TNPSC Thervupettagam

அமெரிக்க அதிபர் தேர்தல்! இழுபறியில் இறுதிக்கட்டம்!

November 4 , 2024 60 days 159 0

அமெரிக்க அதிபர் தேர்தல்! இழுபறியில் இறுதிக்கட்டம்!

  • வரும் 5 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல். வாக்குப் பதிவுக்கு இன்னும் இரண்டொரு நாள்களே இருக்கிற நிலையில், அமெரிக்காவில் இப்போது சும்மா அனல் பறக்கிறது.
  • அமெரிக்காவின் இருபெரும் கட்சிகளும் இறுதிக்கட்ட பரபரப்பில் இருக்கின்றன.
  • அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது அனைத்துலகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. ஆகவே, உலக நாடுகள் அனைத்தும் இந்த தேர்தலை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றன.
  • அதிபர் பதவி வேட்பாளராக, ஜனநாயகக் கட்சி சார்பில் ஆரம்பத்தில் களமிறங்கிய அதிபர் ஜோ பைடன், திடீரென விலகிக் கொள்ள, இப்போது அவரது இடத்தில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் பதவி வேட்பாளராக நிற்கிறார் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சி வேட்பாளராகக் களத்தில் நிற்பவர் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் 18.65 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். நவம்பர் 5ஆம்தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கும் நிலையில் இவர்களில் 7 கோடி பேர் ஏற்கெனவே வாக்களித்து விட்டார்கள் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும்.
  • ஆம். வயதானவர்கள், தேர்தல் நாளில் வேறு வேலை காரணமாக பயணம் மேற்கொள்பவர்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி இருக்கிறது.
  • அந்த அடிப்படையில் 70 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்து விட்டனர். அவர்களில் 55 விழுக்காடு பேர் பெண்கள்.
  • 81 வயதான அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூட ஏற்கெனவே வாக்களித்து விட்டார். அண்மை காலமாக பைடன் சற்றுத் தடுமாற்றத்தில் இருப்பதால், சொந்த கட்சியான ஜனநாயகக் கட்சிக்கே அவர் சரியாக வாக்களித்திருப்பார் என நம்புவோம்.
  • கடந்த 2020 அதிபர் தேர்தலில் 66.6 விழுக்காடு வாக்குகள் பதிவான நிலையில் இந்தமுறை இன்னும் அதிக விழுக்காடு வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • சரி. இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
  • அதிபர் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதற்கு சற்று முன்புவரை டிரம்ப்பின் கையே ஓங்கியிருந்தது. ஜோ பைடனுக்குப் பதிலாக கமலா ஹாரிஸ் களத்தில் இறங்கியவுடன் நிலைமையில் சற்று மாற்றம்.
  • செப்டம்பர் 11ஆம் தேதி கமலாவுக்கும், டிரம்புக்கும் இடையே நடந்த நேருக்கு நேர் விவாதத்துக்குப்பின் கமலாவின் கையே ஓங்கியது. ஆனால், இப்போது இருவருக்கும் இடையில் யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி என்று கணிக்க முடியாத அளவுக்கு இழுபறி நிலையே நீடிக்கிறது.
  • கமலாவுக்கு 45%, டிரம்ப்புக்கு 42% ஆதரவு இருப்பதாக அண்மையில் ராய்ட்டர்ஸ் நிறுவனம் கணித்துள்ளது. இதற்கு முந்தைய மற்றொரு அமைப்பின் கருத்துக் கணிப்பில் கமலா 48.1% டிரம்ப் 46.7%. 5.2% வாக்காளர்கள் மதில் மேல் பூனைகள்.
  • பெண் வாக்காளர்களைப் பொறுத்தவரை கமலா ஹாரிஸ் 11 புள்ளிகள் முன்னணியில் இருக்கிறார். ஆண் வாக்காளர்களைப் பொறுத்தவரை பத்து புள்ளிகளுடன் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவருடன் டிரம்ப் மோதுவது இது முதல்முறை அல்ல. 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து களம் கண்டவர்தான் டிரம்ப்.
  • அந்தத் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்று அதிபரானார்.
  • இந்தமுறை மற்றொரு பெண் வேட்பாளரான கமலா ஹாரிஸுக்கு எதிராக டிரம்ப் களம் காண்கிறார்.
  • கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெறுவார். கூடவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் அதிபர் என்ற பெருமையும் கமலாவுக்குச் சேரும்.
  • அமெரிக்க அதிபர் தேர்தல் முறைப்படி 50 மாகாணங்கள்+ தலைநகர் வாஷிங்டனில், எலக்ட்டோரல் எனப்படும் பிரதிநிதிகளை மக்கள் வாக்களித்துத் தேர்வு செய்கிறார்கள். மொத்தம் 538 பிரதிநிதிகள். இந்த 538 பிரதிநிதிகள் பின்னர் அதிபரைத் தேர்வு செய்வார்கள். 270க்கு மேற்பட்ட பிரதிநிதிகளின் ஆதரவைப் பெறுபவர்தான் அமெரிக்க அதிபராக முடியும்.
  • தற்போதுள்ள சூழலில் கமலா ஹாரிஸின் ஜனநாயகக் கட்சிக்கு 326 பிரதிநிதித்துவ வாக்குகளும், டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு 219 வாக்குகளும் கிடைக்க வாய்ப்புண்டு. மீதம் 93.
  • இந்த 93 பிரதிநிதித்துவ வாக்குகளும் பென்சில்வேனியா, ஜார்ஜியா, வட கரோலினா போன்ற ஏழு மாகாணங்களில் குவிந்து கிடக்கின்றன. இந்தமுறை அதிபர் தேர்தலில் வெற்றி தோல்வியை முடிவு செய்ய இருப்பவை இந்த 7 மாநிலங்கள்தான்.
  • அதிலும் பென்சில்வேனியா மாகாணத்தில் 19 எலக்ட்டோரல் வாக்குகள் இருப்பதால் வெள்ளை மாளிகையின் நுழைவு சாவியாக பென்சில்வேனியா மாகாணம் கருதப்படுகிறது.
  • வடக்கு கரோலினா மாகாணத்தில் மொத்தம் 16 எலக்ட்டோரல் வாக்குகள் உள்ளன. 2016, 2020 தேர்தல்களில் டிரம்ப் வெற்றி பெற்ற மாகாணம் இது.
  • தெற்கு கரோலினா மாகாணம் ஏற்கெனவே கமலா ஹாரிஸின் செல்வாக்குள்ள மாகாணம் என்றநிலையில், வடக்கு கரோலினா கையைவிட்டுப் போனால் டிரம்பின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால், டிரம்ப் தனது முழுக் கவனத்தையும் வடக்கு கரோலினா மாகாணம் மீது திருப்பியுள்ளார். தேர்தல் பரப்புரை ஓயும் வரை வடக்கு கரோலினாவில் சுற்றிச்சுழன்று டிரம்ப் பரப்புரை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
  • உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ஏறத்தாழ 630 கோடி ரூபாய்களை டிரம்ப்புக்குத் தேர்தல் நன்கொடையாக வாரி வழங்கியுள்ளார். மறுபுறமாக புகழ்பெற்ற பாடகிகளான டெய்லர் ஸ்விஃப்ட், கார்டி பி போன்றவர்கள் கமலாவுக்கு ஆதரவாக உள்ளனர்.
  • பில்கேட்ஸ் மற்றும் கறுப்பின மக்கள், அமெரிக்கா வாழ் இந்தியர்களின் ஆதரவும் கமலாவுக்கு உள்ளது.
  • சரி. அமெரிக்க அதிபர் தேர்தலில் முதன்மையாக முன் வைக்கப்படும் பிரச்சினைகள் என்னென்ன? அதில் கமலா ஹாரிஸ்,டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் கருத்து என்ன?
  • முதலில் கருக்கலைப்பு.
  • கமலா கருக்கலைப்புக்கு ஆதரவாகவும், டிரம்ப் எதிராகவும் இருக்கிறார். அமெரிக்காவின் சில மாகாணங்களில் கருக்கலைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. சில மாகாணங்களில் தடையில்லை. இதனால், கருக்கலைப்புக்காக பெண்கள் அதிக செலவு செய்து அண்டை மாகாணங்களுக்குப் போய் வர வேண்டியிருக்கிறது.
  • இந்தநிலையில், ‘பெண்களின் தேவை என்ன என்பது பெண்களுக்குத்தான் தெரியும். ஆண்கள் முடிவு செய்ய முடியாது. பெண்களை மதித்து நம்புகிற மாதிரியான நாட்டை உருவாக்குவோம்’ என்பது கமலா ஹாரிஸின் கருத்தாக இருக்கிறது.
  • ‘அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் தாறுமாக உயர்ந்திருக்கின்றன. மக்களின் உடல்நலத்தை வைத்து ஆதாயம் தேட முயற்சிப்பவர்களைத் தடுத்து நிறுத்துவோம்’ என்பது கமலா ஹாரிஸின் கருத்து. ‘இப்போது இருப்பதை விட மருத்துவ செலவுகளை எல்லோருக்கும் ஏற்றபடி குறைப்போம்’ என்பது டிரம்ப்பின் கருத்து.
  • பருவநிலைமாற்றம், சூழல் சீர்கேடுகளைப் பொறுத்தவரை அவை உண்மையான பிரச்சினைகள், அதை யாரும் மறுக்க முடியாது’ என்கிறார் கமலா. ‘இன்னும் 100 முதல் 500 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை நிறுத்துவோம்’ என்கிறார் டிரம்ப்.
  • ‘பொருளாதாரத்தைப் பொறுத்தவரை விலையேற்றத்தை அதிகப்படுத்தும் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்’ என்பது கமலா ஹாரிஸின் கருத்தாக உள்ளது. டிரம்ப் கார்ப்பரேட் ஆதரவாளர். ஆகவே, ‘பெட்ரோல், மின்சாரம் போன்றவற்றின் கட்டணம் குறைந்தால் பொருளாதாரம் தானாக சீராகிவிடும்’ என்கிறார் டிரம்ப்.
  • ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நடுத்தர மக்களுக்கு வரி குறைப்பு செய்வோம். 100 மில்லியன் மக்களை பயனடைவார்கள்’ என்கிறார் கமலா ஹாரிஸ். ‘நான் அதிபரானால் வரிவிதிப்பு விஷயத்தை இன்னும் சிறப்பாகக் கையாளுவேன்’ என்கிறார் டிரம்ப்.
  • ‘வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆட்சியில் பறிபோய் விட்டன. பணவீக்கம் 21 விழுக்காட்டில் இருந்து இப்போது 80 விழுக்காடு வரை அதிகரித்து விட்டது. நான் அதிபராக பதவிக்கு வந்தால் புதிய அமெரிக்காவைப் படைப்பேன். அமெரிக்காவைக் காப்பாற்றுவேன். வரிகள், விலைகளைக் குறைப்பேன். சம்பளம் உயரும். டெட்ராய்ட், மிச்சிகன் போன்ற பல்வேறு நகரங்களுக்குப் பல ஆயிரம் புதிய தொழிச்சாலைகளைக் கொண்டு வருவேன்’ என்று பிரசாரம் செய்து வருகிறார் டிரம்ப்.
  • ‘கமலா ஹாரிஸ் ஒரு மார்க்சிஸ்ட், ஓர் இந்தியர்’ என்பன போன்ற தனிநபர் தாக்குதல்களையும் டிரம்ப் தாராளமாக நடத்தி வருகிறார்.
  • ‘கமலா ஹாரிஸ் அதிபரானால் இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போகும். நான் அதிபராக இருந்திருந்தால் காஸா போர் நடந்திருக்காது. நான் அதிபராக இருந்தபோது ஈரான் மீது விதித்த பொருளாதார தடைகளால் ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு ஈரானால் உதவ முடியவில்லை. நான் அதிபரானால் இஸ்ரேல் மீது யாரும் தாக்குதலே நடத்த முடியாது’ என்று சவால் விடுகிறார் டிரம்ப்.
  • அதுபோல உக்ரைன்-ரஷியப் போரில், ‘ரஷியாவின் படையெடுப்பு பன்னாட்டு சட்டங்களுக்கு எதிரானது’ என்பது கமலாவின் கருத்தாக இருக்கிறது. 78 வயதான டிரம்ப்போ, ‘நான் அதிபரானால் 24 மணிநேரத்தில் உக்ரைன்-ரஷிய போர் முடிவுக்கு வரும். மூன்றாம் உலகப்போர் வராமல் தடுப்பேன்’ என்று எகிறி வருகிறார்.
  • அடுத்த அமெரிக்க அதிபர் யார்? 5 ஆம் தேதி தேர்தல் நடந்து சுடச்சுட வாக்குகள் எண்ணப்பட உள்ளன. ஹாரிஸ் - டிரம்ப் இடையே வாக்கு வித்தியாசம் போகிற போக்கைப் பொருத்து சில மணி நேரங்களிலேயோ அல்லது சில நாள்களிலோ அமெரிக்காவின் அறுபதாவது அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, 47 ஆவது அதிபராகப் போவது யார் என்பது தெரிந்துவிடும்!
  • அதுவரை பரபரப்புதான்.

நன்றி: தினமணி (04 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories