TNPSC Thervupettagam

அம்பேத்கரின் தேர்தல் அறிக்கையும் இன்றைய அரசியல் நிலையும்

April 12 , 2024 274 days 200 0
  • சமூகத்தில் நிலவும் சாதி, தீண்டாமைக் கொடுமைகளையும் பாகுபாடுகளையும் அரசியல் பங்கேற்பின் வழி நேர் செய்துவிடலாம் என்று அரசியல் செயல்பாட்டாளர்களும் மக்களும் நம்புகின்றனர். அதனால்தான் சமூக, பண்பாட்டு மாற்றத்துக்கான செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை.
  • சமூக, பண்பாட்டுத் தளங்களில் தலித்மக்கள் புறக்கணிக்கப்படுவதைப் போலவேஅரசியல் தளத்தில் தலித் கட்சிகளும் புறக்கணிக்கப்படுகின்றன. தலித் தலைமையிலான ஓர் அரசியல் கட்சியை எல்லோருக்கும் பொதுவானதாக இச்சமூகம் பார்ப்பதில்லை. ஆனால், தலித் அல்லாதவர்களால் தொடங்கப்படும் கட்சியை எல்லோருக்குமான ஒரு கட்சியாகவே ஏற்கிறது.
  • அம்பேத்கர் 1942இல் தொடங்கிய ‘அனைத்திந்திய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு’ பொதுச் சமூகத்தில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்த இயலாமல் போனதற்கு இவையெல்லாம் காரணங்கள். அதே நேரத்தில், அம்பேத்கர் 1951இல் இக்கூட்டமைப்பு சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கை, நாட்டின் வளர்ச்சியிலும் பெரும்பான்மை மக்களின் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டு - இன்றளவும் பின்பற்றத்தக்க - தொலைநோக்குத் திட்டங்களை முன்வைத்திருந்தது.
  • அம்பேத்கரின் லட்சியங்கள்: பிற்படுத்தப்பட்ட, தீண்டத்தகாத, பழங்குடி மக்களை உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்த்துவதே பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் செயல்திட்டங்களில் முதன்மையானது என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.
  • தனி மனிதனுக்கான விதைக்கப்பட்ட நிலத்தின் அளவு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்திருக்கிறது என்று குறிப்பிடும் அம்பேத்கர், வறுமை ஒரு புறம், விவசாயம் மற்றும் தொழில் துறையில் அதிக உற்பத்தியினால் ஏற்படும் சிக்கல்; மறுபுறம் அதிகளவு மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் சிக்கல் என்பதால், பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு வறுமைக்கு எதிராக இவ்விரு புறங்களில் இருந்தும் போராடும் என்கிறார்.
  • உற்பத்தி வளர்ச்சிக்கான எந்தத் திட்டமும் இந்திய விவசாயச் சீரமைப்பைக் கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்டால், அது ஏமாற்றத்திலேயே முடியும் என்றும் சுட்டிக்காட்டுகிறார். இந்தியா ஒரு விவசாய நாடாக இருந்தபோதும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் பெருமளவில் உள்ளனர். அவர்கள் மிக மோசமான வாழ்க்கை நிலையுடன் நில உடைமையாளர்களால் சுரண்டப்படுகின்றவர்களாகவும் இருக்கின்றனர்.
  • அவர்களில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தினராகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவுமே உள்ளனர். இத்தகைய சூழலில் நிலங்கள் புறக்கணிக்கப்பட்டது போலவே, நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களும் புறக்கணிக்கப்படுகின்றனர்.
  • எனவே, பயிர் செய்யப்படாத நிலங்களில் ஒரு பகுதியை நிலமற்ற தொழிலாளர்களுக்காகப் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு பதிவுசெய்யும் என்றும் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். மொழிவழி மாகாணங்களின் பிரச்சினை, நிர்வாகத்தில் ஊழலற்ற தன்மை, பணவீக்கம், காஷ்மீர் சிக்கல் எனப் பல்வேறு விஷயங்களை அம்பேத்கரின் தேர்தல் அறிக்கை விவாதிக்கிறது.
  • அதிகாரக் குவியலுக்கு ஆதரவா? - மத்திய அரசு வலுவானதாக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் எண்ணினார் என அவர் மீது ஒரு விமர்சனம் உண்டு. இதற்கு மாறாக, மைய அதிகாரக் குவிப்பில் பட்டியல் சாதியினர் கூட்டமைப்புக்கு நம்பிக்கை இல்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ள அம்பேத்கர், இந்நாட்டின் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருடன் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு இணைந்து செயல்படுவதற்கான தேவையை வலியுறுத்துகிறார்.
  • அவர்கள் விரும்பினால் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் பெயரை, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் கூட்டமைப்பு’ என மாற்றி இரு வகுப்பினரும் ஒரே பொது அமைப்பில் இணைந்து செயலாற்றுவதற்கான வேட்கையையும் வெளிப்படுத்துகிறார். இவ்வளவு சிறப்புமிக்க செயல்திட்டங்களை முன்னிறுத்திய கூட்டமைப்பு, தேர்தலில் வெற்றிபெற இயலவில்லை.
  • அரசியல் அதிகாரம்: 1936இல் சுதந்திரத் தொழிலாளர் கட்சி, 1942இல் அனைத்திந்திய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு என இரு அரசியல் கட்சிகளைத் தொடங்கிய அம்பேத்கர், 1949இல் வெளிப்படுத்திய கருத்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது: “உண்மையில், அரசியல் என்னை ஒருபோதும் ஆட்டிப்படைத்ததில்லை. அது அவ்வப்போதைய நடவடிக்கையாக மட்டுமே இருந்திருக்கிறது.
  • ஒரு வரலாற்று மாணவன் என்ற அடிப்படையில், அறிவாழமிக்க பார்வையுடன் அணுகினால் ஒரு சமூகத்துக்குப் புத்துயிரூட்ட அரசியல் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் - சமூக பொருளாதார நெறி சார்ந்த கொள்கைகளே - வேறு எதைவிடவும் முதன்மையானதாக எனக்குத்தெரிகிறது. தொடக்கத்திலிருந்து நான் அரசியல் இயக்கத்தைவிட சமூக இயக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்திருக்கிறேன்.” (அம்பேத்கர்ஆங்கில நூல் தொகுப்பு: 17(2) பக்: 446)
  • அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமே தலித் மக்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்க்க முடியும் என்று பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது. நாடாளுமன்றத்தில் தலித் மற்றும் பழங்குடியினருக்கு 24% பிரதிநிதித்துவம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று.
  • ஒவ்வொரு மாநில சட்டப்பேரவைகளிலும் இதே ஏற்பாடு சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆக, அரசியல் அதிகாரம் முற்றாக இல்லை என்பதல்ல; 75 ஆண்டுகளாகக் கிடைத்திருக்கக்கூடிய அவ்வதிகாரத்தால் சமூகச் சிக்கல் தீர்க்கப்படவில்லை என்பதுதான் கவனிக்கத்தக்கது.
  • ஏனெனில், சமூக அந்தஸ்தும் அதிகாரமும் அற்ற மக்களைத் தீவிர அரசியலில் பங்கேற்க வைப்பதன் மூலம் மட்டுமே அவர்களை அதிகாரம் மிக்கவர்களாக மாற்றிவிட முடியாது. அரசியலையும் சாதி ஆட்கொண்டிருக்கும் ஆபத்தான நிலையில், அவ்வரசியலே எப்படி நோய் தீர்க்கும் மருந்தாகும்?
  • இந்நாட்டின் அரசமைப்பு எதன் மீது எழுப்பப்பட்டிருக்கிறது என்பதை அம்பேத்கர் நுட்பமாக விளக்குகிறார்: “அரசமைப்பானது சமூக அமைப்பின் மீதுதான் கட்டப்பட்டுள்ளது என்பதை நிரூபிப்பதற்கு எந்த வாதங்களும் தேவையில்லை. அரசமைப்பின் மீது சமூக அமைப்பு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை.
  • சமூக அமைப்பு அரசமைப்பின் செயல்பாட்டை மாற்றலாம்; அதைச் செல்லுபடியற்றதாக்கலாம்; கேலிக்குரியதாகவும் ஆக்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை, சமூக அமைப்பு சாதி முறையின் மீதே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.” (அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 1, பக்: 167)
  • அதிகாரமும் அரசியல் செயல்பாடுகளும்: இன்று நிலவும் தனித்தொகுதி முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி தலித் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பேச இயலாத சூழல் இருக்கிறது. இதை எல்லாம் மீறித்தான் அம்மக்களுக்கான சில நலத் திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. இவை சமத்துவமற்ற சமூக அடிப்படையால் ஏற்படும் இன்னல்களுக்கான நிவாரணங்கள்தானே தவிர, தீர்வுகள் அல்ல.
  • இத்தகைய நலத் திட்டங்களுக்கான நிதிநிலையை உயர்த்தக் கோரியும் பாதிக்கப்படும் மக்களுக்கான சட்டப் பாதுகாப்பைப் போராடிப் பெறுவதுமே இங்கு அரசியல் செயல்பாடாக மாற்றப்பட்டுள்ளது. தொன்றுதொட்டு நிவாரணங்களையும் பாதுகாப்பையும் கோரிப் பெறுவது அரசியல் அதிகாரமாகாது.
  • அரசியல்ரீதியாக இப்பிரச்சினைக்குத் தீர்வு இல்லை என்பதால்தான், வலிமை பொருந்திய பிற சிறுபான்மைச் சமூகங்களோடு தலித் மக்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும்; அதில்தான் அவர்களின் பாதுகாப்பும் சுயமரியாதையும் அடங்கி இருக்கிறது என வலியுறுத்திய அம்பேத்கர், தன் இறுதிக் காலத்தில் அதற்குச் செயல்வடிவமும் கொடுத்தார்.
  • அதிகாரத்தின் பலனை அச்சாதியைச் சேர்ந்த ஒரு சிலரே அனுபவிக்க முடியும். அதிகாரத்தின் பண்பு நிலை அது. எனவேதான் அம்பேத்கருடைய போராட்டம் அதிகாரத்தை நோக்கியதாக இல்லை. மாறாக, அது சாதி, மத, வர்க்கப் பேதமின்றி ஒட்டுமொத்தச் சமூகத்தையும் ஜனநாயகப்படுத்துவதாக இருந்தது.
  • அதனால்தான் ஜனநாயகம் என்பது ஓர் அரசியல் செயல்பாடோ, அரசாங்கத்தின் வடிவமோ அல்ல; முதன்மையாக அது ஒரு கூட்டு வாழ்க்கை முறை என்று தெளிவுபடுத்தி, அதற்கொரு புதிய பரிமாணத்தை வழங்கினார் அம்பேத்கர்.
  • அரசியல் ‌ஜனநாயகத்தை விரைவில் ஒரு சமூக ஜனநாயகமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையே அவர் அரசமைப்புச் சட்டத்தின் வாயிலாகவும் பிரகடனப்படுத்தினார். அதுமட்டுமல்ல, அம்பேத்கர் தம்முடைய இறுதிக் காலத்தில் 10 லட்சம் மக்களைச் சாதியின் நுகத்தடியில் இருந்து முற்றாக விடுதலை செய்தபோது, எவ்வித அதிகாரமும் அற்றவராகவே இருந்தார்!

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories