- இன்றைய சமூக ஊடக காலகட்டத்தில் யாரெல்லாம் அஞ்சல் அட்டையில் எழுதிவருகிறீர்கள்? நிச்சயம் இதற்கான பதில், எதற்கு எழுத வேண்டும். அடுத்த நொடியில் தகவலை அனுப்பிவிட முடிகின்ற இந்தக் காலத்தில் எதற்கு அஞ்சலட்டை? காரணம் இருக்கிறது.
உங்களுக்குத் தெரியுமா
- உலகிலேயே மிகக் குறைந்த விலையில் அஞ்சல் சேவை வழங்கும் நாடுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் உள்ளது. இன்று இந்தியா முழுவதும் நாம் தொடர்புகொள்ள 25 பைசா அஞ்சலட்டை போதுமானது. இன்றும் இது அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் கிடைக்கிறது.
- அதே போன்று உலக நாடுகள் அனைத்துக்கும் இந்தியாவிலிருந்து அஞ்சல் அட்டையில் தொடர்புகொள்ள ரூ.15 அஞ்சல் தலை போதுமானது. இன்று உள்ளூருக்குள் கூரியர் அனுப்பவே ரூ. 75 ஆகிறது. வெளிநாடுகளுக்கு கூரியர் செலவு எவ்வளவு என்பது நாம் அறிந்ததே.
உலக அஞ்சல் நாள்
- 1874ஆம் ஆண்டு யுனிவர்சல் போஸ்டல் யூனியன் (யுபியு) நிறுவப்பட்டதன் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் 9ஆம் தேதி உலக அஞ்சல் நாள் கொண்டாடப்படுகிறது. யு.பி.யு. என்பது ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு சிறப்பு நிறுவனம், அதன் 192 உறுப்பு நாடுகளில் அஞ்சல் கொள்கைகளை இது ஒருங்கிணைக்கிறது.
- உலக அஞ்சல் நாள் என்பது நமது அன்றாட வாழ்க்கையிலும் அதற்கு அப்பாலும் அஞ்சல் சேவைகள் வகிக்கும் முக்கியப் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு வாய்ப்பு. அஞ்சல் சேவைகள் உலகெங்கிலும் உள்ள மக்களுக்குக் கடிதங்கள், பார்சல்கள், நிதிச் சேவைகளை அனுப்பவும் பெறவும் நம்பகமான, மலிவான வழியை வழங்குகின்றன. குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளின் கிராமப்புற, பின்தங்கிய பகுதிகளில் சமூக - பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
டிஜிட்டல் யுகத்தில் அஞ்சல் சேவைகள்
- டிஜிட்டல் யுகத்தில் அஞ்சல் துறை பல சவால்களை எதிர்கொண்டுவரும் அதே வேளையில், புதிய வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் தகவமைத்துக்கொண்டும் வருகிறது. அஞ்சல் சேவைகள் மின்-வணிக விநியோகம், நிதிச் சேவைகள், டிஜிட்டல் அரசு சேவைகள் போன்ற பரந்த அளவிலான தயாரிப்புகள், சேவைகளை வழங்குகின்றன. செயல்திறன், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்துவருகிறது இந்திய அஞ்சல் துறை.
- எடுத்துக்காட்டாக, பல அஞ்சல் நிலையங்கள் இப்போது இ-காமர்ஸ் (மின் வணிகம்) விநியோகச் சேவைகளை வழங்குகின்றன. இது வணிகர்கள் தங்கள் தயாரிப்புகளை உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வாய்ப்பளிக்கிறது. இது மின் வணிகத்தின் வளர்ச்சியை அதிகரிக்க உதவியுள்ளது.
- நிதிச் சேவைகளை வழங்குவதில் இந்திய அஞ்சல் துறை பல சேவைகளை வழங்கி முக்கியப் பங்காற்றிவருகிறது. இந்தியா போன்ற நாடுகளில், அஞ்சல் சேவைகள் பணப் பரிமாற்றங்கள் - சேமிப்புக் கணக்குகள் போன்ற அடிப்படை வங்கிச் சேவைகளையும் வழங்கி வருகின்றன. இது கிராமப்புற - பின்தங்கிய பகுதிகளில் உள்ள மக்கள் நிதிச் சேவைகளைப் பெறுவதை எளிதாக்கியுள்ளது.
- மேலும், டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக அஞ்சல் சேவை அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட்டுவருகிறது. இதன் மூலம் மக்கள் கடவுச்சீட்டைப் புதுப்பித்தல் அல்லது வரி செலுத்துதல் போன்ற அரசாங்க சேவைகளை இணையத்தில் அணுக முடிகிறது. மக்கள் அரசாங்கத்துடன் தொடர்புகொள்வதை இது எளிதாகவும் வசதியாகவும் மாற்றுகிறது.
- உலகப் பொருளாதாரத்தில் அஞ்சல் சேவைகளும் முக்கியப் பங்காற்றுகின்றன. உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுடன் வர்த்தகம் செய்யவும் தொடர்புகொள்ளவும் வணிக நிறுவனங்களுக்கு உதவுகின்றன. அத்தியாவசிய சேவைகள் - சந்தைகளுக்கான அணுகலை வழங்குவதன் மூலம் வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த அஞ்சல் சேவைகள் உதவுகின்றன.
உலக அஞ்சல் நாளைக் கொண்டாடுவோம்
- உலக அஞ்சல் நாள், உலகம் முழுவதும் பல்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் அஞ்சல் அலுவலகங்களில் அஞ்சல்தலைக் கண்காட்சிகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளாக நடத்தப்படுகின்றன. அஞ்சல்தலை சேகரிப்பு மன்றங்கள் புதிய அஞ்சல்தலைகள், சேவைகளை விளம்பரப்படுத்த இந்த நாளைப் பயன்படுத்துகின்றன.
- உங்களின் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருக்கு ஒரு கடிதம் அல்லது அஞ்சல் அட்டையை அனுப்பலாம். உங்கள் உள்ளூர் அஞ்சல் நிலையத்திற்குச் சென்று அவர்கள் வெளியிட்டுள்ள சிறப்புத் அஞ்சல்தலைகள், சேவைகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம்.
- இந்திய அஞ்சல் துறையின் அஞ்சல் - பார்சல் சேவைகளைப் பயன்படுத்தி உள்ளூர் அஞ்சல் சேவையை ஆதரிக்கலாம். இந்திய அஞ்சல் துறையின் வரலாற்றையும் முக்கியத்துவத்தையும் பள்ளிக் குழந்தைகளுக்குத் தெரிவிக்கலாம்.
- #WorldPostDay என்கிற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி உலக அஞ்சல் நாளைப் பற்றி சமூக ஊடகங்களில் பரப்புரைச் செய்யலாம். நமது அன்றாட வாழ்வில் அஞ்சல் சேவைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. உலக அஞ்சல் நாள் என்பது அஞ்சல் துறை, சமூகத்திற்கு வழங்கும் பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதலாம்.
- பேரிடர் நிவாரணம், மனிதாபிமான உதவி முயற்சிகள் ஆகியவற்றில் அஞ்சல் சேவைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு பேரழிவிற்குப் பிறகு, அஞ்சல் சேவைகள்தாம் பெரும்பாலும் முதலில் களத்தில் இறங்குகின்றன எனலாம். மேலும் இவை பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதில் முக்கியப் பங்குவகிக்கின்றன.
- இன்று அஞ்சல் அட்டைகள் எழுதப் பலருக்கும் ஆர்வம் இருக்கும். நாம் யாருக்கு எழுதுகிறோமோ, அவர்கள் நமக்குப் பதில் தருவது அரிதே. கடிதம் எழுதுபவர்களுக்காகவே, www.postcrossing.com போன்ற பல இணையதளங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் நீங்கள் பதிவுசெய்து கொண்டால், உலகம் முழுவதும் கடிதம் எழுத ஆர்வமுள்ளவர்களுடன் தொடர்புகொள்ள முடியும். உங்களின் முகவரி - சுய விவரங்கள் எக்காரணத்தினைக் கொண்டும் மூன்றாம் நபருக்குச் செல்லாது என இதில் உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
- இன்றைய இளைஞர்கள் பலரும் இந்த போஸ்ட்கிராஸிங் இணையதளத்தில் பதிவுசெய்து கடிதங்களை எழுதி வருகின்றனர். வளர்ந்த நாடுகளான ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில்தாம் இன்றும் நிறைய அஞ்சல் அட்டை எழுதுபவர்கள் அதிகமாக உள்ளனர்.
கடிதம் எழுதுவதால் ஏற்படும் நன்மைகள்
- கடிதம் எழுதுவது என்பது ஒருவரின் உணர்வுகளையும் எண்ணங்களையும் மற்றொருவருக்கு நேரடியாக வெளிப்படுத்துவதற்கு ஒரு சிறந்த வழி.
- கடிதம் எழுதுவதன் மூலம், நம் அன்புக்குரியவர்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொள்ளலாம். மேலும், நம் உணர்வுகளையும் எண்ணங்களையும் எந்தத் தடையுமின்றி வெளிப்படுத்தலாம். இது நம் அன்புக்குரியவர்களுடன் நம்முடைய உறவை மேலும் வலுப்படுத்த உதவுகிறது.
- இதன் மூலம், நம் மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ளலாம். கடிதம் எழுதும்போது, நம் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை இறக்கிவைக்கலாம். இது நம் மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது.
- கடிதம் எழுதும்போது, நம் எண்ணங்களைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் வெளிப்படுத்த முடியும். இது நம் எழுத்துத் திறனை மேம்படுத்தவும், நம் மொழித் திறனை வளர்க்கவும் உதவுகிறது.
- கடிதம் எழுதுவதன் மூலம், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். கடிதம் எழுதும்போது, நம் அறிவைப் பயன்படுத்தி, நம் கருத்துக்களையும் யோசனைகளையும் வெளிப்படுத்த முடிகிறது. இது நம் அறிவை விரிவுபடுத்தவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் உதவுகிறது.
- கடிதம் எழுதுவது, நேர்மறையான மனநிலையை உருவாக்க உதவுகிறது. கடிதம் எழுதும்போது, நம்முடைய வாழ்க்கையில் நல்ல விஷயங்களைப் பற்றிச் சிந்திக்க வழி கிடைக்கிறது. இது நம் மனநிலையை மேம்படுத்தவும், நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும் வைக்கிறது.
- கடிதம் எழுதுவது என்பது ஒரு சிறந்த பொழுதுபோக்கு மட்டுமல்ல. கடிதம் எழுதுவதன் மூலம், நம் வாழ்க்கையை மேலும் சிறப்பாக மாற்றலாம். இந்த நாளினை நாமும் கடிதம் எழுதிக் கொண்டாடுவோம்!
நன்றி: இந்து தமிழ் திசை (08 - 10 – 2023)