TNPSC Thervupettagam

அன்றாடமும் முதலீட்டியமும்

December 23 , 2024 28 days 55 0

அன்றாடமும் முதலீட்டியமும்

  • அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
  • உயிரியல் இருப்பு என்கிற அளவில் மனிதர்களும் விலங்குகளுடன் இயற்கையின் காலப்பரிமாணமான அன்றாடத்தில் இயக்கம் கொள்கின்றனர். மானுடத் தன்னுணர்வின் விளைவாக அவர்கள் தங்களை, சுயத்தை உயிரியல் இருப்பிலிருந்து தனிப்பட்டதாகக் காண்கிறார்கள்.
  • தங்கள் உயிரியல் இருப்பைக் கடந்து, தங்கள் தன்னுணர்வுச் சுயம் நீடிக்காதே என்று கவலைப்படுகிறார்கள். தங்கள் சுயம் கடவுளுடன் கலக்கும், இறைவனடி சேரும் என நினைக்கிறார்கள் அல்லது மீண்டும் மீண்டும் பிறக்கும் என நம்புகிறார்கள். ஆனால், அவையெல்லாம் உறுதிபட நிகழ்வதாகக் கூற முடிவதில்லை.
  • தங்கள் உயிரியல் தொடர்ச்சியாகப் பிள்ளைகள் இருப்பதால் ஆறுதல் அடையப் பார்க்கிறார்கள். ஆனால், குழந்தைகளின் தன்னுணர்வு பெற்றோரின் தன்னுணர்வுடன் வேறுபட்டு இருப்பதால், அதுவும் முழு நிறைவைத் தருவதில்லை. மானுடர்கள் பொதுவான சமூகத் தொடர்ச்சியை வரலாறாகக் கருதி வரலாற்றில் இடம்பெறும்படி ஏதாவது செய்துவிட்டால், அது தன்னுடைய உயிரியல் காலத்துக்குப் பிறகும் நிலைத்திருக்கும் என நினைக்கிறார்கள். எல்லோரும் அப்படி ஆசுவாசம் பெறுமளவு வரலாற்றில் இடம்பெற முடிவதில்லை.
  • மற்றோர் உபாயம்தான் பொருள் சேகரம். அது எதிர்கால நோக்கில் அமைவதால் உற்சாகம் தருகிறது. குறிப்பாகப் பொருள் சேர்த்துத் தங்கள் சந்ததியருக்கு விட்டுச்செல்லும்போது, தங்கள் வாழ்க்கை நீடிப்பதாக நினைக்கும் சாத்தியம் உருவாகிறது. நிறைய சொத்துகளை உருவாக்கிவிட்டு மரணமடைந்தால், தலைமுறை தலைமுறையாக நினைவுகொள்வார்கள், சுயத்தின் அடையாளம் வம்சத்தின் அடையாளமாக மாறித் தொடர்ச்சியைப் பெறும் என்கிற நம்பிக்கை தோன்றுகிறது.
  • இந்தப் பொருள் சேகரத்தின் தொடர்ச்சியாகத்தான் மற்றொரு சாத்தியம் தோன்றியது. அது என்னவென்றால், காலத்தைப் பொருள் மதிப்பாக மாற்றுவது. அதுதான் முதலீட்டிய நடைமுறையின் உயிர்நாடி. உங்களிடம் செல்வம் இருக்கிறது. ஆயிரம் பொற்காசு என்று வைத்துக்கொள்வோம்.
  • இந்த ஆயிரம் பொற்காசைப் பானையில் போட்டுப் புதைத்துவைத்தால் பத்தாண்டுகள், இருபதாண்டுகள் கழித்தும் அது ஆயிரம் பொற்காசாகத்தான் இருக்குமே தவிர, ஒரு பொற்காசுகூட அதிகரித்திருக்காது. மாறாக, அதைக் கொண்டுபோய் பட்டுத்துணி நெய்பவர்களிடம் கொடுத்து, துணிமணிகளை நெய்து வாங்கி, எடுத்துப் போய் விற்றால், இறுதியில் உங்களிடம் ஆயிரத்து ஐந்நூறு பொற்காசுகள் இருக்கும். ஆனால், நீங்கள் அலைந்து திரிந்து வேலை செய்ய வேண்டும்.
  • இன்னொரு சாத்தியம் தோன்றுகிறது. உங்களிடம் உள்ள காசுகளை நீங்கள் ஒரு பெருந்தனவந்தரிடம் தருகிறீர்கள். அவர் பட்டுத்துணி வியாபாரிகளுக்கு அந்தக் காசைக் கடனாகத் தருகிறார். அவர்கள் ஓராண்டு கழித்து ஈட்டும் லாபத்தில் ஒரு பங்கினைச் சேர்த்து அவருக்கு 1,200 பொற்காசுகளாகத் தருகிறார்கள்.
  • அவர் உங்களுக்கு 100 பொற்காசைப் பகிர்ந்து தருகிறார். இப்போது நீங்கள் எந்த வேலையும் பார்க்காமல் உங்கள் ஆயிரம் பொற்காசுகள் ஓராண்டில் அதிகப் பணத்தை விளைவித்துவிட்டது. இதைத்தான் பணத்தோட்டம் என்று அழைத்தார் அறிஞர் அண்ணா.
  • இந்த நடைமுறை வங்கித் தொழிலாக வளர்ச்சி பெற்ற பிறகு, குறிப்பிட்ட காலம் பணத்தைக் கொடுத்துவைத்தால், இத்தனை சதவீதம் வட்டி என்று முடிவானது. இதன் மூலம் பணம் என்பது காலத்துடன் மெல்லப் பிணைந்து, தன்னைப் பெருக்கிக்கொண்டது. வட்டி விகிதங்கள் அதிகரித்துப் பல வடிவங்கள் எடுத்தன. கந்து வட்டி, மீட்டர் வட்டி என்று கடனாளிகளின் உயிரைப் பறித்தன. கார்ல் மார்க்ஸ் இதனைத் துல்லியமாக வர்ணித்தார்.
  • முதல் நிலை: பண்டம் (C) – பணம் (M) – பண்டம் (C)
  • இரண்டாம் நிலை: பணம் (M) – பண்டம் (C) – அதிகப் பணம் (M’)
  • மூன்றாம் நிலை: பணம் (M) – அதிகப் பணம் (M’)
  • இப்படிப் பணம், அதிகப் பணமாக மாறுவது காலக் கணக்கீட்டில்தான் என்னும்போது காலம் இப்போது பெருக்கம், வளர்ச்சி என்று புதிய பரிமாணம் எடுத்தது. அதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால் பணத்தை வங்கியில் வைத்துப் பூட்டிவைத்தால் யாருக்கும் வட்டி கொடுக்க முடியாது.
  • அதை யாருக்காவது கடன் கொடுத்து, அவர் பொருளை உற்பத்திசெய்து, விற்று, லாபம் ஈட்டி வட்டி கொடுத்தால்தான் அதில் ஒரு பகுதியை முதலீட்டாளருக்கு வங்கியால் கொடுக்க முடியும். அதாவது, பணம் தொடர்ந்து அதிகப் பணம் ஆக வேண்டும் என்றால், பண்டங்கள் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு, விற்கப்பட்டு நுகரப்பட வேண்டும். புதியபுதிய பண்டங்களை உற்பத்திசெய்யத் தொழில்நுட்பங்கள் பெருக வேண்டும்.
  • அப்போது அந்தப் புதிய பண்டங்களால், தொழில்நுட்பங்களால், பண்டங்களின் நுகர்வால் மனிதர்கள் வாழ்க்கையும் மாற்றமடையும்; அது வரலாற்றுக் காலம் என்பதை அன்றாட வாழ்வில் சாத்தியப்படுத்தும். மானுடரின் வாழ்க்கை கடந்த ஐநூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து பல மாற்றங்களை அல்லது ‘வளர்ச்சி’யைச் சந்தித்துவந்துள்ள வரலாற்றுக்கு ஆதாரம் ‘வட்டி’ என்கிற பெயரில் பண மதிப்பைக் காலத்தோடு பிணைத்ததுதான்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 12 – 2024)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories