TNPSC Thervupettagam

அமைதிக்கான வழி கண்டதா உச்சி மாநாடு

June 27 , 2024 3 days 114 0
  • சுவிட்சர்லாந்தில் சமீபத்தில் நடைபெற்ற உக்ரைன் அமைதி உச்சிமாநாட்டில் 100 நாடுகள், சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்துவது எப்படி என்பதற்கான வழிமுறைகள் அலசப்பட்டன. ஜூன் 15, 16 தேதிகளில் மலை நகரமான லூசர்ன் நகரில் இந்த மாநாடு நடைபெற்றது.
  • மனித உயிர்களின் இழப்பு, பல அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இடிப்பு, நீர்- மின்சாரம் போன்றவை துண்டிப்பு என்று பல விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகித் தள்ளாடிக்கொண்டிருக்கிறது உக்ரைன். அதற்கான தீர்வை நாடிய இந்த மாநாட்டில் அரசுப் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல் சர்வதேச நீதி அமைப்புகள், பிற வணிகங்கள் போன்றவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டது முக்கியமானது.

அறிக்கை என்ன சொல்கிறது?

  • உச்சி மாநாட்டின் இறுதியில் பெரும்பாலான பிரதிநிதிகள் ஓர் அறிக்கையில் கையெழுத்திட்டனர். அந்த அறிக்கையில் உக்ரைனில் உள்ள அணுமின் நிலையம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான இது தென்மேற்கு உக்ரைனில் உள்ளது.
  • விவசாயப் பொருள்களைப் பிற நாடுகளுக்கு உக்ரைன் அனுப்புவது எந்த விதத்திலும் தடை செய்யப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வணிகக் கப்பல்களின்மீது நடைபெறும் எந்தத் தாக்குதலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. போரினால் இடம்பெயர்ந்த உக்ரைன் மக்கள் அவரவர் வசித்த இடங்களுக்கே மீண்டும் வந்து வசிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது (ரஷ்ய மொழி பேசுபவர்கள் அதிகமாக உள்ள உக்ரைனின் சில பகுதிகளில் வசிக்கும் பிறர், அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று ரஷ்யா உத்தரவிட்டிருப்பது கவனிக்கத்தக்கது).
  • இந்த அறிக்கையில் கையெழுத்திட்ட நாடுகளில் ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய நாடாளுமன்றம், ஃபிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, உக்ரைன், ஜப்பான், இஸ்ரேல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. கையெழுத்திடாத நாடுகளில் பிரேசில், தான் பார்வையாளராக மட்டுமே வந்திருப்பதாகவும், இந்த அறிக்கையைத் தான் ஆதரிக்கவில்லை என்றும் வெளிப்படையாகவே அறிவித்துவிட்டது.

நாடுகளின் நிலைப்பாடு:

  •  இந்தியா, மெக்ஸிகோ, தென்ஆப்ரிக்கா, தாய்லாந்து, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ரஷ்யாவின் போர்க் குற்றங்களை எழுத்து வடிவில் கொண்டுவரும் எந்த ஆவணத்திலும் பங்குபெற இந்த நாடுகள் விரும்பவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.
  • அமைதிக்கான உச்சி மாநாடு என்றால் இரு தரப்பினரும் வந்திருக்க வேண்டும். ஆனால், ரஷ்யா அழைக்கப்படவே இல்லை. ‘இதுபோன்ற மாநாடுகள் பயனற்றவை’ என்று தன் கருத்தைக் கூறிவிட்டது ரஷ்யா. சீனாவுக்கு அழைப்பு விடுத்தும் அது கலந்துகொள்ளவில்லை. எனவே, பாகிஸ்தானும் கலந்துகொள்ளவில்லை.
  • இந்நிலையில், இந்தியா ஏன் இந்த அறிக்கையில் கையெழுத்திடவில்லை என்னும் கேள்வி எழுப்பப்படுகிறது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளரான பவண் குமார், “இந்த உச்சி மாநாட்டில் ரஷ்யா கலந்துகொள்ளவில்லை. சம்பந்தப்பட்ட எல்லோரும் இணைந்து செயல்பட்டால்தான் இந்தப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும்” என்று கூறியிருக்கிறார். சௌதி அரேபியாவும் இதை வழிமொழிந்திருக்கிறது.
  • இந்த மாநாட்டில் இஸ்ரேல் கலந்துகொண்டது ஆச்சரியம் அளிக்கிறது என்று வேறு ஒரு கோணத்தை இதோடு முடிச்சுப் போடுகிறது தென் ஆப்ரிக்கா. இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் நிறுத்தத்துக்கு ஏன் ஐரோப்பிய நாடுகள் தீர்வுகளை முன்னெடுக்கவில்லை என்றும் அந்நாடு கேள்வி எழுப்புகிறது.
  • அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் 1.4 பில்லியன் (140 கோடி) யூரோ நிதி உக்ரைனுக்கு அனுப்பப்படும் என்று கூறினார். வேறு பல நாடுகளும்கூட நிதி அளிப்பதாக ஒப்புக்கொண்டன. ஐரோப்பிய யூனியனில் உக்ரைனை உறுப்பினராக்குவதற்கான பேச்சுவார்த்தைக்கு இதில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

விமர்சனங்கள்:

  •  சமூக வலைதளங்களில் பல ஐரோப்பியர்களும் இந்த மாநாடு குறித்து எதிர்மறையாக விமர்சித்து இருக்கிறார்கள். ‘இது நிதி திரட்டும் மாநாடு அவ்வளவுதான்’, ‘எதிரிகளுடன்தானே சமாதானம் செய்துகொள்ள வேண்டும், நண்பர்களுடனா?’, ‘இது அமைதிக்கான உச்சிமாநாடா அல்லது ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதங்களைச் சேர்க்கும் முயற்சியா?’, ‘உக்ரைன் எதையாவது விட்டுக்கொடுக்க முன்வந்தால்தான் ரஷ்யா போரை நிறுத்தும். ரஷ்ய மொழி அதிகம் பேசப்படும் ஒரு சில சிறு மாகாணங்களை உக்ரைன் விட்டுக்கொடுக்கலாம். பேரழிவைத் தவிர்க்க இந்தத் தியாகங்கள் தேவை. இதற்குப் பதிலாக உக்ரைனில் தன்னால் ஏற்பட்ட சேதங்களை முழுவதுமாக ரஷ்யா சரி செய்துதர வேண்டும். இதுதான் நடைமுறைக்கு ஏற்றது. இதற்கான வழிமுறைகளை இந்த உச்சிமாநாடு செய்யவில்லை’ - இப்படி நிறைய கருத்துகள்.
  • ஆக, இந்த உச்சிமாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்கதா? ஏமாற்றம் அளிப்பதா? சுவிஸ் நாட்டின் தூதரகத் திறமையை ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா பெரிதும் பாராட்டி இருக்கிறார். கலந்துகொண்ட 100 பிரதிநிதிகளில் 86 பேரின் கையெழுத்துகளை அறிக்கையில் பெற்றிருப்பது எளிதல்ல என்கிறார். இந்த அறிக்கையில் ரஷ்ய ஆக்கிரமிப்பு (Russian aggression) என்ற சொற்கள் இடம்பெற்றதை உக்ரைன் பாராட்டியுள்ளது.
  • ஆனால், இருதரப்பிலும் சேராத பெரிய நாடுகள் எதுவும் இம்முறை வளைந்து கொடுக்கவில்லை. இந்த மாநாட்டின் தொடர்ச்சி அடுத்து தனது நாட்டில் நடக்கும் என்று எந்த நாடும் அறிவிக்க முன்வராதது சுவிட்சர்லாந்துக்குப் பெரிய ஏமாற்றம்தான். ‘உக்ரைனில் உண்மையான சமாதானம் என்பது மேலும் நெருங்கி வந்திருக்கிறது. என்றாலும் இது ஒரு பயணம்தான்’ என்கிறது இரு உலகப் போர்களிலும் நடுநிலை வகித்த அந்த நாடு.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories