அமெரிக்காவில் ‘4 பி’ இயக்கம்
- அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அந்நாட்டுப் பெண்களிடையே கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. கடந்த சில ஆண்டுகளாகப் பெண்களின் கருக்கலைப்பு உரிமை அங்கு விவாதமாக மாறியுள்ளதே அதற்குக் காரணம்.
- வலதுசாரிக் கொள்கையாளரான டிரம்ப், பெண்களின் கருக்கலைப்பு உரிமைக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என அமெரிக்கப் பெண்கள் நினைக்கின்றனர். பெண்களுக்கு எதிரான டிரம்ப்பின் வெறுப்புப் பேச்சுகளுக்கும் கண்டனம் வலுத்துள்ளது. இவ்வாறு பெண்களுக்கு எதிரான டிரம்ப்பின் தொடர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் ‘4 பி’ இயக்கத்தை அமெரிக்க இளம் பெண்கள் கையில் எடுத்திருக்கிறார்கள்.
- ‘4 பி’ இயக்கம்: தென் கொரியாவில் பணியிடங்களில் நிலவும் ஊதியப் பாகுபாடு, திருமண உறவில் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதில் பாரபட்சம், பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு, பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கப் பெண்கள் ஒன்றுகூடினர். இதன் தொடர்ச்சியாக, தென் கொரியாவில் ‘4 பி’ இயக்கம் உருவானது. 2010இன் பிற்பகுதியில் உருவான ‘4 பி’ இயக்கம், 2019இல் தீவிரமடைந்தது.
- காதல், திருமணம், குழந்தை, பாலுறவு என்கிற நான்குக்கும் பெண்கள் தயாராக இல்லை என்பதே ‘4 பி’ (4 B - No to Biyeonae, Bihon, Bichulsan, Bisekseu) இயக்கத்தின் அடிப்படை. இவ்வியக்கத்தைப் பின்பற்றிய கொரியப் பெண்கள், ஆண்களிடமிருந்து விலக ஆரம்பித்தார்கள். நாளடைவில் ‘4 பி’ இயக்கம் தென் கொரியப் பெண்களின் உரிமைக் குரலாக மாறியது.
- மேலும், அழகியல் சார்ந்த மதிப்பீடுகளிலிருந்து விடுபடவும், தங்கள் சுய அடையாளங்களைத் தேடிக்கொள்ளவும் ‘4 பி’ இயக்கத்துக்குக் கொரியப் பெண்கள் ஆதரவு அளிக்கத் தொடங்கினர். பெண்ணுரிமைக்காக கொரியாவில் தொடங்கிய ‘4 பி’ இயக்கம் தற்போது அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவில் ஏன்?
- அமெரிக்காவில் 1973இல், ‘ரோ எதிர் வேட்’ (Roe Vs. Wade) வழக்கில், அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் 14ஆவது திருத்தத்தின்படி கர்ப்பிணிகள் கருக்கலைப்பு செய்வதற்கு உரிமை உள்ளது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பைத் தொடர்ந்து, எத்தனை வாரங்கள் வரை கருக்கலைப்புக்கு அனுமதி அளிப்பது என்பது உள்ளிட்ட விவாதங்கள் தொடர்ச்சியாக அங்கு எழுந்தன.
- இந்நிலையில், 2018இல் மிசிசிபி மாகாண அரசு கருக்கலைப்புக்குத் தடை விதிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றியது. இதன்படி 15 வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு செய்ய முடியாது எனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அமெரிக்கக் கீழமை நீதிமன்றம், மாகாண அரசின் சட்டம் செல்லும் எனத் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
- விசாரணை முடிவில் மிசிசிபி மாகாண அரசின் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் குறிப்பாக, குடியரசுக் கட்சி ஆளும் மாகாணங்களில் கருக்கலைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்கப் பெண்களிடம் கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், கருக்கலைப்புத் தடையைத் தீவிரமாக்குவார் எனப் பெண்கள் அஞ்சுகின்றனர்.
- அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் கருக்கலைப்பு மசோதாவுக்கு ‘வீட்டோ’ (அனுமதி மறுப்பு) அளிக்கப்பட்டு, கருக்கலைப்பு சார்ந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உரிமை அந்தந்த மாகாணங்களிடம் ஒப்படைக்கப்படும் என டிரம்ப் தெரிவித்தது, பெண்களின் அச்சத்துக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது.
- மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் குடியரசுக் கட்சியினரே பெரும்பான்மையாக அங்கம் வகிப்பதால், கருக்கலைப்புச் சட்டத்தை நீக்க டிரம்ப் குடியரசுப் பிரதிநிதிகளுக்கு அழுத்தம் கொடுப்பார் எனப் பெண்கள் அஞ்சுகின்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே ‘4 பி’ இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து ‘எனது உடல் எனது உரிமை’ என்கிற முழக்கத்தை அமெரிக்கப் பெண்கள் எழுப்பி வருகின்றனர்.
‘4 பி’-யின் தாக்கம்:
- ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றப்பட்டுவந்த சமூக நெறியிலிருந்து விலகி, ஆணாதிக்கக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பாக ‘4 பி’ இயக்கத்தைப் பெண்கள் பார்க்கின்றனர். எதிர்காலத்தில் தனித்து வாழ நினைக்கும் பெண்கள் பொருளாதாரரீதியாகத் தங்களை வலுப்படுத்திக்கொள்ள இந்த இயக்கம் உதவும் என்றும் நம்புகின்றனர்.
- மறுபக்கம் ‘4 பி’ இயக்கத்தை ஆதரிக்கும் பெண்கள் மீது, ‘சுயநலவாதிகள்’, ‘சமூக விரோதிகள்’ என்கிற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. உலக நாடுகளில் மிகவும் குறைவான பிறப்பு விகிதம் கொண்ட நாடாகத் தென் கொரியா உள்ளது. 2023ஐ ஒப்பிடுகையில் 2024இல் குழந்தை பிறப்புவிகிதம் 0.38% குறைந்துள்ளது.
- அந்நாட்டில் குழந்தைப் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்துவருவதன் பின்னால், கொரியப் பெண்கள் முன்னின்று நடத்தும் ‘4 பி’ இயக்கம் காரணமாக இருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், பெண்ணியவாத இயக்கங்கள் கொரியாவில் ஆண் - பெண் உறவைச் சீர்குலைக்கின்றன எனத் தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் வெளிப்படையாகவே குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அழுத்தங்களைத் தளர்த்துமா?
- பெண்களுக்கான உரிமைகளை நீண்ட போராட்டங்களின் மூலம் பெண்ணிய இயக்கங்கள் வரலாற்றில் சாத்தியப்படுத்தியிருக்கின்றன. அந்த வகையில் 21ஆம் நூற்றாண்டின் பெண் உரிமைக் குரலாக ‘4 பி’ இயக்கம் கவனம் பெற்றுள்ளது. இருப்பினும், ‘பெண்கள் மீது சமூகம் சுமத்தியிருக்கிற அழுத்தங்களைத் தளர்த்த ‘4 பி’ போன்ற இயக்கங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
- அப்பயணம் பெண்களுக்கான சம உரிமையைப் பெற்றுத் தருவதுடன், பொருளாதாரரீதியாக அவர்களைப் பலப்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது’ எனப் பெண்ணுரிமையாளர்கள் கருதுகின்றனர். சமூக அளவில் எழும் எதிர்ப்புகளுக்கு இப்படியான இயக்கங்கள் முகங்கொடுக்கும் விதத்தில்தான் இவற்றின் எதிர்காலம் அமையும்.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 11 – 2024)