TNPSC Thervupettagam

அம்பேத்கரும் ஒரு கோப்பைத் தேநீரும்!

December 10 , 2024 2 days 43 0

அம்பேத்கரும் ஒரு கோப்பைத் தேநீரும்!

  • கொட்டும் மழைக்கு இடையேயும், குளிரும் பனிக்கு மத்தியிலும் ஒரு கோப்பைத் தேநீர் எவ்வளவு இதமானதோ, அதே போல்தான் கடும் வெயிலில் பணியாற்றும் உழைப்பாளிகளுக்கு இடைவேளையில் கிடைக்கும் தேநீரும். இந்தியாவின் பல ஊர்களின் தெருக்களில் நின்று எந்தத் தயக்கமும் இல்லாமல் ரசித்துத் தேநீர் அருந்தியிருக்கிறேன். ஆனால், எங்கள் தஞ்சை மாவட்டக் கல்லணைக் கால்வாய் ஆற்றங்கரை ஓரம் உள்ள சிறு கிராமத்தில், மழை பெய்த அந்த அதிகாலையில், ஒரு மடக்கு தேநீரைக்கூடக் குடிக்க முடியாமல் வெளியேறினேன். காரணம், அங்கு சூழ்ந்திருந்த சாதியெனும் வெம்மை.

தார்மிகக் கடமை:

  • “இது ஒன்றும் புதிதல்ல. நீண்ட காலமாகவே இந்தப் பிரச்சினை இங்கு இருக்​கிறது. நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது எங்களுக்கும் கோபம் வந்தது. பிறகு ஒன்றும் செய்ய முடியாது என்று எங்களை நாங்களே சமாதானம் செய்து​கொண்​டோம். ஊரில் டீ குடிப்​பதையே நிறுத்​தி​விட்​டோம். முடி வெட்டு​வதும் வெளியூரில்​தான். இந்த ஆற்றங்​கரையோரம் உள்ள பெரும்​பாலான கிராமங்​களில் இதுதான் நிலை. நாங்கள் இந்தப் பகுதி​களில் 10 சதவீதத்​துக்கும் குறைவாகத்தான் இருக்​கிறோம்.
  • எங்களால் அவர்களை எதிர்த்துப் போராட முடியாது. எங்கள் பிள்ளைகள் தற்போது வெளியூர் செல்கிறார்கள். படிக்​கிறார்கள். வேலைக்குச் செல்கிறார்கள். அதன் விளைவாக இந்த நிலைக்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்​கிறார்கள். ஆனாலும் எங்களால் அவர்களை எதிர்த்துப் போராட முடியாது” என்று ஒரு பெரியவர் சொன்னார்.
  • உண்மையில் இதுதான் அங்குள்ள யதார்த்தம். இது குறித்து யாராவது வெளியூரிலிருந்து பேசப்​போ​னால், “அமைதியாக இருந்த ஊரில் வெளியில் இருந்து சிலர் வந்து பிரச்​சினையைத் தூண்டு​கிறார்கள்” என்று முத்திரை குத்தவும் ஒரு கூட்டம் அங்கு தயாராக இருக்​கிறது. தமிழ்​நாட்டின் பல பகுதி​களில் இந்நிலை வெளியில் தெரியாமல் இருக்கவே செய்கிறது. ஆனால், அந்த தலித் இளைஞர்​களின் கோபத்​துக்​கும், நியாயமான கோரிக்கைக்கும் யார் செவிசாய்ப்பது? அவர்கள் மட்டும்தான் அந்த அநீதி​களுக்கு எதிராகத் தனித்துப் போராட வேண்டுமா என்கிற கேள்வியைச் சமூகத்தின் முன்பு எழுப்பு​கிறோம். அது இந்தச் சமூகத்தின் பிரச்​சினை. அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டியது ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரின் கடமை. 90களுக்குப் பிறகு சாதிய அமைப்புகள் உருவாக்​கிவரும் பிரச்​சாரம் வலுவாக ஊடுருவி உள்ளது. இளைஞர்கள் மத்தியில் மேலும் சாதிய வன்மத்தை அது வளர்த்திருக்​கிறது.

சமத்துவம் சார்ந்த பிரச்சினை:

  • இடதுசாரி, அம்பேத்கரிய அமைப்பு​களைத் தவிர மற்ற அமைப்புகள் இந்தப் பிரச்​சினை​களில் தலையிடு​வ​தில்லை. முதன்மை அரசியல் கட்சிகளில் உள்ள முற்போக்கு, ஜனநாயக எண்ணம் கொண்டோரும் பெரும்​பான்மைச் சமூகத்தின் வாக்கு அரசியலுக்கு அஞ்சி அப்பகு​தி​களுக்குச் செல்வதைத் தவிர்க்​கிறார்கள். மௌனமாக வேடிக்கை பார்க்​கிறார்கள்.
  • இந்த மௌனம் ஒடுக்​கப்​படும் மக்களுக்கு மட்டும் ஆபத்தல்ல. இப்படியான அரசியல் இயக்கங்​களுக்கே எதிர்​காலத்தில் ஆபத்தாக முடியும். “பெரும்​பான்​மையாக ஒரே சாதியாக இருக்​கிறார்கள். கேட்டால் இது எங்கள் ஊர் பாரம்​பரியம் என்கிறார்கள். இதில் யாரும் தலையிடக் கூடாது என்று சொல்கிறார்கள். நாங்கள் என்னதான் செய்வது?” என்றே முதன்மை அரசியல் கட்சிகளைச் சேர்ந்​தவர்கள் சொல்கிறார்கள். இது பெரும்​பான்மை சிறுபான்மைப் பிரச்சினை அல்ல.
  • ஜனநாயகம், சமத்துவம் சார்ந்த பிரச்​சினை. இப்படியான ஓர் உரையாடலைத் தலித் அல்லாத இளைஞர்​களிடம் அனைத்து அரசியல் இயக்கங்​களும் நடத்த வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்னோவில் தாழ்த்​தப்பட்ட மக்களின் மாகாண மாநாடு நடைபெற்றது. சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் அந்த மாநாட்டில் கலந்து​கொண்டு உரையாற்றி​னார்.
  • “தனிமையில் இருப்​ப​தால்தான் பிற்படுத்​தப்பட்ட வகுப்​பினர் இன்னலுக்கு உள்ளாகின்​றனர். அவர்கள் ஓர் ஐக்கிய முன்னணி அமைத்து உயர் வகுப்​பினரிட​மிருந்து அரசியல் அதிகாரத்தைத் தட்டிப் பறிக்க வேண்டும். வயது வந்தோருக்கு வாக்குரிமை வழங்கப்​பட்​டிருப்​ப​தால், வெகுஜனங்​களுக்கு அரசியல் அதிகாரம் வந்துள்ளது.
  • ஒன்றரைக் கோடி தாழ்த்​தப்​பட்​ட​வர்​களும், ஒரு கோடி பிற்படுத்​தப்பட்ட வகுப்​பினரும் பொது எதிரியை வீழ்த்த ஒன்றுசேர்ந்​தால், தமது மக்களைச் சட்டசபையில் பாதி உறுப்​பினர்​களாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்​றலாம் என்று நான் கருதுகிறேன்” என்று அக்கூட்​டத்தில் பேசினார். உத்தரப் பிரதேசத்தில் பிற்படுத்​தப்​பட்​ட​வர்​களை​விடத் தாழ்த்​தப்​பட்​ட​வர்கள் பெரும்​பான்​மையாக இருந்​தனர். பெரும்​பான்மை அரசியலுக்கு முக்கி​யத்துவம் கொடுக்க அம்பேத்கர் நினைத்​திருந்​தால், பிற்படுத்​தப்​பட்​ட​வர்​களின் உரிமைக்கும் குரல் கொடுத்​திருப்பாரா என்கிற கேள்வி இங்கு முக்கிய​மாகிறது.
  • ‘ஒரு நபரின் பிறப்பு அடிப்​படையில் பாரபட்சம் காட்டக் கூடாது’ (சட்டக்கூறு 15) என்று அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தைக் கொண்டே தமிழ்​நாட்டின் பிற்படுத்​தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்​கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த​போது, அண்ணல் அம்பேத்கர், “கம்யூனல் ஜி.ஓ. பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திருப்​தி​யற்றது. பிற்படுத்​தப்பட்ட மக்களின் முன்னேற்​றத்​துக்கு உதவி புரிவதே அரசாங்​கத்தின் கடமை” என்று நாடாளு​மன்​றத்தில் முழங்கினார்.
  • “சமூகத்​திலும் கல்வி​யிலும் பின்தங்கிய மக்களுக்​கும், தாழ்த்​தப்​பட்ட, பழங்குடியின மக்களுக்கும் அவர்களின் முன்னேற்றம் கருதி, மாகாண அரசாங்கம் தனிச்​சலுகை வழங்கு​வதற்காக மேற்கொள்​ளப்​படும் எந்தத் தனி ஏற்பாட்​டையும் இந்த 15ஆவது சட்டக்​கூறின் ஒரு பிரிவோ அல்லது விதி 29 இன் 2ஆவது உட்பிரிவோ தடை செய்யாது” என்று சட்டத் திருத்​தமும் செய்து​கொடுத்தார்.
  • அதோடு நில்லாமல், “இதர பிற்படுத்​தப்பட்ட பிரிவினர் என்கிற பிரிவை அரசியல் சட்டம் ஏற்று ஓராண்டு ஆகிவிட்டதே. இன்னும் ஏன் அவர்கள் நலன்களை ஆராயும் ஆணையம் உருவாக்​கப்​பட​வில்லை?” என்று கடுமை​யாகக் கண்டித்​ததோடு, தன் சட்ட அமைச்சர் பதவியையும் பிற்படுத்​தப்பட்ட மக்களின் நலன்களுக்காக உதறி எறிந்​தார்.

சுயமரி​யாதையின் குரல்:

  • நவீனம் என்பது ஆடைகள், நவீன சாதனங்கள் உள்ளிட்ட புறத் தோற்றம் சார்ந்தது அல்ல. சிந்தனை ரீ​தியாக நாம் எவ்வளவு நவீனமாகி​யிருக்​கிறோமோ, அதைச் சார்ந்தது. பிற்படுத்​தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் ஆட்சியர் ஆர்.எஸ்​.மலை​யப்பனை ஒரு நிகழ்ச்​சிக்குப் பறையடித்து வரவேற்​றார்கள் தலித்துகள். அப்போது “ஒரு சாதியோடு இணைந்து தப்பாட்டத்தைப் பார்க்கும் வரை நீங்கள் அதை அடிக்​காதீர்கள்” என்று கண்டித்தார் அவர்.
  • அதுதானே நவீனத்தின் சுயமரி​யாதையின் குரல்! “தலித்துகள் பறையடிப்பது எங்கள் பாரம்​பரியம், அதை ஏன் மாற்றுகிறீர்கள் என்று மலையப்பன் பேசியிருந்​தால், அவருக்கு இன்று நாம் சிலைவைத்துக் கொண்டாடி​யிருப்​போமா?” என்கிற உரையாடல் அவசிய​மானது. இப்படி இளைஞர்​களிடம் உரையாட நம் மண்ணில் நூற்றுக்​கணக்கான செய்திகள் கொட்டிக்​கிடக்​கின்றன. நமக்குத் தேவை திறந்த மனத்தோடு கூடிய உரையாடலை நடத்த வேண்டும் என்கிற எண்ணம்​தான்.
  • தேநீர் வரலாற்றின் பக்கங்​களில் முழுக்க இருப்பது ஒடுக்​கப்பட்ட மக்களின் சோகம் நிறைந்த வாழ்க்கை​தான். அவர்கள் விளைவித்த தேயிலை​யி​லிருந்து உருவாக்​கப்​படும் பானத்தை, அவர்களுக்கே தனி கிளாஸில் கொடுக்க நமக்கு என்ன உரிமை இருக்​கிறது என்று உரையாடலைத் தொடங்​கு​வோம்.
  • அண்ணல் அவர்கள் தன் இளைமைக் காலம் முழுவதும் பொது இடங்களில் சமமாக உணவு அருந்தும் உரிமை மறுக்​கப்​பட்​டவர். அதனால்தான் சமமின்​மையின் வலியை அவரால் நன்கு உணர முடிந்தது. அந்த வலிதான் நம் எல்லோருக்கும் சம உரிமையைப் பெற்றுத் தர அவரைப் போராட வைத்தது. அண்ணலின் சிந்தனைகளை மனதில் ​கொண்டு ஒரு கோப்பைத் தேநீரைச் சுவைப்​போம். சுவையையும் ​தாண்டிப் பல செய்திகளை அந்தத் தருணம் நமக்கு உணர்​த்​தட்டும்​!

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories