TNPSC Thervupettagam

அரசமைப்பு ஆறாம் அட்டவணை வழங்கும் சிறப்பு உரிமைகள்

October 9 , 2024 97 days 137 0
  • ஜம்மு - காஷ்மீரிலிருந்து பிரிக்​கப்​பட்டுத் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்​கப்பட்ட லடாக்,​ அரசமைப்புச் சட்டத்தின் ஆறாம் அட்டவணையில் சேர்க்​கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து அங்கு ஒலித்து​வரு​கிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் மனு கொடுக்கச் சென்ற சூழலியல் செயல்​பாட்​டாளர் சோனம் வாங்சுக் தலைமையிலான குழுவினர், டெல்லி எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்​தப்​பட்​டனர். இதையடுத்து, லடாக் விவகாரம் தேசிய அளவில் மீண்டும் பேசுபொருளாகி​யிருக்​கிறது. இந்தப் பின்னணி​யில், அரசமைப்புச் சட்டத்தின் ஆறாம் அட்டவணை குறித்துத் தெரிந்​து​கொள்வது அவசியம்.

அட்டவணை​களின் வரலாறு:

  • ஆங்கிலேயர்​களின் வருகைக்கு முன்பு பழங்குடி மக்கள் அனைவரும் முகலாய, சுல்தானிய மன்னர்​களின் ஆளுகைக்கு முழுமை​யாகக் கட்டுப்​பட்​ட​வர்களாக இருக்க​வில்லை. முகலாய, சுல்தானிய அரசர்கள் பழங்குடிச் சடங்குகள், வாழ்க்கை முறையில் தலையிட​வில்லை. பிரிட்​டிஷாரின் வருகைக்கு முன், பழங்குடி மக்கள் காடுகளுக்கும் அவர்களின் முன்னோர்வழி வந்த நிலங்​களுக்கும் உரிமை​யுடைய​வர்களாக இருந்​தனர்.
  • ஆனால், தொடக்கக் கால பிரிட்டிஷ் சட்டங்​களும் காடு தொடர்பான கொள்கைகளும் பழங்குடி வாழ்க்கை முறையைப் பாதித்தன. காட்டு நிலப் பகுதிகள் மீதான பழங்குடி​யினரின் மரபார்ந்த உரிமையை பிரிட்டிஷ் அரசு அங்கீகரிக்க​வில்லை. காடுகளுக்குள் பழங்குடி​யினரின் நகர்வு கட்டுப்​படுத்​தப்​பட்டது. இதனால் பழங்குடி​யினருக்கு ஏற்பட்ட அதிருப்​தியின் காரணமாக கோல் கலகம் (1831-32), சாந்தாள் புரட்சி (1855-56), முண்டா கலகம் (1899-1900), பஸ்தர் கலகம் (1910) ஆகிய போராட்​டங்கள் வெடித்தன.
  • இக்கல​கங்கள் பழங்குடிகளை ‘தனிமைப்​படுத்​தும்’ பிரிட்​டிஷாரின் கொள்கைக்கு வித்திட்டன. இந்திய அரசுச் சட்டம் 1935இன் கீழ் ‘விலக்​கப்​பட்ட’ அல்லது ‘பகுதி அளவில் விலக்​கப்​பட்ட’ நிலப் பகுதிகள் உருவாக்​கப்​பட்டன. ‘விலக்​கப்​பட்ட’ நிலப் பகுதிகள் முதன்​மையாக வடகிழக்கின் மலைப் பிராந்​தி​யங்களை உள்ளடக்​கிய​வையாக இருந்தன. இந்தப் பகுதி​களில் சட்டம் இயற்றும் அதிகாரம் ஆளுநரிடம் ஒப்படைக்​கப்​பட்டது.
  • ‘பகுதி அளவில் விலக்​கப்​பட்ட’ நிலப்​பகு​திகள் இன்றைய பிஹார், வங்கம், ஒடிஷா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்​களில் உள்ள பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளை உள்ளடக்​கிய​வையாக இருந்தன. இவை மத்திய மற்றும் மாகாணச் சட்டமன்​றங்​களின் சட்டங்​களுக்கு உள்பட்டவை. ஆனால், அவற்றில் சில மாற்றங்​களைச் செய்து​கொள்​வதற்கும் விலக்குகளை அளிப்​ப​தற்கும் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்​கப்​பட்டது.

ஐந்தாம் அட்டவணை:

  • பிரிட்டிஷ் அரசின் மேற்கூறிய ஏற்பாடுகளை அடியொற்றியே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஐந்தாம், ஆறாம் அட்டவணைகள் வடிவமைக்​கப்​பட்​டுள்ளன. ஐந்தாம் அட்டவணை என்பது ‘அட்ட​வணைப் பகுதிகள்’ (scheduled areas) என்று குடியரசுத் தலைவரால் அறிவிக்​கப்பட்ட நிலப் பகுதி​களுக்குப் பொருந்​தக்​கூடிய​தாகும். ஒரு நிலப் பகுதி, அட்டவணை நிலப் பகுதியாக அறிவிப்​ப​தற்குச் சில முன்நிபந்​தனைகள் உள்ளன.
  • அங்கு பழங்குடி மக்கள்தொகை அதிகமாக இருக்க வேண்டும், நில அளவு குறுகியதாக இருக்க வேண்டும். மாவட்டம் அல்லது வட்டம் போன்ற நிர்வாக அலகாக இருக்க வேண்டும். பொருளா​தா​ரத்தில் பின்தங்​கியதாக இருக்க வேண்டும். தற்போது 10 மாநிலங்​களில் உள்ள சில நிலப் பகுதிகள் ‘அட்ட​வணைப் பகுதிக’ளாக அங்கீகரிக்​கப்​பட்​டுள்ளன.
  • இந்த மாநிலங்​களில் 20 உறுப்​பினர்​களைக் கொண்ட பழங்குடியினர் ஆலோசனைக் குழுக்கள் (Tribes Advisory Council) அமைக்​கப்​படும். அவர்களில் முக்கால் பங்கினர் அந்த மாநிலத்தின் பழங்குடி சட்டமன்ற உறுப்​பினர்களாக இருக்க வேண்டும். இந்த மாநிலங்​களில் உள்ள பட்டியல் பழங்குடிகளின் நலன், முன்னேற்றம் தொடர்பான ஆலோசனைகள் பழங்குடி ஆலோசனைக் குழுக்​களால் வழங்கப்​படும்.
  • மத்திய அரசின் ஒப்பு​தலைப் பெற்று, பட்டியல் பழங்குடி​யினருக்கு இடையிலான நில ஒதுக்கீடு மற்றும் பரிமாற்​றங்​களுக்கான ஒழுங்​காற்று விதிகளை ஆளுநர் பிறப்​பிப்​பார். ‘அட்ட​வணைப் பகுதி​க’ளில் கடனளிப்​போரின் தொழிலையும் ஆளுநர் ஒழுங்​கு​முறைப்​படுத்து​வார். ‘அட்ட​வணைப் பகுதிக’ளுக்கு நாடாளு​மன்றம் அல்லது மாநிலச் சட்டமன்​றத்தால் நிறைவேற்​றப்பட்ட ஒரு சட்டம் பொருந்தாது என்றோ குறிப்​பிட்ட மாற்றங்​களுடன் பொருந்தும் என்றோ ஆளுநர் அறிவிக்​கலாம்.

ஆறாம் அட்டவணை:

  • அசாம், மேகாலயம், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்​களில் ‘பழங்​குடிப் பகுதிகள்’ என்று அதிகாரபூர்வமாக அழைக்​கப்​படும் நிலப் பகுதி​களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் ஆறாம் அட்டவணை பொருந்​தும். இந்த நான்கு மாநிலங்​களிலும் சேர்த்து தற்போது 10 ‘பழங்​குடிப் பகுதிகள்’ உள்ளன. இந்தப் பகுதி​களில் தன்னாட்சி பெற்ற மாவட்டக் குழுக்கள் (Autonomous District Councils) அமைக்​கப்​பட்​டுள்ளன.
  • இவற்றில் 30 உறுப்​பினர்கள் அங்கம்​ வகிப்​பார்கள். இவர்களில் அதிகபட்சமாக நால்வர் மட்டுமே சம்பந்​தப்பட்ட மாநிலத்தின் ஆளுநரால் நியமிக்​கப்​படு​வார். மற்றவர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்​தெடுக்​கப்​படு​வார்கள். நிலத்தின் பயன்பாடு மற்றும் நிர்வாகம், சாகுபடியை மாற்றுதல் தொடர்பான ஒழுங்​கு​முறை, வம்சாவளிச் சொத்துரிமை, திருமணம் மற்றும் மணவிலக்கு, சமூகப் பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவை தொடர்பான சட்டங்களை இயற்று​வதற்கான அதிகாரம் தன்னாட்சி பெற்ற மாவட்டக் குழுக்​களிடம் ஒப்படைக்​கப்​பட்​டுள்ளது. இந்தக் குழு இயற்றும் சட்டங்கள் ஆளுநரின் ஒப்பு​தலைப் பெற்ற பிறகு நடைமுறைப்​படுத்​தப்​படும்.
  • மேற்கூறிய விவகாரங்​களில் மாநிலச் சட்டமன்றம் இயற்றும் சட்டங்கள், சம்பந்​தப்பட்ட குழுவால் நீட்டிக்​கப்​பட்டால் ஒழிய இந்தப் ‘பழங்​குடிப் பகுதிக’ளுக்குப் பொருந்​தாது. மேலும், ‘பழங்​குடிப் பகுதிகள்’ என்று அங்கீகரிக்​கப்பட்ட மாவட்​டங்​களில் தொடக்கப் பள்ளிகள், மருத்​துவ​மனைகள், சாலைகள், நீர்ப்​பாதைகள் ஆகியவற்றை நிறுவி, நிர்வகிப்​ப​தற்கான அதிகாரமும் தன்னாட்சி பெற்ற மாவட்டக் குழுக்​களுக்கு உண்டு.
  • நில வருவாய் மீதும் தொழில், வணிகம் ஆகியவற்றின் மீதும் வரிவி​திப்​ப​தற்கான அதிகாரமும் இந்தக் குழுக்​களுக்கு வழங்கப்​பட்டது. கனிம வளங்களைத் தோண்டி எடுப்​ப​தற்கான உரிமங்களை வழங்கும் அதிகாரமும் இந்தத் தன்னாட்சிக் குழுக்​களுக்கு உள்ளது. மாவட்​டத்​துக்குள் வாழும் பட்டியல் பழங்குடி மக்களுக்கு இடையிலான வழக்குகளை விசாரித்து நீதி வழங்கு​வதற்​காகக் கிராம, மாவட்ட அளவிலான நீதிமன்​றங்களை அமைக்​கவும் இந்தக் குழுக்களுக்கு அதிகாரம் உண்டு.
  • ஆக, ஐந்தாம், ஆறாம் அட்டவணைகள் இரண்டுமே பட்டியல் பழங்குடி மக்களை மையநீரோட்ட வளர்ச்சித் திட்டங்​களில் இணைக்​கும்​போது, அவர்களின் நலன்களையும் பண்பாட்​டையும் பாதுகாக்கும் நோக்கத்​துக்காக உருவாக்​கப்​பட்டவை.

தேவைப்​படும் சீர்திருத்​தங்கள்:

  • பழங்குடி மக்களின் நலன்களையும் பண்பாட்​டையும் தன்னாட்​சி​யையும் பாதுகாக்க இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இத்தகைய சிறப்பு ஏற்பாடுகள் இருந்த​போ​திலும் மேலும் சில முக்கியமான சீர்திருத்​தங்கள் தேவைப்​படு​கின்றன. முதன்​மையாக இவ்விரண்டு அட்டவணைகள் அளிக்கும் தன்னாட்சி ஆவணங்​களில் உள்ளதே தவிர, நடைமுறையில் அசலான தன்னாட்​சியாக இருப்​ப​தில்லை. ‘அட்ட​வணைப் பகுதிக’ளில் ஆளுநர் பிறப்​பிக்கும் உத்தர​வுகள் மத்திய அரசின் ஒப்பு​தலுக்கு உள்பட்டவை.
  • அதேபோல் ‘பழங்​குடிப் பகுதிக’ளில் தன்னாட்​சிபெற்ற மாவட்டக் குழுக்கள் பிறப்​பிக்கும் உத்தர​வுகள் சம்பந்​தப்பட்ட மாநில ஆளுநரின் ஒப்பு​தலுக்கு உள்பட்டவை. மத்தி​யிலும் மாநிலத்​திலும் மாவட்டக் குழுக்​களிலும் வெவ்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சியில் இருக்​கும்​போது, கட்சிகளுக்கு இடையிலான அரசியல் முரண்​களின் காரணமாகப் பழங்குடிப் பகுதி​களின் தன்னாட்சி பாதிக்​கப்​படு​கிறது. எனவே ஐந்தாம், ஆறாம் அட்டவணை​களின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றும் வகையிலான தெளிவான விதிமுறைகள் வரையறுக்​கப்பட வேண்டும்.
  • இரண்டாவதாக, ஐந்தாம் அட்டவணைக்குள் வரும் 10 மாநிலங்களுக்கு உள்ளேயும், அவற்றுக்கு வெளியேயும் பட்டியல் பழங்குடி​யினர் வசிப்​பிடங்கள் உள்ளன. இவை அட்டவணைப் பகுதிகளாக அங்கீகரிக்​கப்​படாததால் அவற்றுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கும் உரிமையும் பாதுகாப்பும் மறுக்​கப்​படு​கின்றன. உரிய பரிசீலனைக்கும் இந்தப் பகுதி​களும் ‘அட்ட​வணைப் பகுதிக’ளாக அங்கீகரிக்​கப்பட வேண்டும்.
  • மூன்றாவதாக, 125 ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா (2019) மாநிலங்​களவையில் நிலுவையில் உள்ளது. இது தற்போது நடைமுறையில் இருக்கும் 10 தன்னாட்​சிபெற்ற மாவட்டக் குழுக்​களுக்கு நிதி, நிர்வாகம் சார்ந்த கூடுதல் அதிகாரங்களை வழங்கு​வதற்​கானது. இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேறத் தடையாக இருக்கும் பிரச்​சினைகள் குறித்து ஆலோசிக்க உள்துறை இணை அமைச்சர் தலைமையில் ஒரு குழுவை அமைக்க மத்திய அரசு ஒப்புக்​கொண்டுள்ளது.
  • இந்த விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரின் ஒப்பு​தலைப் பெறும் பணி விரைவுபடுத்​தப்பட வேண்டும். அருணாசலப் பிரதேசத்​தையும் மணிப்பூர் மலைப்​பகு​தி​யையும் அரசமைப்புச் சட்டத்தின் ஆறாம் அட்டவணையில் இணைப்​ப​தற்கான தீர்மானங்களை அருணாசலப் பிரதேசச் சட்டமன்​றமும் மணிப்பூர் மலைப்​பகுதிக் குழுவும் (Manipur Hill Committee) நிறைவேற்றி​யுள்ளன.
  • லடாக்​கிலும் இந்தக் கோரிக்கை வலுத்து​வரு​கிறது. இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் முறையாகப் பரிசீலிக்​கப்பட வேண்டும். வன உரிமைச் சட்டம் 2006இன்படி காடுகள் சார்ந்த உரிமைகளை அங்கீகரிப்​பதும் அந்த உரிமைகளை அவர்களிடம் ஒப்படைப்​பதும் நாடு முழுவதும் நடைபெறுவதை உறுதிப்​படுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories