அன்றாடமும் எழுத்தும்
- அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
- அன்றாட வாழ்வை இயற்கையுடன் இணைந்ததாகப் பார்க்கும்போது, பெரும்பாலும் மனிதர்களின் இயக்கம் தங்களைச் சுற்றியுள்ள குழுவினரின் எல்லைக்குள்தான் அமைகிறது. ஒரு கிராமத்தில் பிறந்த மனிதர் பெரும்பாலும் அந்தக் கிராமத்தவர்கள், சுற்றியுள்ள சில கிராமத்தவர்களுடன் கொள்ளும் உறவிலேயே மொத்த வாழ்க்கையும் அமைந்துவிடலாம்.
- ஆதிவாசி இனக் குழுக்களிலும் இதனைக் காணலாம்; அவர்கள் தங்கள் குழுக்களுக்கு உள்ளேயே மண உறவு கொண்டு, ஒரு குறிப்பிட்ட பிரதேச வரையறைக்குள்ளேயே வாழ்வார்கள். நாடோடி இனக் குழுக்கள் இடம்பெயர்ந்து பயணப்பட்டாலும், அவர்களுடைய சமூக உறவுகளும் அந்தக் குழுவுக்குள்ளேயே அமைந்துவிடும். ஆங்கிலத்தில் ‘கம்யூனிட்டி’ என்று அழைக்கப்படும் இந்தக் குழு சார்ந்த வாழ்வினை முகத்தை முகம் பார்த்த குழு (face to face community) என்றழைப்பார்கள். இவ்வகையான குழுக்கள் பேச்சுமொழியைப் பயன்படுத்தினாலும், எழுத்தைப் பயன்படுத்தத் தேவையற்று இருப்பார்கள்.
- விவசாய சமூகங்களின் உபரி உற்பத்திப் பண்டப் பரிமாற்றத்துக்கு வழிவகுத்து, வர்த்தக முறைகள் தோன்றியபோது நகரங்கள் தோன்றின. அத்துடன் எழுத்தும் தோன்றியது எனக் கருதலாம். வர்த்தக நடவடிக்கைகளை, கொடுக்கல் வாங்கல்களை எழுதிவைத்துக்கொள்ளும் முறை தோன்றியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு எண்ணங்களை எழுதி வைத்துக்கொள்வதும் தொடங்கியது.
- ஒரு நகரத்தில் இருப்பவர் தொலைதூரத்தில் மற்றொரு நகரில் இருப்பவருடன் எழுத்து மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் சாத்தியம் உருவானது. அரசர்களது ஆணைகள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டன. இந்த விதமாக எழுத்து, எழுதுபவர் வாழும் இடத்திலிருந்து வெகுதூரம் பயணிப்பதாகவும், எழுதப்பட்ட காலத்திலிருந்து பல நூற்றாண்டுகள் கழித்து வாசிக்கப்படக்கூடியதாகவும் மாறியது. சுருங்கச்சொன்னால் எழுதும் உடலிலிருந்து பெருமளவு அந்நியமாகி இயங்கும் தன்மை கொண்டதாக எழுத்து செயல்பட்டது.
பேச்சும் எழுத்தும்:
- ஒருவரது உடலில் தோன்றும் எண்ணங்களை அவர் உடலே ஒலிவடிவில் பேச்சாக ஒலிப்பதால் அதன் நம்பகத்தன்மை போற்றப்படுகிறது. எழுத்தில் பதிவுசெய்வது நிலைத்தன்மை கொண்டதாக இருந்தாலும், அதனை உடல் பதிவுசெய்த தருணத்துக்குப் பின் அது தனித்து இயங்குவதால் அது எழுதப்பட்ட தருணம் ஐயத்துக்குரியதாக மாறுகிறது.
- அதனால்தான் எழுதியவர் கையெழுத்திடுவது, வேறு சிலர் அதனைப் பார்த்ததற்குச் சாட்சியாகக் கையெழுத்திடுவது ஆகியவை தேவைப்படுகின்றன. நேர்ப் பேச்சின் நம்பகத்தன்மை கருதித்தான் நீதிமன்றத்தில் நேரில் வந்து சாட்சியளிக்க வேண்டும், விளக்கம் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
- மொழியில், பேச்சுக்கும் எழுத்துக்குமான இந்த வித்தியாசம் ஒருவகையில் மேலோட்டமானது என்று கூறுகிறார் ஃபிரெஞ்சுத் தத்துவவாதி ழாக் தெரிதா. ஏனெனில், ஏற்கெனவே உருவாக்கப்பட்ட மொழியைத்தான் ஒருவர் பேசுகிறார். ஓர் உடல் ஒலிக்கும் சொற்களின் வித்தியாசங்கள் மற்றொரு உடலுக்குப் பொருள்படுவது ஏற்கெனவே வழங்கப்பட்ட அர்த்தங்களால்தான்.
- எனவே, பேச்சு என்பதும் ஒலி வடிவ எழுத்துதான்; வரி வடிவ எழுத்தைப் போலவே அதுவும் சமூக இயக்கத்தில் உருவாவதுதான் என்பதை மிக விரிவாக விவாதிக்கிறார். பேச்சோ, எழுத்தோ இரண்டுமே சமூக ஒப்பந்தங்களின், சமூக இயக்கத்தின் விதிமுறைகள் உருவாக்கத்தின் அடித்தளங்கள்தான் எனலாம்; ஒலி வடிவ வித்தியாசங்களையோ, வரி வடிவ வித்தியாசங்களையோ நிலைப்படுத்திப் புலன் உலகமாக அறியப்படுபவற்றைக் குறிப்பது மொழி. அதில் எழுத்து தனித்து இயங்கவும், சமூகப் பொதுவாக இயங்கவும் அதிக ஆற்றலுடன் உள்ளது.
- இவ்வாறு சமூக விதிகள் மொழி வழியாக இயங்குவதன் தொடர்ச்சியாகத்தான் ஒருவரது வாழ்க்கையே இப்படித்தான் அமைய வேண்டும் என்று கடவுள் விதித்திருப்பது சார்ந்த நம்பிக்கை பிறந்தது. அந்த விதியை பிரம்மன் ஒவ்வொரு மனிதரின் தலையிலும் எழுதியிருப்பதாகவும் உருவகிக்கப்பட்டது. ‘எல்லாம் என் தலையெழுத்து’ என்று விதியை நொந்துகொள்ளாத மனிதர்கள் தமிழ்நாட்டில் அபூர்வம். எந்த எழுத்தையும், ‘தலையெழுத்தையும்’ மாற்றி எழுதுவதும், அழித்து எழுதுவதும் பெரும் சாகசம்தான்; புரட்சிதான்.
அச்சு இயந்திரம் உருவாக்கிய சமூகப் பிரபஞ்சம்:
- 15ஆம் நூற்றாண்டின் மத்தியில் அச்சு இயந்திரம் வடிவமைக்கப்பட்டதும், அச்சுத்தொழில் பரவியதும் மானுடத்தின் புதிய அத்தியாயத்தை எழுத்து தொடங்கிவைத்தது என்றால் மிகையாகாது. ஏனெனில், முன்னெப்போதும் இல்லாத வகையில், தகவல்களும் சிந்தனைகளும் பல நூறு, பல ஆயிரம் பிரதிகள் துரிதமாக அச்சிடப்பட்டு சமூக வெளியெங்கும் பரவும் சாத்தியம் தோன்றியது.
- நேரடிப் பேச்சினால் தகவமைக்கப்பட்டிருந்த உடனடிச் சமூக எல்லைகள் தகர்ந்து, அச்சின் மூலம் பெரும் சமூகத் தொகுதிகள் உருவாகும் சாத்தியம் பிறந்தது. வாசிப்பதும், எழுதுவதும் மனிதர்களின் இன்றியமையாத திறன்களாக மாறின. அறிவியல், அரசியல் இரண்டையுமே மிகப் பரவலான கூட்டுச் செயல்பாடாக மாற்ற முடிந்தது.
- இவ்வாறு அச்சினால் தொகுக்கப்பட்ட சமூக வெளிகளின் காலம் திட்டவட்டமாக வரலாற்றுக் காலமாக உருப்பெற்றது. மனிதர்களின் பலவிதமான கூட்டுத் தன்னுணர்வுகள் வரலாற்று அடையாளங்களாக வெளிப்படத் தொடங்கின. தங்கள் இருத்தலியல் தேவைகளுக்காக மனிதக் குழுக்கள் உருவாக்கிக்கொண்ட கடவுள்கள், வழிபாட்டு முறைகள் எல்லாம் வரலாற்று மதங்களாகத் தொகுக்கப்பட்டன.
- ஒவ்வொரு சமூக அடையாளமும், வரலாற்று அடையாளமாக மாற வேண்டியது தேவையானது. எழுத்தறியா மக்கள் தொகுதிகள், வரலாறு அறியா மக்கள் தொகுதிகள் எல்லாம் பின்தங்கியவையாக, முதிர்ச்சியற்றவையாக, வளர்ச்சியற்றவையாகக் கருதப்படத் தொடங்கின; அடிமைப்படுத்தப்பட்டன; சுரண்டப்பட்டன; மாற்றித் தகவமைக்கப்பட்டன. எல்லாச் சமூகங்களும் எழுத்தைச் சக்கரமாகக் கொண்ட வரலாற்று வண்டிகளில் ஏற்றப்பட்டன.
- இத்தனைக்கும் பிறகு, எழுத்தையும் பேச்சையும் வடிவமைத்த தன்னுணர்வு இயற்கையிலிருந்து தான் பிரிந்துவிட்டதாக ஏக்கம் கொண்டது. அந்த ஏக்கம் இயற்கையுடன் மீண்டும் இணையும் விழைவை மட்டும் தரவில்லை. மாற்றாக, இயல்வெளிக்கும் அப்பால் என்ன, அதனை இயக்குவது என்ன என்பது குறித்த தவிப்பையும் உருவாக்கியது. அந்தத் தவிப்பு ஒருபுறம் ஆன்மிகமாக, பரவசமாக மாறினால், மற்றொருபுறம் தன்முனைப்பாக, வன்முறையாக மாறிக்கொண்டேயிருக்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 02 – 2025)