- சம்பாத்தியம், சேமிப்பு, முதலீடு ஆகிய மூன்று வயர்களிலும் மின்சாரம் வந்தால்தான், எதிர்கால சவுகரியம் என்கிற விளக்கு எரியும். சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சேமித்தால் மட்டும் போதாது. அதை சிறப்பாக முதலீடு செய்யவும் வேண்டும். சேமிப்பின் மதிப்பு வளர்ச்சி காணாவிட்டால் தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசியை சமாளிக்க முடியாது.
- சரியாக, நிதானமாக செய்தால் நல்ல வளர்ச்சியை தரக்கூடியதாக பங்குகள், பரஸ்பர நிதிகள் போல சில முதலீடுகள் இருந்தாலும், எல்லோராலும் அவற்றைப் புரிந்து கொண்டு சரியாக செய்ய இயலாது. அதனால் பலரும் அதிகம் யோசிக்காமல் சுலபமாக தேர்வு செய்யும் முதலீடாக பல ஆண்டுகளாக மண்ணும் பொன்னும் இருக்கிறது.
- வீடு, இடம், நிலம் போன்றவற்றை வாங்க அதிக பணம் வேண்டும். கையில் இருக்கும் சேமிப்புடன் கடனும் வாங்க வேண்டியிருக்கும். ஆனால் தங்கம் அப்படியில்லை. எவரும் சிறிய அளவுகளில் கூட வாங்க முடியும். மகள் திருமணம் போன்ற எதிர்கால தேவைகளுக்காக சிலரும், எதிர்கால விலைவாசி உயர்வைசமாளிக்க வேறு சிலரும், விலை உயர்வினால் கிடைக்கும் லாபத்தைப் பெற வர்த்தகர்களும் தங்கம் வாங்குகிறார்கள்.
- கடந்த ஒன்றிரண்டு தசமங்களாக உலகில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக தங்கத்தின் ‘மவுஸ்’ கூடிக்கொண்டே இருக்கிறது என்பது கண்கூடு. அரசாங்கங்கள், நிறுவனங்கள், பெரும் முதலீட்டாளர்கள் என பலதரப்புகளிலும் தங்கத்தில் போடும் பணமே பத்திரம் என்று ஒரு கணிப்பு இருக்கிறது.
- பணம் பத்திரம் என்பது மட்டுமில்லை. லாபகரமானமுதலீடு என்றும் நினைக்கிறார்கள். அவர்கள் அப்படி நினைக்க காரணம், கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 13 சதவீத விலை உயர்வு கண்டிருக்கிறது தங்கம். கடந்த 10 ஆண்டுகளில் என்று பார்த்தால் ஆண்டுக்கு 9 சதவீத விலை உயர்வு. வங்கி வட்டியை காட்டிலும் அதிகம்.
- இப்படி முதலீட்டுக்காக தங்கத்தை காசுகளாக, கட்டிகளாக வாங்கி வைக்கிறவர்களுக்கு சில சிரமங்கள் உண்டு. வாங்கும்போது வரி. விற்றாலும் வரி. தவிர, திருட்டு, வழிப்பறி அபாயங்கள் உண்டு. பாதுகாக்க லாக்கரில் வைக்கலாம். ஆனால் அதற்கு வாடகை கட்டவேண்டும். என்ன செய்யலாம்?
- அதற்கான ஒரு வழிதான், ரிசர்வ் வங்கி அவ்வப்போது வெளியிடும் தங்க பத்திரங்களை வாங்கிவிடுவது. 2015 நவம்பரில் மத்திய அரசு முதல் முறையாக சாவரின் கோல்ட் பாண்ட் (SGB)எனப்படும் தங்கப் பத்திரத்தை அறிமுகம் செய்தது. அப்போதுஒரு கிராம் 999 (22 அல்ல. 24 கேரட்) சொக்கத் தங்கத்தின் விலைரூ.2,684. அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிறது.
- இந்திய குடிமக்கள் எவரும் SGB-க்கு விண்ணப்பிக்கலாம். ஒரு ஆண்டில் தனிநபர்கள், பிரிக்கப்படாத இந்து குடும்பங்கள் (HUF), டிரஸ்ட்கள் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4 கிலோ வரை எந்த அளவுகளிலும் வாங்கலாம். நிறுவனங்கள் 20 கிலோ வரை வாங்கலாம்.
- எத்தனை கிராம் தங்கத்துக்கு பணம் கொடுக்கிறோமோ, அதை குறிப்பிட்டு வங்கி பிக்சட் டெபாசிட் சர்டிபிகேட் போலஒரு சர்டிபிகேட் கொடுப்பார்கள். அப்போதைய மதிப்பு எவ்வளவோ அந்த தொகைக்கு ஆண்டுக்கு 2.5 % வட்டியும் தருகிறது அரசு. ஆறு மாதத்துக்கு ஒரு முறை வங்கிக் கணக்குக்கு வட்டிப்பணம் வந்துவிடும்.
- பத்திரத்தின் வைப்புக்காலம் 8 ஆண்டுகள். எட்டு ஆண்டுகளும் வைத்திருந்து, திரும்ப கொடுக்கும்போது பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கிராம்களுக்கான அந்த நேரத்து விலை மதிப்பை, பணமாக கொடுத்துவிடுவார்கள். 8 ஆண்டுகளில் தங்கத்தின் விலை அதிகரிப்பால் கிடைத்தலாபத்தொகைக்கு மூலதன ஆதாய வரி கிடையாது.
- போட்ட பணம் தேவைப்படுகிறது என்றால், ஐந்து ஆண்டுகள் முடிந்தபின் பத்திரத்தை சரண்டர் செய்து அப்போதைய மதிப்பில் பணம் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் லாபத்துக்கு வரி கட்டவேண்டும்.
- இன்னும் முன்பாகவே கூட SGB-யை விற்க முடியும். பங்குச் சந்தையில், அதுசமயம் நடக்கும் விலைக்கு விற்றுக்கொள்ளலாம். தடையில்லை. லாபமிருந்தால் வரி. கடந்த ஜூன்மாதம் இப்படி ஒரு SGB வெளியீடு வந்தது. அடுத்து இப்போதுமற்றொரு வெளியீடு வந்திருக்கிறது. 11.09.2023 முதல் 15 செப்டம்பர் வரையிலான நாட்களில் அதற்கு விண்ணப்பிக்கலாம்.நடப்பு செப்டம்பர் வெளியீட்டில் 999 சொக்கத் தங்கத்தின் விலையை கிராம் ரூ.5,923 என நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.
- பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், குறிப்பிட்ட போஸ்ட் ஆபீஸ்கள், பங்குசந்தைகள் ஆகியவற்றில் SGB-க்கு விண்ணப்பிக்கலாம். வங்கி காசோலை அல்லது டிடி கொடுக்கலாம். யுபிஐ மூலமும் பணம் கட்டலாம்.
- ரொக்கப்பணம் என்றால் அதிகபட்சம் ரூ.20,000 வரை ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்கு மேல் வங்கி கணக்கு மூலம்தான் செலுத்த வேண்டும். இவர்களின் வலைதளங்கள் மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம்விண்ணபிப்பவர்களுக்கு மட்டும் கிராமுக்கு ரூ.50 குறைவு.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 09 – 2023)