TNPSC Thervupettagam

அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலரா... அரசாங்கத்தின் பாதுகாவலரா?

September 27 , 2019 1932 days 1051 0
  • நெருக்கடிநிலை அமலில் இருந்தபோது, அடிப்படை உரிமைகளுக்காக நடந்த வழக்கில் ‘சுதந்திரத்தின் வற்றாத கனிகளை ஏராளமானோருக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, சிலருக்கான சுதந்திரம் தற்காலிகமாக மறுக்கப்படுகிறது’ என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
  • நிர்வாகத் தலைமைக்கு ‘மேலாதிக்க உரிமை’ உண்டு என்பதை ஏற்கும் விதத்தில் தெரிவிக்கப்பட்ட இக்கருத்தை, ‘ஆட்கொணர்வு வழக்கின் தீர்ப்பு’ (ஹேபியஸ் கார்பஸ்) என்று குறிப்பிடுவர்.
  • ஆபத்தான காலத்தில் அரசின் நன்மை கருதி, மக்களுடைய உரிமைகளை அந்த நன்மைக்கு உட்பட்டதாகக் கருத வேண்டும்’ என்பது கொள்கை. எது ஆபத்தான காலம்? அதை அரசு முடிவுசெய்யும்; யாருடைய உரிமைகள் கட்டுப்படுத்தப்படும், எப்படி? அதை அரசு முடிவுசெய்யும்; சுதந்திர உரிமைகள் எப்போது திருப்பி அளிக்கப்படும்? அதை அரசு முடிவுசெய்யும்; அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்ற அனுமானத்தின் பேரில் உச்ச நீதிமன்றம் (இந்த உரிமைகள் வழக்கில்) நடந்துகொள்ள வேண்டும் என்றது நீதித் துறை.
நீதித் துறையின் இருண்ட காலம்
  • உச்ச நீதிமன்றம் எடுத்த நிலை எவ்வளவு தவறானது என்பது விரைவிலேயே தெரியவந்தது. நெருக்கடிநிலை விலக்கிக்கொள்ளப்பட்டவுடன், அரசு செய்த ‘சட்டத்துக்குப் புறம்பான’ பல செயல்கள் அம்பலமாயின.
  • ‘மிதமிஞ்சிய அதிகாரம், மிதமிஞ்சிய தவறுகளுக்கே வழிவகுக்கும்’ என்பதை அவை நினைவூட்டின.
  • நம்முடைய குடியரசு அரசமைப்புச் சட்டம் நிர்வாக முறைக்குப் பல கட்டுப்பாடுகளையும் வரம்புகளையும் கொண்டது. அரசு, தான் எடுக்கும் முடிவுகளுக்கும் செய்யும் செயல்களுக்கும் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டது.
  • மக்களுடைய அடிப்படை உரிமைகள் மீது அரசின் செயல்கள் குறுக்கிடும்போது, அரசு பதில் சொல்ல வேண்டும் என்று நீதிமன்றம் மூலம்தான் கேட்க முடியும்.
  • ‘ஆட்கொணர்வு வழக்கின் தீர்ப்பு’ இந்தக் கொள்கைக்குத் துரோகம் விளைவித்தது. உச்ச நீதிமன்ற வரலாற்றின் ‘இருண்ட காலம்’ என்று அது அழைக்கப்பட்டது.
  • இனி, இத்தகைய நிலை மீண்டும் வராமலிருக்க வெகு ஆழத்தில் இது புதைக்கப்பட வேண்டும் என்றது நீதித் துறை. அதற்குப் பதிலாக நோக்கத்துக்கும் செயலுக்கும் பொருத்தமான விகிதாச்சாரம் இருக்க வேண்டும் என்றது.
  • மிகப் பெரிய லட்சியத்துக்காக மக்களுடைய அடிப்படை உரிமைகளைத் தற்காலிகமாக நிறுத்துவது அல்லது முடக்குவது அவசியம் என்றால், தன்னுடைய நோக்கத்துக்கும் செயலுக்கும் பொருத்தப்பாடு இருப்பதை அது நிரூபிக்க வேண்டும் என்றது.
