அமெரிக்காவின் புதிய போக்கு: ஜனநாயகத்துக்கு ஆபத்து!
- மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவின் தாக்குதலால் நிலைகுலைந்திருக்கும் உக்ரைன், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் புதிய நிலைப்பாட்டால் புதிய சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. இது உலக அளவில் வேறு சில பின்னடைவுகளுக்கு இட்டுச்செல்லக்கூடும் என்கிற அச்சமும் எழுந்திருக்கிறது.
- ரஷ்யாவால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, நேட்டோ அமைப்பில் உறுப்பினராகச் சேர உக்ரைன் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, 2022 பிப்ரவரி 24இல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கியது. உக்ரைனில் 40,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். ஏராளமான ரஷ்ய வீரர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உக்ரைனின் பொருளாதாரம் நிலைகுலைந்திருக்கிறது.
- இந்தச் சூழலில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் டிரம்ப்பின் நகர்வுகள் பெரும் குழப்பத்துக்கு வழிவகுத்திருக்கின்றன. உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக, பிப்ரவரி 18இல், ரியாத் நகரில் - உக்ரைனை அழைக்காமல் - ரஷ்யாவுடனேயே டிரம்ப் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சர்வாதிகாரி என்றும், போர் தொடங்குவதற்கு அவர்தான் காரணம் என்றும் டிரம்ப் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மேலும் அதிர்ச்சி தருகின்றன.
- ரஷ்யா கொடுத்த நெருக்கடிகளை எதிர்கொள்ள அமெரிக்காவைத்தான் பெரிதும் நம்பியிருந்தது உக்ரைன். ஆனால், உக்ரைனுக்கு இதுவரை செய்த ராணுவ உதவிகளுக்கு மாற்றாக உக்ரைனின் கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என்று டிரம்ப் வைத்த நிபந்தனை பலரையும் அதிர்ச்சிக்கும் வியப்புக்கும் ஆளாக்கியிருக்கிறது. உக்ரைனின் கனிமவளத்தில் ஏறக்குறைய பாதியைச் சுரண்டும் ஒப்பந்தத்துக்கு வேறு வழியின்றி உக்ரைன் பணிய நேர்ந்திருக்கிறது.
- உக்ரைன் போருக்கு அமைதியான தீர்வு கோரியும், ரஷ்யப் படைகளை முழுமையாக வெளியேற்றக் கோரியும் ஐநா பொது அவையில் உக்ரைனும் அதன் ஆதரவு நாடுகளும் கொண்டுவந்த தீர்மானம், போரை நிறுத்த வேண்டும் என்பதைத் தாண்டி காத்திரமான கோரிக்கை ஏதும் இல்லாமல் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் என இரண்டையும் இந்தியா புறக்கணித்துவிட்டது.
- உக்ரைன் தரப்பு கொண்டுவந்த தீர்மானம் வெற்றிபெற்றுவிட்டது. எனினும், இந்தத் தீர்மானத்தால் தீர்வு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். தீர்மானத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று உக்ரைனுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது கவனிக்கத்தக்கது.
- நேட்டோவில் உக்ரைன் இணைக்கப்பட்டாலோ, போர் நிறுத்தப்பட்டாலோ தன் பதவியை ராஜினாமா செய்யவும் தயார் என்று ஜெலன்ஸ்கி அறிவித்திருந்த நிலையில், நேட்டோவில் உக்ரைனுக்கு இடமே கிடையாது என அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் செயல்திறன் துறை அமைப்பின் தலைவர் எலான் மஸ்க் இருவரும் பட்டவர்த்தனமாகப் பேசிவருகிறார்கள்.
- டிரம்ப்பின் இந்தப் போக்கைப் பார்க்கும்போது, இதுவரை அமெரிக்காவைச் சார்ந்திருந்த நாடுகளும் அமைப்புகளும் அமெரிக்காவின் புறக்கணிப்பை எதிர்கொள்ள நேரலாம் என்கிற சந்தேகம் எழுகிறது. உக்ரைனின் பல பகுதிகளை புதின் அரசு சொந்தம் கொண்டாடிவரும் நிலையில், தைவான் சீனாவின் ஒரு பகுதிதான் என ஷி ஜின்பிங் வலியுறுத்திவருகிறார். புதினுக்கு ஆதரவாக உக்ரைனைக் கைவிட்டது போல, சீனாவுக்கு ஆதரவாக தைவானையும் டிரம்ப் கைவிட நிறைய வாய்ப்புகள் உள்ளன. இது ஓர் உதாரணம்தான்.
- வல்லரசு நாடுகள் இப்படி ஒரு புதிய கூட்டணியாக உருவெடுத்திருப்பதால், அவற்றின் அழுத்தத்துக்குச் சிறிய நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் பணிந்துபோவதைத் தவிர வேறு வழி இருக்காது. இந்தப் போக்கு ஜனநாயக சக்திகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகள் இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, உலகளாவிய அளவில் ஒருமித்த கருத்தை எட்ட முயல வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (28 – 02 – 2025)