TNPSC Thervupettagam

அமைதிக்கு ஏங்கும் மணிப்பூர்!

September 12 , 2024 77 days 79 0

அமைதிக்கு ஏங்கும் மணிப்பூர்!

  • கடந்த மூன்று மாதங்களாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை (செப். 7) நிகழ்ந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • ஜிரிபாம் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் ஒரு வீட்டுக்குள் புகுந்த தீவிரவாதிகள், அங்கிருந்த ஒருவரை சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் குகி சமூகத்தைச் சேர்ந்த 4 பேரும், மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர்.
  • இதற்கு முன்னதாக, மேற்கு இம்பால் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ட்ரோன் மூலம் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி குண்டுவீசி தாக்குதல் நடத்தினர். இதில் இருவர் உயிரிழந்தனர். இந்தச் சூழலில், பிஷ்ணுபூர், மேற்கு இம்பால் மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை இரவில் பல ட்ரோன்கள் பறந்ததால் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.
  • பிஷ்ணுபூரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் மைரெம்பாம் கொய்ரங்கின் வீட்டின் மீது ராக்கெட் குண்டுகள் கடந்த வெள்ளிக்கிழமை வீசப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இதுபோன்ற தொடர் தாக்குதல்களால் மாநிலம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
  • இந்தச் சூழலில், மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்கத் தவறிய காவல் துறை தலைமை இயக்குநர், மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை நோக்கி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை பேரணியாக செல்ல முயன்றனர். பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
  • மாநிலத்தில் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மைதேயி சமூகத்தினரும், மலை மாவட்டங்களில் பழங்குடியினரும் அதிகம் வசிக்கின்றனர். இந்த இரு சமூகங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் பல பத்தாண்டுகளாகவே இருந்துவருகிறது.
  • 1960-களில் இருந்தே ஆயுதம் தாங்கிய பல்வேறு குழுக்கள் தனி நாடு கோரி போராடி வருகின்றன. 1980 முதலே அந்த மாநிலம் "பாதிக்கப்பட்ட பகுதி' (டிஸ்டர்ப்டு ஏரியா) என்றே மத்திய அரசால் குறிப்பிடப்படுகிறது.
  • இந்த நிலையில், மைதேயி இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் (எஸ்.டி.) சேர்க்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்குமாறு மாநில அரசுக்கு அந்த மாநில உயர்நீதிமன்றம் கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 27-இல் உத்தரவிட்டது பெரும் புயலை உருவாக்கியது.
  • இந்தத் தீர்ப்பால் தங்கள் உரிமைகள் பறிபோய்விடும் என்ற எண்ணம் குகி பழங்குடியினரிடையே விதைக்கப்பட்டது. மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பால் 2023 மே 3-ஆம் தேதி நடத்தப்பட்ட பேரணி வன்முறைக் களமாக மாறியது. அப்போது தொடங்கிய வன்முறை காரணமாக இருதரப்பிலும் இதுவரை 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
  • வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பள்ளத்தாக்குப் பகுதியையும் மலைப் பகுதியையும் பிரிக்கும் வகையில் பாதுகாப்பு மண்டலங்களை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இதைத் தாண்டி அடுத்த பகுதிக்குள் நுழைபவர்களைக் கண்டாலே சுட்டுத் தள்ளுமாறு பாதுகாப்புப் படைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  • மைதேயி, குகி என இருதரப்பினரிடமுமே துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் உள்ளன. கண்டதும் சுட உத்தரவு உள்ளதால் மைதேயி பிரிவினர் மீது தாக்குதல் நடத்த ட்ரோன்களையும், ராக்கெட் லாஞ்சர்களையும் எதிர்த் தரப்பினர் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். தங்கள் மீது தாக்குதல் நடத்த ஆயுதம் தாங்கிய மைதேயி குழுவினர் திட்டமிட்டு வருவதால்தான் தாங்கள் தாக்க நேரிட்டது என குகி குழுவினர் கூறுகின்றனர்.
  • எதிர்த் தரப்பினர் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் ட்ரோன்களையும், ராக்கெட் குண்டுகளையும் பயன்படுத்தத் தொடங்கி இருப்பது மணிப்பூரில் இப்போது புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தை ஒட்டி மியான்மர் உள்ளது. அங்கு ஆட்சி செய்யும் ராணுவத்துக்கு எதிராக ட்ரோன்களைப் பயன்படுத்தி எதிரணியினர் தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
  • இந்திய எல்லையை ஒட்டி உள்ள மியான்மரின் சில பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மக்கள் பாதுகாப்புப் படை (பிடிஎஃப்) என்ற இயக்கத்தின் அதிகாரத்தில் உள்ளன. நமது நாட்டைச் சேர்ந்த, தனிநாடு கோரும் பல பிரிவினைவாத அமைப்புகள் மியான்மரில் இருந்து செயல்படுகின்றன. அவர்களுக்கு மக்கள் பாதுகாப்புப் படையினர் (பிடிஎஃப்) ட்ரோன்களையும், ராக்கெட் லாஞ்சர்களையும் விற்பனை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
  • கடந்த பல மாதங்களாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் மணிப்பூரில் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முடியவில்லை என முதல்வர் என்.பிரேன் சிங்கின் மருமகனும் பாஜக எம்எல்ஏவுமான ராஜ்குமார் இமோ சிங் குற்றஞ்சாட்டி உள்ளார்.
  • ஆயுதம் ஏந்தி போராடி வரும் குழுக்கள் உள்ளூர் மக்களைத் தூண்டி விடுவதால், பல சந்தர்ப்பங்களில் காவல் துறையினருக்கு அல்லது ராணுவ வீரர்களுக்கு எதிராக பெண்கள் அதிக எண்ணிக்கையில் அணிதிரள்கின்றனர். மாநிலத்தின் புவியியல் அமைப்பும், பெண்கள் அணிதிரள்வதும் வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் ராணுவத்துக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
  • மணிப்பூர் மாநிலப் பிரச்னைக்கு காரணம் எதுவாக இருந்தாலும் கண்டறியப்பட்டு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும். அந்த மாநில மக்கள் அமைதியாக வாழ வழிவகை செய்யப்பட வேண்டும்.

நன்றி: தினமணி (12 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories