TNPSC Thervupettagam

அன்றாடமும் மானுட ஏக்கமும்

February 17 , 2025 5 days 21 0

அன்றாடமும் மானுட ஏக்கமும்

  • அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
  • மானுட உயிரி தன் நரம்பு மண்டலத்தின் நினைவுசேகர ஆற்றலால் புலன் உலகை நிலைப்படுத்தியும், வேறுபடுத்தியும் அறிவதுடன் பிற மானுட உயிரிகளும் பகிர்ந்துகொள்ளும் புலனுலகைக் குறிப்பிடும் வகையில் வேறுபட்ட ஒலி வடிவங்களையும், வரி வடிவங்களையும் தொகுத்து மொழியாக ஒருவரோடு ஒருவர் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஆற்றலையும் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் தன்னையே ‘நான்’ என்று குறித்துக்கொள்ளும் தன்னுணர்வையும் பெற்றது.
  • அந்தத் தன்னுணர்வு, தான் சார்ந்துள்ள உடல் இயங்கிக்கொண்டிருக்கும் அன்றாடம் என்கிற காலப் பரிமாணத்தையும், அந்த உடலின் வாழ்நாள் காலத்தையும் கடந்த ஒன்றாகத் தன்னைச் சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றபோதுதான் இயற்கையின் காலத்தை அன்றாடமாக மட்டுமல்லாமல், முடிவிலியாகவும் சிந்தித்தது. கடவுள், தெய்வம், இறைவன் என்றெல்லாம் ஒரு பெயரை அந்த முடிவிலியான இயற்கையின் உருவகமாகச் சிந்தித்தது. மானுடத் தன்னுணர்வின் பயணத்துக்கான ஆன்மிக அடித்தளத்தை அமைத்தது.
  • உடலின் புலன் அனுபவசேகரத்தால் விளைந்த நினைவுசேகரம்தான் தன்னைத் தனித்துக் காணும் சுயமாகவும், தன்னையே மொழியில் சுட்டிக்கொள்ளும் தன்னிலையாகவும் தன்னுணர்வை உருப்பெற வைக்கிறது என்றாலும், அந்தத் தன்னுணர்வு உடலில் சிறைப்பட்டிருப்பதாகவும் உடலைக் கடந்து தனக்கோர் இருப்பு சாத்தியமாவதாகவும் எண்ணத் தலைப்படுகிறது.
  • அந்தச் சாத்தியத்தை எப்படிக் கைப்பற்றுவது என்று ஏங்கத் தொடங்குகிறது. இந்த ஏக்கம் இரண்டு திசைகளில் இயங்குகிறது. ஒன்று புலன் அனுபவத்தைத் தன்வசமாக்க முயல்கிறது; அல்லது ‘மெய்’யை மறந்து பரவசமாக நினைக்கிறது. இந்த இரண்டுமே முழுமையாக நிகழ முடியாததால் அலைப்புறுகிறது.
  • மானுடத் தன்னுணர்வு சார்ந்த ஏக்கத்தின் செயல்பாடு பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. தன்வசம்-பரவசம்; சுயநலம்-பொதுநலம்; அன்பு-வெறுப்பு என்றெல்லாம் முரண் வடிவங்களில் சிக்குகிறது. அன்றாடத்தைச் சமூக ஒழுங்குகளின் நிலைத்தன்மைகளில் கட்டமைத்து, அதனூடாகவும் பல வகைகளில் வெளியேறி அன்றாட வெளிகளில் தொடர்ந்து அலைகின்றது.

மானுட ஏக்கம் கொள்ளும் வடிவங்கள்:

  • மானுட ஏக்கம் காணும் முதல் வடிவம் வம்சாவளித் தொடர்ச்சி எனலாம். தன் குழந்தைகள் மூலமாகத் தனது தன்னுணர்வின் பயணம் தொடர்வதாகக் கருதிக்கொள்வது. மானுடச் சமூகங்களில் இது உறவுமுறை வலைப்பின்னல்களாக அமைந்தபோது, அதையொட்டிக் குழு அடையாளங்களும், வன்முறையும் தோன்றியது. பொருள் சேகரம் என்கிற சாத்தியம் வம்சாவளித் தொடர்ச்சியுடன் இணைந்தபோது நிலைத்தன்மைக்கான ஏக்கம் சமூக ஒழுங்குகளையும், நிலைமாற்றத்துக்கான ஏக்கம் முரண்களையும் வன்முறையையும் தோற்றுவித்தது.
  • ஏக்கத்தின் அடுத்த வடிவம் கடவுள் என்கிற முடிவிலி. பிறவிப் பெருங்கடலை இறைவனடி சேர்ந்து நீந்திக் கடப்பதுதான் மிகப் பரவலாகச் சாத்தியமான தீர்வு. அதேவேளை இந்த இறைவனைக் கொண்டு அன்றாடத்தின் தற்செயல்களை, முரண்களைக் களைந்து சமூக ஒழுங்கையும், நிலைத்தன்மையையும் ஏற்படுத்த முனையும்போது வன்முறை தோன்றுகிறது. கடவுள் என்கிற வடிவத்துடன் தொடர்புடையதுதான் காதல் என்ற வடிவமும்.
  • மூன்றாவது தீர்வு, மானுடப் பொது நன்மைக்காகத் தன் வாழ்நாளைச் செலவிட்டு, அந்தப் பொது நன்மையின் தொடர்ச்சியில் தன்னைக் காண்பது. இதுதான் தன்னுணர்வின் வரலாற்றுப் பரிமாணம். அன்றாட வாழ்வின் தேவைகளை நிறைவேற்றுவதைவிட தங்கள் ஆற்றல்கள் அதிகமானவை என்று தன்னுணர்வு கொள்பவர்கள், இவ்வாறு தங்கள் செயல்பாடுகள் வரலாற்றை வடிவமைக்கும் என்று நினைத்து அப்படி ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆட்சி செய்பவர்கள், படைப்பாளிகள் போன்றோர் ஏக்கம் கொள்கிறார்கள்.
  • இந்த ஏக்கமும் எளிதில் தீரக்கூடியதில்லை என்பதால், மேலும் மேலும் ஏதாவது செய்ய உந்தப்படுவதுடன், தன் போட்டியாளர்கள் மீது பொறாமை, காழ்ப்பு கொள்வது, வன்செயல்களில் ஈடுபடுவது என்று வன்முறையில் முடிந்துவிடவும் நேர்கிறது.

அன்றாட வாழ்வு என்பதே வீழ்ச்சியா?

  • பாரதியார் கவிதைகளில் ஒன்று பரவலாக மக்களிடையே புழங்குவது. சிறிய சுவரொட்டியாகவெல்லாம் அச்சடித்து வீடுகளில் பலரும் ஒட்டிவைத்திருப்பதைக் காணலாம். மிகச் சக்திவாய்ந்த வரிகள்: ‘தேடிச் சோறு நிதந்தின்று/ பல சின்னஞ்சிறு கதைகள் பேசி/ மனம் வாடித் துன்பம் மிக உழன்று/ பிறர் வாடப் பல செயல்கள் செய்து/நரை கூடிக் கிழப் பருவமெய்தி/ கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்/ பல வேடிக்கை மனிதரைப் போலே/ நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?’ இந்த வரிகள் வர்ணிப்பது சமூகத்தின் பல அடுக்குகளில் மக்கள் வாழும் அன்றாட வாழ்வைத்தான்.
  • அவ்விதம் வாழ்வது வீழ்ச்சியென்றால் என்ன பொருள் என்பது சிந்தனைக்குரியது. ‘யோக சக்தி-வரங்கேட்டல்’ என்கிற தலைப்பில் உள்ள இந்தப் பாடல்களின் இறுதியில் ‘வையத்தலைமை எனக்கு அருள்வாய்’ என்று பாரதி வரம் கேட்கிறார். இதைப் போலவே, ‘பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்திட வேண்டும்’ என்றும் ‘மாநிலம் பயனுற வாழ வேண்டும்’ என்றெல்லாம் பாரதி கூறுவது தன்னுடைய தன்னுணர்வு மேம்பாட்டால் சமூக மேம்பாட்டைச் சாதிக்க வேண்டும் என்கிற விருப்பமே என்று கூறலாம்.
  • படிப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும், தன்னுணர்வின் மேம்பாட்டுக்காக ஏங்கவைக்கும் வரிகள் இவை. பராசக்தி, காளி, சாமுண்டி என்றெல்லாம் முடிவிலியை உருவகித்து பாரதியார் வரம் கேட்டாலும், தன்னுணர்வின் வரலாற்றுப் பரிமாணத்தில் பொது நன்மைக்குப் பங்காற்றவே அவர் கேட்கிறார் என்பது முக்கியம்.
  • மற்றொருபுறம், தன்னுணர்வு என்கிற அகம் கொள்ளும் இந்த ‘பாவம்’, அகம்பாவம் என்கிற தன்முனைப்பாக மாறுவது பெரும் போட்டிகளையும் வன்முறைகளையும் தோற்றுவிக்கிறது. அதிகத் தன்னுணர்வு கொண்டவர்கள் மற்ற ‘வேடிக்கை’ மனிதர்களைச் சமூகப் படிநிலைகளின் கீழ் நிறுத்தி அவர்களை அடக்கியாள்வதும், உழைப்பைச் சுரண்டுவதும், சமூக நிலைத்தன்மைகளை, அரசு வடிவங்களை உருவாக்குவதும் நிகழ்கிறது.
  • பின்னர், அதே தன்னுணர்வின் துணைகொண்டு, ‘ஆஹா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி! கொடுங்கோலன் மண்ணில் வீழ்ந்தான்!’ என்று பாடப்படுகிறது. இவ்வாறுதான் அன்றாடத்திலிருந்து கிளைக்கும் தன்னுணர்வு, முரண்கொண்டு மோதும் களமாக சமூக வாழ்வு அமைகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories