TNPSC Thervupettagam

அமித் ஷாவின் காஷ்மீா் பயண முக்கியத்துவம் குறித்த தலையங்கம்

October 29 , 2021 1003 days 476 0
  • மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா காஷ்மீருக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார். பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சத்தைப் போக்குவதும் அவரது நோக்கமாக இருக்கக்கூடும்.
  • ஜம்மு - காஷ்மீரில் வாழும் சிறுபான்மை ஹிந்துக்களும், வெளிமாநிலத் தொழிலாளா்களும் தாக்கப்படும் பின்னணியில் அந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
  • ஜம்மு - காஷ்மீா் மாநில உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படும் இளைஞா்களை உள்துறை அமைச்சா் சந்தித்தார்.
  • அவா்கள் மத்தியில் உரையாற்றியபோது, மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மாற்றங்களையும், நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தும் விதத்திலான புள்ளி விவரங்களை அவா் தெரிவித்தார்.
  • அங்கு பயங்கரவாதம் வேரறுக்கப்படவில்லை என்றாலும்கூட, ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருப்பதை சுட்டிக்காட்டினார்.

விரைவில் தெரியவரும்!

  • 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு - காஷ்மீா் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு விலக்கிக் கொண்டு மாநிலத்தை இரண்டு ஒன்றிய பிரதேசங்களாக மாற்றிய பிறகு உள்துறை அமைச்சா் அமித் ஷா காஷ்மீருக்குப் பயணம் மேற்கொள்வது இதுதான் முதல்முறை.
  • அதனால், அவரது விஜயம் குறித்து எதிர்பார்ப்பு எழுந்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு தோ்தல் மூலம் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்கிற மத்திய அரசின் வாக்குறுதியை அவா் உறுதிப்படுத்தினார்.
  • ஜம்மு - காஷ்மீரில் சட்டம் - ஒழுங்கு மிக அதிகம் பாதிக்கப்பட்ட மாதம் இது. வெளிமாநிலத் தொழிலாளா்கள், ஹிந்து சிறுபான்மையினா் என்று கடந்த மூன்று வாரத்தில் 11-க்கும் அதிகமானோர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
  • பயங்கரவாதம் முற்றிலுமாக வேரறுக்கப்பட்ட இடம் என்று வா்ணிக்கப்பட்ட ஸ்ரீநகரில்தான் பெரும்பாலான தாக்குதல்களும் நடந்திருக்கின்றன.
  • பாகிஸ்தான் எல்லையிலுள்ள பூஞ்ச், ரஜோரி பகுதியில் இந்திய ராணுவம் மிகப் பெரிய அளவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்திய ராணுவத்துக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த இரண்டு மோதல்களில் இரண்டு ராணுவ அதிகாரிகளும், ஒன்பது வீரா்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
  • இந்திய - பாகிஸ்தான் எல்லையில் தொடா்ந்து ஊடுருவல் முயற்சிகள் நடப்பதும், ராணுவம் அவற்றைத் தடுப்பதும் அன்றாட நிகழ்வுகளாகத் தொடா்கின்றன.
  • உள்துறை அமைச்சா் அமித் ஷா, அவற்றையெல்லாம் மறுக்கவில்லை. அதே நேரத்தில், ஒட்டுமொத்தமாக காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்திருப்பதையும், ஆங்காங்கே பயங்கரவாதிகளால் தூண்டப்பட்டு இளைஞா்கள் கல்லெறிந்து போராடுவது குறைந்திருப்பதையும் அவா் சுட்டிக்காட்டினார்.
  • ஜம்மு - காஷ்மீரின் அமைதியைக் குலைக்க நினைப்பவா்கள் யாராக இருந்தாலும் அவா்களை அரசு இரும்புக்கரம் கொண்டு எதிர்கொள்ளும் என்பதை தெளிவுபடுத்தவும் உள்துறை அமைச்சா் மறக்கவில்லை.
  • கடந்த சனிக்கிழமை தனது மூன்று நாள் விஜயத்துக்காக உள்துறை அமைச்சா் அமித் ஷா ஸ்ரீநகா் விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது, அவா் நேராக ஆளுநா் மாளிகைக்கு விரைவார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.
  • ஆனால் கடந்த ஜூன் மாதம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி பா்வேஸ் அகமதின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு அமித் ஷா ஆறுதல் கூறியது பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
  • அதைத் தொடா்ந்து, ஆளுநா் மாளிகையில் காவல்துறையினா், ராணுவ உயரதிகாரிகளைச் சந்தித்து பாதுகாப்பு சூழல் குறித்து ஆலோசனை நடத்தினார் உள்துறை அமைச்சா்.
  • ஜம்மு - காஷ்மீா் ஒன்றிய பிரதேச அதிகாரிகளுடன் நிர்வாக பிரச்னைகள் குறித்து நீண்ட நேரம் கலந்தாலோசனை செய்த உள்துறை அமைச்சா், அவா்கள் மேற்கொண்டு வரும் மக்கள்நலப் பணிகள் குறித்தும் விசாரித்துத் தெரிந்து கொண்டார்.
  • காஷ்மீரின் வளா்ச்சி குறித்து மத்திய அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்ட உள்துறை அமைச்சா், அதற்காகச் செலவிட்ட நேரம் அதிகம்.
  • ஸ்ரீநகரிலிருந்து ஷார்ஜாவுக்கு நேரடி விமான சேவையையும் தொடங்கி வைத்தார் அவா். இதன் வெற்றியின் அடிப்படையில் ஸ்ரீநகரிலிருந்து சா்வதேச விமானங்களை இயக்குவதற்கு அனுமதி வழங்க முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசு.
  • ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அங்குள்ள மாநில கட்சிகளின் கோரிக்கை. காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், காஷ்மீா் ஒன்றிய பிரதேசத்தின் சிறப்பு அந்தஸ்து அகற்றப்பட்டதை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
  • அதை உணா்ந்துதான் தோ்தலுக்குப் பிறகு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து முடிவெடுக்க இருப்பதாக உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.
  • தொகுதி மறுசீரமைப்பு, இப்போதிருக்கும் தங்களது அரசியல் செல்வாக்கை பலவீனப்படுத்தும் என்று மாநில கட்சிகள் அச்சப்படுகின்றன. இன்னொருபுறம் பயங்கரவாதிகள் தங்களது அணுகுமுறையை மாற்றி பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த முற்பட்டிருக்கின்றனா்.
  • ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் தலிபான்களின் ஆட்சியால் பயங்கரவாத சக்திகள் வலுப்பெறக்கூடும் என்கிற அச்சம் நிலவுகிறது.
  • இந்தப் பின்னணியில் உள்துறை அமித் ஷாவின் காஷ்மீா் விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய அரசின் இப்போதைய அணுகுமுறை தொடருமா, மாறுமா என்பது விரைவில் தெரியவரும்!

நன்றி: தினமணி  (29 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories