TNPSC Thervupettagam

அமேசான் தீ: ஏன் நாம் விவாதிக்க வேண்டும்?

August 30 , 2019 1911 days 1066 0
  • உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காடுகளில் ஏற்பட்டிருக்கும் பெருந்தீ உலகெங்கும் உள்ள சூழலியல் நேசர்களைத் துயரத்தில் தள்ளியிருக்கிறது. தமிழ்நாட்டின் பரப்பைப் போலக் கிட்டத்தட்ட 42 மடங்கு அளவுக்கு, அமேசான் நதியின் படுகையில் 55,00,000 சதுர கிமீ அளவுக்குத் தென் அமெரிக்க நாடுகளில் படர்ந்திருக்கும் அமேசான் காடுகள் அந்நாடுகளைத் தாண்டியும் எல்லா உலக நாடுகளுக்கும் மிகவும் முக்கியமானவை. ஆகவே, இந்தக் காட்டுத்தீயின் விளைவுகள் அந்த நாடுகளோடு முடிந்துவிடும் என்று எவரும் சொல்ல முடியாது.
அமேசான் எனும் அதிசயம்
  • பிரேசில், பெரு, கொலம்பியா உள்ளிட்ட ஒன்பது நாடுகளுக்கு விரிந்திருப்பவை அமேசான் மழைக் காடுகள். இதில் சுமார் 60% அளவுக்கான காடுகள் பிரேசிலின் எல்லைக்குள் வருகிறது. உலகில் காணப்படும் பத்தில் ஒரு உயிரினம் அமேசான் காடுகளில் உள்ளது. 40,000 தாவர இனங்கள், 3,000-க்கும் மேற்பட்ட நன்னீர் மீன் இனங்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவையினங்கள் காணப்படும் இந்தக் காடுகளில் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 2,000 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. உலகிலேயே அதிக அளவு உயிர்ப்பன்மை காணப்படும் பகுதி அமேசான் மழைக்காடுகள்தான். அது மட்டுமல்லாமல் சுமார் 500 வகையான பழங்குடிகள் இந்தக் காடுகளில் வசிக்கின்றனர். இவர்களில் கணிசமானவர்களுக்கு வெளியுலகத் தொடர்பே கிடையாது.
  • இங்குள்ள மரங்களின் உச்சிகள் ஒரு விதானம்போல் பரந்திருப்பதால் காட்டின் பெரும் பகுதியில் தரைக்குச் சூரிய ஒளி போகவே போகாது. இதனால், தரைப்பகுதி எப்போதுமே கும்மிருட்டாகத்தான் இருக்கும். மழை பெய்தால் உச்சிப் பகுதியைத் தாண்டித் தரையை வந்துசேரச் சில நிமிடங்கள் ஆகும். அந்த அளவுக்கு மரச்செறிவைக் கொண்டவை இந்தக் காடுகள்.
காட்டுத்தீ
  • பொதுவாக, அமேசான் உள்ளிட்ட எந்த மழைக்காட்டிலும் காட்டுத்தீ என்பது வழக்கமான ஒன்று. அமேசான் காட்டையே எடுத்துக்கொண்டால் அது ஒவ்வொரு ஆண்டும் 20,000 சதுர மைல் அளவுக்கு அழிந்துபடுகிறது. ஏற்கெனவே, 20% காட்டுப் பரப்பை இழந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு இந்தக் காடுகள் எரிந்துபோகின்றன அல்லது எரிக்கப்படுகின்றன.
  • இப்படியான காட்டுத்தீக்கு விவசாயமே முக்கியமான காரணமாகச் சுட்டிக்காட்டப்படுவது வழக்கம். அறுவடைக்குப் பிறகு நிலத்தில் எஞ்சியிருக்கும் அடித்தட்டைகளைக் கொளுத்துவது, விவசாய நிலத் தேவைக்காக காட்டைக் கொளுத்துவது, கால்நடைப் பண்ணைகளை வளர்ப்பதற்காகக் காட்டை அழிப்பது போன்றவை இந்தக் கணக்கில் வரும். நாளடைவில் தொழில் திட்ட நோக்கங்களும், ரியல் எஸ்டேட் கணக்குகளும் இதன் பின்னணியில் சேரத் தொடங்கின. எஞ்சியிருக்கும் காடுகளையேனும் பாதுகாப்பது அரசினுடைய தலையாயக் கடமையாகக் கருதப்பட்டு, அதற்கான தீவிர நடவடிக்கைகளை அரசாங்கங்கள் எடுத்துவரும் நிலையில்தான் அரசின் தலைமைப் பொறுப்பு நோக்கி நகர்பவர்களே காடுகளுக்கு எதிரான சிந்தனையாளர்களாக மாறுவதும், இதற்குப் பின் பெரும் வணிகக் கணக்குகள் இருப்பதும் புதிய அபாயமாக உருவெடுக்கலானது. இப்போதைய தீ சர்வதேச அளவிலான விவாதம் ஆகியிருப்பதே இந்தப் பின்னணியில்தான்.
  • ஏற்கெனவே ‘தற்போதைய காட்டழிப்பு விகிதம் தொடருமானால் 2030-க்குள் 27% வனப்பரப்பை அமேசான் இழந்துவிடும்’ என்று எச்சரித்திருந்தது ஐநாவின் உலக இயற்கை நிதியம். ஆனால், இப்போதைய நிலை வழக்கத்தைக் காட்டிலும் வேகமாகியிருக்கிறது. அமேசானில் இந்த ஆண்டில் இதுவரையிலான காலம் வரை 72,000 காட்டுத்தீச் சம்பவங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இது கடந்த ஆண்டைவிட 84% அதிகம் என்பதுதான் தற்போதைய காட்டுத்தீயை அபாயகரமானதாக ஆக்குகிறது. ஆகஸ்ட் மாதத்தின் ஒரு நாளில் பிரேசிலின் அமேஸோனாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் அதே நாளில் ஏற்பட்ட காட்டுத்தீயின் எண்ணிக்கையைவிட 700% அதிகம் என்கிறார்கள். தற்போதைய காட்டுத்தீ ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் தொடங்கியது. இதற்கு மின்னல்தான் காரணம், வழக்கமான காட்டுத் தீதான் இது என்றெல்லாம் பிரேசில் அரசு பல சாக்குப்போக்குகளைக் கூறினாலும் உண்மையில் இது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டதே. விவசாயிகளும் நில ஆக்கிரமிப்பாளர்களும் சேர்ந்து பெரும் திட்டம் தீட்டியிருந்தனர். ஆகஸ்ட் 10 அன்று ‘தீ நாள்’ அனுசரிப்பதுதான் அந்தத் திட்டம். பிரேசிலின் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் இதுகுறித்து அரசுக்கு எச்சரிக்கை அனுப்பியபோதும் அரசு சுதாரித்துக்கொள்ளவில்லை. அதன் விளைவுதான் இப்போதைய பெரும் போக்குக் காட்டுத்தீ.
பிரேசில் அதிபரும் அமேசானும்
  • அமேசான் காடுகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களைப் பார்த்தால் எங்கெங்கிலும் புகையே காணப்படுகிறது. 
  • காட்டுத்தீ மிக உக்கிரமாக எரிந்துகொண்டிருக்கும் அமேஸோனாஸ் மாகாணத்திலிருந்து சுமார் 3,000 கிமீ தொலைவில் இருக்கும் சாவ் பௌலோ மாநகர் வரை புகை சென்றிருக்கிறது; கிட்டத்தட்ட 32 லட்சம் சதுர கிமீ பரப்பளவுக்குப் புகை சூழ்ந்திருக்கிறது என்கிறார்கள். இதனால் கோடிக்கணக்கானோர் சுவாசப் பிரச்சினைகளுக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. நாம் மேலே எறிந்த கத்தி நம் தலை மேலேயே திரும்பி வந்து விழும் கதைதான்.
  • காட்டுத்தீயின் பின்னணியில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை; தீவிர வலதுசாரியான போல்சோனரோ “வளர்ச்சிக்குத்தான் முதலிடம் என்றும் அதற்காக தேவைப்படும் அளவுக்குக் காட்டை நியாயமான அளவில் அழித்துக்கொள்ளலாம்” என்றும் பல தருணங்களில் கூறியவர். அவர் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களை வெறுப்பவர். எவ்வளவோ கெடுபிடிகள் இருந்தாலும் காட்டை அழிப்போர் மும்முரமாகத் தங்கள் வேலையைக் காட்டிக்கொண்டிருக்கும் சூழலில், இப்படிப்பட்ட ஒரு அதிபர் அவர்களுக்குக் கிடைத்தால் சும்மா இருப்பார்களா!
  • ஜனவரியில் போல்சோனரோ பதவியேற்ற பிறகு அமேசான் காடு அழிக்கப்படுவது தீவிரமாகலானது. கூடவே, சட்ட விரோதக் கும்பல்கள் தங்க வேட்டையில் ஈடுபடும்போது அந்தக் காடுகளில் உள்ள பழங்குடிகள் பிரதேசத்தில் ஊடுருவி, அவர்களைக் கொல்வதும் அதிகரிக்கலானது. “இந்த அரசு தங்களுடைய அடாவடித்தனத்தைக் கண்டுகொள்ளாது என்கிற எண்ணத்தை அந்தக் கும்பல்களிடம் உருவாக்கிவிட்டார் போல்சோனரோ; அதுதான் உள்ளதிலேயே மோசம்” என்கிறார்கள்.
  • போல்சோனரோவை விமர்சனங்கள் நேர் எதிராகத் திருப்பிவிட்டிருப்பதுபோலத்தான் தெரிகிறது; அரசும் நானும் எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கிறோம் என்று பேசுவதைவிட எல்லாவற்றையும் மறுப்பதிலும், எதிர்த்தரப்புகளைத் தாக்குவதிலும்தான் மூர்க்கம் காட்டிவருகிறார். சர்வதேசச் சமூகம் அமேசான் காடுகள் மீது அக்கறை காட்டுவதைக்கூட அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமேசான் காட்டுத்தீயைப் பற்றி பிரெஞ்சு அதிபர் மெக்ரோன் கவலை தெரிவித்திருப்பதற்கு பதிலடியாக ‘நாட்ர டாம் தேவாலயத்தை உங்களால் தீயிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. எங்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம்’ என்று போல்சோனரோ பேசியிருப்பதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். இதைக் காட்டிலும் மோசம், பிரேசில் மக்களையும் இப்போது அமேசானுக்கு எதிர்நிலை சிந்தனை நோக்கி அவரும் அவருடைய கட்சியும் திருப்ப முனைந்துவருவது. ‘அமேசான் காடுகள் அழிவுக்குத் தேவையில்லாமல் உலக மக்களால் குற்றம்சாட்டப்படுகிறோம்’ என்ற உணர்வு இப்போது மெல்ல பிரேசில் மக்களிடம் ஊடுருவ ஆரம்பித்திருக்கிறது. அமேசான் காட்டைப் பாதுகாப்பதற்காக ‘ஜி7’ நாடுகள் அளிக்க முன்வந்த ரூ. 144 கோடி நிதியையும் நிராகரித்துவிட்டார் போல்சோனரோ. கூடவே, அமேசான் ஒன்றும் அவ்வளவு முக்கியமானதல்ல என்று பேசும் பிரச்சாரங்களும் அவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன. இதற்கென்றே காத்திருக்கும் சந்தைச் சிந்தனையாளர்களும் நிறுவனங்களும் அவற்றைப் பரப்புவதில் உற்சாகமாகியிருக்கிறார்கள்.
பொலிவியாவிலும் தீ
  • பிரேசிலில் உள்ள அமேசான் காடுகள் மட்டுமல்ல, பொலிவியாவில் இருப்பதும் அமேசான் காடுகளுக்கு உட்பட்டதுமான சிக்விட்டானோ காடுகளும் பற்றியெரிந்துகொண்டிருக்கின்றன. கடந்த திங்கள்கிழமை மட்டும் இந்தக் காடுகளில் 2,700 இடங்களுக்கும் மேலே பற்றியெரிந்துகொண்டிருக்கின்றன. இந்தக் காட்டுத்தீயின் மூல காரணமாகக் காட்டெரிப்பு வேளாண் முறையையே சூழலியலாளர்கள் கூறுகிறார்கள். ஒரு மாதத்துக்கு முன்புதான் காட்டெரிப்பு வேளாண்மையை அனுமதிக்கும் சட்டமொன்று பொலிவியாவில் கொண்டுவரப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். “பெரும்பாலும் புலம்பெயர்ந்த சிறுவிவசாயிகள்தான் இந்தக் காட்டெரிப்பு வேளாண்மையை மேற்கொள்கிறார்கள்” என்ற குரலும் கேட்கிறது.
  • சீலே, அர்ஜெண்டினா, பிரான்ஸ், ஸ்பெய்ன், ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பொலிவிய காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். காட்டுத் தீயை அணைப்பதில் பொலிவியாவுக்கு உதவ ஜி7 நாடுகள் முன்வந்திருக்கின்றன. பிரேசில் அதிபரைப் போலவே பொலிவிய அதிபர் ஈவோ மொராலிஸும் ஆரம்பத்தில் ஜி7 நாடுகளின் உதவிகளை மறுத்துவிட்டார். ஆனால், தற்போது ‘எந்த உதவியையும் நாங்கள் பெறத் தயார்’ என்று அறிவித்திருக்கிறார். இன்னும் மேலே போய் வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைப்பதற்காகத் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கிறார்.
  • இயற்கையில் எதையுமே பிரிக்க முடியாது. எங்கோ ஏற்படும் சிறு சலனம்கூட இன்னொரு மூலையில் ஒரு பாதிப்பையோ தாக்கத்தையோ ஏற்படுத்தும். அமேசான் காடுகளின் அழிவும் அப்படித்தான். உலகிலுள்ள ஆக்ஸிஜனில் 20% இந்தக் காடுகளால் உற்பத்திசெய்யப்படுகிறது என்றும் அப்படியல்ல வெறும் 6% ஆக்ஸிஜனை மட்டுமே அமேசான் வெளியிடுகிறது; அந்தக் காட்டை அழித்து உண்டாக்கப்படும் பயிர்களும் அதே அளவு ஆக்ஸிஜனை உற்பத்திசெய்ய வல்லவை என்றும் ஒரு பெரிய விவாதம் இதையொட்டி நடக்கிறது.
  • ஆனால், அமேசானின் முக்கியத்துவம் ஆக்ஸிஜன் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல; காடுகள்தான் மழைக்கான, நதிகளுக்கான, உயிர்ப்பன்மைக்கான ஆதாரம்; ஒருபோதும் காடுகளுக்கு விவசாய நிலங்கள் ஈடாகாது; எந்த வகையிலும் அமேசான் காடுகளின் இழப்பை மனித குலத்தால் ஈடுசெய்ய முடியாது என்றும் சுட்டுகிறார்கள் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள். அமேசான் என்பது இங்கே ஒரு பெயர்ச் சொல்தான். தீ அல்ல; நம்முடைய சுயநலமும் பேராசையும் அக்கறையின்மையுமே காடுகளை அழிக்கும் முதன்மைத்தீ. காடுகளின் இழப்பை எதன் பொருட்டும் மனித குலத்தால் ஈடுசெய்ய முடியாது!

நன்றி: இந்து தமிழ் திசை(30-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories