TNPSC Thervupettagam

அம்பானியின் வறுமை

March 20 , 2024 122 days 122 0
  • ஊரிலிருந்து சென்னைக்கு வந்த பிறகு நீங்கள் இழந்ததாக நினைப்பது எதுவும் உண்டா? இப்படி யாராவது கேட்கும்போதெல்லாம் ஒரு விஷயம் தோன்றி மறையும். ஊர்ப் பக்கக் கல்யாணச் சாப்பாடு!
  • எது நாம் வாழும் ஊரோ அதுவே நம் சொந்த ஊர் என்று எண்ணுபவன் நான். தீபாவளி, பொங்கல் என்றால் ஊருக்குச் செல்வது, ஊரில் திருவிழா என்றால் மூட்டை கட்டிக்கொண்டு கிளம்புவது, வீட்டில் ஏதும் விசேஷ நிகழ்வு என்றால் அதைப் பிறந்த ஊரில் திட்டமிடுவதுஇதையெல்லாம் முற்றிலுமாக வெறுப்பவன். சென்னை நான் பிறந்த ஊரைக் காட்டிலும் எனக்கு எண்ணற்ற சந்தோஷங்களைக் கொடுத்திருக்கிறது. பதிலுக்கு நான் சென்னைக்கு அன்றாடம் செய்ய வேண்டியதும், இந்த ஊரோடு கரைந்துபோவதுமே கைம்மாறு.
  • அப்படி இருக்க ஏன் கல்யாணச் சாப்பாட்டை ஓர் இழப்பாக நான் கருத வேண்டும்? இங்கு எனக்குச் சொந்தங்கள் இல்லையா, நண்பர்கள் இல்லையா அல்லது யாரும் விசேஷங்களுக்கு அழைக்கவில்லையா அல்லது  சாப்பாட்டில்தான் ஏதும் குறைச்சலா? குறைச்சல் எல்லாம் இல்லை, அதீதம்தான் சென்னையின் பிரச்சினை. இன்று அநேகமாக தமிழ்நாட்டின் எல்லா நகரங்களுமே இப்படி மாறிவருகின்றன என்று சொல்லலாம்.
  • ஊர்ப் பக்கத்தில் கல்யாணத்துக்கு முந்தைய நாள் மாலை அல்லது கல்யாணத்தன்று காலை டிபன் மெனு பெரும்பாலும் இப்படி இருக்கும்: அசோகா அல்லது கேசரி, மெதுவடை அல்லது போண்டா, பொங்கல் அல்லது கிச்சடி, ஊத்தாப்பம் அல்லது பூரி, கூடவே இட்லி, சட்னி, சாம்பார். சாப்பிட்டு முடித்ததும் காபி. மதிய விருந்து: சோறு, சாம்பார், ரசம், வத்தல் குழம்பு அல்லது மோர்க் குழம்பு, ஒரு வறுவல், ஒரு பொரியல், ஒரு கூட்டு, ஒரு பச்சடி, தயிர், கூடவே அப்பளம்வடைபாயசம். அவரவர் விரும்புவதை எவ்வளவு வேண்டுமானாலும் கேட்டு வாங்கி சாப்பிடலாம்; வேண்டாததை முற்றிலுமாகத் தவிர்க்கலாம். கேட்டுப் பரிமாறுவார்கள்.
  • ஆஹா! எவ்வளவு எளிமையான மெனு என்று சொல்பவர்கள், நான் கூறியிருப்பதே கொஞ்சம் அதிகம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • சின்ன வயதில் என் தாத்தாவுடன் வெளியூருக்கு ஒரு விசேஷத்துக்குப் போயிருந்தேன். தாத்தாவின் நண்பர் விருந்தில் பண்டங்களை அதகளப்படுத்தி இருந்தார். எனக்கு அந்த வயதில் அது விசேஷமானதாகப் பட்டது. தாத்தா முகம் சரியில்லை. ஊர் திரும்புகையில் கேட்டேன், “தாத்தாவுக்குச் சாப்பாடு பிடிக்கலையோ?” கவனம் களைந்தவராகச் சொன்னார், “அப்படி இல்லப்பா, எலையில பத்து வகை, பதினைஞ்சு வகையினு உணவை வெக்கிறது ஆடம்பரத்தின் பெயரிலான அநாகரிகம். விருந்தாளிகளுக்கு அன்பை உணவா பறிமாறினா சாப்பிடலாம், அவனவன் அகங்காரத்தை ஏன் பரிமாறணும்? விசேஷங்கிறது பல தரப்பு ஆளுங்களும் வர்றது; யாரையும் நம்ம வசதியால சிறுமைப்படுத்திடக் கூடாது!”
  • வயது மெல்ல நகர்ந்தபோது தாத்தா சொன்னது புரியலானது. அன்றாட உணவுக்கே அல்லாடுபவர்கள் கோடிக் கணக்கானோர் வாழும் நாட்டில் வசதி படைத்தவர்கள் தங்களுக்குக் கிடைத்தவற்றைச் செலவிடுவதில் மிக்க பொறுப்புணர்வு வேண்டும். தம்முடைய விருந்தினர்களுக்கு இலையில் ஒருவர் இருபது பதார்த்தங்களை வைக்கிறார் என்றால், அது தன்னகங்காரத்தின் வெளிப்பாடுதான். விருந்தினரின் உணவு விருப்பம், ரசனை, உடல்நிலை என எல்லாமே அங்கு அடிபட்டுவிடுகிறது. விருந்துக்கு அழைத்தவர் எங்கோ தன்னுடைய தாழ்வுணர்வை இதன் மூலம் பூர்த்தியாக்கிக்கொள்ள முற்படுகிறார்.
  • சென்னையில் மாதத்துக்குப் பத்துப் பதினைந்து விசேஷங்களுக்கு எனக்கு அழைப்பு வரும். பெருநகர வாழ்வில்  வேலை நெருக்கடி காரணமாகக் காலை நிகழ்ச்சிக்குச் செல்வது இன்று பெரும்பாலானோருக்குச் சாத்தியமற்றுவிடுவதால், நெருங்கிய உறவினர்களே அதில் பங்கேற்கிறார்கள்; முந்தைய நாள் அல்லது பிந்தைய நாட்களின் மாலையில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிகளே ஊருக்கானதாக அமைகிறது. ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளுக்கு நானும் அப்படித்தான் செல்கிறேன்.
  • எந்த விருந்துப் பந்தியிலும் குறைந்தது இருபது இருபத்தைந்து பண்டங்கள் இருக்கும். இட்லி, தோசை, பூரி, இடியாப்பம், வெஜ் பிரியாணி, சாம்பார் சாதம், வத்தல் குழம்பு சாதம், தயிர் சாதம், பாயசம், ஐஸ்க்ரீம், காபி, பீடாஎன்ன எழவுடா இது; யாரெல்லாம் வீட்டில் இப்படி டிபன் சோறு எல்லாவற்றையும் வகைதொகை இல்லாமல் கலந்து கட்டிச் சாப்பிடுகிறார்கள்; ஏன் வருகிற விருந்தினர்களை இப்படி வாட்டி எடுக்கிறார்கள் என்று தோன்றும்.
  • எல்லோருமே எல்லாவற்றையும் பெரிய செலவில்லாமல் எளிமையாகத்தான் செய்தாக வேண்டும் என்று இல்லை. விசேஷ வீட்டுக்காரர்கள் வசதிக்கேற்ப செலவிடுவது அவர் சுற்றத்தாருக்கும் நல்லது, நாட்டுப் பொருளாதாரத்துக்கும் நல்லது. பயனுள்ள வகையில் அதைச் செலவிடலாம். லட்ச ரூபாயில் நூறு பேருக்குச் சாப்பாடு போடுவதற்கு பதில், சுற்றத்தார் தவிர ஐந்நூறு பேரை அழைத்து அன்னதானம் செய்யலாமே!
  • வசதி இருக்கிறதோ, இல்லையோ; கடன் வாங்கியேனும் பெருஞ்செலவு செய் என்பது இன்று இந்தியாவில் ஒரு மோசமான பண்பாடாக வளர்ந்துவருகிறது. அதிலும் விருந்துகளுக்காக இந்தியர்கள் செலவிடுவதும், உயர் செலவில் இப்படித் தயாரிக்கப்படும் உணவில் கணிசமான பகுதி வீணடிக்கப்படுவதும் பாவக் கேடு. பல்லாயிரம் கோடிகள் ஒவ்வோர் ஆண்டும் இப்படி பாழாகின்றன.
  • காந்தியைப் பிற்காலகத்தில் ஆழ ஊன்றி வாசித்தபோது வேறொரு விஷயம் பிடிபட்டது. தன்னுடைய ஆகிருதியை வெளிக்காட்டிக்கொள்ள உணவு, உடை, வாகனம் என்று ஒவ்வோர் அம்சத்திலும் தேவையைத் தாண்டி செலவிடுவோர் அகங்காரத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை, அவர்களிடம் உள்ள மோசமான வறுமையையும் வெளிக்காட்டுகின்றனர். காந்தியின் வார்த்தைகளில் சொல்வதென்றால் அதுஆன்ம வறுமை’.
  • ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், இந்தியாவின் முதல்நிலைச் செல்வந்தருமான ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானியினுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானிராதிகா மெர்ச்சன்ட் திருமண தடபுடல்களைக் கண்டபோது திகைப்பு ஏற்பட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் தொடங்கி இந்தியாவின் முக்கியமான நட்சத்திரங்கள் அவ்வளவு பேரையும் அள்ளிக்கொண்டுவந்து நடத்தப்பட்ட இந்த மூன்று நாள் திருவிழாவில் மணமக்கள் நடனம் ஆடுகையில் துணை நடிகர்கள் போன்று பாலிவுட் பாட்ஷாக்கள் ஷாரூக்கானும், சல்மான் கானும் உடன் ஆடவைக்கப்பட்டது ஒன்று போதாதா இந்நிகழ்வின் பின்னுள்ள மனநிலையை நாம் புரிந்துகொள்ள?
  • இதற்கெல்லாம் செலவு ரூ.1250 கோடி செலவு என்கிறார்கள். மூன்று நாட்களில் பறிமாறப்பட்ட உணவு வகைகளின் எண்ணிக்கை மட்டும் 2,500 என்கிறார்கள். எப்பேர்ப்பட்ட ஆடம்பரம் என்று சிலர் பிரமிக்கலாம்; எவ்வளவு அருவருப்பு என்று சிலர் முகம் சுளிக்கலாம். எனக்கு அம்பானியைப் பார்க்க பாவமாகவும் பரிதாபமுமாகத்தான் இருந்தது. சுற்றிலும் எவ்வளவு செல்வம் குவிந்திருந்தாலும் சில மனிதர்களிடம் எவ்வளவு பெரிய வறுமை! மனிதர்களின் ஆன்ம வறுமையைச் செல்வத்தைக் கொண்டு போக்கிவிட முடிவதில்லை!

நன்றி: அருஞ்சொல் (20 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories