criminality ratio) தற்போதும் உள்ளது. ஆனாலும் – ஆவணங்களில்லாத, ஆனால் அமெரிக்கப் பொருளாதாரத்தின் அகற்றப்பட இயலா - உழைப்போர்படை மீதுதான் (விஷப் பாம்பு என்பன போன்ற) வெறுப்பு நெருப்புச் சொற்கள் வீசப்படுகின்றன, கூசாமல், டிரம்ப் போன்றவர்களால்!
- பின்னர், அதிபர் லிண்டன் ஜான்சன் தனது பதவிக்காலத்தில் 1965 இல் குடிவரவு மற்றும் குடியுரிமைச் சட்டத்தில் கையெழுத்திட்டது வரை (1924 ஆம் ஆண்டு 2%) ஒதுக்கீட்டு முறை முற்றாக ரத்து செய்யப்படவில்லை. லிண்டன் ஜான்சன் பிறப்பித்த சட்டம் "இந்த நாட்டிற்கு அதிக பங்களிப்பை வழங்கக் கூடியவர்கள் - அதன் வளர்ச்சிக்கு, அதன் வலிமைக்கு, அதன் ஆன்மாவிற்கு” உதவக்கூடிய வெளிநாட்டினரை (சுத்தமான சுய நல, சுரண்டல் எண்ணத்தோடு) ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புகளுக்கு இடம் தந்தது. அப்போதிருந்து, அமெரிக்க குடியேற்றம் வெளிப்படையான இனப் பாகுபாட்டைத் தவிர்த்திருப்பதுபோல ஒரு தோற்றம் தந்தது, அத்தோற்றத்தைக் கிழிக்கும் ஒரு விதிவிலக்காக, தனது முந்தைய பதவிக்காலத்தில், 27 ஜனவரி 2017 இல், டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவு (எண் 13769) மூலம், வெளிப்படையாக, இஸ்லாம் நாடுகளான ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் இருந்து நுழைவு விசாக்கள் தடுக்கப்பட்டன.
- அமெரிக்காவில் குடியேற விரும்புவர்கள் குறித்து, ஒருபுறம் எம்மா லசாரஸ் வெளிப்படுத்திய விரிமனம்; மறுபுறம் 1882, 1924 முதல் அமெரிக்கக் குடியேற்றச் சட்டங்களில், டிரம்பின் 2017 ஆணையில் விளைந்து வெளிப்படும் மாறுபட்ட, இனப்பாகுபாடு காட்டும், குறுகிய மனப்போக்கு என்பதும் கலந்தே அமெரிக்கச் சிந்தனை இருந்து வருகிறது.
- ‘வந்தேறிகள்’ குறித்த அமெரிக்க எண்ணப் பிரதிபலிப்புகளுக்கு எடுத்துக்காட்டாக, கலிபோர்னியா மாகாணத்தில் ஜனவரி 1, 2016 வரை ‘புலம்பெயர்ந்தோர்’ என்ற வார்த்தைக்கான சட்டப்பூர்வச் சொல்லாக ஏலியன் (Alien) என்ற (மனிதப் பாங்கை மறுதலிக்கும்) சொல்லே நடைமுறையிலிருந்தது; பிற, பல, அமெரிக்க மாகாணங்களில் புலம் பெயர்ந்தோரைச் சர்வ சாதாரணமாகச் “சட்டத்திற்குப் புறம்பானவர்கள்’ (Illegals, short form of Illegal migrants) எனக் குற்றவாளிகளைப் போலக் குறிப்படும் வழக்கமிருப்பது போன்றவற்றைக் காட்டலாம். மனித உரிமை ஆர்வலர்கள், மிக நாகரீகச்சொல்லாக “ஆவணங்களில்லாதவர்” (Undocumented) என்ற சொற்பயன்பாட்டை விழைகின்றனர்.
- அவதிப்படும் மக்களுக்காகப் பச்சாதாபத்தால் நிறைந்த ஒரு பரந்த மானுடப் பரப்பாக எம்மா லாசரஸ் அமெரிக்காவைப் பார்த்தார், காலப்போக்கில் நிலைமைகள் மாறி, ‘கடுமையான குடியேற்றக் கொள்கைகள்; பெருமதில்கள்; மனிதாபிமானமற்ற சோதனைச்சாவடிச் செயல்முறைகள்; ஆவணங்களில்லாதோர்க்கு நீண்டகாலத் தடுப்புக்காவல்; புகலிடம் கோரி நிற்பவர்களுக்கு நிச்சயமற்ற எதிர்காலம்; அமெரிக்காவை ஒரு புகலிடமாகக் கனவு காணத் துணிந்து பயணிப்பவர்களுக்குப், பயணம் பெரும்பாலும் ஏமாற்றமும் துயரமும் கூடியதாகவே இருக்கும் என்ற நிதர்சனம் ஆகிய யாவும் நிறைந்திருக்கும் அதிகாரத்துவம் ஆட்சிசெய்யும் கோட்டையாகத்தான் இப்போது, அமெரிக்காவை நாம் காணமுடிகிறது.
- மேலும், புலம்பெயர்ந்தவர்களைச் சுட்டக் கையாளும் சொல்லாட்சிகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்களும் ஆழ்ந்த கவலையளிக்கிறது. லாசரஸின் கவிதை, களைப்பாகவும், ஏழையாகவும், பதுங்கிக் கிடக்கும் மக்களைச் சொத்துக்களாகப் பேசுகிறது; தேசத்தின் கலாச்சாரப் பன்வண்ணத்தை (மொசைக்கை) வெளிப்படுத்துகிறது. இன்று அதே மக்களை அச்சுறுத்தல்களாக (கொத்தும் பாம்பாகச்) சித்தரிக்கும் அதிபரின் போக்கு மக்களிடையே பிளவை, அவநம்பிக்கையைத் தூண்டுவதாகிறது. ஒரு காலத்தில் நம்பிக்கை மற்றும் சுதந்திரத்தை அடையாளப்படுத்திய கவிதை, இப்போது தேசத்தின் ஸ்தாபக இலட்சியங்களுக்கும் அதன் தற்போதைய யதார்த்தத்திற்கும் இடைகிடக்கும் அகன்ற, ஆழமான, வேறுபாடுகளால் மௌனித்து உறைந்திருக்கிறது. லிபர்ட்டி தீவில் உள்ள வரவேற்பு வார்த்தைகளுக்கும், தற்போதைய கொள்கை வகுப்பாளர்களின் எண்ணம், செயல்பாடுகளுக்கும் உள்ள அப்பட்டமான வித்தியாசம், “ஒரு சிறந்த வாழ்க்கையைத் தேடும் ஒவ்வொரு நபரிடமும் அமெரிக்கா காட்டிநின்ற” மனிதாபிமானம் மரணித்திருப்பது குறிக்கும் நடுகல்.
- வெள்ளை மாளிகை சமீபத்தில் தனது குடியேற்ற வலைத்தளத்தை டிரம்ப்பின் மேற்கோளுடன் புதுப்பித்திருக்கிறது. "சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்த அரசாங்கம் முன்மாதிரியில்லாத அதிதீவிர நடவடிக்கையை எடுத்துள்ளது" என்று வீராப்பாக அறிவிக்கிறது அந்த வலைத்தளம். இவ்வாறான அறிவிப்புகள் மூலம் டிரம்ப், தனது ஆதரவாளர்களைப், புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக நிறுத்துவதுடன்; புலம்பெயர்ந்தவர்களுக்கு அனுதாபம் காட்டும் மற்ற அமெரிக்கர்களை, ஒரு பாம்புடன் அப்பாவித்தனமாக நட்பு கொண்டு உயிரிழக்கும் கனிவான பெண்ணைக் குறியீடாகக்காட்ட, பாம்பு பாடலின் வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகிறார்.
- இனி, அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும்: ‘லேடி லிபர்ட்டி’யின் கீழ் வெண்கலத்தில் பொறிக்கப்பட்ட உயர்ந்த இலட்சியங்களுக்கு ஏற்ப வாழுமா? அல்லது அவற்றிலிருந்து முற்றும் விலகிச் செல்லும் (டிரம்ப்) பாதையில் அது தொடருமா? இந்த கேள்விக்கான பதில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோர், புலம்பெயர விழைவோர், எதிர்கால வாழ்க்கையை மட்டுமல்ல, அமெரிக்க தேசத்தின் ஆன்மாவைச் சீராக்கும், வடிவமைக்கும்.
- ஜோஸ் ஒமர் பெல்லோ ரெய்ஸ் என்ற முழுப்பெயர் கொண்ட ஜோஸ் பெல்லோ என்றறியப்பட்டுவரும் கவிஞர், அமெரிக்கப் ஃபெடரல் ஆட்சியின் குடிவரவு அமலாக்கம் (ICE) மற்றும் தடுப்புக்காவல் நடைமுறைகளைக் கடுமையாக விமர்சிப்பவர். கெர்ன் கவுண்டியை தளமாகக் கொண்ட ஒரு முக்கிய ஆர்வலர். சுமார் மூன்று வயதாக இருந்தபோதே பெற்றோருடன் மெக்ஸிகோவிலிருந்து புலம் பெயர்ந்து வந்து இருபதாண்டுகளாக அமெரிக்காவில், கலிபோர்னியாவில் ‘ஆவணங்களற்றவராக’ வாழ்ந்துவருபவர். வெளிப்படையாகப் பேசும்தன்மை கொண்ட, பேக்கர்ஸ் ஃபீல்டு கல்லூரி மாணவர். தனது ஏழ்மை காரணமாக 16 வயது முதலே பண்ணைப் பணியாளராக உழைத்துத் தன் தாய், சகோதரர்கள், (தற்போது மனைவி, ஒருவயதுக்குள் கைக்குழந்தை மகன்) கொண்ட குடும்பத்திற்கு உதவும் நல்மகனாகவுமிருப்பவர்.
- ‘ஆவணங்களற்றவராக’வுள்ள பெல்லோ, 22 மே 2018 இல், ICE அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, வெளியேற்ற - நாடு கடத்தல் - நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதற்காகத் தடுப்புக்காவலில் சிறை வைக்கப்பட்டார். பெல்லோவின் பல கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட பத்திர விசாரணைக்குப் பிறகு, குடிவரவு நீதிபதி, பெல்லோ சமூகத்திற்கு ஆபத்தானவர் இல்லை (Not a danger to the community) என்பதைக் கண்டறிந்து, பெல்லோவை 10,000 டாலர் பிணைப்பத்திரமளித்தால் விடுவிக்க 22 ஆகஸ்ட் 2018 இல் உத்தரவிட்டார்.
- பொருள்வளமற்ற கவிஞர் ஜோஸ் பெல்லோ உடனடியாகப் பிணைப்பத்திரத்தொகையைத் திரட்ட இயலவில்லை. ஆகவே பிணை கிடைத்தும், தடுப்பு மையத்தில் (சிறைவாசம்) தொடரும் நிலை ஏற்பட்டது. பெல்லோவின் மகனுக்கு ஒரு வயதுக்கும் குறைவு. பிணைப்பத்திரத் தொகை கட்டமுடியாமல் அச்சிறுகுழந்தையைப் பிரிந்து சிறையில் நீடிக்க வேண்டிய சூழலால் எவ்வளவு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கும் அந்த இளங்கவிஞன் ஜோஸ் பெல்லோவிற்கு? பெல்லோவின் கல்லூரி நண்பர்கள், ஆசிரியர்கள், அவரது கவிதை ரசிகர்கள், புலம்பெயர்ந்தோர் நலச் செயல்பாட்டுக் குழுக்களின் ஆர்வலர்கள் எனப்பலர் இணைந்து பங்களித்து பிணைப் பத்திரத்திற்கான தொகை திரட்டப்பட்டுக் கட்டத் தாமதமானது. ஒரு வழியாக ஜோஸ் பெல்லோ தடுப்பு மையச் சிறையிலிருந்து ஆகஸ்ட் 2018 இல் பிணையில் விடுவிக்கப்பட்டவுடன் தனது தாய், சகோதரர்கள் மற்றும் கைக்குழந்தையுடன் இருக்க வீடு திரும்பினார். அவர் கணுக்கால் மானிட்டர் அணிய வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம், ஐசிஇ கோரிக்கைக்கு எதிராக உத்தரவிட்டது. இந்த விடுதலைக்குப்பின், அவர் பேக்கர்ஸ்ஃபீல்ட் கல்லூரியில் வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கினார் அதே நேரத்தில், தனது குழந்தையின் முதன்மைப் பராமரிப்பாளராகவும் ஆனார், அப்பணியை அவர் குழந்தையின் தாயுடன் பகிர்ந்து கொள்கிறார். பிணையில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சான் பிரான்சிஸ்கோ குடிவரவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்குத் தவறாமல் பெல்லோ ஆஜரானார்.
- புலம்பெயர்ந்தோர் தடுப்புக்காவலில் பெல்லோவின் அனுபவங்கள், மேசா வேர்டே தடுப்புக்காவல் மையத்திற்குள் இருந்தபோது அவர் அனுபவித்த மோசமான நிலைமைகளை அம்பலப்படுத்தவும், அதிகாரத் துஷ்பிரயோகங்கள், தற்போதைய நிர்வாகத்தின் கடுமையான தடுப்புக்காவல் மற்றும் நாடுகடத்தல் போக்குள்ள ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, மக்களுக்கு அழைப்பு விட, அவரை அரசியல் களத்திற்கு இட்டுச் சென்றது. இந்தப் பிரச்சினைகள் குறித்து தீவிரமாக, அவர் பல முறை பல இடங்களில் கூட்டங்களில் பேசினார்.
அடுத்து வந்தது அவருக்கு ஆபத்து கைது , கவிதையால்!
- மே 13, 2019 மாலை, கெர்ன் கவுண்டி மேற்பார்வையாளர்கள் வாரியத்தால் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட கூட்டத்தில், நிரம்பிய பார்வையாளர்களுக்கு முன்னால் பெல்லோ உரையாற்றினார். உரையிடையே “அன்புள்ள அமெரிக்கா" என்று தலைப்பிட்ட ஒரு உணர்ச்சிகரமான கவிதையை வழங்கினார், புலம்பெயர்வு மற்றும் குடியேற்ற அமலாக்கத்துறையுடனான அவரது நேரடி அனுபவங்களாலும், முந்தைய முறை மேசா வேர்டேயில் அவர் தடுத்து வைக்கப்பட்டசூழல்களில் நிகழ்ந்தவைகளாலும் கவிதை உத்வேகம் பெற்றிருந்தது.
- "அன்புள்ள அமெரிக்கா" கவிதையாகவும், அப்போதைய (டிரம்ப்) நிர்வாகத்தின் புலம்பெயர்வு அமலாக்க நடைமுறைகள் மீதான ஒரு வலுவான குற்றப்பத்திரிகையாகவும், இளைஞர்கள் இணைந்து எழுந்து நின்று ஒன்றுபடுவதற்கான ஒரு அழைப்பாகவும் மிளிர்ந்து, அக்கூட்டத்திலிருந்த அனைவரின் கரவொலிகளைச் சேர்த்தது. பெல்லோ அக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவரது கவிதையை வாசித்த 36 மணி நேரத்திற்குள், ICE அவருக்கு எதிராக ஆக்ரோஷமான அமலாக்க நடவடிக்கையை அவிழ்த்துவிட்டது.
பின்வரும் உண்மைகள் மனுதாரர்-மேல்முறையீட்டாளரின் (ஜோஸ் பெல்லோ) முறையீட்டு ஆவணம் பக்கம் 116 இல் உள்ளபடி:
- “மே 15, 2019 அன்று காலை 6:30 மணிக்கு, ICE அதிகாரிகள் அவரது வீட்டிற்கு வந்தனர். பெல்லோ வெளியில் செல்வதற்காக அமர்த்தப்பட்டு வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரை நெருங்கியபோது, அவருக்கு பின்னால் ஒரு அடையாளமிடப்படாத வெள்ளை வாகனம் வந்து நிறுத்தப்பட்டது. சிவிலியன் உடை அணிந்த ஒரு அதிகாரி வேகமாக நெருங்கி, பெல்லோவுக்கும் அவர் செல்ல இருந்த காருக்கும் இடையில் வந்து விரைப்பாக நின்று, விரைவாக அவரை நோக்கி ஒரு டேசரை நீட்டினார்.
- (Taser என்பது யாருக்கு முன்பு நீட்டி இயக்கப்படுகிறதோ, அவர்களைத் தீவிர, திடீர் சில நொடி மின் அதிர்வு- கிட்டத்தட்ட 2000-5000 வோல்ட் - மூலம் முழுவதுமாகச் செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் கொண்ட, கைத்துப்பாக்கி போலத் தோற்றம் கொண்ட கையடக்கக் கருவி. அமெரிக்காவில் காவல் துறையினர் சந்தேக நபர்களை, குற்றவாளிகளை அருகாமையில் நேருக்கு நேர் எதிர்கொள்ளும்போது, குற்றவாளிகள் தப்பியோடிவிடாமல் தடுக்க, அவர்களைப் பிடிக்க, கைவிலங்கிட, அவர்கள் காவலரைத் தாக்கவிடாமல் செய்ய இக்கருவியைப் பயன்படுத்துகிறார்கள்.
- நம்மூரில் ‘ரௌவுடி’ எனக் கௌரவப் பட்டமளிக்கப்பட்டுள்ள சிறப்புச் செயல்பாட்டு நபர்களைத் தேடிச்செல்லும், தப்பியோடுமுன் பிடிக்க நெருங்கும் காவலர்கள் அடிக்கடி அச்சிறப்புச் செயல்வாதிகளால் அரிவாள் வெட்டுகளுக்கு ஆட்பட நேரும் செய்திகளை எதிர்கொள்ளும்போது, அரதப் பழசான துப்பாக்கியை நீட்டுவதைவிட, ஆற்றல் மிக்க அதிகம் உயிரிழப்பு ஏற்படுத்தாத Taser (முழு உத்திரவாதம் இப்போதில்லை. திடீர் மின்சார ஷாக் சில உயிர்களை அவ்வப்போது எடுத்துவிடுகிறது) பயன்பாட்டுக்கு மாறலாமென இக்கட்டுரை மூலம் பரிந்துரைக்கிறேன். குற்றவாளியாக இருந்தாலும், மனிதர்மீது அத்துமீறி, திடீர் எலெக்ட்ரிக் ஷாக் பிரயோகமும் - மனித உரிமை அளவு கோல்களின்படி, ‘அளவுக்கதிகமான வன்முறை’ எனக் கருதப்படும் நிலையிலுள்ளது என்றாலும், ‘துப்பாக்கிக் குண்டுக்குக் குறைந்த கொடுமை’ என்ற வகையில் ஏற்கலாமோ என மன ஊசலாட்டமிருப்பதையும் பதியனிடுகிறேன்.)
- வாங்க... நெடுநேரமாக கவிஞர்முன் டேசர் கருவி நீட்டப்பட்டவாறேயுள்ளது.
- டேசர் நீட்டிய அந்த அதிகாரி பெல்லோவிடம் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்குபோது, பெல்லோவின் காருக்கு முன்னால் குறுக்காக ஒரு கறுப்பு, அடையாளமிடப்படாத வாகனம் நிறுத்தப்பட்டது. இரண்டாவது அதிகாரி, கருப்பு "ICE / POLICE" உடையணிந்தவர், அந்த வாகனத்திலிருந்து வெளிவந்தார். முதல் அதிகாரி பெல்லோவை கைவிலங்கிட்டார்.
- பெல்லோவிடம் அவரது வீட்டில் வசிக்கும் மற்றவர்களின் அடையாளங்களை விசாரிக்கத் தொடங்கினார். பெல்லோ அமைதியாக இருப்பதற்கான தனது உரிமையைப் பயன்படுத்த முடிவு செய்தார். (வாய் திறக்கவில்லை கவிஞர்) பேக்கர்ஸ்ஃபீல்ட் ICE செயலாக்க மையத்தைச் சென்ற பயண தூரம் முழுவதும், அதிகாரி பெல்லோவை விசாரித்துக் கொண்டேவந்தார். அவருடைய வீட்டில் வசிக்கும் மற்றவர்களை அடையாளம் காணுமாறு கோரினார். (ஒருதலைப் பேச்சு!) பெல்லோ பதிலளிக்காத மௌனத்தில். அதிகாரச் சினம் மிரட்டலாக வெடித்தது : “கேள்விகளுக்கு பதிலளிக்கத் தொடங்காவிட்டால், உங்கள் குடும்பத்திற்கு ஏதாவது கெட்டது நடந்தால், அது முற்றிலும் உங்கள் (பெல்லோவின்) தவறுதான்” என்று அவரை அச்சுறுத்தினார். பெல்லோவைப் பார்த்து "நீங்கள் யார், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்" என்று உறுமியது அந்த அதிகாரம்.
- இவ்வாறாக, மே 15, 2019 இல் அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க ("ஐசிஇ") அலுவலர்களால் கவிஞர் ஜோஸ் பெல்லோ கைது செய்தனர்.
என்ன குற்றம்?
- “எனது ஒரே குற்றம், என் கவிதை ஒன்றை மக்கள் முன் வாசித்தது மட்டுமே” என்று அவரே வாக்குமூலமாக அளித்துள்ளார். அவரது கவிதை,
- ‘’அன்புள்ள அமெரிக்கா,
- நமது நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளது.
- எமது மக்களுக்கு எதிராக சட்டங்களை இயற்றினார்கள்.
- எங்கள் உரிமைகளையும்,
- சுதந்திரத்தையும் பறித்துவிட்டார்கள்.
- இதற்குப்பின்னும்
- பாராட்டுவோம் என்றா எதிர்பார்க்கிறார்கள்?
- சாலெஸ்!”
- எனத்தொடங்கி
- ‘’நான்
- பாதிக்கப்பட்டுவரும் மக்களுக்காக -
- வியட்நாமியர், ஜமைக்கா, ஆப்பிரிக்கர்,
- கம்போடியன், மெக்சிகன், சால்வடார்
- மற்றும்
- பல நாட்டு மக்ளுக்காகப் – பேசுகிறேன்” என்று முழக்கமிட்டது.
- ஆட்சியாளர்களை நோக்கி, விரல்நீட்டி,
- “நீங்களும் உங்கள் நிர்வாகமும்
- பயத்தை ஏற்படுத்துகிறீர்கள்,
- மக்களைப்
- பிரிவுபடுத்திப் பயமூட்டுகிறீர்கள்.
- எமது மக்களிடம்
- நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு பதிலாக
- இனவாத பதற்றத்தை வளர்க்கத்தான்
- நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று
- விடையளிக்கமுடியாத வினாக்களை ஆட்சியாளர்களை நோக்கி வீசியது.
- “இறுதியில், மக்கள்தாம்
- எப்போதும் வெற்றி பெறுகிறார்கள்,
- அரசாங்கம் தோற்கும் என்பதே
- உண்மையின் அடிநாதமாக உள்ளது” என்ற எச்சரிக்கையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது..
- “இதை
- அச்சுறுத்தலாகக் கருத வேண்டாம்.
- இந்த நாட்டை, தொடர்ந்து
- மகத்தானதாக மாற்றுவதே எங்கள் நோக்கம்.
- சரியானவற்றுக்காக
- எழுந்து நிற்கத் தொடங்க வேண்டிய நேரம் இது.
- குழந்தைகளை குற்றவாளிகளாக்குவது,
- குடும்பங்களை பிரிப்பது,
- நமது தேசிய பாதுகாப்பு,
- இவை எல்லாம்
- உங்களுக்குச் சரியாக இருக்கிறதா? என்று உணர்வுப்பூர்வமாக, உருக்கமாக ஆட்சியாளர்களிடம் சமாதான விண்ணப்பமும் செய்கிறது ஜோஸ் பெல்லோவின் ‘அன்புள்ள அமெரிக்கா’ கவிதை. ஆனாலும் இக்கவிதைதான் குற்றமாச்சு, ICE அதிகாரிகள் பார்வையில். நடந்து கொண்டிருந்தது டொனால்ட் டிரம்பின் முதல் அதிபர் ஆட்சிக்காலம்!
- பின்வரும் உண்மைகளும் மனுதாரர் - மேல்முறையீட்டாளரின் பதிவுகள் பக்கம் 117 இல் காணப்படுவதாகும்.
- “பெல்லோ பேக்கர்ஸ்ஃபீல்டில் உள்ள ICE இன் செயலாக்க மையத்தில் சுமார் பிற்பகல் 3:00 மணி வரை ஒரு ஹோல்டிங் கலத்தில் வைக்கப்பட்டார். அதுவரை அவர் தனது முதுகுக்குப் பின்னால் கைவிலங்கிடப்பட்ட நிலையில் இருக்க வேண்டிய கட்டாயம். இந்நிலையில் (கவிதை எழுதும் கைகளுக்கு) கைவிலங்கு! மிகவும் அசௌகரியந்தான்! அவரது மணிக்கட்டுகளில் காயம். கைவிலங்கை அகற்றுமாறு பெல்லோ மீண்டும் மீண்டும் ICE அதிகாரிகளிடம் கெஞ்சினார்; காதில் போட்டுக்கொள்ளவில்லை அதிகாரிகள். கைவிலங்குகள் அவருடைய மணிக்கட்டுகளை வலிக்கச் செய்தது; அவர் அவசரமாகக் கழிவறையைப் பயன்படுத்தவும் தேவைப்பட்டது. பெல்லோவின் வேண்டுகோள்களை ஐசிஇ அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்தனர். இறுதியில், அவர் (சிறு குழந்தைபோல) தன்னை நனைத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பெல்லோ பின்னர் வேறு ஒரு சிறையில் வைக்கப்பட்டார். பெல்லோ நனைந்த அழுக்கு ஆடைகளில் மணிக்கணக்கில் இருக்கவேண்டியதாயிற்று. இது அவரை அவமானப்படுத்தும் மனிதாபிமானமற்ற செயலன்றி வேறென்ன? (மற்ற நாடுகளில் இவ்வாறான மனித உரிமை மீறல்களென்றால், ‘பெரியண்ணன் நாடு’ ‘தையாத் தக்கா’ ஆட்டமாடி, நீட்டி, முழக்கிக் குரல் எழுப்பும்; அறிக்கைவிடும்!). காலையில் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்ட கவிஞரை, இரவு சுமார் 7:00 மணியளவில், ICE இன் செயலாக்க மையத்திலிருந்து Mesa Verde க்கு மாற்றுவதற்கு முன்னர், பெல்லோவை தடுத்து வைத்திருந்த ICE அதிகாரி, ICE அவரது பிணைப் பத்திரத்தை ஐம்பதாயிரம் டாலராக நிர்ணயித்திருப்பதாகக் கொக்கரித்தார். "உங்கள் நண்பர்களால் மீண்டும் இந்த அளவுக்குப் பிணைப் பத்திரப் பணத்தை திரட்ட முடியுமா என்று பார்ப்போம்" என்று எகத்தாளம் செய்தார்.
- இந்த இரண்டு கைது சம்பவங்களின் நெருக்கமான தொடர்ச்சியானது, ஐசிஇ முகமையின் நடவடிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை பெல்லோ வெளிப்படுத்தியதற்கான பதிலடியாக ஐசிஇயால் ஏற்படுத்தப்பட்டது. கவிஞரின் கைது மற்றும் தடுப்புக்காவல் என்பது, பேச்சு சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசும் நாட்டில் வெளிப்படையாகப் பேசிய கவிஞர் ஜோஸ் பெல்லோவுக்கு அரசாங்கம் பதிலடி கொடுப்பதாகவே உள்ளது. அரசியலமைப்புச் சட்டம், முதல் திருத்தம் வழங்கியுள்ள உரிமைகளை மறுத்து ஓரங்கட்டுகிறது. ஜோஸ் ஒமர் பெல்லோ ரெய்ஸ், தன்னை விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் மரியாதையுடன் மனு செய்துள்ளார்.
- பெல்லோவுக்கு மேசா வேர்டே தடுப்புக்காவல் மையத்தில் ஐசிஇ தன்னிச்சையாக நிர்ணயித்த 50,000 டாலர் (ரூ. 42 லட்சம் வரை) பிணை என்பது சில மாதங்களுக்கு முன்பு ஒரு குடிவரவு நீதிபதி நிர்ணயித்த தொகையை விட ஐந்து மடங்கு அதிகம். குறிப்பிடத்தக்க வருமானம், சொத்துக்கள் எதுவும் இல்லாத ஒரு பண்ணைத் தொழிலாளியான பெல்லோ இப்பிணைப் பத்திரத்தொகைக்கு என்ன செய்வார்? எங்கு போவார்? அதை அவர் வாங்க முடியாது என்பது தெளிவு.
- பெல்லோ தன்னை மனித மாண்பு குறையாமல் நாடகற்றும் வரையிலாவது- அகற்றும் நடவடிக்கைகள் முடிவடையும் வரையாவது- ஐ.சி.இ.யின் காவலில் இருந்து விடுவிக்க நீதிமன்ற உத்தரவு கோரியுள்ளார். அல்லது தனது பிணைப் பத்திரத்தை நேரடியாகத் தனக்குள்ள நிதி ஆதாரங்களைப் பிரதிபலிக்கும் ஒரு தொகைக்குள் குறைக்க உத்தரவு கோரியுள்ளார்.
- பெல்லோ, ஒரு பிரகாசமான எதிர்காலம் கொண்ட இருபத்தி மூன்று வயது கவிஞர், பிறப்பால் அமெரிக்கப் பிரஜையாகவுள்ள சிறு மகனின் தந்தை, சட்டப்படியான முதன்மை பராமரிப்பாளராகவும் உள்ளார். 2000 ஆம் ஆண்டில் மூன்று வயது குழந்தையாக அமெரிக்காவிற்குள் நுழைந்ததிலிருந்து அவர் கிட்டத்தட்ட தனது வாழ்நாள் முழுவதும் கலிபோர்னியாவில் சட்டத்திற்குப் புறம்பாக ஏதும் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். பண்ணைத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். பேக்கர்ஸ்ஃபீல்ட் கல்லூரியில் ஆசிரியர்களால் மதிக்கப்படும் ஒரு மாணவராக சிறந்து விளங்குகிறார். அவரது வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. கண்ணைத் தொறக்கனும் நீதி.
நன்றி: தினமணி (01 – 02 – 2025)