  • மிகவும் அவசியம் என்றாலும்கூட இத்தகைய உரிமை மறுப்புகள் மிகவும் குறைந்தபட்ச அளவிலேயே இருக்க வேண்டும் என்றது.
  • அரசின் நடவடிக்கைகள் அரசமைப்புச் சட்டப்படி செல்லத்தக்கதா என்பதை நீதிமன்றங்களில்தான் சோதித்துப்பார்க்க வேண்டும்.
  • ஆட்கொணர்வு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி எச்.ஆர்.கன்னா, “ஆர்வக் கோளாறால் சிலர் நல்லது செய்வதாக நினைத்துக்கொண்டு ‘சட்டப்படியான ஆட்சி’ என்ற கொள்கைக்கு மாறாக மக்களுடைய அடிப்படை உரிமைகளில் செய்யும் ஆக்கிரமிப்புகள் மிகவும் ஆபத்தானவை” என்று எச்சரித்திருக்கிறார்.
2019-ல் ஆட்கொணர்வு வழக்கு
  • இந்த ஆண்டு ஆகஸ்ட் 5 முதல் தகவல்தொடர்புகளை மேற்கொள்ள முடியாமல் முழுவதும் முடக்கப்பட்ட நிலைக்கு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கொண்டுவரப்பட்டது.
  • அரசியல் தலைவர்களும், எண்ணிக்கை தெரியாத அளவுக்குத் தனிநபர்களும் விசாரணையின்றி காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
  • தகவல்தொடர்புகளை முடக்குவது அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, பேச்சுரிமையை முடக்குவதாகும்.
  • மாநிலத்துக்கு வெளியே வசிப்போர் தங்களுடைய குடும்பங்களுடன் தொடர்புகொள்ள முடியாமலும், வெளிச்சத்துக்கே வராத உரிமை மீறல் செயல்களை அம்பலப்படுத்த முடியாமலும் அரசால் திரைபோட்டு மறைக்க உதவுகின்றன.
  • அத்துடன் அனைத்து வகை அடித்தளக் கட்டமைப்புகளையும் சேதப்படுத்துகின்றன.
  • சுகாதாரம், உணவு, போக்குவரத்து, மருத்துவம் ஆகிய அனைத்தையும் பெற முடியாமல் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
  • விசாரணையின்றி சிறையில் அடைப்பது தனிநபர் உரிமையை அப்பட்டமாக மீறுகிறது. இப்படி சமூக ஊடகங்களையும் இணையதளங்களையும் முடக்கிவைப்பதால் வன்முறையைத் தவிர்த்துவிடலாம் என்பதற்குச் சமீபத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
  • மாறாக, இப்படி முடக்குவதால் வதந்திகள் பெருகி, மக்கள் அதனால் உணர்ச்சிவசப்பட்டு வன்செயல்கள் அதிகரித்ததற்கே சான்றுகள் அதிகம் இருக்கின்றன.
  • அரசமைப்புச் சட்டத் தேவைக்கேற்ப இந்த உரிமை முடக்க நடவடிக்கைகள் இருந்தனவா என்று பார்க்க வேண்டும்.
  • ஆனால், இதில் சில கேள்விகளுக்கு விடை அவசியம். ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை தொடர்பாக மக்கள் தங்களுக்குள் கடுமையாக விவாதித்தனர். செய்தித்தாள்களில் கட்டுரைகள், தலையங்கங்கள் எழுதப்பட்டன, ஊடகங்களில் விவாதித்தனர், பலரும் நேர்காணல்கள் மூலம் தங்களுடைய கருத்துகளைப் பதிவுசெய்தனர், ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில்கூட இந்த விவகாரம் பேசப்பட்டது.
  • ஆனால், ஒரு இடத்தில் மட்டும் இது தொடர்பான விவாதங்களே நடக்கவில்லை - அது இந்நாட்டின் நீதிமன்றங்கள்.
நீதிமன்றங்களின் மௌனம்
  • நெருக்கடிநிலை காலத்தில் நடந்ததைப் போல ‘அரசின் நடவடிக்கை சரிதான்’ என்று நீதிமன்றங்கள் இதுவரையில் கூறிவிடவில்லை. அதேசமயம், இந்நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிப்பதையே தள்ளிப்போட்டன, தவிர்க்கப் பார்த்தன, தப்பித்தன, பதுங்கின.
  • ஷா பெசல் என்ற அரசியல் தலைவர் தன்னைக் கைதுசெய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் இருமுறை ஒத்திவைத்தது (ஒருமுறை அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு வரவில்லை).
  • உச்ச நீதிமன்றத்தில் இதைவிட மெச்சிக்கொள்ளும்படி எதுவும் நடந்துவிடவில்லை. இணையதளம் உள்ளிட்ட தகவல்தொடர்பு முடக்கம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டன.
  • முதல் முறை, ‘அரசுக்குச் சிறிது அவகாசம் அளிக்க வேண்டும்’ என்ற கருத்துரையோடு ஒத்திவைக்கப்பட்டது. நெருக்கடிநிலைக் காலத்தில் ஆட்கொணர்வு மனு மீதான கருத்தின் எதிரொலிபோலவே இது இருந்தது. செப்டம்பர் 16-ல் இந்த மனு மீது விசாரணை நடக்கும்போது, உரிமைகள் முடக்கப்பட்டு 40 நாட்களாகியிருக்கும். பேச்சுரிமை, கருத்துரிமை மீதான தாக்குதல்களைப் பற்றி மௌனம் சாதித்துவிட்டு, ஆட்கொணர்வு மனுவுக்கான உரிமை தொடர்பான மனுவை முதலில் விசாரணைக்கு ஏற்றது.
  • உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தான் செய்தது நியாயம்தான் என்று நிரூபிக்குமாறு அரசைக் கேட்பதற்குப் பதிலாக, மனுதாரர்கள் காஷ்மீர் செல்லவும் அங்கே தடுப்புக் காவலில் இருந்த சிலரைச் சந்திக்கவும் அனுமதி தந்தது.
  • நம்முடைய அரசமைப்புச் சட்ட முறைப்படி, நாடு முழுவதும் செல்வதற்கு நீதிமன்றத்திடம் அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டிய அவசியமே இல்லை. இப்படி அனுமதி தந்ததன் மூலம், கைது தொடர்பாகத் தன்னுடைய கருத்து என்ன என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டது நீதிமன்றம்.
  • தனிநபர்களைப் பொறுத்தவரை தற்காலிகமான சமரச ஏற்பாட்டை அது நாடியது. தகவல்தொடர்பு முடக்கப்பட்டது, விசாரணையின்றி காவலில் வைக்கப்பட்டது குறித்து அரசியல் சட்டப்படி தான் செய்ய வேண்டிய கடமையை அது செய்யவில்லை. நீதித் துறையின் இந்த நழுவலால் மாநிலத்தில் அதே நிலைமை நீடிக்கிறது.
  • தன் முன்னுள்ள வழக்கு தொடர்பாக ஆணை எதையும் பிறப்பிக்காததன் மூலம் மக்களுடைய அடிப்படை உரிமைகள் மீதான ஆக்கிரமிப்பை நீதிமன்றம் அனுமதித்துள்ளது. தன்னுடைய செயலை விளக்க வேண்டிய அரசாங்கத்தை அந்தப் பொறுப்பிலிருந்து விலக்கிவிட்டது.
  • பதில் சொல்லக் கடமைப்பட்ட அரசு பதில் சொல்லாமல் தப்ப முடிந்திருக்கிறது. இது நீதித் துறையை விட நிர்வாகத் துறைதான் மேலாதிக்கம் மிகுந்தது என்பதை ரகசியமாக வலியுறுத்தும் செயலாகும்.
  • மக்களுடைய உரிமைகளுக்கு சார்பாக நிற்க வேண்டிய நீதித் துறை, களத்தை விட்டு விலகிவிட்டது, அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய தன் பணியைச் செய்யாமல் நகர்ந்துவிட்டது.

நன்றி: இந்து தமிழ் திசை (27-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories