TNPSC Thervupettagam

அன்றாடமும் நிலைத்தலும்

November 25 , 2024 54 days 112 0
  • அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
  • மனித உடலின் நரம்பு மண்டலத்​தால், செயல்களை மெய்நிகர் பிம்பங்​களாகப் பிரித்துச் சேகரித்​துக்​கொள்வது சாத்தியமானதால், ஒவ்வொரு உடலும் புலன்கள் தரும் தகவல்களை நினைவுசேகரமாக மாற்றிக்​கொண்டு, அதன் உதவியுடன் செயல்​படுவது சாத்தி​ய​மானது. இந்தப் புலன் அனுபவங்கள் பிற மனித உயிரி​களுக்கும் பொதுவாக அமைவதால், மனிதர்​களுக்​கிடையே அனுபவங்​களைப் பகிர்ந்​து​கொள்​வதும் சாத்தி​ய​மானது. அவர்களிடையே மொழி தோன்றியது.
  • மொழியில் ஓர் உடல் தன்னையே நான் என்று குறிப்​பிட்டுக்​கொள்வது சாத்தி​ய​மானது. அந்த ‘நான்’ என்கிற சுயம், தன்னுணர்வின் களமானது. ஆனால், உடலுக்கும் மொழிக்கும் இடையில் தன்னுணர்வு ஒரு பிளவினை உருவாக்கு​வ​தாகவும் இருந்தது.
  • உடலின் இயக்கம் நின்ற பிறகு, அதாவது, உடலால் தான் இயங்கு​வதற்கான ஆற்றலை உருவாக்​கிக்​கொள்ள முடியாமல் போய், அது இயங்குவதை நிறுத்​திக்​கொண்ட பிறகு, தன்னுணர்வின் வெளிப்​பாடான மொழியாலான சுயம் என்னவாகிறது என்கிற கேள்வி எழுந்தது. அப்போதுதான் உயிர் சக்திக்கு ஜீவாத்மா என்று மொழியில் பெயரிடத் தொடங்​கினர்.
  • இயற்கையில் உயிரினங்கள் எல்லாமே தோன்றி மறைகின்றன. பிற இயற்கையின் வடிவங்​கள்கூட மாற்றமடைகின்றன. புயல், மழை, வெள்ளம், கடற்கோள், காட்டுத் தீ, எரிமலை வெடிப்பு, நில அதிர்வு எனப் பல இயற்கைச் சீற்றங்கள் பேரழி​வு​களைத் தோற்று​விக்​கின்றன. இவ்வாறு இயற்கைப் பெருவெளியின் மாறுகின்ற தோற்றங்​களுக்கு அப்பாலும் ஒரு நிலையான முடிவிலியான ஆற்றல் இருக்​கிறது என்கிற எண்ணமும் பிறந்தது. அதுவே பரமாத்மா என்றும், கடவுள் என்றும் அழைக்​கப்​பட்டது.
  • இப்படித் தன்னுணர்வின் வெளிப்​பாடான சொல்லும், கடவுளும் சேர்ந்து பிறந்​த​தால்தான் விவிலி​யத்தில் ‘ஆதியிலே சொல் இருந்தது; அது கடவுளிடம் இருந்தது’ என்ற புகழ்​பெற்ற வாசகம் இடம்பெறுகிறது. காளிதாசன் ‘குமார சம்பவம்’ வாழ்த்துப் பகுதி​யில், ‘சொல்லும் பொருளும் இணைந்​திருப்​பதுபோல இணைந்து உலகைப் படைத்த பார்வதி, பரமேசுவர’னை வணங்குகிறார்.

மொழி நாடும் நிலைத்​தன்மை:

  • சொல் அல்லது மொழி நிலைத்து நிற்கும் சாத்தி​யத்தை, நிலைத்​தன்​மையை, முடிவிலியைக் குறித்துச் சிந்திப்​பதைச் சாத்தி​ய​மாக்​கியது. இயற்கையை முடிவிலியாக உருவகிப்பது எப்படித் தேவைப்​பட்டதோ, அதேபோலச் சமூக உறவுகளுக்கு நிலைத்​தன்​மையைக் கொடுப்பது தேவைப்​பட்டது. ஏனெனில், உடலிலிருந்து உருவாகி அதனை இயக்கக்​கூடியதாக மாறிய மொழிவயப்பட்ட சுயம், செயலைத் தேர்வுசெய்யும் ஆற்றலைப் பெற்றது.
  • ஒருவரை நேசிக்​கலாம், கொலையும் செய்ய​லாம், தன்னையே நேசிப்பதன் விளைவாகத் தற்கொலையும் செய்து​கொள்​ளலாம் எனப் பல சாத்தி​யங்கள் உடலை இயக்கும் சுயத்​துக்கு உருவானது. இதையே சுயத்தின் தந்திரம், சுதந்​திரம் என்று கூறுகிறோம். இந்தச் சுதந்​திரத்தை நெறிப்​படுத்தி சமூக ஒழுங்கினை உருவாக்குவது கூட்டு வாழ்க்கையின் நிலைத்​தன்​மைக்கு அவசிய​மாகும். ஆங்கிலத்தில் நிலை என்பதை ‘ஸ்டேட்’ (State) என்று சொல்கிறோம். அதுவே ஆங்கிலத்தில் அரசைக் குறிக்கும் சொல்லாகிறது. இந்த நிலைத்​தன்மை அல்லது அரசு நீதிபரி​பாலனத்​துக்கு அவசியம் என்று கருதப்​படு​கிறது.
  • உதாரணமாக, ‘ஊமை விழிகள்’ படத்தின் பாடல் ஒன்றின் ஆரம்ப வரிகள் இவை: ‘நிலை மாறும் உலகில், நிலைக்​கும் என்ற கனவில், வாழும் மனித ஜாதி, அதில் வாழ்வ​தில்லை நீதி...’ இதில் நிலைப்பது என்பதும், நீதி என்பதும் இணைக்​கப்​படு​கிறது. பொதுவாக, நீதி நிலைநாட்​டப்பட வேண்டும் என்று சொல்கிறோம்.
  • இவ்வாறு நிலைநாட்​டப்​படும் நீதி எல்லோருக்கும் சமமானதாக எப்போதும் இருப்​ப​தில்லை. பல வேளைகளில் சமூக ஏற்றத்​தாழ்வுகள், ஆண்டான்​-அடிமை, மேலோர்​-கீழோர் எனப் பல வடிவங்​களில் நிலவுவதையும் சமூக ஒழுங்காக அரசு ஏற்றுக்​கொள்​கிறது. எல்லா சுயங்​களுமே கட்டற்ற சுதந்​திரத்தைக் குறித்து அஞ்சுவ​தால், சமூக ஒழுங்​குகளை ஏற்கவே செய்கின்றன.
  • அரசற்ற நிலையைத் தமிழில் அராஜகம் என்று சொல்கிறோம். பெரும்​பாலும் இந்தச் சொல் ஒழுங்​கின்மை, வன்முறை என்றே பொருள் கொள்ளப்​படு​கிறது. அப்படி அராஜகத்தைத் தவிர்க்க வேண்டு​மென்​றால், ஒரு சமூகம் திட்ட​வட்டமாக நெறிமுறைகளுடன் வடிவமைக்​கப்பட வேண்டும் என்று முடிவிலியின் வடிவமான கடவுள்​களைக் கொண்டு அமைக்​கப்​படும் மதங்களும், அரசாள்​பவர்​களும் இணைந்து செயல்​படு​வார்கள். அன்றாட வாழ்வின் நிலையற்ற தன்மையைச் சட்ட திட்டங்கள் மூலம் நிலைப்​படுத்து​வார்கள்.

நிலைத்​தன்மையை ஊடுருவிப் பரவும் அன்றாடம்:

  • அன்றாடத்தைக் குறித்த முக்கியமான கோட்பாட்டு நூல் ‘The Practice of Everyday Life’, ஃபிரெஞ்சு மொழியில் 1980 ஆம் ஆண்டு மிஷேல் டு செர்டூ (1925-1986) என்பவரால் எழுதப்​பட்டது. அதில் அவர் அன்றாடத்தின் களத்தில் எப்படி அரசமைப்​பின், சமூக ஒழுங்​கமைப்பின் சட்ட திட்​டங்​களும், தனிமனிதர்​களின் சுதந்​திரமும் சந்திக்​கின்றன என்பதைக் குறித்து கவித்துவமான பல கருத்​தாக்​கங்களை முன்வைக்​கிறார்.
  • அரசும் நிறுவனங்​களும் செய்வதை அவர் திட்ட​மிடல் (strategy) என்று கூறுகிறார். ஆனால், மனிதர்​களின் அன்றாட வாழ்வு செயல்​பாட்டு நுட்பங்​களால், தந்திரோ​பா​யங்​களால் அதாவது, tactics என்பதால் நிறைந்​திருக்​கிறது என்று கூறுகிறார். சரியாகச் சொன்னால் சட்டதிட்​டங்கள் என்பவை சல்லடைபோல இருக்​கும். மனிதர்​களின் அன்றாட வாழ்வு நீர்போல அதனுள் புகுந்து செல்லும். அன்றாட வாழ்வை முழுமையாக எந்த ஒழுங்​கமைப்​பாலும், சட்டதிட்​டங்​களாலும் கட்டுப்​படுத்​திவிட முடியாது.
  • அன்றாட வாழ்வின் போக்கில் பல நெகிழ்வு​களும், புத்தாக்​கங்​களும் இயல்பாக நடந்து​கொண்​டே​யிருக்​கும். அதே சமயம், அதிகாரத்தை வடிவமைக்கும் அமைப்புகள் தொடர்ந்து நெறிமுறைகளை, விதிமுறைகளை உருவாக்​கிக் ​கொண்டே இருக்​கும்.
  • ஆதிக்க சக்திகள் கடலோரத்துப் பாறைகள்போல உயர்ந்​தோங்கி நிற்கும்​போதும் அவற்றின் மீது அன்றாடத்தின் அலைகள் மோதிக்​கொண்​டே​யிருக்​கும், பொங்கிப் பரவும், அரித்துச் செல்லும். மானுடச் சமூகத்தில் நிலைத்​தன்மை நாடுதலும், அதனால் உருவாகும் நிறுவனங்​களின் போதாமையைக் கடந்து, ஊடுருவி நெகிழ்வுத்​ தன்​மை​யுடன் மனிதர்கள் சுயேச்​சையாக இ​யங்​குதலும் அன்​றாடத்​தின் பெரும்​பரப்பை உரு​வாக்​குகின்​றன.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories