TNPSC Thervupettagam

அமைதிப் பூங்காவில் அதிகார விதிமீறல்கள்

May 9 , 2024 70 days 116 0
  • வழக்குரைஞர் மற்றும் பேராசிரியருமான சர் வில்லியம்ஸ் ஐவர் ஜென்னிங்ஸ் (1903-1965) என்ற பிரபல அரசமைப்பு சட்ட நிபுணர், இலங்கை சர்வகலாசாலையிலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தராகப் பணியாற்றியவர். 1956-1957இல் மலேசியாவின் அரசியல் நிர்ணய சட்டத்தை உருவாக்க உதவியவர்.
  • இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, "இந்தியர்கள் தங்களுடைய அரசியல் நிர்ணய சட்டத்தின் மூலமாக தங்களைத் தாங்களே தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைத்துக் கொள்ளும் அடிப்படை உரிமையைத் தந்து கொண்டுள்ளார்கள்' என்று கிண்டலடித்தார். 50 ஆண்டுகளுக்கு முன் சட்டக்கல்லூரி மாணவனாக அவர் சொன்னதைப் படிக்கும்போது எனக்குக் கோபம் வந்தது. ஜென்னிங்ஸினுடைய ஆழமான அறிவும் விசாலமான பார்வையும் என்னை வியக்க வைக்கிறது.
  • இந்திய அரசமைப்புச் சட்டம் பகுதி-3 இந்தியர்களுடைய அடிப்படை உரிமைகளை உறுதி செய்கிறது. அதில், பிரிவு 21, எந்த குடிமகனுடைய உயிரும் தனிமனித சுதந்திரமும் சட்டப்படி அல்லாமல் வேறு எந்த வகையிலும் பாதிக்கப்படலாகாது என உறுதி செய்கிறது. இதனுடைய உட்பொருள், உரிய சட்டத்தின்கீழ் யாரையும் சிறையில் அடைக்கலாம் என்பதுதான். இதைத்தான் ஜென்னிங்ஸ் கிண்டலடித்தார்.
  • நாடாளுமன்றமும் மாநில சட்டமன்றங்களும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயர்களில் பல ஆள்தூக்கிச் சட்டங்களை இயற்றி, செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளன. அந்த சட்டங்களில் ஒன்றுதான் "தமிழ்நாடு பயங்கர செயல்பாட்டளர்களான சாராய வணிகர்கள், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப குற்றவாளிகள், போதை பொருள் வியாபாரிகள், காடு வளம் அழிப்பவர்கள், குண்டர்கள், பாலியல் குற்றவாளிகள், மணல் கடத்தல்காரர்கள், காமக்கொடூரர்கள், குடிசை நிலங்களை அபகரிப்பவர்கள், திருட்டு விடியோ குற்றவாளிகள் தடுப்புச் சட்டம்- 1982. 1982-இல் குண்டர்கள் சட்டம் என ஆரம்பித்து ஒவ்வொரு குற்றமாக சேர்க்கப்பட்டு இந்த சட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த சட்டம் செல்லமாக "குண்டர் சட்டம்' என அழைக்கப்படுகிறது. இந்த சட்டத்தில் 18 பிரிவுகள் உள்ளன.
  • இந்த சட்டத்தின் முக்கியமான நோக்கம் அதில் வகைப்படுத்தப்பட்டுள்ள குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு, பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் குற்றவாளிகளைப் பிணையில் (ஜாமீனில்) வரவிடாமல், மூன்று மாதத்திற்கு ஒருமுறை சிறை தண்டனையை நீட்டிப்பதுதான். பொதுவாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 167-ன்கீழ் 60 அல்லது 90 நாளுக்குப் பின் வழங்கப்படும் பிணை அல்லது அதே சட்டத்தில் பகுதி 33-இல் பிணையில் விட சொல்லப்பட்டுள்ள காரணிகளையும் மீறி, குண்டர் சட்டத்தில் ஒருவரை சிறையில் அடைக்கலாம் என குண்டர் சட்டம் அதிகாரம் வழங்குகிறது. இந்த அதிகாரத்தை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தயாரித்து அனுப்பும் கோப்பில் கையெழுத்திடும் மாவட்ட ஆட்சித் தலைவரும், பெருநகரங்களில் தானே சிறையில் அடைக்கும் அதிகாரம் பெற்றுள்ள மாநகர காவல் ஆணையரும்தான். இவ்வாறு சிறையில் அடைக்கப்படும் குற்றவாளிக்கு அதற்கான காரணங்களை, ஆதாரத்துடனும் விரிவான விளக்கங்களுடனும் புத்தக வடிவில் வழங்குவதோடு, அவர் அதன் ஒவ்வொரு பக்கத்தையும் படித்ததாக உறுதி செய்ய வேண்டும். இன்று இது வெறும் சடங்கு. இதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள ரப்பர் ஸ்டாம்ப்பை ஒவ்வொரு பக்கத்திலும் பதிப்பித்து சிறைவாசியின் கையெழுத்தை ஒவ்வொரு பக்கத்திலும் பெற்று அதை முழுக்க அவர் படித்து கையெழுத்திட்டதாக ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன.
  • குண்டர் சட்டம் பிரிவு 3-சி படி கைது செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதே பிரிவு, விரும்பினால் பெருநகரங்களில் உள்ள காவல் ஆணையர்களும் மற்ற மாவட்டங்களில் உள்ள மாவட்ட நிர்வாகத் துறை மேஜிஸ்ட்ரேட்களும் (மாவட்ட ஆட்சியர்) தங்களுடைய உத்தரவின் பெயரில் ஒரு குற்றவாளியை இந்த குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கலாம். அந்த சிறையடைப்பு உத்தரவு 12 நாட்களுக்குள் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  • தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட, அந்த சிறை அடைப்பு, பிரிவு 9-ன் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆலோசனை குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆலோசனைக் குழுவில் ஒரு தலைவர், இரண்டு உறுப்பினர்கள் இருக்க வேண்டும்; அதுபோல் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆலோசனை குழுக்கள் ஏற்படுத்தலாம்; அந்த உறுப்பினர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவோ அல்லது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவோ அல்லது நீதிபதிகளாக நியமிக்க தகுதியுடையவர்களாகவோ இருக்க வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டவர்களை இந்த குழுவின் முன் மூன்று வாரங்களுக்குள் மறு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்கிறது விதி. குழுவிற்கு முன் கைதி செல்லும்பொழுது தனது தரப்பை எழுத்து மூலமாகவோ, வாதங்களாகவோ எடுத்து வைக்கலாம்.
  • இந்த ஆலோசனைக் குழு தனக்கு முன் உள்ள அனைத்து விவரங்களையும் பரிசீலித்து, கைதியை விடுதலை செய்யவோ அல்லது தொடர்ந்து சிறையில் அடைக்கவோ 7 வாரங்களுக்குள் முடிவெடுத்து உத்தரவிட வேண்டும். இச்சட்டத்தின் கீழ் ஒரு நபரை முதலில் 3 மாதங்களும், பின்னர் 3 மாதங்களுக்கு ஒருமுறை சிறைவாசத்தை நீட்டிக்கும் உத்தரவின் மூலமாகவும், ஒரு கைதியை பிணையில் வரவிடாமல் தடுக்க இச்சட்டம் உரிமை அளிக்கிறது. ஆலோசனை குழுவின் முடிவு பாதகமானால் பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தின் முன் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்து வெளியே வரும் வாய்ப்புள்ளது. இந்த நடைமுறைகள் எல்லாம் முடிய குறைந்தபட்சம் 6 மாதமாகும் என்பதால், குற்றவாளி கண்டிப்பாக சிறையில் இருக்க நேரிடும். உள்ளூர் அழுத்தங்களாலும், அரசியல் அழுத்தங்களாலும், அதிகாரிகளின் தவறான முடிவுகளாலும் இந்தச் சட்டம் துஷ்பிரயோகப்படுத்தப்படுகிறது என்பதுதான் உண்மை.
  • அனைத்து வழிகளும் சிறப்பாக சொல்லப்பட்டிருந்தாலும், நடைமுறையில் காவல் துறையால் மிக மோசமாக, தவறாக பயன்படுத்தப்படும் சட்டம் இது என்றால் மிகையாகாது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என ஜம்பம் அடிப்பதும், அதே கட்சி எதிர்க்கட்சியாகிவிட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றும், மாநிலத்தில் குண்டர்கள் பெருகிவிட்டார்கள் என்று சொல்வதும் வாடிக்கையாகிவிட்டது. உண்மை நிலை என்ன? எதையும் நிரூபிக்க புள்ளிவிவரங்கள்தானே தேவை. அவை என்ன சொல்கின்றன?
  • சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், சுனிதா (எதிர்) கூடுதல் தலைமை செயலாளர், சென்னை என்ற வழக்கில் நீதியரசர்கள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ், 14.11.2022-இல் வழங்கிய தீர்ப்பில் இந்த சட்டம் எவ்வளவு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது எனக் குறிப்பிட்டு அரசை சாடியுள்ளனர். அந்த தீர்ப்பில் உள்ள புள்ளிவிவரங்களின்படி அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் (!) 2011-ஆம் ஆண்டில் 983 நபர்களும், "அமைதி குறைவான மாநிலம்' என அறியப்படும் ஜம்மு-காஷ்மீரில் 239 நபர்களும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், இந்த சட்டம் தமிழகத்தில் எவ்வளவு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என விளக்கத் தேவையில்லை.
  • மதுரை கிளையில் நான் சமீபத்தில் நடத்திய வழக்கில் குற்றவாளிக்குப் பிணை வழங்க விரும்புவதாக நீதியரசர் பி.புகழேந்தி தெரிவித்து, தீர்ப்பை மறுநாள் மதியம் 2.15 மணிக்கு ஒத்தி வைத்த நிலையில், மாவட்ட காவல் துறை நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு, மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற்று, அந்த கைதியை பிணை வழக்கின் மீதான தீர்ப்பு வரும் நாளன்று காலை 10மணியளவில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, திருநெல்வேலி சிறைக்கு மாற்றிவிட்டது. இந்த அப்பட்டமான அதிகார மீறலை விமர்சித்து, பிணை வழங்குவதை தடுப்பதற்காக குண்டர் சட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என நீதியரசர் கருத்து தெரிவித்து, குற்றவாளிக்கு பிணை வழங்கி, தனது தீர்ப்பை உள்துறை செயலாளருக்கும் அனுப்ப உத்தரவிட்டார்.
  • எங்கள் தரப்பில் நீதியரசர்கள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் பி.புகழேந்தி ஆகியோர் வழங்கிய தீர்ப்புகளை உள்துறை செயலாளர் அமுதா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். எங்கள் தரப்பு நியாயங்களையும், மாவட்ட அதிகாரிகளின் அப்பட்டமான விதி மீறல்களையும் உணர்ந்து கொண்ட உள்துறை செயலாளர், எனக்குத் தெரிந்த வரை வரலாற்றில் முதன்முறையாக, சிறை கைதியின் குண்டர் சட்ட தடுப்புக் காவலை அங்கீகரிக்க மறுத்து, தொலைபேசி வாயிலாக உத்தரவை திருநெல்வேலி சிறைக்கு அறிவித்து, மே 1-ம் தேதி கைதி விடுதலை செய்யப்பட்டார்.
  • தடுப்புக் காவல் சட்டத்தில், சிறையில் வைக்கப்பட்ட கைதிகளை உயர்நீதிமன்றம் வெளியேவிடும்போது, இந்த சட்டத்தின் கீழ் வம்பாக சிறையில் அடைக்கப்பட்ட காலத்திற்கு, சிறைக்கு பரிந்துரை செய்த அந்த அதிகாரிகள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்தப் பொறுப்பில் இருந்து, கைதி சிறையில் இருந்த நாள் ஒன்றுக்கு தலா ரூ.5,000 தனித்தனியாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தால் மட்டும்தான் இதுபோன்ற அதிகார விதிமீறல்களும் துஷ்பிரயோகங்களும் அடங்கும்.

நன்றி: தினமணி (09 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories